27 Oct 2026

காதலின் தெர்மாமீட்டர்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 79

காதலின் தெர்மாமீட்டர்

"உங்களுக்குச் சமிக்ஞை சரியா கிடைக்க மாட்டேங்குது. முகம் மங்கலா தெரியுது. லென்ஸ்ல ஏதோ பட்டிருக்கு. அதைத் தொடைச்சுட்டுப் பேசுங்க."

அவன் வேகவேகமாக மடிக்கணினியோடு இணைந்திருந்த லென்ஸைத் துடைத்தான்.

சென்னையில் உள்ள அவனது அறைலிருந்து தெரியும் மழையின் ஈரமும், திருவாரூர், சோமசுந்தர நகரில் அமைந்திருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அமர்ந்திருக்கும் அவளின் குரலில் உள்ள பதட்டமும் அந்த இணைய இணைப்பில் கலந்து காற்றில் அலைக்கழிந்தன.

அவள் சுவரில் சாய்ந்திருந்தாள். அவள் காதில் அந்தக் கேட்புக் கருவி மின்னியது. அவன் தன் மடிக்கணினியில் எதையோ தட்டிகொண்டே முணுமுணுத்தான்.

"கேட்குதா? இணைய இணைப்புல பிரச்சனை. அங்கே இணைய இணைப்புக் கருவியைச் சரியா வச்சிருக்கியா இல்லையா?"

"ம்! நான் உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். நீங்க அங்கே எங்கிட்டெ பேசிக்கிட்டே உங்க வேலையையும் பார்த்துட்டு இருக்கீங்கதானே. நேத்து ராத்திரி நான் அனுப்புன செய்தியைப் படிச்சீங்களா? "

"படிக்கலை. அலுவலகத்துல திடீரென மையத் தரவகத்துல பிரச்சனை.. மூணு மணி வரைக்கும் மடிக்கணினி முன்னாடி உக்காந்திருந்தேன்."

அவள் சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பில் ஈரம் இருக்கவில்லை; வறட்சி இருந்தது.

"தெரியும். எப்பவுமே உங்க காதலி மடிக்கணினியும் தரவகம்தானே. நான் அப்புறம் பேசுறேன்."

"இடையில் பேசாம போகாதே. அஞ்சு நிமிஷம் பேசுவோம்."

அவன் குரலில் இருந்த அந்தச் சின்னச் சோர்வு, அவளைத் தடுத்து நிறுத்தியது. இரண்டு மாதங்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். திருவாரூருக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் வெறும் முந்நூறு சொச்சம் கிலோமீட்டர்தான். ஆனால், அந்தத் தூரத்தை அளக்கக் காதலின் தராசு போதவில்லை.

"தெரியுமா உங்களுக்கு?" அவள் திரையைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். "நேத்து ராத்திரி எனக்கு ரொம்பக் காய்ச்சல். தலை வெடிக்கிற மாதிரி வலி. முகம் எல்லாம் சூடாகிப் போச்சு. யாரையாவது தொட்டுப் பேசணும்னு தோணுச்சு. ஆனா, என் கைக்குக் கிடைச்சது இந்த அலைபேசியின் குளிரான திரை மட்டும்தான்."

அவளே தொடர்ந்தாள், "தீயைக் கூட நம்மகிட்ட வராம தடுத்துடலாம். அடுப்பு சூடா இருந்தா கை விலக்கிப்போம். ஆனா, இந்தத் தூரம், நம்மளை நெருப்பு போலத் தொட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கு. ஆனா, நாம ரெண்டு பேரும் யாருமே யாரையும் தொட முடியல. இது என்ன வகையான நெருப்பு?"

"எப்படி இது சாத்தியம்? ஆனால் இது சாத்தியம்." அவன் தனக்குத்தானே முணுமுணுத்தான்.

அவ்வளவுதான். இணையப் பிரச்சனை. இணைப்புத் துண்டாகி வெப்பத்தை அதிகமாக்கியது.

அவன் மனதுக்குள் வள்ளுவரின் அந்த வரிகள் எங்கோ மூலையில் ஒலித்தன.

"தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ."                       (குறள், 1159)

அவன் தனது பழைய கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தான். தமிழ் இலக்கியப் பேராசிரியர் முனைவர் முத்து அருணகிரி அவர்கள் ஒருமுறை வகுப்பில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

"வள்ளுவர் ஒரு மேதைக்கெல்லாம் மேதைப்பா. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். நெருப்பு சுடும் என்பது உலக நியதி. தொட்டால் சுடும், விட்டால் சுடாது. இது இயற்பியல். ஆனால், காதல் என்னும் நெருப்பு இருக்கிறதே. அது தொட்டால் குளிரும், விட்டால் சுடும்; பிரிந்தால் இன்னும் அதிகமாகச் சுடும்! இது என்ன வகையான நெருப்பு?"

அவன் எதையும் தர்க்கப்பூர்வமாக யோசிக்கும் மென்பொருள் நிபுணன். காதலைக் கூட அவன் ஓர் ஊயிர் வேதியியல் வினையாகத்தான் பார்க்க முயன்றான். டோபமைன், ஆக்ஸிடோசின், செரோடோனின் என்ற ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள்தான் இந்தக் காதலும், பிரிவும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால், மருத்துவ விஞ்ஞானத்தாலோ, தர்க்கவியலாலோ விளக்க முடியாத எத்தனையோ விசயங்கள் காதலில் இருக்கத்தான் செய்கின்றன.

நெருப்பு சுடும்.

நெருப்பு என்பது கார்பன் மூலக்கூறுகள் ஆக்ஸிஜனுடன் இணைந்து வெளிப்படுத்தும் வெப்ப ஆற்றல். நெருப்புக்கு முன்னால் நின்றால் உடல் சூடாகும். நெருப்பைத் தொட்டால் தோல் கருகும். ஆனால், நெருப்புக்கு ஒரு குணம் உண்டு. அதை விட்டு விலகிவிட்டால், அந்த நெருப்பு சுடாது, விட்டு விடும்

ஆனால், காதலின் பிரிவு அப்படிப்பட்டதல்ல! காதலனும் காதலியும் கண் முன்னால் இல்லை, தொலைவில் இருக்கிறார்கள்; தொடவும் முடியவில்லை, காணவும் முடியவில்லை. ஆனால் அந்தப் பிரிவு தரும் வெம்மை, நெருப்பை விடவும் கொடூரமானது. விலக விலக கொளுந்து விட்டு எரிந்து, கொதிக்கச் செய்யும் வன்மம் நிறைந்தது.

சென்னையின் குளிர் அதிகமாகிக்கொண்டிருந்தது. அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்து கொண்டிருந்தன.

அவனுக்கு அவளின் ஞாபகம் மீண்டும் அலைமோதியது.

கடந்த வாரம் அவள் அவனுக்கு தூதஞ்சலில் ஒரு பொட்டலம் அனுப்பியிருந்தாள். அதில் அவள் தயார் செய்த காரச் சேவும், அவளின் கைப்பட எழுதிய ஒரு சிறிய கடிதமும் இருந்தது. "உங்களோட குளிர்பதன அறையில் எப்போதும் குளிர் அதிகமாகவும், உடலின் வெம்மை மட்டும் குறையாமல் இருப்பதாகவும் சொன்னீர்களே. இந்தக் காரச் சேவைச் சாப்பிடும் போது என்னை நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள். எல்லாம் சரியாகும்."

அதை அப்போது படித்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அந்தச் சிரிப்பைத் தாண்டி உள்ளுக்குள் ஒருவித ஏக்கம் இப்போது தொண்டையை அடைத்தது.

உண்மையில், மனித மனம் என்பது விசித்திரமானது.

ஒரு நெருப்புத் துண்டு கையில் பட்டால், உடனே மூளைக்குச் செய்தி சென்று கையை விலக்கிக் கொள்வது அனிச்சை. ஆனால், தொலைதூரத்தில் இருக்கும் ஒருவரைப் பற்றிய நினைவு நெஞ்சில் பற்றிக் கொண்டால், அந்தத் தீயை முயற்சி செய்தாலும் விலக்க முடிவதில்லை. அந்த வெம்மையைத் தணிக்கவும் முடிவதில்லை.

அவள் இப்போது தூங்கிக் கொண்டிருப்பாள். அவளது அலைபேசி அவளது தலையணைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை, அவள் கனவிலும் இவன்தான் வந்திருப்பானோ?

அவன் தன் வாட்ஸ்அப்பைத் திறந்தான். அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டான், “தூங்கிட்டீயா?”

அடுத்த சில நொடிகளில் நீல நிற சரிகுறி விழுந்தது. அவள் உடனே பதிலளித்தாள்.

"இல்லை. தூக்கம் வரலை. நீங்களும் இன்னும் தூங்கலையா?"

"இல்ல. வள்ளுவரைப் பத்தி யோசிச்சிட்டிருந்தேன்."

"வள்ளுவரா? இந்த நேரத்திலா?"

"ஆமாம். தொடிற்சுடின் அல்லது காமநோய் போல. விடிற்சுடல் ஆற்றுமோ தீ என்கிற குறளுக்கு இப்போது அர்த்தம் புரியுது. உன்னைத் தொடும்போது இருக்கிற தவிப்பை விட, உன்னை விட்டுட்டு இந்தச் சென்னையில தனியா உக்காந்திருக்கும்போதுதான் அந்தச் சூடு ரொம்ப அதிகமா இருக்கு."

அவள் தரப்பிலிருந்து கொஞ்ச நேரம் எந்தப் பதிலும் இல்லை. அவள் தட்டச்சு செய்வதாகக் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு நின்றுவிட்டது.

சிறிது நேரத்தில் அவளிடமிருந்து ஒரு குரல் பதிவு வந்தது.

அவன் அதை இயக்கிக் கேட்டான். அவள் குரல் சற்று நடுங்கியது. பின்னணியில் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் கேட்டது.

"உங்களுக்கும் அப்படித் தானா? நான் நினைச்சேன், பசங்களுக்கு இதெல்லாம் சீக்கிரமே மறந்துடும், வேலையில மூழ்கிடுவீங்கன்னு. ஆனா, உங்களுக்கும் என்னைப் போலவே அந்தச் சூடு சுடுதா?"

அவன் கண்களை மூடிக்கொண்டான்.

ஆம். அந்தத் தூரத்தின் தீ, இரண்டு பேரையும் சமமாகத்தான் சுட்டுக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை.

அவன் வழக்கம் போல தனது தேநீரைக் குடித்துவிட்டு மடிக்கணினியைத் திறந்தான். சடாரென்று நேற்று இரவு முன்பதிவு செய்திருந்த தனியார் அதிகவேகப் பேருந்து ஒன்றின் முன்பதிவு பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டு அவனது மின்னஞ்சலுக்கு வந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த அதிவேகப் பேருந்து கிளம்ப தயாராகி விடும்.

அலுவலகச் சந்திப்பு இருக்கிறதுதான். மேலதிகாரி மற்றும் வாடிக்கையாளர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்தான். ஆனால், அந்த இணையத் திரையின் வழியே பேசிக் கொள்வதை விட, நேரில் சந்தித்து அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டால் அன்றி, இனி தன்னால் இந்த வெம்மையைத் தாங்க முடியாது என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

அவன் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்:

"இன்னும் ஐந்து மணி நேரத்துல திருவாரூர்ல இருக்கேன். தயாரா இரு."

அவளிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது, ஒரு சின்ன சிரிப்பு உணர்ச்சிப் படத்துடன். "சீக்கிரம் வாங்க. இந்தத் தீயை அணைக்க உங்கால மட்டும்தான் முடியும்."

அவன் புன்னகைத்தான்.

நெருப்பைத் தொட்டால் சுடும்; விட்டால் விடும். ஆனால் காதல் என்னும் விசித்திரமான கொடிய நெருப்பு, சேர்ந்திருந்தால் குளிரச் செய்யும், விலகியிருந்தால் சுட்டுப் போசுக்கும். ஆனாலும், அந்தச் சுடுதலில் ஓர் அலாதியான சுகமும் இருக்கத்தானே செய்கிறது! அதுதானே மனிதக் காதல்?

அவன் தன் பயணப்பையை தோளில் மாட்டிக்கொண்டு அறைக் கதவைச் சாத்தினான். திருவாரூருக்குச் செல்லும் பேருந்து அங்கே அவனுக்காகக் காத்திருந்தது. காதலின் தீயை அணைக்க ஒருவன் பேருந்தின் படிக்கட்டுகளில் ஏறியிருந்தான்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment