23 Oct 2026

1059200 நிமிடங்கள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 75

1059200 நிமிடங்கள்!

"சொல்லுங்க உங்களுக்கு ஒண்ணுமே புரியலையா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?" அவள் குரலில் மெல்லிய கோபமும், அதை மீறிய ஏமாற்றமும் இழைந்திருந்தது.

மணமாகி மூன்று மாதங்கள்தான் இருக்கும்.

திருவாரூர், தென்றல் நகரில் அமைதியான வீட்டில், அவனும் அவளும் காற்றுக்குக் கூட இடைவெளி தராமல் இணைந்திருந்த நாட்களுக்கு மத்தியில் இப்போது வியாழன் கிரகமே உருண்டு செல்லும் அளவுக்கு இடைவெளி விழுந்து விட்டதாகத் தோன்றியது அவளுக்கு.

"தயவுசெய்து புரிஞ்சுக்கோ! துபாய்ல கூப்பிட்டிருக்காங்க. ஒரு ரெண்டு வருஷம். போய்ட்டு வந்தேன்னா வெச்சுக்கோ நம்ம வாழ்க்கையே மாறிடும். இந்த வீட்டு மேல இரண்டு வீடு கட்டி வாடகைக்கு விடலாம். வீட்டுக்கு முன்னாடி ரெண்டு கடை கட்டியும் வாடகைக்கு விடலாம். இது மாதிரியான வாய்ப்புங்க எப்பவாச்சும்தான் வரும். இப்போ வந்திருக்கு. கண்டிப்பா ரெண்டு வருஷம் முடிஞ்சதும் டக்குனு ஓடி வந்துருவேன்."

அவளது கண்கள் கலங்கியிருந்தன. "ரெண்டு வருஷமா? ஏதோ ரெண்டு நிமிஷம் மாதிரி நீங்க சாதாரணமா சொல்லிட்டீங்க. ஆனா, என்னால ரெண்டு நிமிஷம் கூட நீங்க இல்லாம முடியாது. ரெண்டு வருஷம்ன்னா பத்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து இருநூறு நிமிஷங்க. என்னால சத்தியமா முடியாது. காதலிச்சு, கல்யாணம் பண்ணி ஒன்னு சேர்ந்து, ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம இருக்கிறதே பெரிய சாதனை. அதை விட பெரிய சாதனை என்ன இருக்கு? நமக்கு இருக்குற வீடு போதும். உங்களுக்கு இப்போ பார்க்குற வேலையில வர்ற சம்பளம் போதும். எனக்குன்னு இனிமே நீங்க எதுவும் வாங்கித் தரக் கூட வேணாம். என் கூட இருந்தாவே போதும்."

"நீ இன்னும் இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கல்ல. சொத்து, பத்து, நாலு காசு இருந்தாதான் இந்த உலகம் நம்மள மதிக்கும். அதுக்கு இப்போ போனாத்தான் சம்பாதிக்கலாம். பல்லு போன காலத்துல என்ன பண்ண முடியும்?"

"நமக்கு இருக்குற வசதிக்கு நம்மள மதிக்கிறவங்க மதிச்சா போதும்ங்க. நீங்க சொல்ற மாதிரி இந்த உலகம்ங்றது என்னங்க? இந்த உலகத்தை வள்ளுவரை விடவா நாம்ம பெரிசா புரிஞ்சுக்கிட்டோம்? அவர் என்ன சொல்றார் தெரியுமா?"

அவன் புன்னகைத்தான். "அடடே, திடீர்னு இலக்கியம் பேசுற? வள்ளுவர் என்ன சொல்றாரு?"

"அவர் என்ன சொல்றார்ன்னா,

"ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு."                                   (குறள், 1155)

அப்படின்னு என்ன அழகா சொல்லிட்டார் பாருங்க. அதாவது, ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம இருக்கணும்னு நினைச்சா, ஆரம்பத்திலேயே அவங்களை பிரியாத மாதிரி பாதுகாத்துக்கணும். அவங்க நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போயிட்டாங்கன்னா, திரும்பச் சேர்றது ரொம்ப ரொம்பக் கடினம் அப்படிங்றார். தூரம்ங்கிறது வெறும் கிலோமீட்டர் கணக்கு மட்டும் இல்ல, அது மனசுக்குள்ள இருக்கிற தூரத்தை இன்னும் பெருசாக்கிடும்."

அவனுக்கு அவள் மீதும், திருவள்ளுவர் மீதும் மனதுக்குள் மெலிதாக கோபம் வந்தது. ஆயினும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். "இப்போ தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துடுச்சு. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், கூகுள் மீட்ன்னு எல்லாமே இருக்கு. நாம எங்க இருந்தாலும் ஒரே இடத்துல இருக்கிற மாதிரிதான் இருக்கும். நம்பு என்னை."

"இருக்கலாம். ஆனா, பக்கத்துல இருந்து நீங்க அரவணைக்கிற அந்த உணர்வை அதால தர முடியுமா?"

"நீ ரொம்ப யோசிக்கிறே. நான் மட்டும் ஆசைப்பட்டா உன்னை விட்டு பிரிஞ்சுப் போறேன்? இப்போ காத்து நம்ம பக்கம் வீசுது. அது மறுபடியும் எப்போதும் வீசும்ன்னு சொல்ல முடியாது. காத்து இருக்கிறப்பவே தூத்திக்கணும்ன்னு நம்ம முன்னோர்களே சொல்லியிருக்காங்க. அவங்களும் வள்ளுவர் மாதிரிதான். நாம்ம என்ன பண்ணப் போறோம். தூத்திக்கப் போறோமா? இல்ல, மத்தவங்க தூத்துற மாதிரி நடந்துக்கப் போறோமா?"

அவள் கையை மெதுவாக்கி விலக்கிக் கொண்டு, வேறு வழியின்றி லேசாகத் தலை அசைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரியும் எண்மத் திரைகள் ஒருபோதும் தோளின் அரவணைப்பைத் தந்து விட முடியாது என்று.

அடுத்த வாரம்.

திருச்சி விமான நிலையம்.

பயணப் பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு அவன் முனையத்தின் உள்ளே சென்ற போது, அவள் முகம் இறுகியிருந்தது. அவளது கண்கள் கலங்காமல் இருக்கப் போராடிக்கொண்டிருந்தன.

"கிளம்புறேன். பத்திரமா இருந்துக்கோ." அவனின் குரல் குழைந்தது.

"பார்த்துப் போங்க. அப்புறம் வள்ளுவர் சொன்னதை மறந்துறாதீங்க. பிரிஞ்சா சேர்றது கஷ்டம்ங்றார் அவர்."

"ஏய்! என்னம்மா நீ? ரொம்ப உணர்ச்சி வசப் படறே? சீக்கிரமே வந்துடுறேன்."

அவன் கண்ணாடிக் கதவுகளைத் தாண்டிச் சென்றான்.

முதல் மூன்று மாதங்கள் நன்றாகத்தான் ஓடின.

துபாய் நகரங்களின் அழகும், பணியிடத்தின் தொடர்ச்சியான வேலைகளும் அவனை எந்நேரமும் வேலைக்குள்ளேயே மூழ்கடித்தது.

தினமும் இரவு வாட்ஸ்அப் அழைப்புகளில் பேசினார்கள்.

"இன்னைக்கு என்ன சமைச்சே? நல்லா சாப்பிட்டீயா?"

"நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? உடம்பு சரியில்லன்னா யாரு பார்த்துப்பா?" என்று பேச்சுகள் வழக்கமாகின.

ஆனால், கூடிய விரைவிலேயே வேலைப்பளு மெல்ல வேலையைத் காட்டத் தொடங்கியது.

அவன் வேலை முடித்து வரும்போது அவளுக்கு நள்ளிரவு.

அவள் காலையில் எழும்போது அவனுக்குத் தூக்கக் கலக்கம்.

சின்னச் சின்ன வாக்குவாதங்கள் தோன்றின.

"நீங்க நேத்து ராத்திரி கூப்பிடுறேன்னு சொன்னீங்களே? நான் அப்படியே காத்திருந்து காத்திருந்து தூங்கிட்டேன்."

"அது வந்து, வேலை முடிய நேரமாயிடுச்சு. எனக்கு ரொம்ப களைப்பா வேறு இருந்துச்சு. என்னால கூப்புட  முடியல."

"உங்களுக்கு இப்போ நான் இரண்டாம் பட்சம் ஆயிட்டேனில்ல."

"ஏய்! ஏன் தேவையில்லாம பிரச்சனை பண்றாப்புல பேசுறே? உனக்காகத்தானே இங்க வந்து கஷ்டப்படுறேன்."

"கஷ்டப்படுறதுக்காகவா நாம காதலிச்சோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? இனுமே எனக்குக் கூப்பிடாதீங்க. உங்க வேலையை மட்டும் பாருங்க. யாரு எக்கேடு கெட்டுப் போனா எனக்கு என்ன? உங்களுக்கு உங்க வேலை, அதுல வர்ற பணம்தான் முக்கியம். நான் முக்கியமில்ல."

அவளது குரல் அவன் காதுகளில் பலமாக எதிரொலித்தது.

இணைப்பு துண்டிப்புக்கு உள்ளானது.

அதற்குப் பிறகு அவர்கள் பேசுவது குறைந்தது.

ஒருவருக்கொருவர் செய்திகள் அனுப்புவதும் சுருங்கின.

வாட்ஸ்அப் நிலைத்தகவல்கள் மட்டும் பேசிக்கொண்டன.

அதே நேரத்தில் அவனது அர்ப்பணிப்பான, துடிப்பான பணிக்கு அவனுக்குத் துபாய் வேலையில் மிகப்பெரிய பதவி உயர்வு கூட கிடைத்தது. ஆனால், அவளிடமிருந்து அவன் தள்ளிப் போய்க் கொண்டிருந்தான். தூரம் என்பது மில்லிமீட்டர் திரையைத் தாண்டி, இப்போது இதயங்களுக்குள் இறங்கத் தொடங்கியது.

ஒரு நாள் இரவு, அவன் அலைபேசியில் வாட்ஸ்அப்பைத் திறந்து அவளது நிலைப்படத்தைப் பார்த்தான். அவளது புன்னகை மாறியிருந்தது. ஒரு வெறுமை தெரிந்தது. அவன் அவளுக்கு ஒரு செய்தியை அனுப்பினான்.

"நான் உன் கூட பேசணும். ரொம்ப தூரம் போயிட்டோம்னு தோணுது."

மறுமுனையிலிருந்து சில மணி நேரம் கழித்து அவளுடைய குரல் பதிவு மட்டும் வந்தது. "வள்ளுவர் சொன்னது உங்களுக்கு இப்போ புரியுதா? முதல்லயே பிரிஞ்சிருக்கக் கூடாதுன்னு நினைச்சிருக்கணும். இப்ப பிரிஞ்சுட்டோம். மனசும் தூரப் போயிடுச்சு. இனிமே பழையபடி அந்த நாட்களும், அந்தச் சந்தோஷங்களும் திரும்ப வர்றது சாதாரண விஷயம் இல்ல. நாம தூரத்தால மட்டுமில்ல, இதயத்தால கூட ரொம்ப தொலைதூரத்துலதான் இருக்கோம்."

அந்த வார்த்தைகள் அவனை ஒரு மின்னல் போலத் தாக்கின. அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான். மேசையை ஒரு தள்ளு தள்ளினான். அதன் மீது இருந்த தேநீர் கோப்பைக் கீழே விழுந்து சிதறியது.

"இல்ல. இதுல ஏதோ தப்பு இருக்கு. வேலையில தப்பு வந்தா, அதை எப்படியாச்சும் ராப்பகலா கண் விழிச்சு சரி பண்ணலாம். ஆனா, இது வாழ்க்கை!"

அவன் உடனே தனது அலைபேசியில் விமான முன்பதிவு பயணச்சீட்டிற்கான செயலியைத் திறந்தான். அடுத்த விமானத்திற்கு உடனடியாக பயணச்சீட்டைப் பதிவு செய்தான்.

கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டு வாடகை வாகனம் ஒன்றைப் பிடித்தான். மேலாளரிடம் விடுப்பு எடுக்கிறேன் என்று கூட சொல்லவில்லை. அவள்தான் முக்கியம் என்பதை அவனது மனம் அவனுக்கு உணர்த்தியது.

அந்த முன்னிரவில், வானில் பயணிக்கத் தொடங்கியவன், துபாயிலிருந்து சரியாக நான்கரை மணி நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்தான்.

பயணச் சோதனைகள் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அங்கிருந்து வாடகை மகிழ்வுந்தைப் பிடித்தவன், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் திருவாரூர், தென்றல் நகரில் இருந்த தனது வீட்டுக் கதவைத் தட்டிக்  கொண்டிருந்தான்.

அவள் சோர்வுடனும் தூக்கம் கலையாமலும் கதவைத் திறந்தாள்.

வெளியே பயணப் பெட்டிகளுடனும், முகமெங்கும் மண்டிய தாடியுடனும் அவன் நின்று கொண்டிருந்தான்.

அவள் அதிர்ந்துபோனாள்.

"நீங்களா? இல்ல கனவா?" அவள் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

அவன் மூச்சு வாங்கப் பேசினான். "நீ சொன்னது நூறு சதவீதம், ஆயிரம் சதவீதம் அவ்ளோ சரி. வள்ளுவர் சொன்னது கொஞ்சம் கூட பிசகல.  ஆனா, நான் அரிதான ஒன்றை, எளிமையாக்கிடலாம்ன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். நான் துபாய் வேலையை விட்டுட்டுச் சொல்லாம கொள்ளாம வந்துட்டேன். அவ்வளவுதான். அந்த அரபு நாட்டுக்கு டாடா காட்டிட்டேன். இனிமே எந்தக் கடலும் நம்ம நடுவுல இருக்காது."

அவள் கண்களில் நீர்த்துளிகள் பெருக்கெடுத்தன. அவள் அவனது சட்டைக் காலரைப் பற்றிக்கொண்டு அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அந்த அதிகாலைக்கு முந்தைய காற்றில், பல மாதங்களாக உறைந்திருந்த பிரிவெனும் கொடுந்துயர் விலகியது போலிருந்தது.

அவன்மெலிதாகச் சிரித்தான். "இனிமே காசு, பணம், வேலையை மட்டும் நினைக்க மாட்டேன். உன்னையும் உன்னோட அன்பையும் மட்டும்தான் நினைச்சுப் பார்ப்பேன். ஏன்னா, காசு, பணம், வேலையெல்லாம் நிரந்தரம் இல்ல. காசு, பணம் வரும், போகும். வேலையை விட்டு எப்ப வேணாலும் தூக்குவானுங்க. ஆனா, நீ எப்போதும் நிரந்தரம். நான் எப்படி இருந்தாலும் நான்தான் உனக்கு முக்கியம். என்னை விட உனக்கு எதுவும் முக்கியம் கிடையாது. அப்படின்னா எனக்கும் அப்படித்தான். எனக்கும் உன்னை விட இனுமே எதுவும் முக்கியம் கிடையாது. அது காசோ, பணமோ, வேலையோ எதுவா இருந்தாலும் உன்னை விட எதுவும் எனக்கு முக்கியம் கிடையாது."

இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டனர். அந்த அணைப்பில் தூரம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போனது. அத்துடன் அங்கே பிரிவு என்ற ஒன்று செயலிழந்து விழுந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment