19 Oct 2026

ஞானத்தின் பல்க் உற்பத்திகள்!

ஞானத்தின் பல்க் உற்பத்திகள்!

ஒரு காலத்தில் பல்கலைக்கழகங்கள் என்பது சிந்தனை விதைகளை விதைக்கும் ஞான பூமியாக இருந்தன. ஆனால், இன்று அவை வெறும் பிஹெச்டி எனும் முத்திரையைக் குத்தி, முனைவர் பட்டதாரிகளைத் தடையின்றி வெளியேற்றும் அதிவேக உற்பத்தி ஆலைகளாக உருமாறியுள்ளன.

கல்வித் தரம் என்பது இங்கே ஒரு தத்துவார்த்தக் கேள்விக்குறியாக, ஏதோவொரு பழைய நூலகத்தின் மூலையில் தூசு படிந்து கிடக்கிறது.

உலக அளவில் டாக்டர்கள் தட் மீன்ஸ் பிஹெச்டி ஸ்காலர்கள் பெருகிவிட்டார்கள். ஆண்டுதோறும் 3,00,000க்கும் மேற்பட்ட ஞானிகள் உலகெங்கும் அவதரிக்கிறார்கள். அமெரிக்கா 55,000 பேரைத் தயாரித்தால், சீனா போட்டிக்கு 70,000 பேரைத் தட்டிவிடுகிறது. நம்ம ஊரிலும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த உற்பத்தி இருமடங்காகி, இப்போது வருடத்திற்கு 40,000 முனைவர் பட்டங்கள் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் சந்தைக்கு வருகின்றன.

அளவிற்கதிகமான உற்பத்தி, பொருளின் மதிப்பைத் தளர்த்திவிடும் என்ற சந்தை விதியே இங்கும் நடக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதுவொரு சிறந்த வருவாய் மார்க்கம் என்பதால், தகுதி வரம்புகள் யாவும் கருணை அடிப்படையில் தளர்த்தப்பட்டு, ஆய்வுத் திறனுக்கும் பட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு மாயாஜாலச் சூழல் உருவாகியுள்ளது.

ஆராய்ச்சியாளருக்கும், அவரது கைடு எனப்படும் ஆய்வு மேற்பார்வையாளருக்கும் இடையே உள்ள ஆன்மீகத் தொடர்பு பற்றிப் பலரும் பேசுகிறார்கள்.

இங்கே அறிவு என்பது மூளையிலிருந்து உதிப்பதில்லை; அது பாக்கெட்டில் இருக்கும் பணத்தின் அளவைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும் ஒரு லௌகீகப் பண்டம்.

இதற்கு அடுத்தபடியாக, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டால்தான் பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பிதழ் தருவோம் என்றொரு கட்டாயம் இருக்கிறது. இந்த விதியைப் பயன்படுத்திக்கொண்டு, பணத்தைக் கொடு, கட்டுரையைப் போடு என்று சில போலி ஆய்விதழ்கள் கடை விரித்துள்ளன. ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் இந்தச் சந்தேகத்திற்குரிய இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளில் முப்பது சதவீதம் நம் நாட்டு அறிஞர்கள் எழுதியவை என்பதுதான் தத்துவார்த்த விந்தை.

முறையான மதிப்பாய்வு இல்லாமல் வெளியாகும் இக்கட்டுரைகள், உலகை உய்விக்கப் போகும் புதிய கண்டுபிடிப்புகள் என்று நம்பப்படுவதுதான் ஆகப்பெரும் நகைச்சுவை.

சில பேராசிரியர்கள், விஸ்வரூபம் எடுத்து ஒரே நேரத்தில் பத்து முதல் பதினைந்து மாணவர்களுக்கு ஞானஸ்நானம் செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இத்தனை சீடர்கள் இருந்தால், அங்கே தனிப்பட்ட கவனம் என்பது தத்துவப் பிரசங்கத்தில் மட்டுமே சாத்தியம். மாணவர்கள் தங்களின் வழிகாட்டியின் முகத்தையே பார்க்காமல், தாங்களாகவே ஏதோவொரு கட் – காப்பி – பேஸ்ட் வித்தையைச் செய்து ஆய்வை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் எப்படியாவது டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற லௌகீக அழுத்தம் மாணவர்களுக்குத் தரப்படுகிறது. இதனால், பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராயும் ஆழமான தலைப்புகளை விடுத்து, கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கக்கூடிய மொக்கையான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, சடங்காக ஆய்வை முடித்து விடுகிறார்கள்.

இப்படித் தவணை முறையில் தரம் குறைந்த முனைவர் பட்டம் பெற்றவர்கள், அடுத்து நேராக ஆசிரியர் தொழிலுக்குள் நுழைகிறார்கள். தாங்கள் எப்படி வித்தையைக் கற்றுக் கொண்டார்களோ, அதே தரத்தில்தான் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் போதிக்கிறார்கள். இது ஒரு முடிவற்ற சாப விமோசனமற்ற சுழலாக மாறி, ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்தையும் தரம் தாழ்த்துகிறது.

அறிவின் உன்னதம் என்பது எண்ணிக்கையில் இல்லை, அதன் வீரியத்தில் இருக்கிறது. தரம், நேர்மை, பொறுப்பு ஆகிய குணங்களை இந்த உற்பத்தி ஆலைகளுக்குள் மீண்டும் புகுத்தாவிட்டால், இங்கே உருவாகும் முனைவர்கள் வெறும் காகிதப் புலிகளாகவே எஞ்சுவார்கள்.

*****

No comments:

Post a Comment