திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 72
தழுவலுக்குப் பின்னுள்ள அத்தியாயங்கள்
திருவாரூர், விளமல் கல்லுப் பாலம்
அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஓர் ஓரமாக நின்றான் அவன்.
அக்டோபர் மாத மழை தனது அத்தியாயத்தைத்
தொடங்கியிருந்தது.
மழை நீர் சொட்டும் அவனது தலைக்கவசக்
கண்ணாடியின் வழியே பார்த்த போது, உலகம் லேசாகக் கலைந்த நீர்வண்ண ஓவியம் போலத் தெரிந்தது.
அப்போதுதான் அவள் வந்தாள்.
அவள் கையில் ஒரு மஞ்சள் நிறக்
குடை. குடையிருந்தும் நனைந்த உடை. முகத்தில் மழைத் துளிகளா, நீர் முத்துக்களா என்று பிரிக்க முடியாத
ஒரு கொள்ளை அழகு. அவன் அவளைப் பார்த்ததும் அவள் ஒரு பார்வை பார்த்தாள். அவ்வளவுதான்.
கொட்டும் மழையில் காதல் தீப்பிடித்துக் கொண்டது.
அந்தப் பார்வையில் எந்தப் பேச்சும்
இல்லை. கட்டிப்பிடித்தல் இல்லை. தொடுதல் கூட இல்லை. ஆனால், இருவரின் இதயத் துடிப்பும்
நிமிடத்திற்கு 112ஐத் தொட்டது. வெறும் ஆறு வினாடிப் பார்வை. அதில் ஒரு காதலின் முழு
வரைபடமும் வரைந்து முடிக்கப்பட்டிருந்தது.
அன்று அவன் தன் நாட்குறிப்பில்
எழுதினான்,
"அவள் என்னைப் பார்க்கும் அந்த ஒரு நொடி, உலகத்தின் சகல சத்தங்களும் அடங்கிவிடுகின்றன.
அந்தப் பார்வையில் வாழ முடிபவனுக்கு, கை கோர்த்து நடக்கும் பாக்கியம் கூட இரண்டாம்
பட்சம்தான்."
அது காதலின் தொடக்கம்.
ஆகாயத்தில் மிதந்த காலம்.
இதோ, இப்போது இரண்டு வருடங்கள்
ஓடிவிட்டன. இப்போதும் இருவரும் அதே காதல் தம்பதிகள்தான். ஆனால், திருமணம் முடிந்து
ஆறு மாதங்கள் ஆகின்றன.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்
கணவன், மனைவி என்பதை விட இன்னும் அதே பழைய காதலர்களாய் அவர்கள்.
அவன் அவளின் வலது கையைத் தன்
இரு கைகளுக்குள்ளும் பொதிந்து வைத்திருந்தான். அவளது மென்மையான விரல்களைத் தடவிக்கொடுத்தபடி,
அவளது முழங்கையைக் கடந்து, தோள்பட்டையைத் தொட்டு, அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டான்.
அவள் உடலோடு உடல் ஒட்டி, அவளது
மூச்சுக்காற்று அவன் கழுத்தில் படும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான்.
ஆனால், அவள் முகத்தில் அந்தப்
பழைய வெளிச்சம் இல்லை.
அவன் மெதுவாக அவளது கன்னத்தை
வருடினான். "என்னடி செல்லம்? என்ன யோசனை?"
அவள் அவனது கையை மேலும் இறுக்கமாகப்
பற்றிக்கொண்டாள். ஆனால் அவளது கண்கள் அவனது கண்களைப் பார்க்கவில்லை. மேஜை மீது இருந்த
அந்த ஜோடிப் புறாக்களின் பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தன. "ஒன்றுமில்லை!"
என்றாள் எந்த உணர்ச்சியும் இல்லாம்.
"பொய் சொல்லாதே. உன் கை
நடுங்குகிறது. நான் உன்னைத் தொட்டுக்கொண்டிருக்கிறேன். நாம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம்.
ஆனால் உன் மனம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது."
அவள் மெதுவாக நிமிர்ந்து அவனைப்
பார்த்தாள். அவளது கண்களில் மெல்லிய கண்ணீர்ப்படலம்.
"நாம் இப்போது எவ்வளவு நெருக்கமாக
இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு எனக்குள் ஏதோ பயமாக இருக்கிறது."
"நீ என்ன சொல்ல வர்றேன்னு
எனக்குப் புரியல."
"முன்பெல்லாம், நாம் காதலிக்கத்
தொடங்கிய புதிதில், நீங்க என்னைப் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்ப்பீங்க. அந்தப்
பார்வையில் நான் உன்னோடு இருக்கிறேன் என்கிற சந்தோஷம் இருக்கும். அதில் எந்தக் கவலையும்
இருக்காது. எந்தக் கேள்வியும் இருக்காது."
"இப்போ?"
"இப்போ நீங்க என்னைக் கட்டிப்பிடிக்கும்போது,
உங்க தோளில் என் முகத்தை வைக்கும்போது, என் மனசு என்ன சொல்லுது தெரியுமா? இன்னும் கொஞ்ச
நேரத்தில் இந்தத் தொடுதல் முடிந்துவிடும். நீங்கள் கிளம்பிடுவீங்க. நாளைக்கே அமெரிக்காவோ,
கனடாவோ மென்பொருள் செயல்திட்டம்ன்னு அவர் கிளம்பிடுவார்ன்னு என்னை என் மனசு ரொம்பவே
பயமுறுத்துது."
அவன் அமைதியானான்.
அவள் சொல்வது உண்மைதான். ஆனால்,
அந்த உண்மை எப்படி அவளுக்கு உரைத்தது என்பதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அநேகமாக அடுத்த வாரம் அவன் ஒரு
புதிய செயல்திட்டம் தொடர்பாக அமெரிக்க செல்ல வேண்டியிருக்கலாம். செயல்திட்டம் முடிய
மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.
காதலின் தொடக்கத்தில், வெறும்
பார்வை தரும் இன்பத்தில் எந்தப் பயமும் இல்லை. ஆனால், தேகம் இணையும் நெருக்கத்தில்
பிரிவு வரப்போகிறதோ என்கிற பயம் ஆட்டித்தான் படைக்கிறது. அப்போது அந்த நெருக்கம் எனும்
பெரிய இன்பம் கூட, பிரிவை நினைக்கும் போது பெரிய துன்பமாக மாறிவிடுகிறது."
அவன் அவளை மேலும் நெருக்கமாக
இழுத்து அணைத்துக் கொண்டான். அவளது வாசனை அவனுக்கு அத்தனை பரிச்சயமானது. ஆனால், அந்த
அணைப்பில் இப்போது ஒரு விதமான பதற்றம் இருந்தது.
தொடுதல் அதிகரிக்க அதிகரிக்க,
இழப்பின் பயமும் அதிகரிப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அவன் அவளை இறுக்கிக் கொண்டே,
"நாம் ஏன் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து இந்த நொடியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?"
"அது என் கையிலா இருக்கிறது?"
அவள் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டாள். "முன்பு உங்கள் பார்வை எனக்கு ஒரு வரம்.
இப்போது உங்கள் அணைப்பு எனக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஒவ்வொரு முறை நீங்க என்னை இறுகத்
தழுவும்போதும், பிரிவு வரப்போகிறது, பிரிவு வரப்போகிறது என்று என் இதயம் அடித்துக்கொள்கிறது.
இந்த அணைப்பு தரும் சுகத்தை விட, இது தரப்போகும் பிரிவின் வலிதான் என் மனதை நசுக்குகிறது."
அவனுக்குப் புரிந்தது.
வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இதைத்தான் எழுதி வைத்திருந்தார்.
"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு."
(குறள், 1152)
"எனக்கு பசிக்கிறது. ஏதாவது
சாப்பிடலாமா?" என்றாள் அவள்.
காதலில் ஆகச்சிறந்த விஷயம் என்னவென்றால்,
எவ்வளவு பெரிய தத்துவப் போராட்டத்திற்கு நடுவிலும் பசி தன் வேலையைக் காட்டும்.
இருவரும் ஒரே தட்டில் இரண்டு
கரண்டி சோறு, ஒரு கரண்டி குழம்பு, முளைக்கீரை மசியல் கொஞ்சம், கொத்துமல்லி துவையல்
ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு ஒருவருக்கொரு ஊட்டி விட்டபடி உண்ண ஆரம்பித்தனர்.
"நாம் ஏன் பயப்பட வேண்டும்?
பிரிவைப் பற்றிய பயம் இருக்கிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?" ஒரு
கவளத்தை விழுங்கியபடி அவன் ஆரம்பித்தான்.
"என்ன அர்த்தம்?" அவள்
கவளத்தை விழுங்காமல் கேட்டாள்.
"நம் காதல் உயிரோடு இருக்கிறது
என்று அர்த்தம். எப்போது ஒரு பொருளை இழந்துவிடுவோமோ என்கிற பயம் வருகிறதோ, அப்போதுதான்
அந்தப் பொருள் நமக்கு எவ்வளவு மதிப்புமிக்கது என்று புரிகிறது."
அவள் அவனையே பார்த்தாள்.
"நீங்க சொன்னது சரிதான்.
நாம் முதலில் பார்த்தபோது, நம்மிடம் எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் பயமும் இல்லை.
ஆனால் இப்போது நாம் ஒருவரையொருவர் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டோம். என் மூச்சு உங்களுடையது,
உங்க ஸ்பரிசம் என்னுடையது. இப்போது பிரிவைப் பார்த்துப் பயப்படுவது இயல்புதானே? அந்தப்
பயம் அணைப்பின் சுகத்தையே கெடுக்கிறதே."
"கெடுக்க விடாதே!"
அவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டான். "நாளைக்கு மழை பெய்யும், அதனால் குடை நனைந்துவிடும்
என்று யோசித்துக்கொண்டு, இன்றைக்குப் பெய்யும் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்பது எவ்வளவு
முட்டாள்தனமோ, அதேபோல்தான் நாளைக்கு வரப்போகும் பிரிவை நினைத்து, இன்றைக்கு நாம் பகிர்ந்துகொள்ளும்
இந்த அணைப்பைத் துன்பமாக மாற்றுவதும்."
அவள் அமைதியாக யோசித்தாள்.
"பிரிவு என்பது காதலின்
எதிரி அல்ல. அது காதலின் அளவுகோல். நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை, நீஎன் பிரிவைக்
கண்டு எவ்வளவு அஞ்சுகிறாய் என்பதை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது." என்றபடி
அவன் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.
இந்த முறை அந்த அச்சம் முழுமையாக
விலகவில்லை என்றாலும், அந்த அச்சமே காதலின் ஒரு பகுதிதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
ஏனெனில், மரண பயம் இல்லாதவருக்கு வாழ்வின் மீது பற்று இருக்காது; பிரிவு பயம் இல்லாதவருக்குக்
காதலின் ஆழம் தெரியாது.
அவர்கள் உண்டு முடித்திருந்தனர்.
அடுத்து அந்த அறையின் வெளிச்சம் மங்கலாக மாறியது. காதல் தன் கணக்குகளைத் தொடர்ந்தது.
அடுத்த வாரம்.
திருச்சி விமான நிலையம்.
அவனது பைகள், பெட்டிகள் சோதனை
செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டன.
அவன் உள்ளே போக வேண்டும்.
வெளியே உள்சோதனை வாயிலருகே அருகே
இருவரும் நின்றிருந்தார்கள். சுற்றிலும் மனிதர்களின் கூச்சல்கள், அறிவிப்புச் சத்தங்கள்.
அவள் அவனைப் பார்த்தாள். அவள்
கண்கள் கலங்கியிருந்தன.
அவன் பொது இடம் என்று பார்க்காமல்,
அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தான். அவளது தலை அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தது. அவளது
உடலின் நடுக்கம் அவனுக்குப் புரிந்தது. ஆம், இந்த அணைப்பில் பிரிவின் பயம் இருக்கத்தான்
செய்கிறது. இது துன்பம்தான்.
ஆனால் அவன் மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து
விலக்கினான்.
அவளது தோள்களைப் பிடித்துக்கொண்டு,
அவளது கண்களை நேராய்ப் பார்த்தான்.
"நம் அணைப்பை விட்டுவிடு.
இப்போது என்னை ஒரு முறை பார்." என்று அவன் சொன்னதும் அவள் அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளது கண்களுக்குள் ஊடுருவிப்
பார்த்தான். அங்கே எந்த அணைப்பும் இல்லை, எந்தத் தொடுதலும் இல்லை. வெறும் பார்வை மட்டுமே.
அந்தப் பார்வையில், இரண்டு வருடங்களுக்கு
முன்பு விளமல், கல்லுப் பாலத்தின் அருகில் மழைத்துளிகளுக்கு இடையே அவள் பார்த்த அதே
ஆறு வினாடிப் பார்வை மீண்டும் உருவானது!
அந்தப் பார்வையில் அமெரிக்கா
இல்லை, சில மாத பிரிவு இல்லை, பயம் இல்லை.
அங்கே இருந்தது வெறும் அன்பு
மட்டுமே.
அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை
அரும்பியது. அவளது பயம் பனிபோல விலகியது.
"புரிந்துவிட்டதா?"
என்று அவன் புன்னகைத்தான். "தொடுதல் நமக்கு இடையே பிரிவின் பயத்தைக் கொண்டு வரலாம்.
ஆனால் நம் கண்கள் பேசும் இந்த அன்பு, உலகத்தின் எந்தப் பிரிவாலும் அழிக்க முடியாதது."
"ம்!" அவள் தலை ஆட்டியடி,
"சீக்கிரம் போயிட்டு வந்திடுங்க." என்றாள்.
"கண்டிப்பாக." என்றான்
அவன்.
அவன் முனையத்தின் உள்ளே நோக்கி
நடந்தான். கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் சென்று, ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
அவள் அங்கேதான் நின்றிருந்தாள்.
கையை உயர்த்தவில்லை. வெறும் பார்வையால் அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.
இப்போது அந்தப் பார்வையில் பிரிவின்
பயம் இல்லை; காதலின் நம்பிக்கை மட்டுமே நிறைந்திருந்தது!
- சூத்திரங்கள்
தொடரும்!
*****

No comments:
Post a Comment