17 Jun 2025

சஞ்சலத்தோடு பிரார்த்தனையைக் கேட்பவர்!

சஞ்சலத்தோடு பிரார்த்தனையைக் கேட்பவர்!

நெடுநேர தவிப்பு

குழப்பிப் போடுகிறது

மனச்சோர்வு நிரம்புகிறது

கடிகார முள்களின் முனைகளில்

முடிவுகள் சுழல்கின்றன

வீரியத்தைக் குறைக்க காத்திருக்கிறேன்

நீண்ட நேரம் மிக நீண்ட நேரம் காத்திருக்கிறேன்

பிரச்சனையின் காத்திரம் குறைகிறது

இன்னும் காத்திருக்கிறேன்

அப்படியொரு பிரச்சனை இருந்ததை

அனைவரும் மறந்து போகிறார்கள்

புதிய பிரச்சனைக்குத் தயாராகிறார்கள்

நான் காத்திருக்க தயாராகிறேன்

காத்திருப்பின் வெம்மை தாங்க முடியாத போது

பொறுமையாக இருந்தால்

பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனப் புலம்புகிறேன்

தீர்வு கிடைக்காது போயினும்

பிரச்சனையே மறைந்து போகும் என ஆறுதல் பண்ணுகிறேன்

கவனிக்க கவனிக்கப் பெரிதாகும் பிரச்சனைகள்

பொறுமையாக இருக்கையில் சுருங்கத் தொடங்குகின்றன

பிரச்சனைகளால் பொறுமையாக இருக்க முடியாது

உங்களால் பொறுமையாக இருக்க முடியும்

மதிப்பிற்குரிய மனமே பொறுமையாக இருங்கள்

நான் பிரார்த்திருக்கத் தொடங்குகிறேன்

தாங்க முடியாத சஞ்சலத்தோடு

யாரிடம் பிரார்த்திருக்கிறேனோ அவர் கேட்க தயாராகிறார்

*****

எரிமலைக்குள் உறங்கிக் கிடக்கும் பூகம்பங்கள்

எரிமலைக்குள் உறங்கிக் கிடக்கும் பூகம்பங்கள்

யோசித்து யோசித்துப் பேச முடியுமா

உணர்ச்சிகள் வார்த்தைகளை விசிறியெறியும்

யோசனைகளை விட உணர்ச்சிகள் வேகமானவை

மின்னல்கள் தெறிக்கக் கூடியவை

மின்னல்கள் வெட்ட வெட்ட

இடியோசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும்

எப்போதும் உணர்ச்சிகள் உடையாது

உணர்ச்சிகள் உடையும் போது

எப்போதும் காணாததை

எப்போதும் கேட்காததை

எதிர்கொள்ள நேரிடும்

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள்

அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்கள்

வேலிகளைப் பிய்த்தெறிவதும்

சுவர்களை உடைப்பதும்

சிறைகளைத் தகர்ப்பதும் உணர்ச்சிகள்

இன்ன நேரத்தில் இன்னதான் செய்யும்

என்று சொல்ல முடியாத உணர்ச்சிகள்

புயலைவிட சூறாவளிகளை விட மோசமானவை

உணர்ச்சிகள் எப்போதும் எல்லா நேரங்களிலும்

தயாராக இருப்பதில்லை

அபூர்வமாகச் சில தருணங்களில்

தயாராக இருக்கும்

உணர்ச்சிகளைப் பொருத்த வரையில்

அது எப்போது எப்படி இருக்கும் என்பது

உணர்ச்சிவசப்படுபவருக்கே தெரியாது

உணர்ச்சிவசப்படுபவரைக் குற்றம் சொல்ல முடியாது

யாரையும் உணர்ச்சிவசப்படாமலிருக்க செய்யுங்கள்

உணர்ச்சியின் எரிமலைகள் வெடிப்பதை

யாராலும் தாங்க முடியாது

வெடிக்காமல் இருக்கும் எரிமலைகள்

பூகம்பங்களைக் கொண்டு வரும் அளவுக்கு ஆபத்தானவை

*****

16 Jun 2025

நதியின் முதுகுப் பக்கம்

நதியின் முதுகுப் பக்கம்

வறட்சியில் கழியும் நாட்கள்

வெள்ளம் வந்தால் ஓடப் போகிறது

வறட்சி வந்தால் வாடப் போகிறது

நதிகளின் கையில் என்ன இருக்கிறது

இயற்கை உருட்டி விளையாடும்

பகடைக் காய்களில்

நதிகளின் மடியில் எது வேண்டுமானாலும் விழலாம்

நிறைய ஆசைப்படுவதால் நிறைய நடந்தேறி விடாது

அறையை விரிவாக்கினால் இருப்பவை சுருங்கும்

இருப்பைச் சுருக்கினால் சிறு அறையே போதும்

எல்லாம் கொஞ்ச கொஞ்ச காலம்

இருக்கும் இல்லாமல் போகும்

எதற்கு யார் என்ன செய்ய முடியும்

பசியில்லாத போது தானியங்கள் விளைந்து கிடக்கும்

பசிக்கின்ற போது வறட்சி தாண்டவமாடும்

எல்லாம் கொஞ்ச காலம் இருக்க பிரியப்படும்

இருக்க வந்ததெல்லாம்

இருக்க பிரியமின்றி ஒரு நாள் ஓடி விடும்

வருவதும் போவதும்

இருப்பதும் இழப்பதும்

யாவற்றின் இயல்பு

நிலையெனப் பிடித்துக் கொள்வது

மனிதரது அலும்பு

இயன்றதைச் செய்

இயலாததை விட்டு விடு

எல்லாவற்றையும் உன்னால் முடியாது

முடியுமானால்

உன் முதுகில் இருக்கும் மச்சத்தை

உன் கண்களால் பார்

*****

15 Jun 2025

துளியின் பயணம்

துளியின் பயணம்

ஏதோ ஒன்று நிகழத்தான் போகிறது

விரைவில் நிகழ வேண்டும் என்ற

அவசரம் கலவரம் செய்கிறது

நிகழுமோ நிகழாதோ

ஐயமே தேவையில்லை

எல்லாம் நிகழத்தான் போகின்றன

நிகழ்வதற்கே சகலமும் உண்டாகின்றன

மற்றும் உண்டாக்கப்படுகின்றன

எது எப்போது நிகழும் என்பது சூட்சமம்

சூட்சமத்தை அறிந்து

வயிற்றுப் பசி போக்க நினைக்காதே

பசியால் சாவாய் என்றா நினைக்கிறாய்

சாவு ஆசையால் வருவது

அவசரத்தைத் தூக்கிக் குப்பையில் போடு

உணர்ச்சிகளைத் தூக்கித் தூர எறி

அவசரமும் உணர்ச்சியும் அழிவின் சக்திகள்

ஆரம்பத்தில் அள்ளித் தருபவை

முடிவில் அழித்து விட்டு வேடிக்கை பார்ப்பது தெரியுமா

வேக மாற்றம் இல்லை என்பதற்காக

மாற்றம் இல்லையென்று ஆகாது

மெதுவாக நிகழ்வதால் நிகழாமல் போகாது

தீவிரம் திசை மாற்றிப் பார்க்க வைக்கும்

பொறுத்திருப்பது குறுகிய பார்வைகளை அழித்து விடும்

பொறுமை மாபெரும் கடினம்

பொறுமையைப் பயின்றால்

பொறுமை புரிந்தால் எல்லாம் நிர்சலனம்

சுவாரசியங்கள் ஒரு நாள் செத்து விடும்

சலிப்பு எந்நாளும் நிலைத்திருக்கும்

வரைமுறை எதற்கும் உதாவது

அணுகுமுறை ரசவாசதம் செய்யும்

மனிதச் சார்பு சல்லித்தனமானது

இன்று கடிகாரத் திசையில் சுழலும் நாக்கு

நாளை எதிர்த் திசையில் சுழலும்

நாக்கைப் பதிவு செய்ய நினைத்தால்

வரலாற்றின் துர்நாற்றம் தாங்க முடியாது

காகிதப் பதிவுகளில் வடிகட்டிகள் அதிகம்

எண்மப் பதிவுகளைப் பார்

தோண்டத் தோண்ட ஊறும் சாக்கடை

மையம் நீதான்

உன்னைச் சுற்றி உலகம் சூழல்கிறது

நீ உலகைச் சுற்றிச் சுழல்கிறாய்

யாருக்கு யார் மையம் எனக் குழம்பும் போது

நீ இன்னும் அற்புதமாகச் சுழல்வாய்

அச்சிற்குக் கிறுக்குப் பிடிக்கும் போது

உன் சக்கரம் சுழலும்

மாற்றிக் கொண்டே போனால்

முடிவில் என்ன இருக்கும்

ஆரம்பத்தில் என்ன இருந்தது

விந்தின் செம்பாகமும் அண்டத்தின் செம்பாகமும்

துளியில் பிறந்து முடிவில் சாம்பலின் துளியாவாய்

*****

14 Jun 2025

வண்டியின் முடக்கமும் சக்கரத்தின் இயக்கமும்

வண்டியின் முடக்கமும் சக்கரத்தின் இயக்கமும்

ஒரு முறை தெளிவித்தது

மறுமுறை உதவாது

ஒவ்வொரு முறையும் தெளிவி

முடக்கம் மோசமுமன்று

இயக்கம் வெற்றியுமன்று

இரண்டையும் கலந்து

முடங்கும் போது முடங்கி

இயங்கும் போது இயங்கி

புரிந்து கொள்ள வேண்டுமென்றால்

வண்டியின் முடக்கத்தில்

சக்கரத்தின் இயக்கம்

மாறுவதும் மாறாததும்

அதனதன் போக்கு

அதனதன் போக்கை

அடித்து நொறுக்குவது

இயற்கையின் போக்கு

நிலைத்தது நிலையாது போகும்

நிலையாதிருப்பது நிலையென ஆகும்

எதற்கும் நீ ஒன்றும்

வாலாட்ட முடியாது

உன் ஆயுள் சிறிது

இயற்கையின் ஆயுள் பெரிது

உன் சாம்பலின் எச்சம்

உன் தலைமுறையே அறியாது

விரும்பினாலும் விரும்பாது போனாலும்

அனுபவங்கள் அரங்கேறும்

முடிவெடுக்க தயங்குவதால்

முடிவில்லாமல் போகாது

முடிவும் முடிவு ஆகாது

முடிவு என்பதும் தொடக்கம் என்பதும்

அவரவர் பார்வை

*****

மாற்றத்தின் கீர்த்தனம்!

மாற்றத்தின் கீர்த்தனம்!

மெனக்கெடல்

தேடல்

காரியசித்தி

அலைச்சல்

குழப்பம்

உளைச்சல்

குளறுபடி

குளத்தில் இறங்காமல்

குளிக்க முடியாது

நதியில் இறங்காமல்

நீராட முடியாது

குளம்

நதி

இரண்டும் ஒன்றல்ல

குளத்தின் துளியில்

மீண்டும் நீராடலாம்

நதியின் நீராடலில்

ஒவ்வொரு முறையும்

வெவ்வேறு துளிகள்

மாறிக் கொண்டிருப்பதை

மாறாமலிருக்கச் செய்ய முடியாது

புதுமைக்கான வழி மாற்றம்

மாற்றிப் போட்டு உருவாக்குவது

அதன் குறியீடு

புதுமைக்குப் பொதுமை கிடையாது

பொதுமையில் புறப்பட்டு புதுமை வராது

புதுமை தனித்துவமானது

ஒவ்வொரு முறையும் புதுமை புதுமையாகத்தான் இருக்கும்

கொஞ்சம் மாற்றுவது ஏமாற்றுவது

மொத்தத்தையும் உருவி

உருமாற்றும் ரசவாதம் புதுமை

பழைமைப் பிடித்தம் என்பதற்காக

புதுமை உருமாற்றிப் போடாமல் இருக்காது

*****

தவறுகளின் புராணம்

தவறுகளின் புராணம்

தொடர்ச்சியான தவறுகள்

அதிகம் இயங்க வைக்கும்

அதிகம் இயங்க இயங்க

அதிகம் அறிதல் கூடும்

தவறுகளை நினைத்து தவறாதே

தவறுகள் இயற்கையானவை

தவறுகளைத் திருத்துவதே

தவறுகளுக்கான பரிகாரம்

திருத்தப்படாத தவறுகள் நியாயமாகாது

யாருக்காக வேண்டுமானாலும்

யார் வேண்டுமானாலும் தவறலாம்

சரித்திரம் தவறுகளின் தொகுப்பு

திருத்தி எழுதுவதைத் தவிர

வேறு என்ன வழியிருக்கிறது

தவறுகளில் கற்றுக் கொள்ள வழியிருக்கிறது

தவறுகளால் தோல்விகளோ பின்னடைவுகளோ கிடையாது

தவறுகளைத் தோல்விகளாக நினைப்பதே பின்னடைவு

தவறுகளைப் பின்னடைவாக நினைப்பதே தோல்வி

தவறுகள் வலுவாகச் சிந்திக்க வைக்கும்

சரியான வியூகங்களை வகுக்க வைக்கும்

இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போல

வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும்

இரவுக்குப் பனிரெண்டு பகலுக்கு பனிரெண்டு என்று

சம கால நேரக் கணக்கு இருப்பது போல

வெற்றிக்கும் தோல்விக்கும் இல்லை

மாறி மாறி வரும் என்பது

மாற்ற முடியாத கணக்கு

தவறும் கணக்குகள் கால ருசியின் பிறப்புகள்

*****