குரல் கொடுங்கள் தலைவாக்களே!
பிரபலங்களை அரசியல்வாதியாக்குவதன் மூலம்
கட்சிகள் மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகின்றன?
பிரபலங்களை ஆதரிப்பதன் மூலம் மக்கள் செல்வாக்குக்
கிடைக்கும் என்று கட்சிகள் தெரிந்து வைத்திருப்பதைப் போல, அதனால் மக்களுக்கு எதுவும்
கிடைக்காது என்பதும் அவைகளுக்குத் தெரிந்தே இருக்கின்றது.
தன் விளையாட்டைத் தவிர வேறு எதிலும் கவனம்
செலுத்தத் தெரியாத ஒரு விளையாட்டு வீரர் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்படும் போது
அவர் மக்கள் பணிக்கான சேவகர் பட்டியலில் ஒரு காலி இடத்தை நிரப்பி விடுகிறார்.
குறைந்தபட்சம் அவர் தன் விளையாட்டுத் துறையில்
நிலவும் அரசியல் குறித்தும், ஏற்றத்தாழ்வுகள் குறித்தேனும் குரல் கொடுக்கலாம் அல்லவா!
குரல் கொடுப்பதற்கு அவர் மக்கள் மன்றத்திற்குச் சென்றால்தானே. அந்தப் பதவியைத் தக்க
வைத்துக் கொள்வதற்கான மிக குறைந்த குறைந்தபட்ச நாட்கள் மட்டுமே அவர் மக்கள் மன்றத்திற்குச்
செல்கிறார். செல்லும் நாட்களிலும் வாய் பேசாத நல்ல பிள்ளையாக இருந்து விட்டு வந்து
விடுகிறார்.
அதோ போல சினிமாத் துறையிலிருந்து செல்லும்
பிரமுகர்களேனும் தங்கள் துறை குறித்து ஏதேனும் ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்களா
என்றால் அதுவும் இல்லை.
அவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்சிகளுக்கு
இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. ஒன்று மக்கள் செல்வாக்கு. மற்றொன்று அவர்களுக்கு ஏற்ற
ஒரு டம்மி உறுப்பினர் கிடைத்து விடுவது.
அவர்கள் மக்கள் மன்றங்களில் குரல் கொடுக்காவிட்டாலும்,
மக்கள் அவர்களைப் பார்த்து குரல் கொடுக்கலாம், "ஏன் குரல் கொடுக்க மாட்டேன்கிறீர்கள்
என்று?"
*****
No comments:
Post a Comment