21 Oct 2026

பிரிவின் தர்க்கவியல் இடைவெளி

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 73

பிரிவின் தர்க்கவியல் இடைவெளி

"நாளைக்கு காலைல ஏழரை மணிக்குப் பயணம்." அவன் சொன்னதில் சுரத்தே இல்லை.

சுவரில் மாட்டியிருந்த மின்னணு கடிகாரத்தின் எண்ம எண்கள் மெலிதாகச் சிவந்து அணைந்தன. ஜன்னல் வழியே திருவாரூர் கமலாலயத்தின் சில்லென்ற இரவுக் காற்று உள்ளே நுழைந்து, மேசையில் கிடந்த காகிதங்களை லேசாக அசைத்தது.

அவள் தேநீர்க் குவளையை மேசையில் மெதுவாக வைத்தாள். அந்தச் சத்தம் கூட அந்த அறையின் அமைதியைக் குலைப்பது போல் இருந்தது.

அவன் கண்களை மூடி அந்தச் சாய்வு நாற்காலியில் லேசாகச் சாய்த்தான். அவன் முகத்தில் வழக்கமான அந்தப் புன்னகை இல்லை; ஒருவிதத் தற்காப்பு அரண் போன்ற இறுக்கம் இருந்தது.

"உன்னை விட்டு ஒரு கணம் கூட பிரிய மாட்டேன்னு சொல்லுவீங்களே. அப்போ இது என்ன?" அவள் குரல் நடுங்கவில்லை. அது மிகவும் நிதானமாக, கூர்மையாக இருந்தது. அதுதான் அவனுக்குப் பயத்தை தந்தது.

அவள் தன் கைப்பேசியைத் திருப்பி அவன் பக்கம் வைத்தாள்.

அதில் ஒரு குறள் பளிச்சிட்டது.

"அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்."                            (குறள், 1153)

அவன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டுவிட்டு, சன்னல் பக்கமாகத் திரும்பினான். "இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ஜெர்மனி தலைமை அலுவலகத்துல ஆறு மாச செயல்திட்டம். அவ்வளவுதான்."

"ஆறு மாசம்ங்கிறது நாட்காட்டியில சின்ன எண். ஆனா மனசுல அது ஒரு நூற்றாண்டு. நீங்க போறதுக்கு முன்னாடி வரைக்கும், என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னீங்க. ஆனா, வள்ளுவர் என்ன சொல்றார்? அறிவுடையவங்கன்னு நீங்க நினைச்சுக்கிறவங்களாலயும் சூழல் வரும்போது பிரியத்தான் முடியும்னு சொல்றார்."

"அப்ப நான் உன்கிட்ட பொய் சொல்றேன்னு சொல்றியா?"

"பொய் இல்லை. நீங்க அந்த நொடியில் உண்மையா இருக்கிறீங்க. ஆனா சூழல் மாறுபடும்போது மனிதர்கள் மாறிடறாங்க. அதான் நிஜம்."

"உன்னோட வார்த்தைகளை என்னால தாங்க முடியல. நீ சொல்றீயே பிரிவைத் தாங்க முடியலன்னு, அதை விட மோசமா, இதை என்னால தாங்கவே முடியல." அவன் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.

"உங்களுக்குத் தெரியாத தர்க்கம் இல்லை. யாராலும் திறக்க முடியாத பூட்டு ஒண்ணு இருக்கு. அதைத் திறக்குறவங்களுக்கு பரிசு தர்றாங்கன்னு அறிவிக்கிறாங்கன்னு வெச்சுப்போம். அதுதான் யாராலும் திறக்க முடியாத பூட்டாச்சே. அப்புறம் யார் திறக்க முடியும்? ஏன் அதுக்கு அறிவிப்பு தர்றாங்க? ஏன்னா எல்லாத்துலயும் ஓர் ஓட்டை இருக்கு. இங்க முழுசா நம்புறதுக்கு எதுவுமே இல்ல."

அவன் சிரித்தான். ஒரு மெலிதான, சோர்வான சிரிப்பு. "நீ எப்போவும் காதலை ஒரு தர்க்கக் கோளாறு போல பார்க்குறே."

"இல்லை. நான் காதலை யதார்த்தமா பார்க்குறேன். மனிதர்கள் சூழ்நிலைகளின் கைதிகள். காதலின் ஆழம் எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், வாழ்க்கையின் திசைகள் மாறும்போது கைகள் விலகத்தான் செய்கின்றன."

"அப்போ நம்ம காதல், கல்யாணம் இதையெல்லாம் பொய்ங்றீயா?"

"பொய்னு சொல்ல மாட்டேன். ஆனா அது நிரந்தரமானதுன்னு நம்புறது நம்ம முட்டாள்தனம். அதான் யதார்த்தம்."

அவன் அவளது கையை விடுவித்துவிட்டு ஜன்னல் பக்கம் சென்றான். வெளியே கமலாலயத்தின் குளிர்காற்று அவனது முகத்தில் அறைந்தது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெருவிளக்குகளைப் பார்த்தபடியே பேசினான், "நீ எப்பவுமே இப்படித்தான். ஒரு விஷயத்தை ரொம்ப எதார்த்தமாவும் தர்க்கப்பூர்வமாவும் யோசிச்சு அதோட அழகைக் கெடுத்துவே. நான் ஜெர்மனி போறது நம்ம வாழ்க்கைக்குக் கூட ரொம்ப முக்கியம். அதுக்காக நான் உன்னை மறந்திடுவேன்னு அர்த்தமா? வாட்ஸ்அப் இருக்கு, வீடியோ கால் இருக்கு, நீ வரணும்னு நினைச்சா விமானம் எப்ப வேணாலும் இருக்கு."

அவள் எழுந்து போய் அவனது அருகில் நின்றாள். அவனது முகத்தை மென்மையாக நிமிர்த்தினாள். "தொழில்நுட்பம் உலகத்தை சுருக்கிடுச்சு. உண்மைதான். உங்களோட முகத்தை இந்த உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் ஒரு நொடியில என்னால பார்க்க முடியும். ஆனா, உங்களோட தோள்ல சாய்ஞ்சு டீ குடிக்கிற அந்த நொடி சந்தோஷத்தை வாட்ஸ்ஆப்போ, கூகுள் மீட்டோ தருமா? அதான் வலி."

அவன் லேசாகப் புன்னகைத்தான். "பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்போ பிரியறேங்றதுதானே உன்னோட மனப்பிரச்சனை. ஆனா, நான் எங்க இருந்தாலும் உன் மனசுக்குள்ளதான் இருப்பேன். அதனால இது பிரிவெல்லாம் கிடையாது."

"அதுதான் பிரச்சனை. மனசுல இருக்கிறதுக்கும், கண்ணுக்குத் தெரியுறதுக்கும் நடுவுல இருக்கிற அந்த இடைவெளிதான் காலம். அந்தக் காலத்தை நம்மால வெல்ல முடியாது."

"நீ ஒரு தத்துவாதியை விட மோசமா குழப்பிக்கிறே."

"குழப்பமெல்லாம் இல்ல. ஆனா, உங்களால இதுக்கு மேல என்னைப் புரிஞ்சிக்க முடியாது."

அறையில் மீண்டும் அமைதி கவிழ்ந்தது. அந்த அமைதியை உடைப்பது போல் அவனது அலைபேசி அதிர்ந்தது. விமானப் பயணச்சீட்டின் உறுதிபடுத்தும் செய்தி அது.

மறுநாள் காலை.

திருச்சி விமான நிலையம்.

அவன் கையில் அந்தப் பயணப் பை. அவள் அவனுடன் வந்திருந்தாள். இருவரும் வார்த்தைகளைப் பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ள எதுவும் எஞ்சியிருப்பது போலத் தோன்றவில்லை. எல்லாமே நேற்று இரவே பேசப்பட்டுவிட்டன.

அவன் உள்நுழைவதற்கான அனுமதிச் சீட்டுடன் நுழைந்தான். கிளம்பும் முன் அவள் கண்களைப் பார்த்தான்.

"உண்மையாவே சொல்றேன். ஆறு மாசத்துல வந்துடுவேன்."

அவள் லேசாகப் புன்னகைத்தாள். அந்தக் புன்னகையில் நம்பிக்கையை விட பிரிவை எதிர்கொள்ளும் பய உணர்வே அதிகமாக இருந்தது.

"நம்புறேன். ஆனா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க. பிரிவுங்கிறது காலம் நம்மகிட்ட நடத்துற ஒருவித பரிமாற்றம். நீங்க போயிட்டு வாங்க."

அவன் அவளைக் கடைசியாக ஒருமுறை பார்த்தவிட்டு முனையத்தின் உள்நோக்கி நடந்தான். அவன் முதுகைப் பார்க்கும் போது அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. மனிதர்கள் விடைபெறும்போது மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்தப் பிரிவின் கோடு மெல்ல மெல்ல நீண்டு, ஒரு பெருங்கடலாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

முதல் இரண்டு மாதங்கள் நன்றாகவே நகர்ந்தன.

வாட்ஸ்அப் அழைப்புகள், ஜூம் சந்திப்புகள், நள்ளிரவு அரட்டைகள். காதலின் தூரம் குறையவில்லை.

ஆனால், மூன்றாவது மாதத்திலிருந்து அந்தக் கால இடைவெளி வேலை செய்யத் தொடங்கியது. அவள் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வரும்போது, அவனுக்கு அங்கே காலை மணி ஐந்தாக இருக்கும். அவன் அலுவலக சந்திப்பில் இருக்கும்போது, அவளுக்குத் தனிமைப் பயம் வாட்டும்.

ஒரு நாள் இரவு, பிரிவின் இடைவெளி தாங்க முடியாமல் அவள் அழுதே விட்டாள்.

"நீங்க என்னை மறந்துட்டீங்க!" அவள் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினாள்.

அவன் பதறியபடி உடனடியாகப் பதிலளித்தான்.

"புரிஞ்சுக்கோ. மென்பொருள் உருவாக்க செயல்திட்டம் ரொம்ப தீவிர நிலையில இருக்கு. நான் உன்னை விட்டு விலகலை. என் வேலை என்னை இழுக்குது."

அவள் உடனே பதில் அனுப்பவில்லை. அவள் அந்த வார்த்தையைப் பார்த்தாள், "என் வேலை என்னை இழுக்குது."

வள்ளுவர் சொன்னது எவ்வளவு நிஜம்! அறிவுடையவனான அவனே தன் கட்டுப்பாட்டில் இல்லாத சூழலின் பிடியில் சிக்கிவிட்டான். அவன் சிறு பிரிவைக் கூட விரும்பவில்லைதான்; ஆனால் அந்தச் சூழல் அவனைப் பிரித்து விட்டது.

நான்காவது மாதம்.

அவனுடைய செயல்திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, ஆறு மாதம் என்ற கால எல்லைக்கு முன்பாகவே. ஜெர்மனியின் தலைமை அலுவலகம் அவனுக்கு அங்கே நிரந்தரப் பணியை வழங்குவதாக அறிவித்தது.

அவன் உடனடியாக அவளை அழைத்தான். "எனக்கு இங்க நிரந்தர பணி தராங்க. நம்ம வாழ்க்கை நல்ல நிலைக்கு வந்துடுச்சு. நீயும் இங்கே வந்துடு. நாம ஒண்ணாவே இருக்கலாம்."

"வேண்டாம். எனக்கு இந்தத் திருவாரூரை விட்டும் எங்கும் வர முடியாது. இங்கதான் நான் உங்களை முதன் முதல்ல பார்த்த தியாகராஜர் கோயில் இருக்கு. இங்கதான் நாம்ம சாயுங்காலம் சந்திச்சுப்  பேசுன கமலாலயக் குளக்கரை இருக்கு. இங்கதான் நாம்ம சிரிச்சிக்கிட்டே பேசிக்கிட்டு நடந்த சோமசுந்தரம் பூங்கா இருக்கு. எல்லாத்துக்கும் மேல இங்கதான் நாம்ம முதன் முதலா ஒண்ணுக்குள்ள ஒண்ணான நம்ம வீடு இருக்கு. இத்தனை நாள் நீங்க இல்லாத இந்தப் பிரிவை இதெல்லாம்தான் ஈடுகட்டுச்சு. இதெ விட்டுட்டு என்னால அங்கல்லாம் வர முடியாது. இது எல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு வேலை, அது தர்ற பணம், எதிர்காலம்தான் முக்கியம்னா நீங்க தர்ற பிரிவை, நீங்க இருந்த இந்த இடத்தாலேயே நினைச்சு நினைச்சு நான் வாழ்ந்துக்கிறேன்."

அவள் பேச பேச அதற்கு மேல் பேச விருப்பமில்லாமல், அவன் இணைப்பைத் துண்டித்தான்.

நான்கு நாட்கள் ஆயின.

அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை, எந்தச் செய்தியும் இல்லை. அவள் அழைத்தாலும் அவன் எடுப்பதில்லை. அவள் அனுப்பும் எந்தச் செய்திக்கும் அவன் பதில் அளிக்கவும் இல்லை.

சாதாரணப் பிரிவு அசாதாரணப் பிரிவாகி விட்டதோ என்று வருந்தி, அவள் அழுத ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் அழைப்பு மணி அடித்தது.

அழுதழுது வீங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அவள் கதவைத் திறக்க ஜெர்மனிக்காரனாய் மாற முடிவெடுத்திருந்த அவன் திருவாரூர்க்காரனாய் மூட்டை முடிச்சுகளோடு அங்கே நின்றிருந்தான்.

அக்கம் பக்கத்துக் குடித்தனக்காரர்கள் அதை நெகிழ்வோடு பார்க்க, அவள் மனதுக்குள் பொங்கிய ஆத்திரத்தைத் தணிக்க முடியாமல் அவன் நெஞ்சில் படபடவென அடிக்க ஆரம்பித்தாள்.

அவன் என்னவோ, புத்தர், ஏசு, காந்தி பரம்பரையில் வந்தவனைப் போல, புன்னகையோடு அத்தனை அடிகளையும் எந்த எதிர் அடியும் தராமல் எதிர்கொண்டான்.

"பாவம் புள்ளே அவன். வாடி வதங்கி வந்திருக்கான். ராட்சசி இப்படிப் போட்டு அடிக்கிறாளே." என்று எதிர்வீட்டு பெண்மணி ஒருவர் சொல்ல, "அப்படித்தான் அடிப்பேன்!" என்றவள், அதற்கு மேல் அடிக்கத் தோன்றாமல், சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள் என்ற லஜ்ஜை கூட இல்லாமல், அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்.

"வள்ளுவர் சொன்னது உண்மைதான். பிரிவ்து உண்மைதான். ஆனா, அந்தப் பிரிவு நம்ம காதலை இன்னும் ஆழமாக்குது. உன்னோட எதார்த்தம், தர்க்கம் எல்லாத்துக்கும் இப்போ விடை கிடைச்சிருக்கும்ன்னு நம்புறேன். நான் அறிவுடையவனா இருக்குறதெ விரும்பல. உம் மேல அன்புள்ளவனா மட்டுமே இருக்க விரும்புறேன்." அவன் முணுமுணுக்க, இனிமேல் பேச வார்த்தைகள் எதுவும் இல்லை என்பது போல அவள் அவன் வாயைப் பொத்தினாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment