19 Oct 2026

திரும்பி வரும் போது யார் இருப்பார் நீ பேச?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 71

திரும்பி வரும் போது யார் இருப்பார் நீ பேச?

வீட்டின் உள்ளே அழைப்பு மணியின் சத்தம் கேட்டது.

வெளியே தூதஞ்சல் பணியாளர் நின்று கொண்டிருந்தார்.

கதவைத் திறந்தான் அவன்.

வாசலில் நின்றிருந்த அவரிடமிருந்து கையெழுத்திட்டு அவரிடமிருந்த அட்டைப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டான்.

பயண அனுமதிக் கடிதமும் அதற்கான பொருட்களும் அந்தப் பெட்டியில் இருந்தன.

அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு கணம் துள்ளிக் குதித்தான். ஒரு குழந்தையைப் போலக் குட்டிக்கரணம் கூட போட்டான்.

சமையலறையிலிருந்து தேநீர் குவளையோடு அவள் வந்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

தேநீர் குவளையை அவன் கைகளில் கொடுக்காமல் வரவேற்பறையில் இருந்த சிற்றுயர மேசையின் மீது வைத்தாள். ஆவி பறக்கும் அந்தத் தேநீரின் வாசனை அறையை நிரப்பியது. ஆனால், இருவருக்குமிடையே இருந்த இடைவெளி எந்த தேநீராலும் நிரப்ப முடியாத அளவுக்கு விரிந்திருந்தது.

"என்ன ஒரு மாதிரியா இருக்கே? பொருட்கள் எல்லாம் வந்துருச்சு. இன்னைக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு விண்வெளி மையத்துல தகவல் தெரிவித்துத் தயாராகணும். அஞ்சு வருஷ செயல்திட்டம். செவ்வாய் கிரகத்துல புது ஆராய்ச்சி."  அவனுடைய குரலில் ஒருவித மிகையான உற்சாகம் இருந்தது. தன் அலைபேசி திரையைத் தட்டி, செவ்வாய் செயல்திட்டம் 2026க்கான தகவல்களை அவளிடம் காட்டினான்.

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கவில்லை. ஆனால், அதில் ஒருவிதக் கடுமையான உறைநிலை இருந்தது.

"அஞ்சு வருஷம் இல்லையா?"

"ஆமா. ஆனா, மாசம் ஒருதடவை முப்பரிமாண பிம்பவெளியில பேசலாம். சமிக்ஞை கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆகும். ஒரு எட்டு நிமிஷம் இடைவெளி இருக்கும். ஆனா பேசலாம். அப்புறம், அஞ்சு வருஷம்ங்கிறது ரொம்ப வேகமா ஓடிடும். நான் திரும்ப வரும்போது ஆராய்ச்சி முடிஞ்சு, எனக்கு பெரிய பதவி உயர்வு கெடச்சிருக்கும். நம்ம எதிர்காலம் ரொம்ப ஒளிமயமா இருக்கும்!" அவன் தன் வழக்கமான தர்க்கப்பேச்சைத் தொடங்கினான். எந்தப் பிரச்சினையையும் ஒரு தரவக விஞ்ஞானி போலப் பகுப்பாய்வு செய்து தீர்த்துவிடும் தற் பெருமை அவனுக்கு உண்டு.

"ஒளிமயமான எதிர்காலமா? அது யாருக்கு?" அவளின் குரல் மிக மெதுவாக, ஆனால் மிகக் கூர்மையாக வந்தது.

"என்ன கேள்வி இது? நமக்குத்தான்! நான் அங்க போய் சம்பாதிக்கிறது, ஆராய்ச்சி பண்றது எல்லாம் நம்ம ரெண்டு பேரோட எதிர்காலத்துக்குத்தானே?"

"நம்ம எதிர்காலம். அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் தொடங்கும். சரி, இந்த அஞ்சு வருஷம் இந்த வீட்ல, இந்த உடம்புல, இந்த மனசோட வாழணுமே ஒருத்தி.  அவளுக்கு என்ன பதில்?"

அவன் சலித்துக் கொண்டான். "மறுபடியும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதே. இது வாழ்க்கையில எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா? உலகத்திலேயே பத்து பேருக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்தியாவுலேர்ந்து நான் ஒருத்தன் மட்டும்தான். அதுவும் தமிழ்நாட்டுல இருக்குற எனக்கு. ஒரு தமிழனா நம்ம தமிழ்நாட்டுக்கு இது எவ்வளவு பெருமை தெரியுமா? நான் போகலைன்னா என் வாழ்க்கையே வீண். போய்ட்டு வந்தா அதற்கு அப்புறம் நம்ம வாழ்க்கையே வேற அளவுல இருக்கும். நீ அப்போ ராணி. இந்தப் பூமியில இருக்குற இடத்துக்கு மட்டுமல்ல, விண்வெளிக்கோ உன்னை சுற்றுலா அழைச்சிட்டுப் போவேன். இந்த உலகத்துல யாருக்கும் கிடைக்காத சந்தோசத்தை எல்லாம் உனக்குக் கொடுக்க முடியும். உனக்காக விண்வெளியில ஒரு தாஜ்மஹால் கூட அப்போ என்னால கட்ட முடியும் பார்த்துக்கோ. ஆகவே, அதுக்காகவே நான் போகணும். உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்."

"நான் உன்னை போகக் கூடாதுன்னு சொல்லலையே."

"அப்புறம் என்ன?"

அவள் அமைதியாக வந்து மெத்திருக்கையில் உட்கார்ந்தாள். தேநீரை ஒரு மடக்கு பருகினாள்.

"அதாவது, நீ போயிட்டு திரும்ப வரும்போது என்னென்ன பண்ணுவ? எப்படி என்னைக் காதல் பண்ணுவ? நாம எங்கெல்லாம் சுற்றுலா போவோம்? எப்படி சந்தோஷமா இருப்போம்னு என்கிட்ட அடுக்கடுக்கா விளக்கம் சொல்ற. அப்படித்தானே?"

"ஆமா! வல்வரவு. அதாவது, நான் திரும்ப வர்றத பத்திதானே பேசுறேன்? அதுல என்ன தப்பு?"

அவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவள் விழிகளில் ஒரு விசித்திரமான நோக்கு.

"நீ போயிட்டு திரும்ப வர்றப்போ, நான் சந்தோஷமா வாழறதுக்கு என்னென்ன பண்ணுவேன்னு நீ இப்போ என்கிட்ட விவரிக்க தேவையில்லை."

"புரியல."

"உன் கூட வாழப்போற அந்த எதிர்கால அவள்கிட்ட அதை அப்புறமா வந்து சொல்லிக்கோ. ஏன்னா, நீ திரும்ப வர்ற வரைக்கும் காத்துட்டிருந்து உயிர் வாழப்போற அந்த அவள் வேற!"

அவன் திகைத்து நின்றான்.

அவள் தொடர்ந்தாள், "நீ போகப் போறேங்குற இந்த நிமிஷமே என் உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு செத்துக்கிட்டே இருக்கு. நீ இல்லாத இந்த அஞ்சு வருஷமும் நான் ஒவ்வொரு நாளும் செத்து செத்துதான் பொழைக்கணும். நீ திரும்பி வரும்போது இங்க ஒரு பொண்ணு இருப்பா. ஆனா, அவ நீ விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பழைய அவளா இருக்க மாட்டா. வெறும் சடலமா, ஒரு இயந்திரமா நடமாடிக்கிட்டு இருப்பா. அந்த அவகிட்டெ போய், நான் வந்துட்டேன், இனி நாம நல்லா வாழலாம்ன்னு சொல்லு. அவ கேட்ப்பா."

"என்ன பேசுற நீ? லூசுத்தனமா இருக்கு!"

"லூசுத்தனம் இல்லை. உண்மை. நீ போயிட்டுத் திரும்பி வர்றதை பத்தி என்கிட்ட பெருமையா பேசாதே. ஏன்னா, உன் வருகைக்காக உயிரோட இருக்கப்போறவ வேற யாரோ. உனக்கு உண்மையிலேயே என் மேல அன்பு இருந்தா, என்னையும் உயிரோட வச்சிருக்கணும்னு நினைச்சா, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்கிட்ட சொல்லு."

"என்ன சொல்லணும்?"

"நான் உன்னை விட்டுப் போக மாட்டேன். நான் பிரிய மாட்டேன். அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லு. நாம வாழலாம். அதை விட்டுட்டு, நான் போயிட்டு அஞ்சு வருஷம் கழிச்சு வந்து உன்னை நல்லா பார்த்துப்பேன்னு உன் வல்வரவு பத்தி பேசுறீயே. அதை இப்பவே என்கிட்ட சொல்லாதே. அஞ்சு வருஷம் கழிச்சு உனக்காக காத்துட்டிருந்து, செத்துப் பிழைச்சு வாழப்போறாளே ஒருத்தி. அவகிட்ட போய் சொல்லு!"

அவனுக்குள் ஏதோ ஒன்று பலமாகத் தாக்கியது.

அவன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். தரவுகள், தர்க்கம், எதிர்காலம், விண்வெளிப் பயணம், பதவி உயர்வு எல்லாமே அந்த ஒரு நொடியில் கரைந்து போனது போல இருந்தது.

அவன் தன் கையில் இருந்த விண்வெளி பயண அனுமதிச் சீட்டைப் பார்த்தான். அப்புறம் அவளைப் பார்த்தான்.

வள்ளுவர் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னால் ஓர் ஓலைச்சுவடியில் எழுதி வைத்த,

"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை."                                (குறள், 1151)

என்ற குறள் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகத்தில், செவ்வாய் கிரக ஆய்விற்குச் செல்லும் ஒருவனின் வாழ்க்கையில் இவ்வளவு பிரத்யேகமாக, இவ்வளவு கொடூரமான உண்மையாக வந்து நிற்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அவன் வரவேற்பறைக்குள் நான்கு சுற்றுகள் வட்டமடிப்பைத் போல யோசித்துக் கொண்டே மெல்ல நடந்தான். தன் பையில் இருந்த திறன்பேசியை எடுத்தான். அதிலிருந்த செவ்வாய் கிரக செயல்திட்டம் என்ற செயலியைத் திறந்தான். அதில் விண்ணப்பத்தைத் திரும்ப பெறுதல் என்ற பொத்தானைப் பார்த்தான்.

அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, வெறும் அமைதி மட்டுமே இருந்தது.

அவன் அந்த பொத்தானை அழுத்தினான். திரையில் 'நீங்கள் உறுதி செய்ய விரும்புகிறீர்களா?' என்று கேட்டது. 'ஆம்' கொடுத்தான்.

அவன் அலைபேசியைத் தேநீர்க் குவளைக்கு அருகில் அந்தச் சிற்றுயர மேசையின் மீது வைத்தான். அவள் பக்கத்தில் மெத்திருக்கையில் அமர்ந்தான். அவளுடைய குளிர்ந்த கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்து அடக்கிக் கொண்டான்.

"இன்னைக்கு இரவு நாம எங்கயாச்சும் வெளிய போலாமா?"

"என்ன சொல்றீங்க?"

"செவ்வாய் கிரகத்துல டீ நல்லா இருக்காதுன்னு தோணுது. எனக்கு உன்னோ டீயே போதும். செவ்வாய் கிரக செயல்திட்டம் வேண்டாம்."

அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக்கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. அந்தக் கண்ணீரின் ஊடே அவள் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் உயிர் திரும்பியிருந்தது!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment