தமிழக அரசியலின் அடிப்படைகள்
தமிழக அரசியல் பிம்பக் கட்டுமானம் கொண்டது.
கருத்துகள் பிம்பங்களின் வழியே கட்டமைக்கப்படுகின்றன. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும்,
வழிமொழியவும் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.
நமது அசலான பிரச்சனைகளை கற்பனை ரீதியான
பிரச்சனைகளாக்கி நம்மைப் போராட்ட வீரர்கள் ஆக்குவதற்கே கட்சிகள் முனைகின்றனவே தவிர,
நாம் அசலானப் பிரச்சனைகளுக்காகப் போராடி விடக் கூடாது என்பதில் கட்சிகள் மிகுந்த கவனமாக
இருக்கின்றன.
நம் அசலானப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு
விட்டால் நாம் சிந்திக்க ஆரம்பித்து விடுவோம். சிந்திக்க ஆரம்பித்து விட்டால் பிம்பக்
கட்டுமானம் பொருந்திய அரசியல் ஆட்டம் கண்டு விடும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
கமலஹாசனின் அரசியல் பிரவேசத்தை எடுத்துக்
கொண்டால், அவர் தன் பிம்பக் கட்டுமானத்தின் மூலமே தன்னை முன்னிலைப்படுத்துகிறார்.
நீட் போன்ற பிரச்சனைக்குக் கூட அவர் எந்த அளவுக்குக் களமாடினார் என்பதற்கானப் பதில்
மென்மேலும் பல கேள்விகளை எழுப்பும்.
இப்படியான அரசியல் பிரவேசங்கள்தான் இங்கு
நிகழ்கின்றன. அவர்களை முதல்வர்களாக்குவது குறித்தே நாம் சிந்திக்கிறோம். அல்லது இருக்கின்ற
இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதிலோ, வாக்கின் பலத்தை அதிகபட்ச அளவில் கரன்சி
நோட்டுகளால் நிறுத்துக் காட்டும் கட்சிக்கோ வாக்களிப்பவர்களாக நாம் கட்டாயப்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறோம்.
மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுபவர்கள்
கண்டு கொள்ளப்படாமல் விடப்படுவதும், அதற்காகக் குரல் கொடுக்கும் பிரபலங்களின் பிம்பங்கள்
கவனிக்கப்படுவதும் நமது அரசியல் அறிவைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
மக்கள் பணிக்கான ஆளுமையைக் கருத்தில் கொண்டு
பார்த்தால் தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் தங்களைக் கொஞ்சம் கூட தகுதிபடுத்திக்
கொள்ளவில்லை என்பது அவர்களின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்தே தெரியவரும்.
தகுதி இல்லாத ஒருவருக்கு வேலைவாய்ப்பு
வழங்க எந்த நிறுவனமும் நாட்டில் தயாராக இருப்பதில்லை. ஆனால், நாம் தகுதியில்லாத ஒருவருக்கு
மக்கள் பணிக்கான வேலைவாய்ப்பை வழங்க கண்ணை மூடிக் கொண்டு காத்திருக்கிறோம்.
*****
No comments:
Post a Comment