30 Jan 2017

கவன ஈர்ப்பு


தேங்க்ஸ் டூ...
"ஜல்லிக்கட்டு தடையை நீக்குவேன்!" என்று வாக்குறுதி கொடுத்த தலைவர், மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார், தடை விதித்த நீதிமன்றத்துக்கு!
*****
கொள்ளை
"இந்த ஆஸ்பட்டில்ல பீஸ்ங்ற பேர்ல கொள்ளையடிப்பானுங்கடா!" என்று ஈஸ்வர் சொன்னதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டான், அந்த ஆஸ்பிட்டலின் மருத்துவ உபகரணங்களைக் கொள்ளையடிப்பதற்காக அட்மிட் ஆன கிரஷ்.
*****
கவன ஈர்ப்பு
தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்த நடிகை தான்யா நழுவ விட்டாள் தன் மேலாடையை!
*****

29 Jan 2017

பரிமாற்றம்


தேடல்
என் தாகத்திற்கு
என் கண்ணீரையே
பருகிக் கொள்வேன்!
பசிக்கு
என் சதையையே
தின்று கொள்வேன்!
அன்பு செலுத்த
யாரையாவது
தேடிக் கொண்டிருப்பேன்,
துப்பாக்கியுடன் வரும்
ஒருவனுக்காகவோ
அல்லது
வன்புணர்வின் வேகத்தோடு வரும்
ஒரு மிருகத்திற்காகவோ!
*****

பரிமாற்றம்
பத்து ரூபாய்
பரிமாற்றத்தில்
ரூபாயை மகிழ்ச்சியாய்
வாங்கிக் கொண்டான்
ஏழைச் சிறுவன்!
மணல் வீட்டை மகிழ்ச்சியாய்
வாங்கிக் கொண்டான்
பணக்காரச் சிறுவன்!
*****

கடைசியில் ஒரு தடயம்


தீர்க்கம்
"இனிமே பினாமி பேர்ல இங்க சொத்து வாங்குறதா இல்ல!" என்று சொன்ன தலைவர், "வெளிநாட்டுல வாங்கணும்!" என்றார் தீர்க்கமாக.
*****
என்றார் தலைவர்!
ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன், "இனிமேல் எனக்குத் தர வேண்டிய கமிஷனை கோல்ட்ல கொடுத்துடுங்க!" என்றார் தலைவர்.
*****
கடைசியில் ஒரு தடயம்
"எந்த காமிராவிலேயும் நான் பண்ண தப்பு தெரியாது!" என்று சொன்ன குமார் சுற்றியிருந்தவர்களின் மொபைல் காமிராக்களைக் குறித்து யோசிக்க மறந்திருந்தான்.
*****

சிறிய பலூன் பெரிதாகி ‍வெடிப்பது எப்படி?


சிறிய பலூன் பெரிதாகி ‍வெடிப்பது எப்படி?
            ஒரு சிறிய தவறு கூட நேர்ந்து விடக் கூடாது என்ற மனப்பான்மை, பல பெரிய தவறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
            அது அதீத அச்சத்தின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அது மிகச் சரியான பாதுகாப்பு என்பது போல புரிந்து கொள்கிறோம்.
            நாய்க் கடி குறித்த அச்சம் இயல்பானது. அதை வெறிநாய்க் கடியோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் அதீத அச்சநிலை அருகில் நாய்களையே அண்ட விடாத மனநிலையை ஏற்படுத்தி விடுவதைப் போலத்தான் மனதின் அதீதத் தன்மை செயல்படும்.
            விளைவு அருகிலேயே நாய்களை அண்ட விடாது. அருகில் வந்து நாய்கள் விளையாடுவதையும் அனுமதிக்காது மனது. ஒரு நாய்க் குட்டி இயல்பாக வந்து துள்ளி விளையாடினாலும் கடித்து விடுமோ என்ற மனநிலையை அதீத அச்சம் உருவாக்கி விடும்.
            மிக வேடிக்கையாக, அது கடிக்காமலே விளையாடி விட்டுப் போனாலும், கடித்து இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.
            அந்த நாய்க் குட்டி உண்மையாக தன்னை கடிக்கவில்லை என்று தனக்குத் தானே மனதுக்குள் போராடி நிரூபிக்கும் ஒரு கோமாளித்தனமான கதை உள்ளுக்குள் அரங்கேறிக் கொண்டு இருக்கும்.
            பார்ப்பவர்களிடம் எல்லாம், கேட்பவர்களிடமெல்லாம் நாய்க் குட்டி வந்து விளையாடியது பற்றியும், அது கடித்ததா? இல்லையா? என்று பார்க்கும் படியும் ஆறுதல் மற்றும் தேறுதல் தேடும் நிலை ஏற்பட்டு விடும்.
            வேறு எதாவது ஒரு வாழ்க்கைப் பிரச்சனை ஏற்பட்டு அதில் மனம் மூழ்கும் வரை மனம் இதைப் பற்றியே நினைத்து நினைத்து வதைத்துக் கொண்டு இருக்கும்.
            இப்படித்தான் சின்ன பலூன் பெரிதாக ஊதப்பட்டு வெடிக்க வைக்கப்படுகிறது.
            அதைப் பெரிதாக ஊதுவது அதீத பாதுகாப்பு குறித்த மனதின் அச்சங்கள். அதை வெடிக்க வைத்து அலற விட்டு வேடிக்கைப் பார்ப்பது அதீத பயம் குறித்த மனதின் உணர்வுகள்.
            நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மிகையாகப் பாதுகாத்துக் கொள்ள நினைப்பது அநாவசியம். அது தேவையற்ற மனச்சுவர்களை உருவாக்கி விடும்.
*****

டைனோசர் பசி


பாவங்கள்
மன்னிப்பு வழங்கப்படும்
என்றீர்
பிதாவே!
நாங்கள்
பாவங்களைச்
செய்யத் துவங்கினோம்!
*****

டைனோசர் பசி
பனித்துளிக்குள்
நீ குடி வந்தாய்
அதை அப்படியே
பருகி விட்டேன்!
என் சமுத்திர தாகம்
உனக்குப் புரியாது
டைனோசர் பசிக்கு
முன் வந்த
என் காதல் சிறு முயலே!
*****

ஸ்வீடூ எடு! கொண்டாடு!


ஸ்வீடூ எடு! கொண்டாடு!
"இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!" என்று அறிவிப்பு வெளியிட்ட நடிகையின் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வாழ்த்துச் சொல்லி மகிழ்நதனர் நெட்டிசன்கள்.
*****
அனுபவி ராஜா அனுபவி!
உரிய ஆவணங்கள் இல்லை என்று பிடித்த ஆடிக் காரை, சில நாட்கள் இஷ்டப்படி ஓட்டி மகிழலாம் என்று முடிவு செய்து கொண்டார் இன்ஸ்பெக்டர் இன்பசாகரன்.
*****
தலைவரின் மகிழ்ச்சி
"நல்ல வேளை ஸ்விஸ் பேங்க்ல இருக்குற பணம் செல்லாதுன்னு அறிவிக்கல!" சந்தோஷப்பட்டுக் கொண்டார் தலைவர் பொன்னரசு.
*****

ஆசுவாசம்


ஆசுவாசம்
மாதத்தின் முதல் நாள்
சம்பளம் என்ற மகிழ்ச்சி
போயிற்று!
எந்தக் கடன்காரன்
எப்போது கதவைத் தட்டுவான்,
இன்ஸ்டால்மெண்ட் வசூலிப்பவன்
எப்போது எதிர்படுவான்,
மளிகைக்கடை அண்ணாச்சி
எப்போது என்னாச்சி என்பார்
என்பது புரியாமல்
குழம்பி நிற்கிறது
மாதத்தின் முதல் நாள்!
மாதத்தின் இந்த நாள்
அந்த நாள்தான்
என்று தெரிந்தும்
கிழித்துக் கசக்கித் தூக்கி எறிகையில்
மாதத்தின் முதல் நாளை
இரண்டாம் நாளாய்க் காட்டுகிறது
காலண்டர்!
கொஞ்சம் ஆசுவாசம் கொடுக்கிறது
அது
நேற்றே எல்லா பாக்கிகளையும்
பட்டுவாடா செய்து விட்டதாக!
*****