24 Oct 2026

கிரானைட் நெஞ்சம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 76

கிரானைட் நெஞ்சம்

திருவாரூரின் நூறுகால் மண்டபம் அருகே இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மாலை நேரக் காற்று புழுக்கமாக வீசிக்கொண்டிருந்தது.

அவன் முகம் வழக்கம் போல எந்த உணர்ச்சியையும் காட்டாமல், புயல் காற்றுக்கே அசையாத கல் மரத்தைப் போல இருந்தது.

அவனுடைய அலைபேசி செயல்திட்ட பணிகள் ஆரம்பமாக வேண்டிய நேரம் என்ற எச்சரிக்கை வாசகத்தோடு அதிர்ந்தது. அதை ஓர் அலட்சியமான பார்வையோடு அணைத்தான்.

கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு, எது வேலை நேரம், எது குடும்பத்திற்கான நேரம் என்பது அவனுக்கே குழப்பமாக இருந்தது.

"அப்புறம் ஒரு விஷயம்." என்றான் அவளிடம்.

அவள் அவனருகில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையில், ஆவி அடங்கி, மேலே மெல்லிய ஆடை படிந்திருந்தது.

அவன் ஒரு விஷயம் என்று தொடங்கும்போதே அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து விழும் சத்தம் கேட்பதைப் போல இருந்தது.

"சொல்லுங்க." என்றாள் மெல்லிய குரலில்.

"நான் அடுத்த வாரம் சான்பிரான்சிஸ்கோ போறேன். அங்கேயே இருந்து வேலை பார்த்தாக வேண்டும். மூணு வருஷம். அதற்கான உத்தரவு முடிவாயிடுச்சு. எனக்கு மின்னஞ்சலும் வந்துடுச்சு."

அவன் இதைச் சொன்ன விதம், நாளைக் காலை உணவாகத் தோசைக்கு பதிலாக உப்புமா சாப்பிடப்போகிறேன் என்று சொல்வது போலத்தான் இருந்தது. அதில் எந்தத் தயக்கமும் இல்லை. எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. குரலில் ஒரு சிறிய தடுமாற்றம் கூட இல்லை.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனுடைய மூக்குக் கண்ணாடிக்கு பின்னால் இருந்த கண்கள் மிகவும் தெளிவாக, வியாபாரச் சந்திப்புகளில் விளக்கம் கொடுப்பது போல பளிச்சிட்டன.

"மூணு வருஷமாங்க?"

"ஆமா. இதுதான் என் வாழ்க்கையோட மிகப் பெரிய கனவு. நீயே யோசிச்சுப் பாரு, இந்த வாய்ப்பை விட்டா, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அந்த அளவுக்கு வளர்ச்சி கிடைக்காது."

"என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதெ பத்தி சொல்லவே இல்லையே. முடிவு பண்ணிட்டுதான் சொல்றீங்க, இல்லையா?"

"சொல்றதுக்கு என்ன இருக்கு? இது என்னோட தொழில் வாழ்க்கை. ஆகவே இது என்னோட முடிவு. நம்ம நல்லதுக்குத்தானே. வேலையில எனக்குப் பெரிய இடம் கிடைக்கும். சம்பளம் இப்போ கிடைக்கிறதெ விட பத்து மடங்கு ஜாஸ்தி. எல்லாம் முடிவாகி, அடுத்த வெள்ளிக்கிழமை விமானப் பயணம். சான்பிரான்சிஸ்கோவுல போய் இறங்க வேண்டியதுதான்."

அவள் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது.

அவன் கொடியவன் அல்ல. யாரையும் கத்தியால் குத்துபவன் அல்ல. பொது இடங்களில் சத்தம் போட்டுப் பேசுபவன் கூட இல்லை. ஆனால், அவன் நெஞ்சில் ஒரு பாறை இருந்தது. அது மென்மையான பாறை அல்ல, கிரானைட்.

அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தன.

"பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை."                          (குறள், 1156)

அவனைக் காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து அவனைக் கரம் பிடிக்கும் நாள் வரை படித்த இன்பத்துப்பால் குறட்பாக்களில் சட்டென்று மேற்படி வள்ளுவ சூத்திரம் அவளது நினைவில் நிழலாடியது.

அவள் இதைப் படித்த போது அப்போது அப்படியெல்லாம், வன்கண்ணன் ஆகி விட மாட்டான் தன் காதல் கணவன் என்றே நினைத்தாள். ஆனால், இப்போதோ அந்த வன்கண்ணன் அவதரித்து விட்டான்.

அந்தக் குறளின் ஒவ்வொரு எழுத்தும் ரத்தமும் சதையுமாய் குத்தீட்டி போல அவளுக்குள் இறங்கியது.

அவனும் அவளும் ஒராண்டு, ஈராண்டு அல்ல ஐந்து ஆண்டுகள் திகட்ட திகட்ட காதலித்தவர்கள். திருமணம் நடந்து ஐம்பது நாட்கள் கூட கடந்திருக்காது.

அவர்களது காதல் வெறும் சினிமா பாணி காதல் அல்ல. கடற்கரையில் சுண்டல் சாப்பிடுவது, ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது என்று கூட இருந்ததில்லை. அவனுக்காவே அவள் ஜாவா, பைத்தான் என்று கரைந்து, தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு என உறைந்த காதல்.

பெரும்பாலும் அவனுடைய உலகத்தில் உணர்ச்சிகளுக்கு இடம் இருந்ததில்லை. அவள்தான் அவனை உணர்ச்சிப்பூர்வமாகக் காதலித்தாள்.

"நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கணும் தெரியுமா? நாம ரெண்டு பேரும் ஒரே துறை. ரெண்டு பேருக்கும் ஒத்த சிந்தனை. நாம ரெண்டு பேரும் ஒரே அலைவரிசையில இயங்குறவங்க." இப்படிச் சொல்லித்தான் அவன் ஐந்து வருட காதலைக் கல்யாணமாகக் கனியவும் வைத்தான்.

அப்போதும் அவள் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளத்தான் செய்தாள். அவள் வீட்டிலோ பெருத்த எதிர்ப்பு. அவ்வளவு எதிர்ப்புகளையும் தூசி போல அலட்சியபடுத்தி விட்டு, கட்டிய புடவையுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் அவனைக் கைபிடித்தாள்.

அவனுடைய அந்த அமைதியும், நடைமுறை சாத்தியமான யோசனைகளும்தான் அவளுக்குப் பிடித்திருந்தன. ஆனால், அந்த நடைமுறை சாத்தியத்திற்குள் அன்பு என்ற ஒன்று மிகக் குறைந்த அளவே கலந்திருந்தது என்பதை உணர அவளுக்கு ஐந்து ஆண்டுகளும் கூடவே இந்த திருமணத்திற்குப் பின்பான இந்த ஐம்பது நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

"நீ ஏன் அமைதியா இருக்க? நீ என்ன நினைக்கிறே?" ஆறிய தேநீரைக் குடித்தபடி கேட்டான்.

"நீங்க திடீர்னு சான்பிரான்சிஸ்கோ போறேன்னு சொன்னா, நான் எங்க போவேன்? நான் பிறந்த வீட்டுக்குக் கூட போக முடியாது? இங்க வேறு யாரு எனக்குத் துணை?"

அவன் அலைபேசியை தன் சட்டைப் பையில் வைத்தான்.

"நமக்கு நேர மண்டல் கூட தலைகீழா இருக்கும். இங்கே பகல்ன்னா அங்க இரவு. அடிக்கடி பேசுறது கூட தொந்தரவாத்தான் இருக்கும்ல."

அவள் அதிர்ந்துபோனாள். "அப்போ?"

"கொஞ்சம் எதார்த்தமா யோசிப்போம். நீயும் அமெரிக்க வர்றப் பாரு. அதுவரைக்கும் நீ இங்க கொஞ்சம் பொறுத்துதான் ஆகணும்." அவன் குரலில் எந்தவொரு பிசிறும் இல்லை. ஒரு செயல்திட்டத்தைத் தள்ளிப்போடுவது போல அல்லது ஒரு தேவையற்ற மின்னஞ்சலை அழிப்பது போல அதைச் சொல்லிவிட்டான்.

ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு சுலபமாகத் தன் காதலை, ஐந்து வருட நினைவுகளை, ஒன்றாகக் கழித்த மாலை நேரங்களை ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் தூக்கி எறிய முடிகிறது என அவள் அவனையே அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"நான் உங்களை, உங்களை மட்டும்தான் நேசிக்கிறேன். நீங்க இல்லாம என்னால..."

அவன் குறுக்கிட்டான். "உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதே. நான் சான்பிரான்சிஸ்கோவுல இறங்குறப்போ, அங்கே எனக்கு பெரிய பொறுப்புகள் இருக்கு. அதனால, என்னோட இந்த மனசை விலக்குற வேலைகள் வேண்டாம்."

அவன் எழுந்து நின்றான். "நான் தயாராகணும். பெட்டிகள்ல எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்."

அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல், மையமாக, "நான் எடுத்து வைக்க மாட்டேனா?" என்றாள்.

அன்று இரவு, அவளால் தூங்க முடியவில்லை.

ஜன்னல் வழியே நிலவு வெளிச்சம் வந்து விழுந்துகொண்டிருந்தது. சுவர் கடிகாரம் டிக்... டிக்.... என்று இதயத் துடிப்பு போலச் சத்தமிட்டது.

அவள் தன் மனதை அசைபோட்டாள். தனக்குத்தானே சமாதானம் சொல்ல முயன்றாள். "பாவம், அவருக்குக் வேலை அழுத்தம் அதிகம். அவர் நிஜமாகவே என்னை நேசிக்கிறார். அங்க போனதும் கண்டிப்பா அலைபேசியில் அழைத்துப் பேசுவார். சீக்கிரம் என்னை வரச் சொல்லி அழுத்தம் கொடுப்பார். அவர் இரக்கமுள்ளவர்."

அதே நேரத்தில் அவளின் உள்மனம் உரக்கக் கத்தியது. "ஏய் பைத்தியகாரப் பெண்ணே! யோசித்துப்பார். நான் போறேன் என்று உன்னிடம் அனுமதி கேட்கவில்லை; தகவலாகச் சொல்கிறார். அதுவும் எந்தவித வருத்தமும் இல்லாமல் சொல்கிறார். தானே முன்வந்து, நான் உன்னைப் பிரியப்போகிறேன் என்று இவ்வளவு இரக்கமற்றுச் சொல்லும் ஒருவர், நம்ம பிரிவால அவள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்று யோசித்து உனக்காக மீண்டும் வருவாரா? அவருடைய இந்த வன்கண்மை அவருடைய சுபாவம். அதில் அன்பு என்ற ஈரப்பதம் ஊறுவதற்கு வாய்ப்பே இல்லை. பாறையில் போய் விதையைப் போட்டுவிட்டு, அது முளைக்கும் என்று மழைக்காகக் காத்திருப்பதைப் போலத்தான் அவரின் அன்பிற்காகக் காத்திருப்பது. வள்ளுவர் எவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருக்கிறார்! பிரிவைச் சொல்லும்போதே நெஞ்சில் ஈரமில்லாமல், கல் மனதோடு சொல்பவர், பின்னாளில் உன் அழுகையைப் பார்த்தோ, உன் தனிமையைப் பார்த்தோ உனக்கு அருள் செய்வார், அன்பைத் தருவார் என்று நம்புவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை!"

அதற்கு மேல் உள்மனம் பேசுவதைக் கேட்க முடியாமல், அவள் படுக்கையில் இருந்து எழுந்தாள். விளக்கைப்போட்டாள்.

ஆனால், இப்போது அவள் கண்கள் கலங்கவில்லை. மாறாக, ஒரு தெளிவு பிறந்தது.

"பிரச்சனை அவர் போவதில் இல்லை. அவர் போகும்போது காட்டிய அந்த அலட்சியத்தில் இருக்கிறது. அந்த அலட்சியம்தான் அவருடைய உண்மையான முகம். அதைப் புரிந்துகொள்ளாமல், அவர் மீது இன்னும் அன்பு இருக்கிறது என்று கற்பனை செய்துகொள்வது நான் செய்யும் முட்டாள்தனம்." அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை.

அவன் வழக்கம்போல அவளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே எழுந்திருந்தான். முகத்தில் ஒருவிதமான வெற்றிப் மிதப்பு, சான்பிரான்சிஸ்கோ போவதற்கான அனைத்து தயாரிப்புகளும் முடிந்துவிட்ட திருப்தி.

அவள் அவன் முன்னே சென்றாள். அப்போது அவள் ஒரு சாதாரண பருத்திப் புடவை அணிந்திருந்தாள். முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. ஆனால், கண்கள் மிகவும் அமைதியாக இருந்தன.

"என்னை மன்னிச்சிடு. நேத்து கொஞ்சம் கரடுமுரடா பேசிட்டேனோன்னு தோணுது. தேநீர் சாப்பிடுவோமா?"

அவள் அவன் அருகில் உட்கார்ந்தாள். "உங்களுக்குப் போட்டுத் தர்றேன். எனக்கு இப்போ வேணாம்."

அவன் புருவத்தை உயர்த்தினான். "இன்னும் அதே நெனைப்புலேயே இருக்கியா? நீ இந்தக் காலத்துப் பொண்ணு. நம்மோட வாழ்க்கையும் முக்கியம் இல்லையா?"

அவள் லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒருவிதமான எள்ளல் இருந்தது. "நீங்க  நேத்து எங்கிட்டே சொன்னீங்கல்ல. நான் போறதா முடிவு பண்ணிட்டேன்னு. அதை நீங்க எவ்வளவு அலட்சியமா சொன்னீங்க தெரியுமா? "

அவன் நெளிந்தான். "அது... அது வந்து, நான் கொஞ்சம் யதார்த்தவாதி. உனக்குத்தான் தெரியுமே."

"இல்லை. அது யதார்த்தமே இல்ல. மனசுல கொஞ்சம்கூட ஈரமில்லாத குணம்."

"என்ன?"

"ஆமா. ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை நேசிச்சா, பிரியும் சூழல் வரும்போது கொஞ்சமாச்சும் ஒரு சின்ன வலியாவது மூஞ்சியில தெரியும். ஐயோ, நாம பிரியறோமேங்கிற ஒரு தயக்கமாவது குரல்ல இருக்கும். ஆனா உங்ககிட்ட அதுல ஒரு சதவீதம் கூட இல்லை."

அவன் ஏதோ பேச வந்தான். அவள் கையை உயர்த்தித் தடுத்தாள்.

"நீங்க பேசுறதை நான் கேட்டுட்டேன். இப்போ நான் பேசுறேன். நீங்க சான்பிரான்சிஸ்கோ போங்க. எத்தனை வருஷம் வேணாலும் இருங்க. நான் இங்கேயே கருகிக் கிடக்கிறேன். என்னாலயும் சான்பிரான்சிஸ்கோ போக முடியும். ஆனா போக மாட்டேன். நீங்க கூப்பிட்டாலும் வர மாட்டேன். ஏன்னா, எனக்குச் சான்பிரான்சிஸ்கோவை விட நீங்கதான் முக்கியம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நாம்ம காதலிக்க ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துலயே எனக்கு சான்பிரான்சிஸ்கோ வாய்ப்பு வந்துச்சு. நான் போகல. அந்தத் தகவலைக் கூட உங்ககிட்ட சொல்லல. சொன்னா என்னை நீங்க போகச் சொல்வீங்கன்னு தெரியும். ஆனா, யார் சொன்னாலும், அது நீங்களே சொன்னாலும் என்னால உங்களை விட்டுட்டுப் போக முடியாது. அப்பவே போகாத நானா இனுமே அங்கப் போகப் போறேன்? அப்படியே நீங்க எவ்வளவு கூப்பிட்டாலும், நான் வரவே மாட்டேன். ஏன்னா, உங்க மனசுல அன்பே இல்லைங்கிறதை நேத்து நீங்க நிரூபிச்சுட்டீங்க. அன்பே இல்லாத ஒருத்தர்கிட்ட இருந்து அன்பை எதிர்பார்க்கற அளவுக்கு நான் பைத்தியக்காரி இல்லை. எனக்கு இந்தத் திருவாரூர் போதும். இங்க எனக்கு யாரும் இல்லன்னாலும் இந்த ஊரே போதும். இந்த ஊர்ல நாம்ம ஒண்ணா இருந்த அந்தப் பொழுதுகள் போதும். அது காலாகாலத்துக்கும் என்னோட மனசுல அப்படியே இருக்கும். போதும். அது போதும்."

சொல்லி விட்டு அவள் நிதானமாக எழுந்தாள்.

அவன் முகம் முதன்முறையாகச் சற்று மாறியது. அவனது தர்க்க மூளையால் அவளது இந்தத் திடீர் திருப்பத்தைக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. எப்போதும் தன் பின்னால், தன் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு வரும் அவளா இது என்று அவன் மனம் கேள்வி கேட்டது.

அதே நேரம் அவன் அலைபேசி அதிர்ந்தது. சான்பிரான்சிஸ்கோ தொடர்பான அழைப்பாகத்தான் இருக்கும்.

அவன் அலைபேசியைப் பார்த்தான். அவளைப் பார்த்தான்.

"என்னை மன்னிச்சி…" என்று சொல்லி முடிப்பதற்குள், அவள் ஓடி வந்து அவன் வாயைப் போத்தினாள்.

அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். "உன்னோட அன்புக்கு முன்னாடி, சொர்க்கமே கிடைச்சாலும் போக மாட்டேன்."

கண்களில் நீர் தழும்ப அவள் சொன்னாள், "நீங்க பிரிவுரைக்கும் வன்கண்ணன் இல்ல, பிரிவே அறியாத மென்கண்ணன்."

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment