2 Jan 2021

மன்றேறி பொய் சொல்பவன் மண்ணாவான்!

மன்றேறி பொய் சொல்பவன் மண்ணாவான்!

செய்யு - 674

            "கன்டெம்ப்ட் ஆப் த கோர்ட் ஆயிடும். பாக்ஸ்ல ஏறுங்க டாக்டர். கேக்குற கெள்விக்கு உண்டு, ல்லன்னு மட்டும் பதிலச் சொல்லுங்க. விளக்கமால்லாம் பதிலச் சொல்லத் தேவையில்ல!"ன்னு பாலாமணிகிட்டெ கெஞ்சுற நெலமைக்குப் போயிட்டாரு கங்காதரன்.

            "விளக்கமா சொல்லலன்னா அவுங்க தப்பா பண்ணுற கிராஸ் சரின்னு ஆயிடாதா?"ன்னாம் பாலாமணி கங்காதரன்கிட்டெ கடுப்பெடுத்து பேசுறவனப் போல.

            "அதெல்லாம் நாஞ்ஞ ஆர்கியூமெண்ட்ல பாத்துப்போம் டாக்டர்! தயவு பண்ணி பாக்ஸ்ல ஏறுங்க. எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்காங்க!"ன்னு கங்காதரன் கால்ல வுழுந்து கெஞ்சாத கொறையா கேட்டதுக்குப் பெறவுதாம் பாலாமணி கூண்டுல ஏறுனாம். திரும்பவும் குறுக்கு விசாரணை ஆரம்பமானுச்சு.

            திருநீலகண்டன் வக்கீல் உதட்ட சுழிச்சாப்புல ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு அடுத்தக் கேள்வியக் கேக்க ஆரம்பிச்சாரு. "மருந்து விசயத்தைக் கடைசியாக வெச்சுப்போம். திருமணத்தின் போது எனது கட்சிக்காரரின் பெற்றோரிடமிருந்து இருநூறு சவரன் நகை, கார் வாங்குவதற்கு இருவது லட்சம் ரொக்கம், திருமணச் செலவு பதினைந்து லட்சம் ரொக்கம் வாங்கியது உண்மையா?"ன்னாரு வக்கீல் பொடி வெச்சு கேக்குறாப்புல.

            "இல்ல. நான் எதற்கு வாங்க வேண்டும்? நான் அரசுப் பணியில் இருக்கும் டாக்டர். எனக்குப் போதுமான வருவாய் உள்ளது. அதை வைத்தே எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். பெண் வீட்டாரிடம் அதை வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை."ன்னாம் பாலாமணி வீறாப்பா பதிலச் சொல்றாப்புல.

            "ஆக தாங்கள் போதுமான வருவாயோடு இருக்கிறீர்கள் என்பதை தங்கள் வாயாலேயே ஒப்புக் கொள்கிறீர்கள். போதுமான வருவாயோடு இருக்கும் தாங்கள், தங்களைப் பிரிந்து வாழும் எனது கட்சிக்காரர் சாப்பாட்டிற்கு என்ன செய்வார், உடுத்துவதற்கு என்ன செய்வார் என்றெல்லாம் எதுவும் யோசிக்கல இல்லையா? குறைந்தபட்சம் என் கட்சிக்காரருக்கு அதாவது உங்களது மனைவிக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுக்கணும்ன்னு என்று கூட தோணல அல்லவா?"ன்னாரு வக்கீல் பாலாமணி சொன்ன பதிலேந்து கேள்விய உருவி எடுக்குறாப்புல.

            "நாம்ம கொடுத்தேம். அதெ அவ்வே வாங்கிக்கிடல!"ன்னாம் பாலாமணி சிறு புள்ளைங்க சண்டையில பதிலச் சொல்லி சமாளிக்குறாப்புல.

            "நீங்கள் கோர்ட்டு மூலமாக ஜீவனாம்சமாகக் கொடுத்தா ‍அதெ வாங்கிக்க தயாரா இருக்காங்க! தாங்கள் ஜீவனாம்சம் கொடுக்கலாம்தானே?"ன்னாரு வக்கீல் பாலாமணிய நாடி பிடிச்சுப் பாக்குறாப்புல.

            "நாம்மத்தாம் சேந்து வாழ தயாரா இருக்குறேம்ன்னு சொல்றேன்னே. நாம்ம எதுக்குக் கொடுக்கணும்?"ன்னாம் பாலாமணி பைசா காசிய தங் கையிலேந்து உருவிட முடியாதுங்ற மாதிரிக்கு.

            "தங்களோட சேர்ந்து வாழ வந்தால் தாங்கள் எதாவது மருந்து கொடுத்து அவரைக் கொன்று விடுவீர்கள் என்று எனது கட்சிக்காரரின் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். பிறகெப்படி உங்களோடு அனுப்ப முடியும்?"ன்னு வக்கீல் ஒரு கேள்விய வெச்சாரு. அவரு இப்படி கேட்டதெப் பாத்தப்போ நடக்குறது குறுக்கு வெசாரணையா அல்லது ரண்டு பேத்துக்கு இடையிலான விவாதமாங்ற கேள்விய சுத்தி இருந்த அத்தனெ பேத்துக்கும் உண்டாக்குனுச்சு.

            "சேர்ந்து வாழ வந்தா எவ்வளவு வேணாலும் செய்யுறேம். பிரிஞ்சிப் போயி ஜீவனாம்சம் வாங்குணுங்றதுக்காவே வம்படியா வழக்கத் தொடர்ந்தா அதுக்கு எப்பிடி கொடுக்குறது?"ன்னாம் பாலாமணி வக்கீல திரும்ப குறுக்கு வெசாரணை பண்டுறாப்புல.

            "அதெ கோர்ட்டு முடிவு செய்யும். அடுத்தா ஒரு மருத்துவராகத் தாங்கள் மருந்து தயாரித்து அதன் மூலம் பணம் ஈட்டுவது உண்டா?"ன்னாரு திருநீலகண்டன் குறுக்கு வெசாரணைய மறுக்கா கையில எடுக்குறாப்புல.

            "ஒடம்பு சரியில்லன்னு வர்றவங்களுக்கு அவுங்களுக்குத் தகுந்தாப்புல மருந்து தயாரிச்சிக் கொடுக்கறது ஒண்டு. அதுலேந்த பணம் ஈட்டுறதெல்லாம் யில்ல!"ன்னாம் பாலாமணி அழுத்தந் திருத்தமா சொல்றாப்புல.

            "எனது கட்சிக்காரர் தங்களோடு சேர்ந்து வாழ்ந்த காலத்தில் தாங்கள் மருந்து காய்ச்சித் தயாரித்து விற்பதைப் பார்த்துள்ளதாக சொல்வது உண்மையா?"ன்னாரு வக்கீல் பின்னாடி பேசுவோம்ன்னு சொன்ன மருந்த விசயத்தெ கேக்குறாப்புல.

            "இந்தக் கேள்வி இந்த வழக்குக்குச் சம்மந்தமில்லாது. நம்ம மேல அபாண்டமான பழியச் சுமத்துறதுக்காகக் கேக்கப்படுற கேள்வி. இந்தக் கேள்விக்கெல்லாம் நாம்ம பதிலச் சொல்ல விரும்பல."ன்னாம் பாலாமணி ரொம்ப உறுதியா. நீதிபதியும் அதெ பதில் சொல்ல விருப்பமில்லன்னே குறிச்சிக்க சொன்னாரு.

            "தாங்கள் மருந்துக் காய்ச்சி விற்பதில்லை என எடுத்துக் கொள்ளலாமா?"ன்னாரு வக்கீலு பாலாமணிய மறுக்கா விடாம சீண்டுறாப்புல.

            "இந்தக் காலத்துல யாருங்கய்யா மருந்தெல்லாம் காய்ச்சுறாங்க. எல்லாம் மருந்தா தயாரிச்சு வருது! வெவரம் தெரியாம அந்தக் காலத்து வைத்தியனுங்ககிட்டெ கேக்குற மாதிரியே கேக்குறீயே?"ன்னாம் பாலாமணி வக்கீல நக்கல்ல பண்டுறாப்புல.

            திருநீலகண்டன் வக்கீல் அந்த நக்கல பெரிசு பண்ணாதவரப் போல, "நீங்களும் எனது கட்சிக்காரரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவருக்குச் சிகிச்சை அளித்தது உண்டா?"ன்னாரு அடுத்த ஊசிய வாழைப்பழத்துல நைச்சியமா ஏத்துறாப்புல.

            "எப்பவாச்சும் ஒடம்பு சரியில்லன்னா மருந்துக் கொடுத்திருக்கேம்!"ன்னாம் பாலாமணி கோர்ட்டோட வடவண்ட மூலையப் பாத்தாப்புல.

            "அதற்கான மருந்துச் சீட்டுகள் உங்களிடம் இருக்கா?"ன்னாரு வக்கீல் அடுத்த கேள்விய எடுத்து வீசுறாப்புல சட்டுன்னு.

            "பொண்டாட்டிக்கு மருந்துக் கொடுக்குறதுக்குல்லாம சீட்டெழுதிப் பத்திரமா வெச்சிப்பாங்க?"ன்னாம் பாலாமணி வக்கீல மடக்கிப்புடறாப்புல.

            "உங்கள் மனைவியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு போயிட்டு வந்த கோயில் சீட்டுகளையே பத்திரப்படுத்தி ஆவணங்களாகத் தாக்கல் செய்திருக்கும் போது அந்தச் சீட்டுகளைப் பத்திரமா வைத்துக் கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்ன்னு நீங்கத்தாம் சொல்லணும்?"ன்னாரு வக்கீல் சரியா பாய்ண்ட்ட பிடிச்சு கேக்குறாப்புல.

            "ச்சும்மா லூசு மாதிரி கேக்காதைய்யா? ஒரு தலைவலி, காய்ச்சல்ன்னா கொடுக்கற மருந்தையெல்லாமா எழுதி வைக்க முடியும்?"ன்னாம் பாலாமணி தெருசண்டையில சட்டுன்னு வார்த்தைய வுடுறாப்புல.

            "மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் பாலாமணி!"ன்னாரு வக்கீல் பாலாமணிக்கு எச்சரிக்கெ கொடுக்குறாப்புல.

            "மறுபடி நீங்க கோட் ஆப் த கான்டக்ட்லேந்து வெலகுறீங்க! என்னா மிஸ்டர் கங்காதரன் ஒங்க கட்சிக்காரர் இப்பிடிப் பேசுறார்? கேள்விக்கு உண்டா இல்லையான்னு பதில சொல்ல சொன்னா கேள்வியா கேட்டுக்கிட்டு இருக்காரு. கிராஸ்ஸ இன்னொரு தேதிக்கு ஒத்தி வெச்சிடலாமா?"ன்னாரு ஜட்ஜ் கோவமாயி. குறுக்கு விசாரணைய ரொம்ப துல்லியமா அவரு எடை போட்டுக்கிட்டு இருக்குறாருங்றதெ அவரோட அந்தப் பேச்சு சட்டுன்னு அடிக்குற ஒரு மின்னலப் போலக் காட்டுனுச்சு.

            கங்காதரன் வக்கீலுக்கு மொத மொறையா குறுக்கு விசாரணையில நிக்குறதெப் போல மண்டெ சொழல ஆரம்பிச்சிடுச்சு. அவரோட முழிக ரண்டும் பூமிப் பந்தப் போல உள்ளுக்கும் வெளிக்குமா சுத்த ஆரம்பிச்சது. "பதில மட்டும் சொல்லுங்க டாக்டர்!"ன்னு மறுபடியும் கெஞ்சுனாரு கங்காதரன் பாலாமணியப் பாத்து.

            "கிராஸ்ஸ எவ்ளோ நேரம் வேணாட்டும் பண்ணட்டும். இத்தோட முடிச்சிடச் சொல்லுங்க. இன்னொரு தேதிக்குத் தள்ள வாணாம். நாம்ம இனுமெ பதில மட்டும் சொல்றேம்!"ன்னாம் பாலாமணி இன்னியோட குறுக்கு வெசாரணைய முடிச்சுக் கட்டிடணுங்ற முடிவுல.

            "நமக்கும் இன்னொரு தேதியில ஒங்கள கிராஸ் பண்ண விரும்பல. இன்னிக்கே முடிச்சிடத்தாம் பாக்குறேம். ஆன்னா அதுக்கு நீங்க ஒத்துழைச்சாத்தாம் முடியும். இதுக்கு ஒத்துழைக்காம நம்மள லூசு, மெண்டல்ன்னா நமக்கு வேற வழியில்ல, இன்னொரு கிராஸ்ஸப் பண்ணுறாப்புலத்தாம் இருக்கும்!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல் பாலாமணிக்கு கடெசீ எச்சரிக்கெ கொடுக்குறாப்புல.

            "சார்! தப்பா எடுத்துக்காதீங்க! கொஞ்சம் எமோஷனல் ஆவுறார். அவ்வளவுதான். மத்தபடி அவருக்கு அப்படிப் பேசுணும்ன்னுல்லாம் மனசுல யில்ல!"ன்னு கங்காதரன் திருநீலகண்டன்கிட்டெ ஊடால பூந்துக் கெஞ்சுனாப்புல சொன்னாரு. தப்ப பண்டுறவன் ஒருத்தன், தண்டனெ அனுபவிக்கிறவன் இன்னொருத்தங்ற மாதிரி இருந்துச்சு கங்காதரன் வக்கீலோட நெலமெ அப்போ.

            "கோர்ட்ல குறுக்கு விசாரணையில இப்பிடி நடந்துக்கிறவர் என்னோட கட்சிக்காரரிடம் குடும்பம் நடத்தும் போது எப்பிடி நடந்துக் கொண்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது. இதெ அய்யா தயவு பண்ணிக் குறிச்சிக்க வேணும்!"ன்னு ஜட்ஜப் பாத்துச் சொன்னவரு, அடுத்ததா பாலாமணியப் பாத்து, "நீங்கள் தப்புத் தப்பான மருந்துகளக் கொடுத்து எனது கட்சிக்காரரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும்படிச் செய்தீர்களா இல்லையா?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "நாம்ம அவளுக்கு ட்ரீட்மெண்ட்ல்லாம் பண்ணல. ஒடம்புக்கு முடியலன்னா வேற ஒரு டாக்டர்கிட்டெத்தாம் அழைச்சிட்டுப் போயிருக்கேம்!"ன்னாம் பாலாமணி இப்போ முன்னுக்குப் பின் முரணா பேசுறோங்றதெ யோசிக்காம. வக்கீல் அதெ சட்டுன்னு பிடிச்சிக்கிட்டாரு.

            "கொஞ்ச நேரத்துக்கு மின்னாடித்தாம் மருந்து மாத்திரைக் கொடுத்ததா சொல்றீங்க. இப்ப என்னான்னா வேற ஒரு டாக்டர்கிட்டெ அழைச்சிட்டுப் போனதா சொல்றீங்க. இரண்டில் எது உண்மெ?"ன்னாரு வக்கீல் வசமா வலையில சிக்க வைக்குறாப்புல.

            "சாதாரண காய்ச்சலு, தலெவலின்னாத்தாம் நாம்ம மருந்து கொடுக்கிறது. ரொம்ப ஒடம்பு முடியலன்னா இன்னொரு டாக்டர்கிட்டெ அழைச்சிட்டுப் போறது!"ன்னாம் பாலாமணி தாம் ஒண்ணும் மாட்டிக்கிடலங்றதெ காட்டுறாப்புல.

            "அப்போ நீங்க டாக்டர் இல்லியா? தாலி கட்டுன மனைவிக்கு முடியலன்னா கூட அதெ பாக்க மாட்டீங்க இல்ல?"ன்னாரு வக்கீல் பாலாமணிய சரியான எடத்துல கடப்பாரையக் கொடுத்து நெம்பித் தள்ளுறாப்புல.

            "நாம்ம டாக்டர்ன்னத்தாம் என்ன மருந்து கொடுத்தே? அதுக்கான சீட்டு எங்கன்னு கேக்குறீயளே?"ன்னாம் பாலாமணி மறுக்கா கேள்வி கேக்குற தொனிக்கு மாறி.

            "அப்பிடியானால் முறையாக என்ன மருந்துகள் கொடுத்தோம் என்ற சீட்டை எழுதாமலயே மனம் போன போக்கில் மருந்தைக் கொடுத்து எனது கட்சிக்காரரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் வேண்டுமென்றெ கெடுத்துள்ளீர்கள்தானே?"ன்னாரு வக்கீல் பாலாமணி கேள்விய வெச்சே மறு கேள்விய தொடுக்குறாப்புல.

            "அப்பிடில்லாம் இல்லங்க. நீங்களா கேக்குற கற்பனெ கதைக்கெல்லாம் பதிலச் சொல்லணும்ன்னு அவசியம் யில்ல!"ன்னாம் பாலாமணி எந்தக் கேள்விய கேட்டாலும் அதுக்கான பதிலு தயாரு நெலையில இருக்குங்றதெ சொல்லாம சொல்றாப்புல.

            "என்ன மருந்து கொடுத்தீர்கள் என்பதையாவது சொல்லலாமா?"ன்னாரு வக்கீல் ரொம்ப அடக்க ஒடுக்கமா நின்னு பாலாமணிகிட்டெ கேக்குறாப்புல ஒரு நடிப்பெ காட்டிக்கிட்டு.

            "ஒரு டாக்டர் பேஷண்டுக்குக் கொடுக்குற மருந்துகளப் பத்தி வெளியில சொல்லணுங்ற அவசியம்ல்ல!"ன்னாம் பாலாமணியும் அடக்க ஒடக்கமா நின்னு கூண்டுலேந்து பதிலச் சொல்றாப்புல ஒரு பாவணையப் பண்ணிகிட்டு.

            "வாஸ்தவந்தாம். நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு வரை சொல்ல வேண்டியதில்ல. எப்போது இந்தப் பிரச்சனை வழக்காக நீதிமன்றத்துக்கு வந்து விட்டதோ  அப்போது நீங்கள் சொல்லித்தாம் ஆக வேண்டும்!"ன்னாரு வக்கீல் பாலாமணியோட போலியான பவ்விய பாவனைய ஒடைச்சு எறியுறாப்புல.

            "சொல்ல முடியாதுய்யா போய்யா!"ன்னு சொல்லிட்டு யாரையும் கேக்காம வேக வேகமா பாலாமணி பாட்டுக்கு கூண்டெ வுட்டு எறங்கிக் கீழே நின்னாம்.  வக்கீல் கங்காதரன் பாலாமணி மின்னாடி வந்து. "டாக்டர்! தயவு பண்ணி கூண்டுக்கு உள்ளார வாங்க!"ன்னாரு. பாலாமணி எதையும் கேக்குறாப்புல இல்ல. அவ்வேம் பாட்டுக்குப் நின்ன எடத்துலயே நின்னுகிட்டு இருந்தாம். ஜட்ஜ் பாலாமணிய கூர்மையா கோவமா பாக்குறாப்புல பாத்தாரு. அடுத்தது என்ன நடக்கப் போவுதுங்றதெ மொத்த கோர்ட்டுமே ஒத்த காதுல கேக்குறாப்புல இருந்தப்போ, "தட்ஸ் ஆல். நம்மளோட கிராஸ் முடிஞ்சிடுச்சு. அவரு கூண்டை விட்டு எறங்கிடலாம். ஆனா அதுக்கு முன்பாவே எறங்கிட்டாரு. பரவாயில்ல. மறுபடியும் ஏறத் தேவையில்ல! இதுவே நமக்கும் போதுமானது!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எதிர்பார்ப்பையெல்லாம் தூக்கி இதுல எதிர்பார்ப்புக்கான முடிச்செல்லாம் ஒண்ணுமில்லன்னு போட்டு உடைக்குறாப்புல.

            என்னடா இப்பிடி சப்புன்னு போச்சுன்னு எல்லாரும் நெனைச்சிட்டு இருக்குறப்போ, அடுத்ததா வக்கீல் திருநீலகண்டன் குறுக்கு விசாரணைப் பண்ணதைத் தொகுத்தாப்புல தொடர்ந்தாப்புல பேசுனாரு. "ஆகவே எதிர்கட்சிக்காரர் உள்நோக்கத்தோடு எனது கட்சிக்காரருக்கு அளித்த மருத்துவச் சிகிச்சையால் எனது கட்சிக்காரர் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக சாகும் நிலைக்குச் சென்று, எனது கட்சிக்காரரின் பெற்றோர்கள் அவரை அழைத்து வந்து சிசிக்சை அளித்ததன் பலனாக உயிர் திரும்பியுள்ளார். ஓர் அரசுப் பணியாளராக இருந்தும் வரதட்சணை வாங்கக் கூடாது என்ற நியதியை அறிந்தும் எனது கட்சிக்காரரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இருநூறு சவரன் நகை, கார் வாங்குவதற்காக இருவது லட்சம் பணம், திருமணச் செலவுக்காக பதினைந்து லட்சம் பணம், தேக்குக் கட்டீல், பீரோ, மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வெள்ளிப் பொருட்கள், பித்தளை, எவர்சில்வர் பொருட்கள் என்று அனைத்து சீர்வரிசைச் சாமான்களையும் பெற்றுக் கொண்டு எனது கட்சிக்காரரை வைத்து ஒழுங்காகக் குடும்பம் நடத்தாமல் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார். எனது கட்சிக்காரருக்கும், எதிர்கட்சிக்காரருக்கும் திருமணம் நடந்தது உண்மை. அதற்காக வரதட்சணை வாங்கியது உண்மை. எனது கட்சிக்காரருக்குத் தவறாகச் சிகிச்சை அளித்தது உண்மை. அதன் காரணமாக சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வது உண்மை. எதிர்கட்சிக்காரர் அரசுப் பணியில் இருப்பது உண்மை. போதுமான அரசாங்க சம்பளத்தோடு மருந்துத் தயாரித்தும் கூடுதல் வருவாய் ஈட்டுவது உண்மை. மேற்படி விசயங்களை அவரே வாக்குமூலமாக குறுக்கு விசாரணையில் அளித்துள்ளார். ஆகவே எதிர்கட்சிக்காரர் எனது கட்சிக்காரருக்கு முறையாக ஜீவனாம்சம் அளிக்க கடமைப்பட்டவராகிறார்!"ன்னு சொல்லி குறுக்கி விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்குறாப்புல முடிச்சார் திருநீலகண்டன்.

            பாலாமணி என்னவோ கோர்ட்டெ வுட்டு வெளிநடப்ப பண்டுறதப் போல கோர்ட்டெ வுட்டு வேக வேகமா வெளியில போனாம். அவ்வேம் ஜட்ஜ் கொடுக்குற அடுத்தத் தேதியக் கூட நின்னு கேக்குற நெலமையில யில்ல. கங்காதரன் வக்கீலுதாம் தேதிய சொல்ற வரைக்கும் நின்னுட்டுப் பெறவு கோர்ட்ட வுட்டு வெளியில கௌம்புனாரு. கோர்ட்டுல அடுத்த வழக்கோட குறுக்கு வெசாரணை ஆரம்பிச்சது.

            திருநீலகண்டன் வக்கீலும் அத்தோட இன்னிக்கு கோர்ட்டு வேலைல்லாம் முடிஞ்சது மாதிரிக்கு வெளியில வந்தாரு. செய்யுவுக்கு இன்னும் கொஞ்சம் மனக்கொறை இருந்துச்சு. அவ்வே வக்கீலப் பாத்து, "இன்னமும் கூடவே நீஞ்ஞ அவனெ அசிங்கம் பண்ணிருக்கலாம். நமக்குக் கொஞ்சம் திருப்தியில்லத்தாம்! ஒரே வெசாரணையில கிராஸ்ஸ முடிச்சிருக்கவும் வேண்டியதில்லா. இன்னொரு கிராஸ் பண்ணா ஆளு ஆடிப் போயிருப்பாம். நல்ல வாய்ப்ப வுட்டாச்சு!"ன்னா.

            "நீயென்னம்மா அவ்வேம் கேக்குற கேள்விக்குப் பாக்ஸ விட்டு விழுந்தடிச்சி ஓடிப் போயிடுவாம் போலருக்கு. அவ்வேம் வக்கீல் வந்துல்ல சமாதானம் பண்ண வேண்டியதா இருக்கு. இதுவே நீதிமன்ற அவமதிப்புத்தாம். அதெ ஜட்ஜ் பதிவு பண்ணிருப்பாரு. தீர்ப்புல தெரியும் பாரு. இந்த வழக்குல இனுமே அவ்வேம் என்ன பண்ணாலும் ஜெயிக்க முடியாது! ஒரு நல்ல வக்கீல்ங்றவனுக்கு ஒரு கிராஸ்க்கான வாய்ப்பே போதும். தெறமையில்லாத வக்கீல்தாம் ரண்டு மூணு கிராஸ்க்குலாம் போவாம்! பண்ணுற ஒரு கிராஸ்லயே வழக்கோட தீர்ப்பையே கொண்டு வந்திடுவாம் இந்த திருநீலகண்டன்! பாத்தில்லே?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் வக்கீல் கோர்ட்ட கழட்டி கையில வெச்சுக்கிட்டு.

            "அதெல்லாம் போதுங்கய்யா! நமக்குத் திருப்தித்தாம். மக சொல்றதெ நீஞ்ஞ மனசுல வச்சிக்கிட வேணாங்கய்யா! எப்போ அவ்வேம் கோர்ட்ல கூண்டுல ஏறி கலியாணத்துக்குன்னு நகெ, பணம், சீரெ வாங்கிட்டு அதெ வாங்கலன்னு பொய்யா சொன்னான்னோ அப்பவே அவ்வேம் அழிஞ்சிப் போவப் போறாங்றதெ நாம்ம புரிஞ்சிக்கிட்டேம். மன்றேறி மனசாட்சி யில்லாம்ம பொய்யிச் சொல்றவேம் மண்ணோட மண்ணாப் போயிடுவாம். அதுக்குன்னு ஒரு சக்தி எப்பவும் இருக்கு. அவ்வேம் கோர்ட்ட ஏமாத்திட்டதா நெனைக்கிறாம். ஞாயங்ற சக்திய யாராலும் ஏமாத்த முடியாது. ஞாயத்தெ ஏமாத்த நெனைக்கிறவனெ ஞாயமே அழிச்சிப்புடும். அவ்வேம் அழிஞ்சி ஒழிஞ்சிப் போயிடுவாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ரொம்ப திருப்தியா வக்கீலப் பாத்து.

            “ஒன்னோட பாதர் எவ்ளோ சரியா பேசுறதப் பாரு! அதாங் அனுபவங்றது. பாக்ஸ்ல ஏத்தி எதெ கேக்கணுமோ அதெ கேக்கணும். ஒன்னய ஏத்தி ஒம் மேல பரிதாவம் உண்டாவுற மாதிரி பண்ணாம்ல ஆப்போசிட் லாயர். அந்த மாதிரில்லாம் பண்ணக் கூடாது. வழக்குக்கு எது தேவையோ அதெ நாம்ம பண்ணிட்டேம். ஜட்ஜ்மெண்ட் வர்றப்போ அது ஒனக்கே தெரியும் பாரு!”ன்னாரு வக்கீலு கோர்ட் வராண்டாவுக்குக் கொஞ்சம் வெளியில நின்னுகிட்டுப் பள்ளியோடத்துல ஒரு பாடத்தெப் பத்தி வௌக்கிச் சொல்றாப்புல.

            "அடுத்ததா தீர்ப்பு சொல்லிடுவாங்களா?"ன்னா கேட்டா செய்யு வக்கீல் ஜட்ஜ்மண்ட்ங்ற வார்த்தைய வுட்டதும்.

            "அவ்வேம் சில சாட்சிகள வழக்குல சேர்த்திருக்காம். அவுங்கள குறுக்கு விசாரணைப் பண்ணணும். அதுக்குப் பெறவு ஆர்கியுமெண்ட் இருக்கு. அதுக்குப் பெறவுத்தாம் ஜட்ஜ்மெண்ட்! அவசரப்படக் கூடாது! இந்த நெலைக்கு ஒரு வழக்கு வர்றதுக்கே இந்த கோர்ட்ல ரொம்ப நாளாவும். ஒன்னோட நல்ல நேரம்மா புதுசா ஜட்ஜ் வந்து ரொம்ப சீக்கிரமாவே முடியுது! பொதுவா ஜட்ஜ் மாறுனாவே வழக்கு இழுத்துக்கிட்டு போவும். ஒனக்கு அதிர்ஷ்டந்தாம். ஜட்ஜ் மாறுனதாலயே வழக்கு ஜெட் வேகத்துல போவுது!"ன்னாரு வக்கீல் வழக்கோட போக்கெ காட்டுறாப்புல.

            “சாட்சியோட குறுக்கு வெசாரணைன்னா நாம்ம சாட்சின்னு யாரயும் காட்டலயே?”ன்னா செய்யு சட்டுன்னு தம் பக்கத்துக்கு அப்படி ஒண்ணும் நடக்கலேங்றதெ சொல்றாப்புல.

            “நமக்கு அதெல்லாம் தேவையில்லம்மா. சாட்சியே நம்ம பக்கத்துக்குத் தேவையில்லங்ற அளவுக்கு இன்னிக்கு அவ்வேம் பாக்ஸ்ல ஔறிக் கொட்டிருக்காம். அதுவே போதும் நமக்கு. அவ்வேந்தாம் தேவையில்லாம தேவையில்லாத வேலைகள பண்ணிட்டு சாட்சி கீட்சின்னு தாக்கல் பண்ணிக்கிட்டு இருக்காம்! கடெசீயில அதுவும் நமக்குச் சாதவமாத்தாம் போவும் பாரேம்!”ன்னாரு வக்கீலு கையில இருந்த கோர்ட்ட தோள்ல தூக்கிப் போட்டுக்கிட்டு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...