சிறிய பலூன் பெரிதாகி வெடிப்பது எப்படி?
ஒரு சிறிய தவறு கூட
நேர்ந்து விடக் கூடாது என்ற மனப்பான்மை, பல பெரிய தவறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
அது அதீத அச்சத்தின்
வெளிப்பாடு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அது மிகச் சரியான பாதுகாப்பு என்பது
போல புரிந்து கொள்கிறோம்.
நாய்க் கடி குறித்த
அச்சம் இயல்பானது. அதை வெறிநாய்க் கடியோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் அதீத அச்சநிலை
அருகில் நாய்களையே அண்ட விடாத மனநிலையை ஏற்படுத்தி விடுவதைப் போலத்தான் மனதின் அதீதத்
தன்மை செயல்படும்.
விளைவு அருகிலேயே நாய்களை
அண்ட விடாது. அருகில் வந்து நாய்கள் விளையாடுவதையும் அனுமதிக்காது மனது. ஒரு நாய்க்
குட்டி இயல்பாக வந்து துள்ளி விளையாடினாலும் கடித்து விடுமோ என்ற மனநிலையை அதீத அச்சம்
உருவாக்கி விடும்.
மிக வேடிக்கையாக, அது
கடிக்காமலே விளையாடி விட்டுப் போனாலும், கடித்து இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி
விடும்.
அந்த நாய்க் குட்டி
உண்மையாக தன்னை கடிக்கவில்லை என்று தனக்குத் தானே மனதுக்குள் போராடி நிரூபிக்கும்
ஒரு கோமாளித்தனமான கதை உள்ளுக்குள் அரங்கேறிக் கொண்டு இருக்கும்.
பார்ப்பவர்களிடம் எல்லாம்,
கேட்பவர்களிடமெல்லாம் நாய்க் குட்டி வந்து விளையாடியது பற்றியும், அது கடித்ததா? இல்லையா?
என்று பார்க்கும் படியும் ஆறுதல் மற்றும் தேறுதல் தேடும் நிலை ஏற்பட்டு விடும்.
வேறு எதாவது ஒரு வாழ்க்கைப்
பிரச்சனை ஏற்பட்டு அதில் மனம் மூழ்கும் வரை மனம் இதைப் பற்றியே நினைத்து நினைத்து வதைத்துக்
கொண்டு இருக்கும்.
இப்படித்தான் சின்ன
பலூன் பெரிதாக ஊதப்பட்டு வெடிக்க வைக்கப்படுகிறது.
அதைப் பெரிதாக ஊதுவது
அதீத பாதுகாப்பு குறித்த மனதின் அச்சங்கள். அதை வெடிக்க வைத்து அலற விட்டு வேடிக்கைப்
பார்ப்பது அதீத பயம் குறித்த மனதின் உணர்வுகள்.
நம்மைப் பாதுகாத்துக்
கொள்வது அவசியம். மிகையாகப் பாதுகாத்துக் கொள்ள நினைப்பது அநாவசியம். அது தேவையற்ற
மனச்சுவர்களை உருவாக்கி விடும்.
*****
No comments:
Post a Comment