3 Jan 2021

விசாரணையின் கடைசிக் கட்டம்

விசாரணையின் கடைசிக் கட்டம்

செய்யு - 675

            சாட்சிகளோட குறுக்கு விசாரணை முடிஞ்சா அடுத்தா வக்கீல்மார்களோட விவாதம். அதுக்கடுத்தாப்புல தீர்ப்புதாம்.

பாலாமணி தம் தரப்புல சாட்சியா பெருமாள்சாமி, இன்னோவா காரோட டிரைவரு, திட்டை கிராமத்துப் பட்டறைக்காரரு பட்டாமணி, திட்டை கிராமத்து முக்கியஸ்தரு சொட்டெ கண்ணுராசுன்னு நாலு பேர்ர அழைச்சாந்திருந்தாம். அவுங்களப் பார்த்ததும் கோர்ட்டுல பெருமாள்சாமி சாட்சியா வந்ததோ, இன்னோவா காரு டிரைவரு வந்ததோ சுப்பு வாத்தியாருக்குப் பெரிசா தெரியல. பட்டாமணியையும், சொட்டெ கண்ணுராசுவையும் பாத்ததும் அவருக்கு மனசு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. "ஏதோ பஞ்சாயத்தெ உருப்படியில்லாம தெரிஞ்சோ தெரியாமப் பண்ணி வெச்சீங்க பரவால்ல. நடந்தது நடந்துப் போச்சு. எங் குடும்பத்தோட கெரகமும் அப்பிடி அமைஞ்சுப் போச்சு. இப்போ தெரிஞ்சே நம்ம கிராமத்துப் பொண்ணுன்னும் அறிஞ்சும் அவனுவோ தரப்புல சாட்சியச் சொல்ல வந்திருக்கிறதா வந்திருக்கீயளே பாவியோளா! இதெப் பாக்க பாக்க வவுறு பத்தி எரியுதேடா! எந்த ஊர்க்காரப் பயலுவோளாவது இந்த வேலையச் செய்வானுவோளா?"ன்னு மனசெரிய நொந்துக்கிட்டாரு. அத்தோட நம்ம கிராமத்துலயே வந்து ரண்டு பேர்ர வெலைக்கு வாங்க முடியுற அளவுக்கு அவனுக்குத் தெறமெ இருக்கு, ஆன்னா நம்மாள நம்ம கிராமத்துல இருக்குறவங்கள நம்மப் பக்கத்துல வைக்க முடியலேங்றே ஆத்தாமையும் அவரு மனசுல கவிய ஆரம்பிச்சிடுச்சு. “நெருக்கமா இருக்குறவேம்தாம் பகையாவுறாம். ஒறவா இருக்குறவம்தாம் விரோதியாவுறாம்.” சுப்பு வாத்தியாரு தனக்கு மட்டும் ஒரைக்குறாப்புல முணுமுணுத்துகிட்டாரு.

            பெருமாள்சாமி சுப்பு வாத்தியார்ர கோர்ட்டு வராண்டாவுல மொறைச்சிப் பாத்துக்கிட்டெ மீசையெ ரண்டு பக்கமும் முறுக்கி விட்டுக்கிட்டெ கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சாரு. பட்டாமணியும், சொட்டெ கண்ணுராசுவும் ஒண்ணும் தெரியாத ஆளுங்க மாதிரி கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சாங்க என்னவோ பாக்கக் கூடாத சினிமா படத்தெ யாருக்கும் தெரியாம பாக்கப் போறதெப் போல. அவுங்களுக்குச் சுப்பு வாத்தியாரு மொகத்தெ நேருக்கு நேரா பாக்கச் சங்கடமா இருந்திருக்கணுமோ என்னவோ!

            பத்தரை மணிக்கெல்லாம் வாய்தா கேசுங்க முடிஞ்சதும் செய்யுவோட ஜீவனாம்ச வழக்கு ஆரம்பமானுச்சு. வக்கீல் கங்காதரன் ஒவ்வொரு சாட்சியா கூண்டுல ஏத்தி நிரூபண வாக்குமூலத்தெ கொடுக்க வெச்சாரு.

மொத சாட்சியா இன்னோவா கார் டிரைவரு கூண்டுலேறி வாக்குமூலம் கொடுத்தாரு. சத்தியமா சொல்றேன்னு சொல்லிட்டு அவரு தன்னோட பேச்சை ஆரம்பிச்சாரு. "நாம்ம டாக்கடரு குடும்பத்துக்கு நெருங்குனப் பழக்கமுங்க. ஒரு விஷேசம்ன்னா மின்னாடி நிக்குற ஆளுங்க. அத்தோட எந்த விஷேசம்ன்னாலும் நாம்மத்தாம் காரு ஓட்டுறவங்க அவுகளுக்கு. டாக்கடரு அவுங்க ஒறவுல இருக்குற பொண்ணுங்கறதுக்காக எரக்கப்பட்டுக்கிட்டுத்தாம் அந்தப் பொண்ண கட்டிக்கிட்டாரு. ஆன்னா அந்தப் பொண்ணு ராட்சசியா வந்து டாக்கடரையும், அவரோட குடும்பத்தையும் கொடுமெ பண்ண ஆரம்பிச்சதுங்க. எல்லாத்தையும் டாக்கடரும் அவரோட குடும்பமும் பொறுத்துக்கிட்டாங்க. திடுதிப்புன்னு அது பாட்டுக்கு கோவில்பெருமாளுக்குப் போயி அஞ்ஞ அவுங்க மாமம் பையனோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுச்சுங்க. அதெ நாம்ம நம்மட கண்ணால கோவில்பெருமாள் போனப்பப் பாத்தேம்ங்க. அந்தப் பொண்ணுத்தாம் வீம்புக்காப் பிரிஞ்சி இருக்குங்க. இத்து சாமி மேல சத்தியமுங்க!"ன்னாரு என்னவோ இதுவரைக்கும் நடந்த அத்தனையையும் நேர்ல சாட்சி மூலமா பாத்ததெப் போல. அவரு வாக்குமூலம் கொடுத்து முடிச்சதும், திருநீலகண்டன் குறுக்க விசாரிச்சாரு.

            "நீங்க பாக்குக்கோட்டையா?"ன்னாரு வக்கீலு எடுத்த எடுப்புலயே கம்பீரமான கொரல்ல.

            "ஆமாங்க!"ன்னாம் டிரைவரு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே.

            "எத்தனெ நாளு பாக்குக்கோட்டையிலயே இருப்பீங்க?"ன்னாரு வக்கீல் கொரல்ல இருந்த வேகத்தெ கொஞ்சம் கூட கொறைக்காம.

            "மாசத்துல ரண்டு நாளு, மூணு நாளு ஊர்ல இருந்தாலே பெரிசுங்க. சவாரி இருந்துகிட்டெ இருக்கும்!"ன்னாரு டிரைவரு தன்னோட எதார்த்த வாழ்க்கைய சொல்றாப்புல.

            "மாசத்துல ரண்டு நாளு, மூணு நாளு இருக்குற ஒங்களுக்கு பாக்குக்கோட்டையில நடக்குற விசயங்களே தெரியாது. ஒங்களுக்கு எப்பிடி மெட்ராஸ்ல குடித்தனம் நடத்துனது, அவுங்க ராட்சசியா இருந்ததெல்லாம் தெரியும்?"ன்னாரு வக்கீல் சரியான எடம் பாத்து தாக்குறாப்புல.

            "அத்து வந்துங்க... கேள்விப்பட்டதுதாங்க!"ன்னாரு டிரைவரு சட்டுன்னு நெலை கொழைஞ்சாப்புல.

            "நீங்க ஏன் கோவில்பெருமாளுக்குப் போனீங்க?"ன்னாரு வக்கீல் டிரைவரு சொன்ன பதிலேந்து அடுத்தடுத்ததா ஒரே எடத்துல குறி வெச்சுத் தாக்குறாப்புல.

            "டாக்கடருதாம்ங்க பொண்டாட்டியப் பாக்கணும்ன்னு தீவாளிக்கு மின்னாடி அழைச்சிட்டுப் போனாரு!"ன்னாரு டிரைவரு முழி ரண்டு பெரண்டாப்புல.

            "அதுக்கப்புறமா எத்தனெ தடவெ கோவில்பெருமாளுக்குப் போயிருக்கீங்க?"ன்னாரு வக்கீல் வாயைப் புடுங்கி வாஸ்தவத்தெ வரவழைக்கிறாப்புல.

            "அந்த ஒரு தடவெதாங்க!"ன்னாரு டிரைவரு கொரலு அடங்கிப் போயி சன்னமான கொரல்ல.

            "அந்த ஒரு தடவெயில எவ்ளோ நேரம் அங்க இருந்தீங்க?"ன்னாரு வக்கீல் கிடுக்கிப்பிடிப் போட்டு தூக்குறாப்புல.

            "ஒரு அர மணி நேரம், ஒரு மணி நேரம் இருக்குமுங்க!"ன்னாரு டிரைவரு ஒரு சில நொடிகள் யோசனைக்குப் பெறகு.

            "ஆக இவர் கேள்விப்பட்டதை வைத்து இவராக கதை சொல்கிறார் என்பதும், கொஞ்ச நேரம் பார்த்ததை வைத்து இவராக மனதில் பட்டதைச் சொல்கிறார் என்பதாலும் இவரது சாட்சியத்தை நம்பத்தகுந்த சாட்சியமாக இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது!"ன்னு சொல்லிட்டுச் சட்டுன்னு தன்னோட எடத்துலப் போயி உக்காந்தாரு வக்கீல் திருநீலகண்டன்.

            அடுத்ததா பெருமாள்சாமிய சாட்சியத்துக்குக் கூண்டுல ஏத்துனாரு வக்கீல் கங்காதரன். சத்தியமா சொல்றதெல்லாம் உண்மென்னு சொல்லிட்டு தன்னோட வாக்குமூலத்தெ அவரு கொடுத்தாரு. "இந்தப் பொண்ணோட வாழணும்ன்னு எஞ்ஞ டாக்கடரு ஏகப்பட்ட முயற்சியெ எடுத்தாருங்க. அந்த எல்லா முயற்சியிலயும் நாம்ம உடனிருந்த ஆளுங்ற வகையில சில உண்மெகள இந்தக் கோர்ட்டுல சொல்ல கடமெ பட்டிருக்கேம். எஞ்ஞ டாக்கடரு எடுத்த எந்த சேந்து வாழ்ற முயற்சிக்கும் அந்தப் பொண்ணு ஒத்து வரவேயில்லங்க. பஞ்சாயத்துலயும் வெச்சிப் பேசுனேம்ங்க. அப்பவும் அந்தப் பொண்ணு புருஷங்காரனையே எங் கண்ணு முன்னாலயே அடிக்க வருதே தவிர சேந்து வாழ வர்ற மாட்டேங்குது. ரொம்ப மோசமானப் பொண்ணுங்க. அந்தப் பொண்ணுத்தாம் திமிரா வாழ முடியாதுன்னு வீம்புக்குக் கோர்ட்டு மூலமா காசப் பறிக்குறதுக்கா எஞ்ஞ டாக்கடர்ர கோர்ட்டுல நிறுத்தி அவமானம் பண்ண நெனைக்குது. இப்ப கோர்ட்டுலேந்து நீஞ்ஞ அனுப்பி வெச்சாலும் எஞ்ஞ டாக்கடரு பொண்ண தங்கம் போல வெச்சி வாழ வைப்பாருங்க!"ன்னாரு நின்னுகிட்டு இருக்குற கூண்ட தன்னோட ரண்டு கையாலயும் அழுந்தப் பிடிச்சுக்கிட்டு.

            வக்கீல் திருநீலகண்டன் அவரையும் குறுக்க வெசாரிக்க எழும்புனாரு.

            "நீங்கத்தாம் பெருமாள்சாமியா?"ன்னாரு வக்கீல் எடுத்த எடுப்புலயே.

            "ஆமாம்ங்க நாம்மத்தாம் பெருமாள்சாமிங்க!"ன்னாரு பெருமாள்சாமி. அவரோட கையிலயும் கால்லயும் லேசா ஒதறல் இருந்தது தெரிஞ்சது. “பயப்படாம மனசுல உள்ளதெ சொல்லுங்க!”ன்னாரு வக்கீல் கங்காதரன் பெருமாள்சாமிய தெம்பு பண்டுறாப்புல.

            "நீங்கத்தாம் பெருமாள்சாமிங்றதுக்கு என்ன அத்தாட்சி வெச்சிருக்கீங்க? ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு இப்பிடி எதாச்சும்?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் அழுத்தமான கொரல்ல.

            "அதெல்லாம் ஒண்ணும் எடுத்தாரலைங்க!"ன்னாரு பெருமாள்சாமி எச்சில முழுங்கிக்கிட்டு.

            "ஒங்கள எப்படி நம்பகமான சாட்சின்னு நாம்ம நம்புறது? நீங்க என்னோட கட்சிக்காரரோட ஊரா? இல்ல எதிர்க்கட்சிக்காரரோட ஊரா? ரண்டு பேரோட ஊர்ல எந்த ஊரச் சார்ந்தவங்க நீங்க?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் கொஞ்சம் அதட்டுற தொனியில.

            "ரண்டு பேரோட ஊரும் ல்லீங்க!"ன்னு பெருமாள்சாமி சொன்னதும், சட்டுன்னு திருநீலகண்டன் வக்கீல் கொரல இன்னும் ஏகத்துக்கும் ஒசத்தி, "இவரு பொய்சாட்சிச் சொல்வதற்காக எதிர்மனுதாரரால் அழைத்து வரப்பட்டவர். ஊரு பேரு இல்லாத அட்ரஸ் இல்லாத நபர். அத்தோட இவர் பஞ்சாயத்து அதாவது கட்டப் பஞ்சாயத்து செய்திருப்பதாக அவரது வாயாலேயே சொல்லியிருப்பதால் இந்தக் கோர்ட் சட்டப்படி குற்றவியல் நடைமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!"ன்னு நீதிபதியப் பாத்துச் சொன்னாரு வக்கீல்.

            வக்கீல் அப்படிச் சொன்னதெ கேட்டதும் ஏற்கனவே கையும் காலும் ஆடிட்டு இருந்த பெருமாள்சாமியோட ஒடம்பெல்லாம் நடுங்க ஒட்டு மொத்தமாவும் ஆட ஆரம்பிச்சிடுச்சு. ஒடனே "நாம்ம பஞ்சாயத்துல்லாம் பண்ணலங்க. ச்சும்மா மத்திஷந்தாம் பண்ணேங்க. அதுலத்தாம் அந்தப் பொண்ணு ஒத்துக்கிட மாட்டேனுச்சுங்க!"ன்னாரு பெருமாள்சாமி ஔறிக் கொட்டி வாந்தி எடுக்குறாப்புல.

            "முதலில் பஞ்சாயத்து என்கிறார். பிறகு பஞ்சாயத்து இல்லே, மத்திசம் என்கிறார். முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லும் இந்தச் சாட்சியை நீதிமன்றம் ஏற்கக் கூடாது!"ன்னாரு வக்கீல். அதெ கேட்டதும் ஜட்ஜ் வக்கீல் கங்காதரனப் பாத்து, "இந்தச் சாட்சியங்கள்லாம் வழக்குக்கு எந்த வெதத்துல எப்பிடிச் சம்பந்தம் ஆவுதுன்னு சொன்னா நல்லா இருக்கும். சாட்சி சொல்றவங்களும் முன்னுக்குப் பின் முரணா சொல்லி கோர்ட்டோட நேரத்தைத்தாம் வீணடிக்கிறாங்க!"ன்னாரு தன்னோட அதிருப்திய ரொம்ப வெளிப்படையா சொல்றாப்புல. கங்காதரனுக்குத்தாம் இப்போ நெலமெ தர்மசங்கடமா இருந்துச்சு. இதெல்லாம் அநேகமா பாலாமணியோட யோசனையாவும் ஏற்பாடாவும்தாம் இருக்கும்ங்றது தெரிஞ்சது போல இருந்துச்சு அப்போ நெலமெ.

            "இன்னும் ரண்டே சாட்சிதானுங்கய்யா. அவுங்க மனுதாரரோட ஊர்ரச் சாந்தவங்கத்தாம். அவுங்களே வந்து சொன்னாத்தாம் என்னோட கட்சிக்காரரோட நெலமெ புரியும். அவரு சேந்து வாழ எடுத்த அத்தனெ முயற்சியையும் தடுத்துப்புட்டு, ஜீவனாம்சம் வாங்கணுங்ற நோக்கத்துலயே இந்த வழக்கெ போட்டுருக்குறதா சொல்ல வர்றேம்ங்கய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரன் தன்னோட நெலைப்பாட்டெ சமாளிப்புக் கொடுக்குறாப்புல.

            "செரி! சீக்கிரமா அடுத்த சாட்சிய ஆஜர் பண்ணுங்க!"ன்னு ஜட்ஜ் சொல்ல, சொட்டெ கண்ணுராசுவெ கூண்டுல ஏத்துனாரு கங்காதரன். சத்தியமா சொல்றேம்ங்க வாசகத்தச் சொல்றப்பவே கொழம்பிப் போன ஆளப் போல இருந்தாரு சொட்டெ கண்ணுராசு. அவரு மண்டெ முழுக்க வேர்வை முத்து முத்தா அரும்பியிருந்துச்சு. அவருக்கு வக்கீல் மூலமா சொல்லிக் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்துல பஞ்சாயத்துப் பண்ணதாவும், அதுல செய்யு எதுக்கும் ஒத்து வரலேங்ற மாதிரித்தாம் இருந்திருக்கும் போல. அதெ சொல்லி கட்டப் பஞ்சாயத்துப் பண்ணதா சொல்லி திருநீலகண்டன் வக்கீல் எதாச்சும் மாட்டி வுடுவாரோங்ற பீதியில அவரோட மொகமெல்லாம் இப்போ வேர்த்து வழிய ஆரம்பிச்சிடுச்சு. வாக்குமூலத்தெ கொடுக்குறதுக்குள்ள திக்கித் திணறி தடுமாறிப் போயிட்டாரு. "நாம்ம கிராமம் சார்பா மத்திசம் பண்ணப் பாத்தேம்ங்க. பொண்ணு வூட்டுப்பக்கம் ஒத்து வாரலங்க. மாப்புள்ள வூட்டுப் பக்கம் ஒத்து வந்தாங்க. விருப்பமில்லாம எப்பிடி ரண்டுப் பக்கத்தையும் நாஞ்ஞ சேத்து வைக்க முடியும்ன்னு சொன்னேம்ங்க. நீங்க வேணும்ன்னா கோர்ட்டுலப் போயித் தீத்துக்குங்கன்னு சொல்லிட்டேம்ங்க. யிப்போ கோர்ட்டுல கேஸ் நடக்குறதெ கேள்விப்பட்டு வந்தேம்ங்க. அம்புட்டுத்தாம் நமக்குத் தெரியும்ங்க!"ன்னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு எறங்கிட்டாரு என்னவோ பேச்சுப் போட்டியில கலந்துக்குறவேம் மனப்பாடம் பண்ணதெ ஒப்பிச்சிட்டு மேடைய வுட்டு சட்டுன்னு எறங்கிடுறாப்புல.

            ஜட்ஜ் அந்த சாட்சியா குறுக்க வெசாரிக்கணும்ன்னா வக்கீல் திருநீலகண்டனப் பாத்துக் கேட்டாரு. "வாணாம்ங்கய்யா!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீலு அதெல்லாம் ஒரு சாட்சியே இல்லங்ற மாதிரிக்கு அலட்சியமா.

            அடுத்ததா பட்டறைக்காரரு பட்டாமணிப் பேர்ர சாட்சிக்கான வாக்குமூலம் கொடுக்க கூப்புட்டா ஆளெக் காணும். டவாலி வராந்தாவுக்கு வெளியில வந்தெல்லாம் நாலைஞ்சு தடவெக்கு மேல பட்டறைக்காரரு பட்டாமணின்னு சத்தத்தெ வைக்குறாரு. பாலாமணி, ராசாமணி தாத்தா, வக்கீல் கங்காதரன்னு எல்லாரும் சுத்தி முத்தியும் பாக்கறாங்க ஆளெ காணும். திருநீலகண்டன் எப்போ கட்டப் பஞ்சாயத்துங்ற வார்த்தையெ சொல்லி இழுத்தாரோ, அதெ கேட்ட மாத்திரத்திலயே ஆளு அங்கயிருந்து காணாமாப் போயிருந்திருப்பாரு போல.

            அத்தோட சாட்சிகளோட வாக்குமூலத்தெயும், குறுக்க வெசாரிக்கிறதையும் முடிச்சிக்கிட்டு, வக்கீல்களோட ஆர்கியூமெண்டுக்குப் போவச் சொன்னாரு ஜட்ஜ். ரெண்டு வக்கீலுமே ஒண்ணா பேசி வெச்சிக்கிட்டதெப் போல அதுக்கு இன்னோரு தேதியக் கேட்டாங்க. சரின்னுட்டு ஜட்ஜ் இன்னொரு தேதியக் கொடுத்து அன்னிக்கு ஆர்கியூமெண்ட முடிச்சிடணும்ன்னாரு கண்டிப்புக் காட்டுறாப்புல.

            அன்னிக்குக் கோர்ட்டு முடிஞ்சப் பெறவு பாத்தா பாலாமணி தரப்பெ எங்கப் போனதுன்னு தெரியாம சொவடு தெரியாம காங்காம போயிருந்தாங்க. வழக்கமா நின்னு சேவண்டிப் பண்டுறவனுவோ எங்க தொலைஞ்சானுவோன்னு சுப்பு வாத்தியாரு கண்ணு சொழண்ட தூரம் வரைக்கும் பாத்தாரு. ஒரு ஆளையும் காங்கல. அப்போ வெளியில வந்த திருநீலகண்டன் வக்கீல் செய்யுவப் பாத்துச் சொன்னாரு, "இனுமே கூட நீ கோர்ட்டுக்கு வரணுங்ற அவசியம் இல்லம்மா! ஒன்னோட அலைச்சல் முடிஞ்சிடுச்சு! தட்ஸ் ஆல்! இன்னியோட எல்லாம் ஓவர்!"ன்னாரு என்னவோ எல்லாம் முடிஞ்சாப்புல.

            "இன்னும் ஆர்கியூமெண்டல்லாம் இருக்கா இல்லியா? இவ்ளோ அலைஞ்சாச்சு. நீஞ்ஞ எப்பிடி ஆர்கியுமெண்ட் பண்ணப் போறீயேன்னு அதெப் பாக்க அலையுறதுல என்னத்தெ இருக்கு?"ன்னா செய்யு இனுமேத்தாம் வழக்கெ ஆரம்பமாவப் போறதெப் போல.

            "ஆமாங்கய்யா! யின்னும் ரண்டு மூணு மொறை வர்றதுல ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடப் போறதில்ல! அந்தப் பெருமாள்சாமிய நல்லாவே வெளுத்து வாங்குனீயே. தீர்ப்பு எப்பிடி வந்தாலும் செரித்தாம் அந்த ஒண்ணே போதும். அன்னிக்கு அவனும், சித்துவீரம் பயலும் சேந்துத்தாம் பஞ்சாயத்துல நம்மள அடிக்க வந்துப்புட்டானுவோ. அதெப் பாத்ததும் நம்ம பயெ மவ்வேம் ரொம்ப வேகப்பட்டுப் போயிட்டாம்! அவனெ அட்ரஸ் இல்லாத ஆளுன்னு சொல்றாப்புல கூண்டுல வெச்சு அழுத்தம் திருத்தமா சொல்லிப்புட்டீங்க! இனுமே இந்த வழக்குல ஜெயிச்சாலும் செரித்தாம். தோத்தாலும் செரித்தாம். நம்மள பஞ்சாயத்து வெச்சு அவ்மானம் பண்ண நெனைச்ச அத்தனெ பேரும் இன்னிக்கு அவனுவோளாவே வந்து கூண்டுல ஏறி அவ்மானம் பட்டுப் போனானுவோ! இத்து ஒண்ணுப் போதும் நமக்கு இந்த வழக்குல!"ன்னாரு சுப்பு வாத்தியாரும்.

            "அப்பிடி கிராஸ் பண்ணுறது எங்க கடமெதாம் சார்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தன்னோட தன்னடக்கத்தெ காட்டிக்கிறாப்புல.

            "அடுத்தத் தேதிக்கு கண்டிப்பா வந்துப்புடுறோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சந்தோசமும் உற்சாகமும் தொனிக்குற கொரல்ல.

            "ஒங்க விருப்பந்தாம். ஏன் சொல்றேம்ன்னா ஒங்கப் பொண்ணுத்தாம் இதனாலேயே எம்பில்லுக்குப் படிக்க முடியலன்னா. புரோஜெக்ட்ட முடிக்க முடியலன்னா. அவுங்கள மைண்ட் பிரியா இனுமே படிக்கச் சொல்லுங்க. ஏன்னா இத்தோட வழக்கெ முடிஞ்ச மாதிரித்தாம். மித்ததெ பாத்துக்கிடலாம்!"ன்னாரு வக்கீல் என்னவோ இனுமே சுப்பு வாத்தியாரும் செய்யுவும் கோர்ட்டுப் பக்கம் வர்றதுல விருப்பம் இல்லாததப் போல.

            "இல்லங்கய்யா! நாம்ம இதுக்கு வந்துப் பாத்துப்புட்டெ ப்ரியா போயிப் படிக்கிறேம்யா!"ன்னா செய்யு கட்டாயமா கோர்ட்டுக்குக் கண்டிப்பா வந்துப்புடுவேங்றதெ சொல்றாப்புல.

            "தாராளமா வரலாம். ஒங்க முடிவுதாம்!"ன்னாரு வக்கீல் இப்போ கொஞ்சம் வழுக்குனாப்புல.

            கோர்ட்டுல நடக்குற வழக்குக்கு ஒரு கொணம் இருக்கு. வேகமா போவணும்ன்னு நெனைக்குறப்போ அது வேகமா போவாது. மெதுவா போகணும்ன்னு நெனைக்குறப்போ அது மெதுவாவும் போவாது. கோர்ட்டு வழக்கோட போக்கு எப்போ எப்படிப் போவுங்றது மழைப்பேறும் மகப்பேறும் போல அதுவும் வழக்குப்பேறுத்தாம். சட்டுன்னுப் படுத்துக்கிடும்ன்னு நெனைச்சா எழும்பி நிக்கும். முடிஞ்சிடும்ன்னு நெனைச்சா இழுத்துக்கிட்டுக் கெடக்கும்.

            சுப்பு வாத்தியாரும் செய்யுவும் வக்கீல்கிட்டெ மேற்படி சொன்னது படியே அடுத்த தேதித்துக்குப் போனா ரண்டு வக்கீலுமே ஆர்கியூமெண்டுக்குத் தயார் ஆவலன்னு இன்னொரு தேதியக் கேட்டாங்க. ஜட்ஜூம் கொடுத்தாரு. அதுக்கு அடுத்தத் தேதியிலயும் இதெ போல சொன்னதும் ஜட்ஜ் கோவப்பட்டுட்டாரு. ஆர்கியூமெண்டே இல்லாம தீர்ப்ப எழுதுறாப்புல ஆயிடும்ன்னாரு ரண்டு பேத்தையும் எச்சரிக்கிறாப்புல. சாட்சிகளோட குறுக்கு விசாரணை முடிஞ்சதுக்குப் பெறவு பாலாமணி எதுக்கும் கோர்ட்டுல ஆஜராவுல. பாலாமணி சார்பா வக்கீல்தாம் ஆஜரானாரு. வக்கீலோட தொணைக்கு ராசாமணி தாத்தா மட்டுந்தாம் வந்துச்சு. அதுவும் வந்தச் சொவடு தெரியாம கோர்ட்டு முடிஞ்சதும் கௌம்புறதுல குறியா இருந்துச்சு.

ஆர்கியுமெண்ட முடிக்காம எதிர்தரப்பு வக்கீல் தேதியக் கேக்கறார்ன்னா அதுல ஒரு காரணம் இருக்கு. தீர்ப்ப தள்ளிப் போட நெனைக்குறாரு. ஆன்னா நம்ம வக்கீலும் தள்ளுறாப்புல தேதியக் கேக்குறார்ன்னா அதுல என்ன அர்த்தம் இருக்குன்னு தள்ளித் தள்ளிப் போற வழக்கோட நெலமைய புரிஞ்சிக்க முடியாம சுப்பு வாத்தியாரு இப்போ கொழம்பிப் போனாரு. தன்னோட கொழப்பத்தெ திருநீலகண்டன் வக்கீல்கிட்டெ நேரடியா கேட்டுத் தெளிவு பண்ணிக்கிட முடியாமலும் அவரு தவிச்சாரு. செய்யு மட்டும் சீக்கிரமா ஆர்க்கியூமெண்ட முடிச்சு தீர்ப்ப வாங்கிக் கொடுங்கன்னு வக்கீலப் போட்டு நச்சரிக்காத கொறையா கேட்டுக்கிட்டு இருந்தா. அதுக்கு வக்கீலு, “இப்படித்தாம் வழக்கெ சீக்கிரமா முடிக்க வேண்டிய எடத்துல சொழற்றி விட்டு ஆப்போசிட் சைட்ட டென்ஷன் பண்ணணும். அப்பத்தாம் ஆப்போசிட் லாயர் டென்ஷன்ல ஆர்கியூமெண்ட்ல உளறிக் கொட்டுவாம். அத்து நமக்குச் சாதவமாவும்!”ன்னாரு தன்னோட இழுத்தடிக்குற பாணிய சரின்னு சமாளிப்புக் காட்டுறாப்புல

ஆன்னா இப்படி ரண்டு தடவெ வக்கீல்மார்களோட விவாதம் தள்ளிப் போன நெலையில அதுக்கடுத்த தேதியில ஜட்ஜ் இன்னொரு தேதியெல்லாம் கொடுக்கல. "நீங்க வக்கீல்தானே? சட்டம் படிச்சிருக்கீங்க இல்லே?"ன்னு காட்டாம சொல்லி ஆர்கியூமெண்ட முடிக்கச் சொன்னாரு. அதுக்கு ரண்டு பேருமே குறுக்கு விசாரணைக்குக் கடைசியில சொன்னதெ அப்படியே மனப்பாடம் பண்ணி வாந்தியெடுக்குறாப்புல சொல்லி முடிச்சாங்க நிமிஷ நேரத்துக்குள்ள.

அதெ கேட்டுட்டு ஜட்ஜ், "இதுக்குப் பேரு ஆர்கியூமெண்டே யில்ல. வழக்கோட சாரமான பகுதியே இதுதாம். அது இப்பிடி புஸ்ஸூன்னு இருக்கக் கூடாது. நாம்ம நம்ம அனுபவத்துல கேட்ட ரொம்ப மோசமான ஆர்கியூமெண்டு இதுதாம்!"ன்னு அடுத்ததா ஒரு தேதியச் சொல்லித் தீர்ப்ப அன்னிக்குச் சீக்கிரமாவே வழங்கிடறதா சொன்னாரு. படபடன்னு வெடிக்க வேண்டிய சரவெடி புஸ்ன்னு போனாப்புல போச்சு. படமெடுத்து ஆட வேண்டிய பாம்பு பொட்டிப்பாம்பா சுருண்டதெப் போல ஆனுச்சு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...