26 Sept 2017

அநீதிக்கு எதிரான முதல் குரல்

அநீதிக்கு எதிரான முதல் குரல்
            எல்லாருக்கும் கோபம் வருகிறது. எல்லாரும் கோபப்பட்டு விட முடியாது. அவர்கள் கோபப்படுவார்கள். அதிகாரம் இல்லாதவர்கள் கோபப்பட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அதிகாரம் உணர்வுகளை, எண்ணங்களை வெளிப்படுத்த முடியாதபடி பயமுறுத்தி வைக்கிறது.
            தவறுகளில் தலையிட்டுத் திருத்த பலரும் விரும்பாததற்குக் காரணம் அதிகாரம் உருவாக்கி வைத்திருக்கும் பயமே. அப்போது எழும் கோபத்தை வெளிப்படுத்தினால் கூட தனக்கும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்கிற அளவுக்கு அதிகாரப் பாய்ச்சல் உருவாக்கி வைத்திருக்கும் பயம் பயங்கரமானது.
            இவைகளைக் கடந்து திடமான மனதோடு போராடுபவர்கள் மனித தெய்வங்கள். திடமான மனம் மட்டும் இல்லாவிட்டால் சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் அல்பத்தனமாகவும், மலினத்தனமாகவும் உணர்ச்சிவசப்பட வைத்து தரமற்றவர்களாக்கி விடுவார்கள்.
            ஒரு செயலைச் செய்வதற்கு முன்னே, அந்தச் செயல் மூலம் நடைபெறப் போவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதீதமான கற்பனைத்தனமாக பயங்களைத் தொலைத்து கட்டி விட்டால் போதும், அநீதிக்கு எதிரான முதல் குரல் நம்முடையதாகவும் இருக்கலாம்.
            அதை விடுத்து எது நடக்குமோ, அதுவாக நடக்கட்டும் என்பதோ, நாம் சொல்வதாலோ, விரும்புவதாலோ எதுவும் நடக்க வேண்டாம் என பிலாக்கனம் பாடுவதோ, எல்லார்க்கும் எதுவோ அதுவே தனக்கும் என்று சப்பைக்கட்டு கட்டுவதோ அநீதிக்கு ஆதரவானவர்களாக நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கொஞ்சமாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.
            அநீதிகளுக்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் போது, கிடைக்க வேண்டிய நீதிகள் கிடைக்கப் பெறாமல் போவதற்கு நாம் காரணமானவர்களாக ஆகிறோம் என்பது எதார்த்தமான உண்மை.

*****

25 Sept 2017

குரல் கொடுங்கள் தலைவாக்களே!

குரல் கொடுங்கள் தலைவாக்களே!
            பிரபலங்களை அரசியல்வாதியாக்குவதன் மூலம் கட்சிகள் மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகின்றன?
            பிரபலங்களை ஆதரிப்பதன் மூலம் மக்கள் செல்வாக்குக் கிடைக்கும் என்று கட்சிகள் தெரிந்து வைத்திருப்பதைப் போல, அதனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதும் அவைகளுக்குத் தெரிந்தே இருக்கின்றது.
            தன் விளையாட்டைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தத் தெரியாத ஒரு விளையாட்டு வீரர் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்படும் போது அவர் மக்கள் பணிக்கான சேவகர் பட்டியலில் ஒரு காலி இடத்தை நிரப்பி விடுகிறார்.
            குறைந்தபட்சம் அவர் தன் விளையாட்டுத் துறையில் நிலவும் அரசியல் குறித்தும், ஏற்றத்தாழ்வுகள் குறித்தேனும் குரல் கொடுக்கலாம் அல்லவா! குரல் கொடுப்பதற்கு அவர் மக்கள் மன்றத்திற்குச் சென்றால்தானே. அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான மிக குறைந்த குறைந்தபட்ச நாட்கள் மட்டுமே அவர் மக்கள் மன்றத்திற்குச் செல்கிறார். செல்லும் நாட்களிலும் வாய் பேசாத நல்ல பிள்ளையாக இருந்து விட்டு வந்து விடுகிறார்.
            அதோ போல சினிமாத் துறையிலிருந்து செல்லும் பிரமுகர்களேனும் தங்கள் துறை குறித்து ஏதேனும் ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை.
            அவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சிகளுக்கு இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. ஒன்று மக்கள் செல்வாக்கு. மற்றொன்று அவர்களுக்கு ஏற்ற ஒரு டம்மி உறுப்பினர் கிடைத்து விடுவது.
            அவர்கள் மக்கள் மன்றங்களில் குரல் கொடுக்காவிட்டாலும், மக்கள் அவர்களைப் பார்த்து குரல் கொடுக்கலாம், "ஏன் குரல் கொடுக்க மாட்டேன்கிறீர்கள் என்று?"

*****

விரக்தி கொண்ட புண்

விரக்தி கொண்ட புண்
சீழ் பிடித்தப் புண்ணில்
வலியெடுக்கிறது
மிதிக்க மிதிக்க
வலிப்பது போல்
கீறிச்சிடுகிறது மிதிவண்டி
இன்றாவது டாக்டரிடம்
காட்ட வேண்டும் என்ற
சங்கல்பத்தோடு
இன்றைய நாளும் கழிந்து விடும்
பிறகு ஒரு நாள்
அதுவாகக் காய்ந்து
அதுவாகப் பட்டுப் போய் விடும்
தன்னைக் கொஞ்சம் கூட
கவனிக்கவில்லை என்ற
விரக்தியடைந்த அந்தப் புண்.

*****

தமிழக அரசியலின் அடிப்படைகள்

தமிழக அரசியலின் அடிப்படைகள்
            தமிழக அரசியல் பிம்பக் கட்டுமானம் கொண்டது. கருத்துகள் பிம்பங்களின் வழியே கட்டமைக்கப்படுகின்றன. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், வழிமொழியவும் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.
            நமது அசலான பிரச்சனைகளை கற்பனை ரீதியான பிரச்சனைகளாக்கி நம்மைப் போராட்ட வீரர்கள் ஆக்குவதற்கே கட்சிகள் முனைகின்றனவே தவிர, நாம் அசலானப் பிரச்சனைகளுக்காகப் போராடி விடக் கூடாது என்பதில் கட்சிகள் மிகுந்த கவனமாக இருக்கின்றன.
            நம் அசலானப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டால் நாம் சிந்திக்க ஆரம்பித்து விடுவோம். சிந்திக்க ஆரம்பித்து விட்டால் பிம்பக் கட்டுமானம் பொருந்திய அரசியல் ஆட்டம் கண்டு விடும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
            கமலஹாசனின் அரசியல் பிரவேசத்தை எடுத்துக் கொண்டால், அவர் தன் பிம்பக் கட்டுமானத்தின் மூலமே தன்னை முன்னிலைப்படுத்துகிறார். நீட் போன்ற பிரச்சனைக்குக் கூட அவர் எந்த அளவுக்குக் களமாடினார் என்பதற்கானப் பதில் மென்மேலும் பல கேள்விகளை எழுப்பும்.
            இப்படியான அரசியல் பிரவேசங்கள்தான் இங்கு நிகழ்கின்றன. அவர்களை முதல்வர்களாக்குவது குறித்தே நாம் சிந்திக்கிறோம். அல்லது இருக்கின்ற இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதிலோ, வாக்கின் பலத்தை அதிகபட்ச அளவில் கரன்சி நோட்டுகளால் நிறுத்துக் காட்டும் கட்சிக்கோ வாக்களிப்பவர்களாக நாம் கட்டாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
            மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுபவர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுவதும், அதற்காகக் குரல் கொடுக்கும் பிரபலங்களின் பிம்பங்கள் கவனிக்கப்படுவதும் நமது அரசியல் அறிவைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
            மக்கள் பணிக்கான ஆளுமையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் தங்களைக் கொஞ்சம் கூட தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது அவர்களின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்தே தெரியவரும்.
            தகுதி இல்லாத ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த நிறுவனமும் நாட்டில் தயாராக இருப்பதில்லை. ஆனால், நாம் தகுதியில்லாத ஒருவருக்கு மக்கள் பணிக்கான வேலைவாய்ப்பை வழங்க கண்ணை மூடிக் கொண்டு காத்திருக்கிறோம்.

*****

பாதுகாப்புக் காரணங்கள்

பாதுகாப்புக் காரணங்கள்
கடப்பதற்குள்
இடி விழுந்த தார்ச் சாலையின்
பள்ளங்கள், விரிசல்கள்,
பெயர்ந்தக் கப்பிகள்,
சரளைக் கற்கள்
மெதுவாகச் செல்வதை
இன்னும்
மெதுவாக்கி விடும்
பாதுகாப்புக் காரணங்களுக்காக
ஆங்காங்கே
அங்கு மட்டும்
மேடிட்டுத் தெரியும்
வேகத் தடைகள்!

*****

நலத்திட்டங்கள்! யாருக்கான நலத்திட்டங்கள்?

நலத்திட்டங்கள்! யாருக்கான நலத்திட்டங்கள்?
            ஏழைகளுக்காக மானியங்களை விட்டுக் கொடுங்கள் என்கிறார்கள். அந்தப் பலன்கள் ஏழைகளுக்குச் சென்று சேர்கிறதா? என்பது விடை காண முடியாத ஒரு கேள்வியாக தொக்கி நிற்கிறது.
            கட்சிக்காரர்களின் வீடுகளைப் பார்க்கும் போது அவர்களின் வீட்டிற்குதான் அந்த மானியங்கள் பிரமாண்டமாகச் சென்று சேர்கின்றன என்ற மனத்தோற்றம் எழுவதைத் தடுக்க முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.
            பொதுவாக பார்க்கின்ற வரை கட்சிக்காரர்களின் வீடுகள் சாதாரண வீடுகளாக இருப்பதில்லை. எல்லாம் பிரமாண்ட பங்களாக்கள்.
            கட்சிகள் ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு கட்சிக்காரர்களை வளர்த்து விடுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
            கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கான அடிப்படையிலே மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
            ஒரு கிராமத்திற்கு ஒரு தார்சாலை அமைக்கப்படுகிறது என்று தற்போது பெருமைப்பட முடிகிறதா என்ன? சுமார் நாற்பது சதவீதத்திற்கு மேல் கட்சிக்காரர்கள் சாப்பிடுவதற்காகவே அந்தக் கிராமத்திற்குத் தார்சாலைகள் போடப்படுகின்றன என்பதை அச்சாலைகள் போடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் பல்லிழுத்துக் கொண்டு பள்ளங்களாய் நிற்கும் அழகே காட்டிக் கொடுக்கிறது.
            நாம் நமக்கான நலத்திட்டங்களைக் கேட்பது கூட கட்சிக்காரர்கள் கொள்ளையடிக்கத்தான் வசதியாக அமைகிறது என்றால் நாம் நலத்திட்டங்களைக் கேட்பதா வேண்டாமா? வேண்டாம் என்று நாம் விட்டு விட்டாலும் அவர்கள் விடப் போவதில்லை. நலத்திட்டங்களை அமல்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள், கட்சிக்காரர்களுக்கான நலத்திட்டங்களை நமக்கான நலத்திட்டங்கள் என்பது போல.

*****

24 Sept 2017

எழுத்தாளப் பிரச்சனைகள்

எழுத்தாளப் பிரச்சனைகள்
            தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள்.
            பிரசுரம் ஆகிறது, ஆகவில்லை என்பது பிரச்சனையில்லை. எழுதுவதை நிறுத்தாமல் எழுதுவது அவசியம்.
            தினந்தோறும் எழுதுவது முக்கியம். அதற்கு கட்டுபாடுகள் இல்லை.
            எழுத எழுதத்தான் புதிய பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.
            இயல்பாக எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும், அப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் மனதைப் போட்டு பிழிந்து எடுக்க வேண்டியதில்லை.
            எழுத வேண்டும் அவ்வளவே. எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அது எப்படி வர வேண்டும்? தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் எழுத்துகளே அதைத் தீர்மானிக்க வேண்டும்.
            மிகுந்த குழப்பமாக இருந்தால் துவங்கி விடுங்கள்.
            துவங்கினால் குழப்பம் தெளிந்து விடும்.
            குழப்பங்கள் விரிவதும், சுருங்குவதும் நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் என்பதைப் பொருத்ததுதான்.

*****