1 Jan 2021

குறுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது!

குறுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது!

செய்யு - 673

            கைப்புள்ளயக் கன்னாபின்னான்னு திட்டி அவரோட கையப் பிடிச்சி முறுக்குனதுல சுப்பு வாத்தியாரு கொஞ்சம் பயந்துதாம் போயிருந்தாரு. அதெ வுட ஸ்டேசன் வரைக்கும் வந்த வக்கீல் திருநீலகண்டன் ஒண்ணுமே பேசாம இருந்துட்டு அவரு பாட்டுக்குப் போனதெ நெனைச்சி ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சாரு. அவரு மனசுல நம்ம கூட நமக்காக வந்த கைப்புள்ளைக்கி இப்பிடி ஆயிட்டேங்ற வருத்தம் இருந்துச்சு. ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட்ட பண்ணதெ தாண்டி நம்மால கைப்புள்ளைக்காக மேக்கொண்டு ஒண்ணும் பண்ண முடியலேங்ற ஆத்தாமையும் அவரோட மனசுல இருந்துச்சு. அது காரணமா இனுமே அடுத்தடுத்து கோர்ட்டுக்குப் போவுறாப்புல இருந்தா நாமளும், நம்ம மவ்வேளும் மட்டும் போயிட்டு போன சொவடு தெரியாம திரும்பிடணும்ன்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு. மவனெ கூட இனுமே கூட அழைச்சிக்கிட்டுப் போவக் கூடாதுன்னும் முடிவு பண்ணிக்கிட்டாரு. அவனெ வேற அழைச்சிட்டுப் போயி ஆத்திரத்துல கண்ணு மண்ணு தெரியாம ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா பெறவு அது ஒரு வழக்காச்சுன்னா அதெ நெனைக்கவே சுப்பு வாத்தியாருக்கு திகுதிகுன்னு இருந்துச்சு. இருக்குற வழக்குக்கே மனுஷனால அலைய முடியாதப்போ இன்னும் வேற வழக்குக சேர்ந்தா அதுக்கு அலையுறதுக்கு பத்துக் காலுங்க வேணும். நாலு கையுங்க, ஆறு கையுங்க, ஆயிரம் கையுங்கன்னு வெச்சிருக்குற தெய்வங்க கூட நாலு காலு, ஆறு காலு, ஆயிரம் காலுன்னு இல்லாம இருக்குறதெ நெனைச்சிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. மனுஷனால எவ்வளவு வாணாலும் செய்ய முடியும். ஆன்னா அலைய முடியாது. இப்போ அலைஞ்சி அலைஞ்சி அதுக்கே ஜீவன் போறதே போதும்ன்னு நெனைச்சாரு. கோர்ட்டுல கேஸ்ஸ முடிஞ்சதும் ஒடனே கெளம்பி வந்துடாம, அந்தப் பாக்குக்கோட்டை பயலுவோ கெளம்பிப் போனதுக்குப் பெறவு அரை மணி நேரம் கழிச்சித்தாம் வாரணும்ன்னு திட்டம் பண்ணிக்கிட்டாரு. அப்பத்தாம் எந்த வெதமான பெரச்சனையும் உண்டாவதுன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டாரு.

            செய்யு குறுக்கு வெசாரணைங்ற பெரிய கண்டத்தெ எப்பிடியோ தாண்டி முடிச்சிருந்தா. அடுத்ததா அந்தக் கண்டம் பாலாமணிக்கு ஆரம்பிச்சிருந்துச்சு மேற்கால வுழுவுற நெழல் கெழக்கால மாறி வுழுவுறாப்புல. பாலாமணிய குறுக்கு வெசாரணை பண்ணுற நாள செய்யு ரொம்ப ஆர்வமா எதிர்பாத்துக்கிட்டு இருந்தா. அந்த நாள்ல விகடுவும் வாரணும்ன்னு நின்னாம். ஆன்னா சுப்பு வாத்தியாருக்கு விகடு வாரதில்ல இஷ்டமில்ல. வேற ஏதாச்சும் பெரச்சனெ ஆயிடுமோங்ற யோசனையில பாலாமணியக் குறுக்கு விசாரணைப் பண்ண வேண்டிய தேதியில செய்யுவும் சுப்பு வாத்தியாரும் ஆஜரானாங்க. கோர்ட்டுல வழக்குத் தொடங்குறதுக்கு மின்னாடி செய்யு வக்கீல் திருநீலகண்டன்கிட்டெ, "நம்மள கூண்டுல வெச்சி எப்பிடில்லாம் அவமானம் பண்ணானுவோளோ அந்த மாதிரிக்கி அவனெ அவமானம் பண்ணணும். நமக்கு ஜீவனாம்சமே கெடைக்காட்டியும் பரவால்ல. அவனெ அவமானம் பண்ணி வுட்டாப் போதும்!"ன்னா ரொம்ப கொதிப்பா மனசுல உள்ள அத்தனெ வெறுப்பையும் கக்குறாப்புல.

            அதெ கேட்டுக்கிட்டு சிரிச்ச திருநீலகண்டன், "யிப்போ இருக்கற ஜட்ஜ்கிட்டெ அந்த மாதிரிக்கெல்லாம் பண்ணா நம்மளோட வக்கீல் லைசென்ஸயே கேன்சல் பண்ணுறாப்புல எதாச்சும் பண்ணிப்புடுவாரு. பார் கெளன்சில்ல நமக்குன்னு ஒரு பேரு இருக்கும்மா. அப்பிடில்லாம் நாம்ம தரம் கொறைவா எறங்கிப் பண்ண மாட்டேம்மா!"ன்னாரு. சுப்பு வாத்தியாரும் வக்கீலு சொல்றதுதாம் சரின்னு, "அப்பில்லாம் மொற தவறிப் போவ வாணாம். அவனுகத்தாம் அப்பிடிப் போறானுவோன்னா நாமளும் அப்பிடிப் போவப்படாது. நீஞ்ஞ சாதாரணமாவே பண்ணுங்க. அதுலயே அவனுங்க அசிங்கப்பட்டு போவானுங்கோ. ஏன்னா அவனுங்க எப்பவும் தப்புத் தப்பாத்தாம் அர்த்தம் பண்ணிப்பானுவோ!"ன்னாரு. சுப்பு வாத்தியாரு மனசு முழுக்க தேவையில்லாத பெரச்சனெ யில்லாம ஏதோ முடிஞ்சா சரித்தாம்ங்ற மாதிரிக்கான எண்ணம் மட்டுந்தாம் இருந்துச்சு.

            "என்னம்மா செய்யு! நீயி அப்பிடிச் சொல்றே! அப்பா இப்பிடிச் சொல்றாரு! நாம்ம எப்பிடிம்மா கிராஸ்ஸப் பண்ணுறது?" அப்பிடின்னாரு வக்கீல் திருநீலகண்டன் நல்லா போட்டுத் தாளாளிக்குறாப்புல.

            செய்யுவுக்குச் சட்டுன்னு ஒலகமே வெறுத்தாப்புல ஆனுச்சு. மூச்செ நல்லா இழுத்து வுட்டுக்கிட்டா. கண்ண மூடி ஒரு நிமிஷம் யோசிச்சா. "மனசுல கொஞ்சம் வேகமாத்தாம்ங்கய்யா இருக்கு! யப்பா சொல்றதுதாம் செரி. மொறையாவே பண்ணிட்டுப் போங்க. அவனுங்கள என்னத்தெ பண்ணி ன்னா? அவனுங்களுக்குப் புத்தி வர்றப் போறதில்ல. எருமெ மாட்டு மேல மழெ பேஞ்சாப்புலத்தாம் போயிட்டே இருப்பானுவோ!"ன்னா செய்யு திடுதிப்புன்னு தடம் பொரண்ட ரயிலப் போல.

            "என்னம்மா நீ? ஒடனே இப்பிடி பல்டி அடிச்சிட்டே? ஒன்ன நம்பி எந்தக் காரியத்துலயும் எறங்கக் கூடாது போலருக்கே! கோவம்ன்னா கடெசீ வரைக்கும் இருக்கணுமா இல்லியா?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் கருவிப் போன தோசைய தேவையில்லாம பொரட்டிப் போடுறாப்புல.

            "மொதல்ல நெனைக்கிறப்ப கோவமாத்தாம் இருக்கு. பெறவு நெனைக்கிறப்போ யாராச்சும் எடுத்துச் சொல்றப்போ கோவம் தணிஞ்சிப் போயிடுது. என்னத்தெ பண்ண? நீஞ்ஞ பண்ணப் போற குறுக்கு வெசாரணையப் பாக்க ரொம்ப ஆவலாதியா இருக்கேம்ய்யா! மித்தபடி வேறொண்ணு எண்ணமுமில்ல!"ன்னா செய்யு.

            "ந்நல்லாவே பிரிப்பேர் பண்ணிட்டு வந்திருக்கேம். இன்னிக்கு என்னோட தாண்டவத்தப் பாக்கலாம். எறங்கிட்டன்னா ஒரு ருத்ர தாண்டவம் ஆடாம விட மாட்டேம்! ஒங்க அண்ணன் கூட நம்மளோட கிராஸ்ஸப் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டாப்புல. ஏம் அழைச்சிட்டு வாரல?"ன்னாரு வக்கீலு கதைக்கு ஆவாதுன்னு தெரிஞ்ச பெற்பாடு அந்தக் காரியத்துக்கு ஆற்றைக் கட்டி எறைக்குறாப்புல.

            "போன மொறெ நடந்த பெரச்சனையப் பாத்துப்புட்டு, ஸ்டேசன்ல அவனுகள கூட்டமா வர்றக் கூடாதுன்னு எச்சரிக்கெ பண்ணாங்க யில்லே? அத்து நமக்குத்தாம்ன்னு நெனைச்சி யப்பா கெளம்புன யண்ணன வாணாம்ன்னுட்டாங்க!"ன்னா செய்யு வக்கீலுக்கு ஏதோ ஒரு சமாதானத்தெ வைக்குறாப்புல.

            "அந்த ரூல்ஸ்லாம் அவனுகளுக்குத்தாம். நமக்கு கெடையாது சார்!"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியார்ரப் பாத்து ரொம்ப உறுதியா சொல்றாப்புல.

            "ஏம் பெரச்சனே? அவனுகளுக்குப் பெரச்சனென்னா சந்தோஷமா இருக்கும் போலருக்கு. நமக்கு என்னவோ போலருக்கு. வந்தமா போனமான்னுப் போயிட்டே இருக்கணும். ஏம் தேவயில்லாம பெரச்சனயெ வளத்துக்கிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலையாமையச் சொல்றாப்புல.

            "ஒங்கள மாதிரி நாட்டுல பாதி பேரு இருந்தா எங்களுக்கும் சரி, போலீஸ்க்கும் சரி பாதி வேல இல்லாமப் போயிடும்!"ன்னாரு வக்கீல் சிரிச்சிக்கிட்டே.

            "அத்துச் சரிங்கய்யா! அன்னிக்கு ஸ்டேசன்ல வந்து நீஞ்ஞ ஏம் ஒண்ணுமே பேசல? நீஞ்ஞ எதாச்சும் நம்மப் பக்கம் பேசுவீயேன்னு எதிர்பாத்தேம். நமக்கு ன்னாங்கய்யா தெரியும் ஸ்டேசனப் பத்தில்லாம்? சட்டத்தெ பத்தில்லாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு வக்கீலு தொணையிருந்தும் ஒரு பெரச்சனைன்னா தம் பக்கம் பேச யாருமில்லங்றதெ காட்டிக்கிறாப்புல. அந்தக் கேள்வியில ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டாரு வக்கீல் திருநீலகண்டன். இருந்தாலும் சுதாரிச்சிக்கிட்டு, "அது வந்து... அன்னிக்குப் பாத்தீங்கன்னா... அவனுவோ பக்கம் பேசுன அந்த வக்கீலால அவனுங்க பட்டப் பாட்ட பாத்தீங்களா? எப்பவுமே ஸ்டேசன்ல வக்கீலுங்கப் பேசுனா அது போலீஸ்காரவுங்களுக்குப் பிடிக்காது. எப்பவும் போலீஸூக்கும், வக்கீலுக்கும் எட்டாம் பொருத்தந்தாம். நாம்ம பேசாம இருந்தவாசித்தாம் ஸ்டேசன்ல நம்மப் பக்கம் சப்போர்ட் பண்ணாங்க. பேசியிருந்தா நெனைச்சிப் பாருங்க, அவனுகளுக்கு நேர்ந்த கதித்தாம் நமக்கு ஆயிருக்கும்! இப்போ அவனுகப் பேர்ல ஒரு வலுவான கம்ப்ளெய்ண்ட் இருக்குப் பாருங்க! அத்துப் போதும் நமக்கு!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் சால்சாஜ்ப்ப கட்டிக் காக்குறாப்புல.

            அதெ கேட்டுகிட்டு, "அதுவும் சரித்தாம்!"ன்னு சலிச்சுப் போனாப்புல நிப்பாட்டிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. கோர்ட்டு ஆரம்பிக்கப் போற நேரம் நெருங்குனதும் கேஸ் டைரி, கட்டுகளோட உள்ளார நொழைஞ்சாரு வக்கீல். செய்யுவும் சுப்பு வாத்தியாரும் நெலைப்படி ஓரமாப் போயி நின்னுகிட்டாங்க. இன்னிக்கு நடக்கப் போற குறுக்கு விசாரணையில பாலாமணிய என்னென்ன கேள்விகள நம்மளோட வக்கீலு கேக்கப் போறாரு? அந்தக் கேள்விகளுக்குப் பாலாமணி எப்பிடில்லாம் தடுமாறப் போறாம்ங்றதப் பாக்கப் போற ஆவல் ரண்டு பேத்துக்கும் ரொம்பவே இருந்துச்சு. அதே நேரத்துல குறுக்கு வெசாரணைக்குப் பெறவு எந்த வெதமான பெரச்சனையும் இல்லாம வூடு திரும்பணுங்ற நெனைப்பும் சுப்பு வாத்தியாருக்கு இருந்துச்சு. ஆன்னா அன்னிக்குத் தேதியில பாலாமணி வந்து ஆஜராவுல. வக்கீல் கங்காதரன் மட்டுந்தாம் வந்து ஆஜராயி வாய்தா வாங்கிட்டு அவர் பாட்டுக்குப் போனாரு. கூட  வந்துட்டுப் போற ராசாமணி தாத்தாவும் வாரல. அப்போ ஜட்ஜ் கங்காதரனப் பாத்து, "வழக்க இழுத்தடிக்காம சீக்கிரமா முடிக்கப் பாக்கணும்!"ன்னு எச்சரிச்சாப்புல சொல்லி அனுப்புனாரு.

            ஒரு வகையில இன்னிக்குப் பாலாமணியப் பண்ணுற குறுக்கு விசாரணையப் பாக்கலாம்ன்னு நெனைச்சி வந்த செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் அது ரொம்ப ஏமாத்தமாவே இருந்துச்சு. செரித்தாம் அடுத்தத் தேதிக்கு ஆஜரானான்னா அத்தோட குறுக்கு வெசாரணை முடிஞ்சிடுமான்னு பாத்தா, அடுத்துக் கோர்ட்டுலேந்து கொடுத்த தேதிக்கும் ஆஜராவமா அதுக்கு அடுத்தத் தேதிக்குத்தாம் பாலாமணி கோர்ட்டுல வந்து ஆஜரானாம். அவ்வேம் மட்டும் தனியா வருவான்னு எதிர்பாத்தா வழக்கம் போலவே அவ்வேம் ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையனோடத்தாம் வந்தாம். ஆன்னா இந்த மொறை ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் அடக்க ஒடுக்கமா அவ்வேம் பாட்டுக்கு பையையும், சூட்கேஸையும் தூக்கிட்டு வந்தாம். ரொம்பப் பதிவிசான புள்ளயப் போல நின்னுகிட்டு இருந்தாம். சாடை மாடையா எடக்கு மொடக்க ஒரு வார்த்தைய கூட வுடல. செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் அவனெ அப்பிடிப் பாக்கறதே ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு.

            பதினொண்ணரைக்கு மேல பாலாமணிய குறுக்கு விசாரணை பண்டுறது ஆரம்பமாயிடுச்சு. பாலாமணியக் கூண்டுல ஏத்துனதும் ஜட்ஜ் அவனெப் பாத்து, "சத்தியாம சொல்றெதெல்லாம் உண்மென்னு சொல்லுங்க!"ன்னாரு. அதுக்குப் பாலாமணி, "கடவுள் சாட்சியாகவும், என்னைப் பெற்றெடுத்த என் தாய் தந்தை எனும் தெய்வங்கள் சாட்சியாகவும் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை!"ன்னு வசனத்த மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறவனெப் போல சொன்னாம். அதே கேட்டுக் கோர்ட்டே பாலாமணிய உத்துப் பாத்தது. கோர்ட்டு முழுக்க சிறு சத்தமில்ல. மயான அமைதிக்கு வந்திருந்துச்சு.

            வக்கீல் நீலகண்டன் குறுக்கு விசாரணைய ஆரம்பிச்சாரு.

            "உங்கப் பேரு பாலாமணிதானே?"ன்னாரு வக்கீல்.

            "டாக்டர் பாலாமணி பியெயெம்மஸ்!"ன்னாம் பாலாமணி.

            "என்ன வேலைப் பாக்குறீங்க?"ன்னாரு வக்கீல்.

            "அதாம் பேர்ரச் சொல்றப்பே சொன்னேம்லா. டாக்டர்ன்னு!"ன்னாம் பாலாமணி.

            "டாக்டர்ன்னா பிரைவேட்டா கிளினிக் வெச்சிருக்கீங்களா? அராசங்கத்துல வேலைப் பாக்குறீங்களா?"ன்னாரு வக்கீல்.

            "அரசாங்கத்துல டாக்கடர்ரா இருக்கேம். பிரைவேட்டாவும் கிளினிக் வெச்சிருக்கேம்!"ன்னாம் பாலாமணி. பதிலு ஒவ்வொண்ணும் பாலாமணிகிட்டேயிருந்து ஓட்டை வுழுந்த மூட்டையிலேந்து கொட்டுற தானியத்தைப் போல அது பாட்டுக்குக் கொட்டிக்கிட்டே இருந்துச்சு.

            "அரசாங்க மருத்துவரா இருக்குறவரு பிரைவேட்டா கிளினிக் ‍வைக்கலாமோ?"ன்னாரு வக்கீல் பாலாமணி சொன்ன பதில வெச்சு மடக்குறாப்புல.

            "அதாகப்பட்டது என்னவென்றால் அரசாங்க மருத்துவராக ஆகும் முன் வெச்சிருந்தது. அதுக்குப் பிறகு அதைப் பாக்க முடியாம வைச்சுக்க முடியல. அந்த அர்த்தத்துல சொன்னேம்!"ன்னாம் பாலாமணி சமாளிக்குறாப்புல.

            "அப்போ நீங்க அரசுப்பணி செய்யும் ஓர் அரசுப் பணியாளர்ன்னு ஒத்துக்குறீங்க?"ன்னாரு வக்கீல்.

            "கவர்மெண்ட் டாக்டர்ன்னா அதானேய்யா அர்த்தம்?"ன்னு கடுப்படிச்சாப்புல பதிலச் சொன்னாம் பாலாமணி. அதெ கேட்ட ஜட்ஜ் பாலாமணியப் பாத்து, "கேக்குற கேள்விக்கு மட்டுந்தாம் பதிலச் சொல்லணும்!"ன்னாரு பட்டுன்னு பாலாமணிய எச்சரிக்குறாப்புல. பாலாமணி மொகம் கொஞ்சம் சொணங்கிப் போயிடுச்சு.

            "ஒங்களுக்கும் எனது கட்சிக்காரரான செய்யு என்பவருக்கும் திருமணம் நடந்தது உண்மையா?"ன்னாரு வக்கீல்.

            "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். மணப்பெண் எனது அம்மா வகை உறவு என்பதால் நான் எவ்விதத்திலும் வரதட்சணை வாங்காத திருமணம். திருமண செலவு உட்பட அனைத்தும் நானே செய்து, மணமகள் வீட்டாருக்கு எவ்வித செலவினமும் இல்லாமல் செய்து கொண்ட திருமணம். அதாவது திருமணத்திற்கென மணப்பெண் வீட்டிலிருந்து ஒரு பைசா கூட வாங்காத திருமணம். ஒரு அரசாங்க மருத்துவராக நான் இருந்த போதிலும் உறவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று நோக்கில் செய்த திருமணம்! ஒரு திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்த திருமணம். என் கைக்காசி முழுசும் செலவழிச்சு செய்த திருமணம். அதற்கு முன் வரை அப்படி ஒரு திருமணத்தை யாரும் பாத்திருக்க முடியாது எனும்படியான திருமணம். திருமணம் என்றால் அதுதான் திருமணம்!"ன்னு பாலாமணி பாட்டுக்கு சினிமாவுல வர்ற வசனத்தப் போலச் சொல்லிட்டுப் போவ ஜட்ஜ் குறுக்காலப் பூந்து, "ஏற்கனவே சொல்லிட்டேம் கேக்குற கேள்விக்கு மட்டும் பதிலச் சொல்லுங்கன்னு. இப்பிடி நீங்கப் பாட்டுக்குச் சொல்லிட்டே போனா டைப் பண்ணுறவங்க என்னா பண்ணுவாங்க? பாவம். எதுக்கு இப்பிடி சினிமா டயலாக் மாதிரி பேசுறீங்க? சாதாரணமா பேசுங்க!"ன்னாரு மறுக்கா புத்திக் கொடுக்குறாப்புல.

            "இந்தக் கோர்ட்டுல என்னோட கருத்துகளச் சொல்றதுக்கும் எடம் கொடுக்கணும்!"ன்னாம் பாலாமணி தனக்கான ஞாயம் வேணுங்றாப்புல.

            "இத்து குறுக்கு விசாரணை. வக்கீலோட கேள்விகளுக்கு மட்டும் பதிலச் சொல்லுங்க!"ன்னு பாலாமணியப் பாத்துட்டு, "என்னா மிஸ்டர் கங்காதரன் இதெயெல்லாம் ஒங்க கட்சிக்காரர்கிட்டெ கோர்ட்டோட கோட் ஆப் கான்டாக்ட்டப் பத்திச் சொல்றதில்லையா?"ன்னு வக்கீல் கங்காதரனப் பாத்துச் சொன்னாரு ஜட்ஜ்.

            "அவரு கல்யாணத்தால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்காருங்கய்யா. அந்த உணர்ச்சியில பேசுறாருங்கய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரன் அதெ சமாளிச்சு வுடுறாப்புல.

            "கோர்ட்டுக்கு வர்ற எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல பாதிக்கப்பட்டுத்தாம் இருப்பாங்க. எல்லாம் இப்பிடி பேச ஆரம்பிச்சா கோர்ட்டோட நேரம் என்னாவுறது? இந்த கிராஸ்ஸ முடிச்சிட்டு நான் இன்னும் மூணு கிராஸ்ஸ இன்னிக்கு முடிச்சாவணும். அதுக்கு ஒங்கக் கட்சிக்காரர் ஒத்துழைப்புக் கொடுக்கணும். நாளு பூராவும் அவரு சொல்ற பதில மட்டும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது! பாருங்கய்யா!"ன்னாரு ஜட்ஜ்.

            "இல்லீங்கய்யா! இனுமே சரியா நடந்துப்பாருங்கய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரன் எச்சில முழுங்க முடியாம முழுங்கறாப்புல.

            அடுத்ததா வக்கீல் திருநீலகண்டன் பாலாமணியக் கேள்விக் கேக்க ஆரம்பிச்சாரு, "கலியாணம் ஆகி ஒரு சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்ததும், தற்போது சில வருடங்களாக நீங்கள் இருவரும் பிரிந்து வாழ்வது உண்மையா?"ன்னாரு வக்கீல்.

            "கலியாணம் ஆயி சில மாதங்கள் வரை அவரை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டதும், பெறவு அவர் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டும், அவரது மாமன் மகனை மனதில் வைத்துக் கொண்டும் என்னை விட்டுப் பிரிஞ்சி சில வருடங்களாக வாழ்ந்து வருவதும் உண்மை!"ன்னாம் பாலாமணி.   

            "உண்மெயா இல்லையான்னு மட்டும் பதிலச் சொல்லுங்க. உண்மென்னா உண்மென்னு சொல்லுங்க. இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க. எதுக்கு நீட்டி மொழங்குறீங்க?"ன்னாரு ஜட்ஜ் பாலாமணியப் பாத்து நீட்டி மொழங்க வாணாம்ன்னு.

            "நமக்கு நம்மோட கருத்தெ சொல்ல சொதந்திரம் வேணும்!"ன்னாம் பாலாமணி முயலுக்கு மூணு கால்தாம் முக்காலிக்கு நாலு காலுதாம்ன்னு பிடிவாதமா நிற்குறாப்புல.

            "உங்களோட கருத்தெயெல்லாம் வக்கீல் ஆர்கிமெண்டுல சொல்லுவாரு. இப்போ கேள்விக்கு மட்டும் பதிலச் சொல்லப் பாருங்க. அநாவசியமா நீட்டி மொழங்கக் கூடாது!"ன்னு பாலாமணிகிட்டெ சொல்லிட்டு, வக்கீல் கங்காதரனப் பாத்து, "ஒங்க கட்சிக்காரர்கிட்டெ கிராஸ்ல எப்பிடி நடந்துக்கணும்ன்னு மொதல்ல எடுத்துச் சொல்லுங்க!"ன்னாரு ஜட்ஜ் கைய தலைய நோக்கிக் கொண்டுப் போயிக்கிட்டு.

            "இந்தக் குறுக்கு விசாரணை ஒருதலைபட்சமா நடக்குறதா நாம்ம சந்தேகப்படுறேம். இந்தக் குறுக்கு விசாரணைக்கு நாம்ம ஒத்துழைக்க முடியாது! நீங்க டைப் பண்ணிக் கொடுக்குற டாக்குமெண்ட்லயும் நாம்ம கையெழுத்தப் போட முடியாது!"ன்னு சொல்லி கூண்டெ விட்டு எறங்கப் பாத்தாம் பாலாமணி.

            "இதெ கோர்ட்ட அவமதிக்கிறதா எடுத்துக்கலாமா மிஸ்டர் கங்காதரன்! குறுக்கு விசாரணைங்றது வக்கீலு கூண்டுல இருக்குறவர்ற பண்ணுறதா? இல்லே கூண்டுல இருக்குறவரு வக்கீல குறுக்கு விசாரணை பண்ணுறதா? நீங்க ஒங்களோட எதிர்தரப்ப பண்ணப்போ அவுங்க இப்பிடித்தாம் நடந்துக்கிட்டாங்களா?"ன்னு ஜட்ஜ் கங்காதரனப் பாத்துக் கேட்டாரு.

            "அய்யா மன்னிக்கணும்! நாம்ம பேசுறேம்ய்யா!"ன்னு கங்காதரன் பாலாமணியப் பாத்து கூண்டுப் பக்கம் நவந்தாரு.

            "இதெல்லாம் கோர்ட்டுக்குள்ள வர்றதுக்கு மின்னாடி கூண்டுல ஏத்துறதுக்கு மின்னாடி சொல்லி அழைச்சிட்டு வாங்க மிஸ்டர் கங்காதரன்!"ன்னாரு ஜட்ஜ் கண்டிப்புக் காட்டுற வெதமா. மொத்த கோர்ட்டுமே விநோதமான வழக்கெ பாக்குறாப்புல மூக்கு மேல வெரல வெச்சு நடக்குற வெசாரணையப் பாத்துக்கிட்டு இருந்துச்சு அடுத்ததா என்னா நடக்குமோங்ற ஆவலாதியில.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...