திருவள்ளுவரின் காதல்
சூத்திரங்கள்
சூத்திரம் – 78
கொடுந்துயர் நகரம்
“ஐயா! உங்க
தேநீர்.”
வழக்கமான
காகிதக் கோப்பை. அதே லேசாகத் தீய்ந்த பால் வாசனை.
அவன்
கடிகாரத்தைப் பார்த்தான்.
மாலை 5:42.
சூரியன்
இமயமலையின் ஏதோ ஒரு பனிச்சிகரத்திற்குப் பின்னால் மெதுவாகத் தன்னை மறைத்துக்
கொண்டிருந்தது.
இடம் சங்சாங்.
கடல்
மட்டத்திலிருந்து 14,000 அடி உயரம். வரைபடத்தில் ஒரு சிறிய கறுப்புப் புள்ளி.
இந்தியாவில்
இருக்கிறதா அல்லது திபெத் எல்லைக்குச் சென்றுவிட்டதா என்று கூகுள் வரைபடமே
குழம்பும் இடம்.
அங்கே மொத்தம் இருபத்திரண்டு
வீடுகள். ஒரு ராணுவச் சாவடி. இரண்டு தேநீர்க்கடைகள். மனிதர்களை விடக் கழுதைகளும்,
கம்பளி ஆடுகளும் அதிகம். காற்றுக்கே இங்கே பிராணவாயு பற்றாக்குறை.
அவன் தேநீரை
ஒரு மடக்கு குடித்தான். நாக்குச் செத்தது.
அவன் ஒரு மென்பொருள்
பொறியாளன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவன். மாதம் ஐந்து
லட்சம் சம்பளம். கணினியின் விசைப்பலகையில் அவன் விரல்கள் நகர்ந்தால், உலகத்தின்
ஏதோ ஒரு மூலையில் ஒரு செயலி இயங்கும்.
ஆனால், இப்போது
அவன் இங்கே நிற்கிறான். கடந்த மூன்று மாதங்களாக.
காரணம், ஒரே
ஒரு தவறான ஒப்புகை. நிறுவனத்தின் மிகப்பெரிய தரவக மையம் ஒன்று ஹாங்காங்கில்
செயலிழந்த போது, இவன்தான் பொறுப்பேற்று விலக வேண்டியிருந்தது.
நிர்வாகம் அவனை
முழுமையாகத் தூக்கி எறியவில்லை. அமைதி செயல்திட்டம் என்ற பெயரில், இந்த இமயமலைக்
கிராமத்தில் அமைக்கப்படும் இந்திய ராணுவத்தின் புதிய செயற்கைக்கோள் தரவு மையத்தை
மேற்பார்வையிட அனுப்பி வைத்தது.
இங்கே இணையம்
இல்லை, 5ஜி இல்லை. அலைபேசி பயன்பாடுகள் இல்லை. செயற்கைக்கோள் தொலைபேசி உண்டு. அதுவும்
அவசர காலத்திற்கு மட்டும்.
சம்சாங் உலகத்தோடு
தொடர்பில்லாத ஒரு தனித்தீவு.
ஆனால்,
தொலைதொடர்பு வசதி இல்லாதது பெரிய பிரச்சினையில்லை. மனிதர்கள் இல்லாததுதான்
பிரச்சினை.
இங்கே
சுற்றியிருக்கும் மனிதர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது. ஹிந்தியும் லடாக்கி
மொழியும் கலந்த ஏதோ ஒரு பேச்சு. அவர்கள் சிரிப்பார்கள், ஆனால் அந்தச் சிரிப்பில் கலந்து
கொள்ள முடியாது. அவர்களிடம் மரியாதை இருக்கும், ஆனால் அன்பு இருக்காது. அவன்
அவர்களுக்கு ஓர் அதிகாரி அவ்வளவுதான்.
அவன் தனது பழைய
ஐபோனை எடுத்தான். அலைவரிசை சமிக்ஞை கிடைக்கும் இடத்திலும் சேவை இல்லை என்று என்று
பளிச்சிட்டது.
அவன் தனது
அலைபேசியில் புகைப்படத் தொகுப்பைத் திறந்தான்.
அவள் முகம்.
அவளின் அந்தப்
புகைப்படம்.
திருவாரூர்
சோமசுந்தரம் பூங்காவில் எடுத்தது.
மர இலைகளின்
நிழல் அவள் முகத்தில் புள்ளிகளாக விழுந்திருக்கும். அவள் சிரித்துக் கொண்டே அவன் கையைப்
பிடித்து இழுப்பாள். “போதும்டா! உன் மடிக்கணினியைப் பார்த்தது! இந்த மரத்தைப்
பார், எவ்வளவு அழகான பச்சை!” என்று சொல்வாள்.
அவன் அப்போது
சிரிப்பான். “பச்சைங்கிறது ஓர் எண்மக் குறியீடு. அவ்வளவுதான்.”
அவள் அவன்
மண்டையில் செல்லமாகக் கொட்டுவாள். “உன் மண்டைக்குள்ள இயற்கையான மூளையே இல்லையாடா?
வெறும் சிலிகான் சிப்தானா?”
அவள் ஒரு
தாவரவியல் பாடப் பேராசிரியர். இயற்கையை நேசிப்பவள். மண்ணையும், செடிகளையும்,
மனிதர்களின் உணர்வுகளையும் ஆழமாக உணர்பவள். அவனோ எண்களாலும், தர்க்கங்களாலும்
உலகத்தைப் பார்ப்பவன்.
இருவரும் இரண்டு
வெவ்வேறு துருவங்கள். ஆனால், காந்தம் போல ஒட்டிக் கொண்டார்கள்.
திருமணமாகி
இரண்டு வருடங்கள்.
திருவாரூர்,
காரைக்காட்டுத் தெருவில், அடுக்குமாடி வீடு. அதிகாலை அவளின் தேநீர் வாசனையில்
விழிப்பது, வீட்டிலிருந்து பார்க்கும் வேலை, தேவைப்பட்டால் சென்னைக்குப் பயணம்,
மற்றபடி இரவில் அவள் மடியில் தலைவைத்து, நாள் முழுதும் சேர்ந்த அலுப்பை மறப்பது, வாழ்க்கை
ஒரு மெல்லிசை போல நகர்ந்து கொண்டிருந்தது.
திடீரென்றுதான்
இந்த மாற்றம்.
“நானும்
வரட்டுமா உன்கூட?” என்று கேட்டாள், அவன் சங்சாங் கிளம்பும் முந்தைய நாள் இரவு.
“வேண்டாம்.
அங்கே உறைநிலை தட்பவெப்பம். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. மூச்சு விடுவதே
கஷ்டம். நான் ஒரே மாசத்துல வேலையை முடிச்சுட்டு வந்துடுவேன்.”
“எனக்குக்
குளிர் பயமில்லை. உன்னைப் பிரிஞ்சு இருக்கிறதுதான் பயம்,” என்றாள் அவள். அவள்
கண்ணில் ஒரு துளி நீர் ததும்பியது.
அவன் அதை
அப்போது தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. “லூசு, வெறும் முப்பது நாள் தானே?
வாட்ஸ்அப், அலைபேசி எல்லாம் இருக்கே!” என்றான்.
அப்போது
அவனுக்குத் தெரியாது, சங்சாங் என்பது தொழில்நுட்பத்தின் எல்லை முடிந்து, தனிமையின்
நரகம் தொடங்கும் இடம் என்று.
முப்பது
நாட்கள் என்பது தொண்ணூறு நாட்களாக நீடித்தது. செயற்கைக்கோள் அலைவாங்கியில் ஏற்பட்ட
கோளாறுகள், பனிப்பொழிவு, ஒளியிழைவடத் துண்டிப்பு எனப் பிரச்சினைகள் நீண்டு கொண்டே
சென்றன.
சங்சாங்
கிராமத்தில் அவன் வாழும் வாழ்க்கை, ஒரு முடுக்கப்பட்ட சிறைத்தண்டனை போலிருந்தது.
சுற்றி நாற்பது
கிலோமீட்டருக்கு மனித நடமாட்டமே குறைவு. ஊரில் உள்ள மனிதர்கள் அமைதியானவர்கள்,
ஆனால் அந்நியர்கள். அவனுக்குப் பசித்தால் உணவு தருவார்கள். காய்ச்சல் என்றால்
கஷாயம் தருவார்கள். ஆனால், அவன் உள்ளுக்குள் ஏங்கும் அந்த ஒரு வார்த்தை, அந்த ஒரு
புரிதல், அந்த ஒரு தொடுதல் அது அங்கிருக்கும் எவரிடமும் இல்லை.
நம்மைப்
புரிந்துகொண்டவர் இல்லாத ஊரில் வாழ்வது கொடூரமானது என்பதை அவன் உணர்ந்தான். அதை
விட கொடூரமாக அவன் இல்லாத திருவாரூர் அவளுக்கு இருந்தது.
அவள் நினைவு
எழும் போதெல்லாம் அலைபேசியைத் திறந்து அவள் முகம் பார்ப்பது ஒன்றே அவனுக்கு ஓர்
ஆறுதலாக இருந்தது. அவளுடைய அந்தப் புன்னகை. அவள் அனுப்பிய பழைய குரல் பதிவுகள். “இன்னைக்கு
மழை பெய்யுது. நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. சீக்கிரம் வாடா.”
அந்தக் குரலைக்
கேட்கும்போது, அவனின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடையும்.
அன்பில்லாத
ஊரில் வாழும்போது ஏற்படுவது ஒருவிதமான மரத்துப்போன வலி. ஆனால், அன்பான ஒருவரைப்
பிரிந்து வாழும்போது ஏற்படுவது கூர்மையான, நெஞ்சைக் கிழிக்கும் வலி. முதல் வலி,
வாழ விடாமல் முடக்கும். இரண்டாவது வலி, சாகாமல் சாகடிக்கும்.
அன்று கடுமையான
பனிப்புயல். ராணுவ முகாமின் முதன்மைச் சேவையகம் பழுதானது. அவன் தொடர்ச்சியாக 18
மணி நேரம் உழைத்து, அதைச் சரிசெய்தான். கைகள் உறைந்து, விரல் நகங்கள் நீல நிறமாக
மாறின.
வேலை
முடிந்ததும், முகாமின் கட்டளை அதிகாரி அவனைப் பாராட்டினார். “சபாஷ்! நீ மட்டும்
இன்னைக்கு இல்லைனா, இந்தப் பிரிவு முழுவதும் செயலிழந்திருக்கும். நீதான் உண்மையான
நாயகன், வீரன்!” என்றார்.
“நன்றிங்கய்யா!
ஆனா, எனக்கு இந்த நாயகன் பட்டமெல்லாம் வேண்டாம். எனக்கு செயற்கைக்கோள்
தொலைபேசியில் பேச அனுமதி வேணும். என் மனைவிகிட்ட பேசணும்.”
அவனைப்
பாராட்டியவர் அவன் அப்படிக் கேட்டதும் தயங்கினார். “விசேஷ உத்தரவு இருக்கு. அவசர
ராணுவத் தேவைக்கு மட்டும்தான் அந்தத் தொலைபேசி.”
அவன் அவரின்
கைகளைப் பிடித்துக் கொண்டான். அவனது கண்கள் கலங்கின. ஒரு மென்பொருள் பொறியாளனின்
தர்க்கங்களெல்லாம் அங்கே நொறுங்கி விழுந்தன.
“தயவுசெய்து
கொடுங்க. நான் செத்துக்கிட்டு இருக்கேன். மூணு மாசமா அவ குரலைக் கேட்கல. நான்
சம்பாதிக்கிற பணம், இந்தப் பதவி, இந்த ராணுவத் திட்டம் எதுவுமே எனக்கு
முக்கியமில்லை. அவ எனக்கு வேணும். ஐந்து நிமிஷம். தயவு பண்ணுங்க.”
அதிகாரி அவன்
முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் தெரிந்த பாழடைந்த தனிமையையும், ஏகப்பட்ட
ஏக்கம் நிறைந்த காதலையும் அவர் உணர்ந்தார்.
“சரி. ஐந்து
நிமிடம் மட்டும்.” என்று சொல்லி, தன் செயற்கைக்கோள் தோலைபேசியைக் கொடுத்தார்.
அவனின்
நடுங்கும் விரல்கள் அவளின் எண்ணை அழுத்தின.
பீப்...
பீப்... பீப்... என எண்களை அழுத்த சத்தம் வந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு பீப்
சத்தமும் ஒரு யுகமாக நீடித்தது.
“ஹலோ?”
அந்தக் குரல்.
அதே மென்மையான,
சற்றுத் தூக்கக் கலக்கம் நிறைந்த, அன்பான குரல்.
அவனுக்குத்
தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சுக்குள் அடைத்து வைத்திருந்த அத்தனை
தனிமையும் ஒரு பெருமூச்சாக வெளியேறியது.
“ஹலோ! நீங்கதானா?”
அவளின் குரலில் சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் அழத் தொடங்கியிருந்தாள்.
“நீங்களா? எங்க இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?”
“நீ… நீ எப்டி
இருக்கே?” அவனால் அவ்வளவுதான் சொல்ல முடிந்தது.
“கடவுளே...
மூணு மாசம்! ஒரு செய்தி இல்லை. அழைப்பு இல்லை. நான் பயந்துட்டேன் மணி. தினமும் காவல்துறை
கண்காணிப்பாளர் அலுவலகம், உங்க சென்னை தலைமை அலுவலகம் என அலைஞ்சுட்டேன். நீங்க
இல்லாம எனக்கு இந்த வீடே ஒரு மயானம் மாதிரி இருக்கு. என்னால வாழவே முடியல...”
அவள் கதறி
அழுதாள்.
அவன் கண்ணீர்
விட்டு அழுதான். சுற்றிலும் பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புயலின் இரைச்சல் கேட்டது.
ஆனால் அவனுக்கு அவளின் மூச்சுக்காற்று மட்டுமே கேட்டது.
“என்னை
மன்னிச்சுடு. நான் நல்லா இருக்கேன். இங்க தகவல் தொடர்பு இல்லை. ஆனா... ஆனா நான்
உன்னைப் பார்க்காம ரொம்பவே கஷ்டப்படுறேன். இங்க சுத்தி ஆளுங்க இருக்காங்க. ஆனா யார்கிட்டயும்
அன்பில்லை. என்னை யாரும் புரிஞ்சுக்கல. ஆனா, அதைவிட. உன்னைப் பிரிஞ்சு இருக்குற
இந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமா இருக்கு.”
“எனக்கு அதை
விட கொடுமையா நீங்க இல்லாத இந்த ஊர் இருக்கு. உடனே கிளம்பி வாங்க. நமக்கு எந்தப்
பணமும் வேண்டாம், எந்தப் பெரிய வேலையும் வேண்டாம். எனக்கு நீங்க வேணும். நாம ஏதோ
கண்காணாத ஊருக்குப் போய்டலாம். நீங்க என்கூட இருந்தா போதும்.”
“வர்றேன்.
அடுத்த வாரம் பனி குறைந்ததும் முதல் உலங்கு வானூர்தியில நான் வர்றேன். இனி உன்னை
விட்டு எங்கே யுமே போக மாட்டேன்.”
“அஞ்சு நிமிஷம்
முடிஞ்சது.” அதிகாரி மெதுவாகத் தோளைத் தொட்டார்.
“நான்
வைக்கிறேன். நான் வர்றேன்... உன்னை நேசிக்கிறேன்டி,” என்று சொல்லி அழைப்பைத்
துண்டித்தான்.
பத்து
நாட்களுக்குப் பிறகு.
திருச்சி விமான
நிலையம்.
வெளியே வந்தவன்,
கூட்ட நெரிசலுக்கு நடுவே தேடினான்.
அங்கே,
தூணுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள் அவள். மெலிந்திருந்தாள். கண்கள்
சிவந்திருந்தன.
அவன் தன்
பயணப்பையைக் கீழே போட்டான். ஓடிச் சென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டான்.
சுற்றியிருந்த
மனிதர்கள், அவர்களின் சத்தங்கள் எதுவுமே அவன் கவனத்திற்கு வரவில்லை.
அவளின்
ஸ்பரிசம், அவளது தலைமுடியின் வாசனை, அவளது விம்மல் சத்தம் என அவை மட்டுமே அவனது
பிரபஞ்சமாக மாறியது.
“இனிமே என்னை
விட்டுப் போவியா?” அவள் அவன் நெஞ்சில் அடித்துக் கேட்டாள்.
“மாட்டேன்டி.
கூகுள்ல தேடினாலும் கிடைக்காத தர்க்கம் இது. உன்கூட இருக்குற ஒவ்வொரு நொடியும்
தான் என் வாழக்கையோட முழுமை.”
அவன் அவள்
நெற்றியில் முத்தமிட்டான்.
அவளது
கைவிரல்கள் அவனது கைவிரல்களோடு பின்னிக்கொண்டன.
இப்போது அவனும்
அவளும் திருவாரூரில் இருக்கிறார்கள். எத்தனையோ மனிதர்கள் வாழும் ஆன்மிக நகரம் இது.
இந்த நகரம் இப்போது இருவருக்கும் அந்நியமாகத் தெரியவில்லை. ஏனெனில், அவனைக்
கரைக்கும் அன்போடு ஒருத்தி அவனருகில், அவளைக் கரைக்கும் அன்போடு ஒருவன் அவளருகில்
இருக்கிறாள் மற்றும் இருக்கிறான்.
அவர்களது இந்த
அனுபவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அப்படியே நேரில் பார்த்தது போல் அல்லவா
சொல்லியிருக்கிறார், அந்தப் பொய்யாமொழிப் புலவர்.
“இன்னாது
இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.” (குறள், 1158)
-
சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment