24 Oct 2026

பணம், புகழ் மற்றும் பேரழிவின் பாடம்

ரீல்ஸ் வெளிச்சமும் நிஜத்தின் இருளும்

மனிதனின் தேடல்கள் விசித்திரமானவை. அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை விடுத்து, கணினித் திரையின் வழியே மின்னும் கைத்தட்டல்களுக்கும், பார்வைகள் மற்றும் விருப்பங்கள் ஆகிய இலக்கங்களின் பெருக்கத்திற்கும் தன் வாழ்வை அடகு வைக்கும் காலம் இது. நாகர்கோவிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதாவின் விவகாரம், இன்றைய சமூக வலைதள மோகம் எத்தகைய விபரீதங்களை உருவாக்கும் என்பதற்கு ஒரு நேரடிச் சான்று.

கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொட்டி அபிஷேகம் செய்வது, வீட்டில் தங்கம் குவிந்திருப்பதை உலகுக்குக் காட்டுவது என அவர் வெளியிட்ட ரீல்ஸ்கள் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்தன. சமூக வலைதளங்களின் பார்வையாளர்களுக்கு அது ஒரு தற்காலிகக் காட்சி விருந்தாக இருந்திருக்கலாம்; ஆனால், திறந்திருக்கும் வீட்டு வாசலில் நின்று எங்கள் வீட்டில் கொள்ளையடிக்க வாருங்கள் என்று ரகசியமாக அழைப்பு விடுப்பதற்குச் சமம் அது.

இன்ஸ்டாகிராமில் அவர் வீசிய பணமழையைப் பார்த்துக் கைதட்டிய கூட்டத்தில் ஒருவன், அதே பகட்டைத் தன் கண்களால் அளந்து, அந்த வீட்டிற்கே சென்று 118 பவுன் நகைகளையும் பணத்தையும் அள்ளிச் சென்றுள்ளான். "என் வீட்டில் நகைகளைக் கொள்ளையடிக்க முடியாது" என்று அவர் சவாலாக விட்ட காணொளியே, ஒரு கொள்ளைக்காரனுக்குப் பேராசையின் ஊக்கியாக மாறியது விதியின் முரண்.

கொள்ளை நடந்த பின்பு நடந்தவை இன்னும் விசித்திரமானவை. திருட்டுப் போன அதிர்ச்சியை விட, அந்தச் சம்பவத்தால் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவர் யோசிக்கவில்லை. ஒரே நாளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டியது; மேலும் பல வீடியோக்களை அவர் பதிவேற்றினார்.

ஆனால், இன்ஸ்டாகிராம் விருப்பங்களும் பார்வைகளும் ஒருபுறம் கைதட்டினாலும், மறுபுறம் வருமான வரித்துறையின் கணக்கு வழக்குகளும், தனிப்படைப் போலீசாரின் பிடியும் நிஜ உலகத்தின் யதார்த்த முகத்தைக் காட்டின. இறுதியில் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவரே கொள்ளைக்காரனாக மாறி கைதானதும், 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டதும் இணைய உலகப் புகழுக்குரிய விலையைக் உணர்த்தியது.

புகழும் பொருளும் மனிதரை உயர்த்த வேண்டும்; ஆனால், அவை அகந்தையை ஊட்டி மனிதரையே வீழ்த்தும் நிலைக்கு ஆளாக்கக் கூடாது. சமூக வலைதளங்களின் மெய்நிகர் உலகம் தருவது தற்காலிகக் கைதட்டல்கள்தானே தவிர, நிஜ வாழ்க்கையின் பாதுகாப்பையோ நிம்மதியையோ அது தர முடியாது.

செல்வம் என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது; அது பகிரங்கத் தெருக்களில் காட்சிப்பொருளாக மாற்றப்படும்போது ஆபத்து தானாக வந்து கதவைத் தட்டும்.

இணையத்தின் பின்னால் ஓடும் அவசரத்தில், நிஜ வாழ்க்கையின் அமைதியையும் பாதுகாப்பையும் யாரும் இழந்துவிடக் கூடாது. கைதட்டல்களுக்காகத் தன் வாழ்வின் நிம்மதியைக் பணையம் வைப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு தெளிவான எச்சரிக்கை மணி.


*****

No comments:

Post a Comment