திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 70
வருந்தப்படாத வதந்திகள் சங்கத்தினர்
அவள் தன் கையிலிருந்த கோப்பை
மேசையில் வைத்தாள். கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தால், திருவாரூர் நகரம் மழைக்குத்
தயாராகிக் கொண்டிருந்தது. மேகங்கள் கறுத்து, நகரின் நெரிசலை ஒரு மெல்லிய சாம்பல் நிறப்
போர்வையால் போர்த்தியது போலிருந்தது. மழை இன்னும் துவங்கிய பாடு இல்லை, ஆனால் எப்போது
வேண்டுமானாலும் வெளுத்துக் கட்டுவேன் என்பது போல மிரட்டிக் கொண்டிருந்தது.
அவள் அந்த அலுவலகத்தின் அ பிரிவு
எழுத்தர். செக்க சிவந்த நிறம். சுமாரான உயரம், எந்நேரமும் புன்னகைத்த முகம், சிறு சிறு
தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மென்மையான குணம், எப்போதும் லேசாகக் கலைந்த தலைமுடி, எதையோ
யோசித்துக்கொண்டே இருக்கும் கண்கள்.
ஆனால், அவளுக்கு ஒரு பிரச்சனை
இருந்தது.
அது அவன்.
அவன் அலுவலக மேலாளரின் நேர்முக
உதவியாளர். அவனுக்கு அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவனுடைய தீவிர முகமும், அவ்வப்போது
கோபத்தில் சிவக்கும் கண்களும், கோப்புகளில் காட்டும் நேர்த்தியும் கலந்து கட்டி அவளை
எப்போதோ சுருட்டிப் போட்டுவிட்டன. எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது போல காதலின்
விநோதம் இது.
அவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா?
இல்லை என்று அவள் சத்தியம் செய்வாள்.
அவனிடம் கேட்டால், "உங்களுக்கு என்ன பைத்தியமா?" என்று புருவத்தை உயர்த்துவான்.
ஆனால், இந்த உலகமும், முக்கியமாக
அவர்களின் அலுவலகமும் அதை நம்பத் தயாராக இல்லை.
அலுவலக சிற்றுண்டியகத்தில் அவள்
நுழைந்தபோது, ஆ பிரிவில் இருந்த எழுத்தாளரும், கண்காணிப்பாளரும் சடாரெனப் பேச்சை நிறுத்தினார்கள்.
அவள் பக்கம் திரும்பியபோது, அந்த ஆ பிரிவு எழுத்தரின் முகத்தில் ஒரு ஈனச் சிரிப்பு.
அவர்கள் நிறுத்திய பேச்சை இப்போது
வேறு விதமாகத் தொடங்கினார்கள்.
"என்னப்பா ராத்திரி ரெண்டு
மணிக்கெல்லாம் சில பேரோட வாட்ஸ்அப் எண் இணைப்புல காட்டுது. நாட்டுல என்னவோ நடக்குதுப்பா!"
என்றார் அந்தக் கண்காணிப்பாளர்.
"அதுவா? அது ஏதாவது அலுவலக
விவாதமாக இருக்கும்." என்றார் அந்த எழுத்தர் ஒரு வித நக்கல் கலந்த நமுட்டுச் சிரிப்புடன்.
"ஆமா ஆமா அலுவலக விவாதம்தான்!
நாங்களும் பார்க்கிறோம்ல, அலுவலகச் சந்திப்புகள்ல ரெண்டு பேரும் பார்த்துக்கிற பார்வையே
தனி. நேத்து அவுங்க ரெண்டு பேரும், பக்கத்துல யாரும் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு, என்ன
பேசிட்டு இருந்தாங்க தெரியுமா?" என்று அந்தக் கண்காணிப்பாளர் ஆரம்பிக்க, அவள்
தேநீர் குடிக்கும் எண்ணத்தை விடுத்து வேக வேகமான தன் அறையில் இருந்த அலுவலக நாற்காலிக்குத்
திரும்பினாள்.
இதுதான் அந்த அலுவலகம்.
அதாவது, வள்ளுவர் சொன்ன ஊர்.
இரண்டாயிரம் ஆண்டுகளில் ஊர் என்பது
அலுவலகமாக மாறியிருக்கிறது என்பதுதான் ஒரே வித்தியாசம்.
அவனும் அவளும் லேசாகப் பார்த்துக்
கொண்டாலோ, அல்லது தவறுதலாக ஒன்றாக மின்தூக்கியில் ஏறினாலோ போதும், அலுவலகத்திற்கே உரிய
ரகசிய வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகள் பறக்கும். அலுவலகத்தின் பொதுகுழுக்களிலும் இலைமறை
காயாக விசயங்கள் வெளியாகும்.
அப்படியானால், அவள் அவனைக் காதலிக்கிறாளா?
அவன் அவளைக் காதலிக்கிறானா? என்று இந்த விசயத்தைப் பட்டிமன்ற தலைப்புப் போல அமைத்துக்
கொண்டு, அதற்கு தீர்ப்பு எழுத ஒட்டுமொத்த அலுவலகமே இரு பக்கமும் நின்று ஆதாரங்களைச்
சல்லடைப் போட்டு சலித்தபடி விவாதித்துக் கொண்டிருந்தது.
இந்த பட்டிமன்ற விவாதத்துக்கு
முடிவாகக் கிடைக்கப் போகும் தீர்ப்பு என்னவென்றால், ஆம், இருவரும் ஒருவருக்கொருவர்
உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள் என்பதுதான்.
ஆனால், அவள் அவனிடம் சொல்லியிருக்கிறாளா
என்றால், இல்லை. அவனுக்குத் தன் மீது விருப்பம் இருக்கிறதா என்பதே அவளுக்குத் தெரியாது.
அவன் ரொம்பவே நேரத்தியானவன் மற்றும் கறாரானவன். வேலை நேரத்தில் அவனிடம் காதலைப் பேச
அவளுக்குப் பயம்.
அவனுக்குத் தன் மீது காதல் இருந்தால்,
அவனாகவே அதை ஏற்றுக்கொள்வான். ஆனால், அதற்குள் இந்த ஊரும் அலுவலகமும் பண்ணும் அலப்பறை
இருக்கிறதே, அதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை.
அன்று மதியம் 3 மணி.
"கொஞ்சம் என்னுடைய அறைக்கு
வா." அவளுக்கு அவனிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது.
அவள் எழுந்ததும், பக்கத்துப்
பிரிவில் இருந்த அந்த எழுத்தரும் கண்காணிப்பாளரும் ஒருவருக்கொருவர் கண்ணடித்துக் கொண்டு
விசயத்தைப் பரிமாறிக் கொண்டனர். அவள் அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு அவனது அறை
நோக்கி நடந்தாள்.
அவன் அந்த அறையில் ஒரு கோப்பைப்
பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளது நீல நிறச் சுடிதார், காதில்
சிறிய லோலாக்கு. அவள் தலைமுடியை முன்பக்கம் ஒதுக்கிய விதம் என எல்லாவற்றையும் பார்த்த
அவனது இதயத் துடிப்பு ஒரு நொடியில் எண்பது சதவீதம் அதிகமானது.
ஆனால், அது எதுவும் தெரியாத வண்ணம்,
"உட்காரு!" என்றான், குரலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.
அவள் உட்கார்ந்தாள்.
"நீ அனுப்பியிருக்கிற கோப்புகள்
எல்லாம் சரி. ஆனா, எனக்கு அலுவலகத்துல பரவுற சில வதந்திகள் பிடிக்கல." என்றான்
நேரடியாக, அவளைப் பார்த்து.
அவளுக்குத் தொண்டை வறண்டது.
"அது. அது வந்து, அந்த ஆ பிரிவு எழுத்தரும் கண்காணிப்பாளரும் சும்மா..."
"எனக்குத் தெரியும்."
அவன் குறுக்கிட்டான். "நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோமாம். அடுத்த மாசம் கல்யாணமாம்.
தேனிலவுக்கு ஊட்டி போறோமாம். இன்னைக்கு காலையில அந்த ராஸ்கல் என்கிட்டயே வந்து வாழ்த்துக்கள்ன்னு
சொல்றான். எவ்வளவு துணிச்சல் அவனுக்கு?"
அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"நீ ஏன் எதுவும் பேச மாட்டேங்குற?
அவனுங்க பேசுறதைக்கேட்டு நீயும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? உனக்கும் அப்படி ஏதும்
தோணுதா?" அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
அந்தக் கேள்வியில் ஒரு சிறிய
எதிர்பார்ப்பு இருந்ததை அவள் கவனித்தாளோ என்னவோ. ஒரு சிறிய மௌனம், ஒரு சிறு பார்வை.
அவள் பேசத் தொடங்கினாள். "எனக்கு உங்க மேல மரியாதை இருக்கு. அன்பு இருக்கு. ஆனா,
இந்த ஊர், அதாவது நம்ம ஆபீஸ் ஆளுங்க பேசுற வதந்திகள்தான் அதிகம். நான் உங்க மனசை வற்புறுத்த
விரும்பல. உங்களுக்கு என் மேல விருப்பம் இருந்தா, நீங்களா விரும்பினா, எனக்கு அந்த
அன்பைக் கொடுப்பீங்க. அதுதான் எனக்கு வேணும். ஆனா, இந்த ஊர் ஆளுங்க நாம ரெண்டு பேரும்
சேரணும்னு நமக்கு முன்னாடியே முடிவு பண்ணிக் கத்திக் கூச்சல் போடுறாங்க."
அவன் அவளைச் சில நொடிகள் உற்றுப்
பார்த்தான். அவனது கோபமான முகம் மெல்ல மாறியது. உதட்டோரத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது.
"வள்ளுவர் கவிதை மாதிரி பேசுறியே?" என்றான் மெல்ல.
"இல்லை. உண்மையிலேயே குறள்ல
இப்படி ஒரு விசயம் இருக்கு.
"தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்." (குறள்,
1150)
அப்படின்னு. நாம ரெண்டு பேரும்
என்ன நினைக்கிறோம்னு நமக்கே தெரியறதுக்குள்ள, இந்த ஊர் நம்மள சேர்த்து வச்சு பஞ்சாயத்து
பண்ணும்." அவள் குரலில் ஒரு கவித்துவமும் மலரின் மென்மையும் இழைந்தோடியது. அதே
நேரத்தில் திரண்டிருந்த மேகங்கள் அப்போதுதான் மழையைக் கொட்ட ஆயத்தம் ஆகத் தொடங்கியன.
"சரி, அப்போ அந்தக் காதலர்
என்ன நினைக்கிறார்னு உனக்குத் தெரியணுமா என்ன?" கம்பீரமான அவன், தன் குரலைத் தாழ்த்திக்
கேட்டான்.
அவளின் நெஞ்சு வேகமாக அடிக்கத்
தொடங்கியது. "என்ன சொல்ல வர்றீங்க?"
"நீ நினைக்கிற மாதிரி இந்த
ஊர் சும்மா வதந்தி பரப்பல. சில நேரங்கள்ல ஊர் பரப்புற வதந்தி உண்மையாகவும் இருக்கலாம்ல?"
"அப்படியா? நிஜமாவா?"
அவளுக்கு ஒரு கணம் சுற்றும் பூமி நின்றது போலிருந்து.
தன் கையிலிருந்த கோப்பை அவன்
தூரமாக வைத்து விட்டு எழுந்து நின்று, "மழை இப்போ அதிகமா பெய்யுது. இந்த நேரத்துல,
நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேநீர் குடிக்கப் போனா, நம்ம ஊரு ஆளுங்க, அதான் இந்த அலுவலகத்து
ஆளுங்க இன்னும் அதிகமாப் பேசுவாங்க. பரவாயில்லையா?"
அவள் மெதுவாகப் புன்னகைத்தாள்.
அவளுக்கான பதில் கிடைத்துவிட்டது. அவன் விரும்புகிறான். அவனுடைய அன்பு அவளுக்குக் கிடைக்கப்
போகிறது. இனி இந்த ஊர் எவ்வளவு தூற்றினாலும், எவ்வளவு வதந்தி பரப்பினாலும் அதைப்பற்றி
அவளுக்குக் கவலையில்லை.
"மிகவும் பரவாயில்லை. வாங்க
போகலாம்!" என்றாள் அவள்.
இருவரும் அந்த அறையை விட்டு விட்டு
வெளியே வந்தார்கள். அடுத்தடுத்த அலுவலக அறைகளில் இருந்த பல ஜோடி கண்கள் அவர்களை நோட்டமிட்டன.
இருவரும் அந்த ஊரை அதாவது அந்த
அலுவலகத்தைப் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டார்கள். அவர்கள் தூற்றிய வதந்திதான்,
இன்று அவர்களை ஒன்றாக இணைத்திருக்கிறது. இப்போது மழை அவர்களின் அலரை விட மிக பலமாகப்
பெய்து கொண்டிருந்தது.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment