2 Jul 2019

இடைவேளைக்குப் பின்...



செய்யு - 133
            "நம்ம ஹீரோ இப்போ ஹீரோயினுக்கா? இல்ல தொரத்தித் தொரத்திக் காதலிக்கும் செகண்ட் ஹீரோயினான்ன டெல்லிப் பொண்ணுக்கா?ங்ற சஸ்பென்ஸோட இன்டர்வெலுக்கு அப்புறம் கதையை ஸ்டார்ட் பண்ணா...
            ஹீரோவுக்கு ஐ.ஏ.எஸ். பரீட்சைக்கான இன்டர்வியூ வருது. இன்டர்வியூல நம்ம ஹீரோ பொளந்து கட்டுறாப்புல. ஆனா பாருங்க வெகடு! நம்ம ஹீரோ செலக்ட் ஆகல. காரணம் கிராமத்து ஹீரோயினோட அப்பா. அங்கதாம் அடுத்த டிவிஸ்ட்ட வைக்கிறோம். ஏற்கனவே அரசியல்ல இருக்குறவருதாம் அவரு. இப்போ அவரு இடைத்தேர்தல்ல நின்னு எம்.எல்.ஏ. ஆகி தன்னோட செல்வாக்கப் பயன்படுத்தி மினிஸ்டர் ஆயிடுறார். அவரோட வேலதாம் வெகடு நம்ம ஹீரோ இன்டர்வியூல செலக்ட் ஆகமா போறதுக்குக் காரணம். ஹீரோ மனசு ஒடஞ்சிப் போயிடுறாப்ல. சரக்கப் போட்டுகிட்டு ஏரியாவையே ரவுசு பண்றாப்ல. செகண்ட் ஹீரோயினான டில்லிப் பொண்ணு அதையெல்லாம் பாக்குது. விசயம் தெரிஞ்சி அதுக்கும் வெசனமா, சங்கட்டமாப் போயிடுது. அதுவும் டில்லியில இருக்குற தங்கச்சிப் போண்ணுமா சேந்துகிட்டு ஹீரோவ தேத்துதுங்க. இந்த எடத்துல ஒரு தத்துவப் பாட்டு வெகடு. கண்ணதாசன், வாலியெல்லாம் தோத்துப் போயிடணும். அப்படி வரிகள போடணும் நீங்க வெகடு. இப்போலேந்தே இந்த சுச்சுவேஷனுக்கு அப்போகைப்போ வரிகள புடிச்சிப் போட்டு வெச்சிக்குங்க. 'சட்டி சுட்டதடா! கை விட்டதடா', 'ஆறு மனமே ஆறு', 'உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்', 'ஊர தெரிஞ்சிகிட்டேன் ஒலகம் புரிஞ்சிகிட்டேன்' போல செம ஹிட்டாகணும் பாத்துக்குங்க!
            செகண்டு ஹீரோயினு டெல்லிப் பொண்ணும், டெல்லி தங்கச்சியுமா சேந்துகிட்டு, "தோல்விய தோத்துப் போயி ஓட வைக்கணுமே தவிர, தோல்விக்குப் பயந்து நாம்ம ஓடிப் போயிடப்படாது"ன்னு சொல்லுதுங்க. தோல்விய தோற்கடி, வெற்றியைத் துரத்திப் பிடி அப்படி இப்படின்னு டயலாக் வெகடு. நம்ம ஹீரோ செம டெம்பர் ஆயிடுறாப்புல. மறுபடியும் ஹீரோ ஹார்ட் ஒர்க்க ஸ்டார்ட் பண்றான். நம்ம ஏற்கனவே போட்டோமே ஒரு தன்னம்பிக்கை பாட்டு. அதே பாட்ட அதே மெட்டோடு கொஞ்சம் வரிகள மாத்திப் போட்டு மறுபடியும் அந்த சுச்சுவேஷன்ல போடறோம். இந்த முறை ஹீரோ ஜெயிப்பானா? மாட்டானா?ங்ற மாதிரி படத்த பாக்குற ஒவ்வொருத்தனுக்கும் டெம்போ ஏத்துற மாதிரி தெறிக்க விடறோம். அதுக்கு தகுந்த மாதிரி டில்லில உள்ள எல்லா ஏரியாவுலயும் ஹீரோ ரன்னிங் ஓடி எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரியும், அங்கங்க இருக்குற அத்தனை மரத்தடிகளையும் படிக்கிற மாதிரியும் சீன்ஸ் பிடிச்சுப் போடறோம்.
            இந்தத் தடவ நம்ம ஹீரோ இன்டர்வியூக்குப் போறான் வெகடு! மெயின் டிவிஸ்ட்டே இந்த இடத்துலதான் வெகடு! நம்ம ஹீரோ ஆல் இந்தியா அளவுல பர்ஸ்ட் ரேங்குல செலக்ட் ஆகுறான்.
            மறுபடியும் இந்த எடத்துல அடுத்த டிவிஸ்ட் வெகடு. எப்படி நம்ம ஹீரோ மொத இன்டர்வியூல கோட்டை விட்டான், இந்த இன்டர்வியூல கோட்டையைப் பிடிச்சாங்றத சொல்றோம். நம்ம செகண்ட் ஹீரோயினு டில்லி பொண்ணு இருக்குதுல்ல. அதோட அப்பா சென்ட்ரல் மினிஸ்ட்ங்றர வெசயத்தை இப்பதாம் காட்டுறோம். நம்ம ஹீரோவுக்கும் வெசயம் புரிய வருது. மொத தடவ இன்டர்வியூல செலக்ட் ஆகாதத்துக்குக் காரணம் நம்ம ஹீரோயினோட அப்பா ஸ்டேட் மினிஸ்டர். இப்போ ரெண்டாவத தடவ இன்டர்வியூல செலக்ட் ஆவுறதுக்குக் காரணம் செகண்ட் ஹீரோயினோட அப்பா சென்ட்ரல் மினிஸ்டர்னு.
            நம்ம ஹீரோவுக்கு கலெக்டர் போஸ்டிங் அவனோட கிராமம் இருக்குற மாவட்டத்துல போடறாங்க. அங்தாம் வெச்சு வெகடு மொத்தப் பட்டாசையும் வெடிக்கிறோம்.
            ஹீரோ கலெக்டர் ஆனதும் ஹீரோயினோட அப்பா எல்.எல்.ஏ., மினிஸ்டர் ஆகி பண்ணுன அத்தனை ஊழலு, வாங்குன லஞ்சம் அத்தனையும் கண்டுபிடிக்கிறான். வெசயம் எல்லா நியூஸ்பேப்பர்லயும் பப்ளிஷ் ஆகுற சீன ஒண்ணு வைக்கிறோம். அடுத்தாப்புலயே டி.வி. நியூஸ்ல கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மினிஸ்டர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலேர்ந்து நீக்கப்பட்டார்னு நியூஸ் வாசிக்க வெக்கிறது அடுத்த சீன். அவரோட மந்திரி பதவி, எம்.எல்.ஏ. பதவி எல்லாத்தியும் நம்ம ஹீரோ காலி பண்ணிடறான். மக்கள் புரட்சி வெடிக்குது. வில்லன் அப்பன கைது பண்ணி விசாரிக்கிணும்னு நாடு முழுவதும் போராட்டம், கடையடைப்பு, தீக்குளிப்புன்னு ரணகளமாவுது. 'இவனயெல்லாம் தூக்குல போட்டு துப்பாக்கியால சுடணும்!' 'இப்படிப்பட்டவனுங்கள உயிரோடு கொழுத்தணும்!' 'இவனுங்கள கண்டுதுண்டமா வெட்டி காக்காய்க்குப் போடணும்!' அப்படின்னு நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தணும் கொந்தளிக்கிற மாதிரி சீன் வைக்கிறோம் வெகடு.
            சி.பி.ஐ. ரெய்டு, கோர்ட்டு விசாரணைன்னு நடந்து வில்லன் அப்பன் அரெஸ்ட் ஆகி உள்ளே போறான்.
            ஆல் இந்தியா இதையே கூர்ந்து பாக்குது. இப்படிப்பட்ட கலெக்டர் கிடைச்சாதாம் இந்தயா உருப்படும்னு தேசிய அளவுல எல்லாம் பேசிக்கிறாங்க. எல்லா லாங்குவேஜூலேயும் இதப் பேசுற மாதிரி சீன் வெக்கிறோம் வெகடு.
            நெக்ஸ்ட் டிவிஸ்ட்டா, இப்பதாம் நம்ம செகண்ட் ஹீரோயினு தன் காதல ஹீரோகிட்டச் சொல்லுது. அத்தோட அவனோட டில்லி தங்கச்சிய அதோட அண்ணன் கட்டிக்க விரும்புறதாவும் சொல்லுது. தனக்கு தன்னோட காதலி கெடைக்காட்டியும் தன்னோட டில்லி தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கைக் கெடைக்கிறத நெனச்சி ஹீரோ இதுக்குச் சம்மதிக்கிறான்.
            ஹீரோ கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும் அவனோட முகத்துல இருக்குற லேசான சோகத்தை டில்லி தங்கச்சி கண்டுபிடிச்சிடுது. ஆக்சுவலா அத இந்த டில்லி தங்கச்சி பாக்குற சீன வெச்சி, அடுத்த சீனுல ஒரே மேடையில ரண்டு கல்யாணமும் நடக்குற மாதிரி வெக்கிறோம்.
            செகண்ட் ஹீரோயினோட அண்ணன் டில்லி தங்கச்சி கழுத்துல தாலி கட்டுறான். தாலி கட்டி முடிச்சதும் நம்ம ஹீரோ செகண்ட் ஹீரோயினோட கழுத்துல தாலி கட்டப் போறான். அப்போ பாத்து, டில்லி தங்கச்சி நிறுத்துண்ணேங்குது. கெட்டி மேளச் சத்தம் நிற்குது. மண்டபமே அமைதியாகுது. செகண்ட் ஹீரோயினு சிரிச்சிகிட்டே அந்த எடத்த விட்டு எழுந்திரிக்க, கேமாரவுல என்ட்ரி கொடுத்து நம்ம கிராமத்து ஹீரோயினு சிரிச்சிகிட்டே வந்து அந்த எடத்துல உட்காருது. நம்ம ஹீரோவுக்கு ஒண்ணுமே புரியல. திருதிருன்னு விழிக்கிறான். அப்போ பாஸ்ட் பார்வேர்டுல டில்லி தங்கச்சி நம்ம ஹீரோவோட லவ்வ கண்டுபிடிக்கிற மாதிரியும், கண்டுபிடிச்சதுக்கு அப்புறமா டில்லி தங்கச்சி செகண்ட் ஹீரோயினோட நம்ம ஹீரோவோட காதலப் பேசுற மாதிரியும், அத செகண்ட் ஹீரோயின் புரிஞ்சுகிட்டு கிராமத்துல இருக்குற ஹீரோயின அழச்சிட்டு வர்ற மாதிரியும் சீக்குவலா காட்டுறோம்.
            அந்த செகண்ட் ஹீரோயினு இந்த எடத்துல ஒரு டயலாக் பேசுறா பாருங்க வெகடு, "எனக்கு நான் லவ் பண்ண நீங்க கெடைக்காட்டியும், நான் லவ் பண்ண உங்களுக்கு நீங்க லவ் பொண்ணு கெடைக்காம போயிடப்படாது. தட் இஸ் லவ்! உங்கள நெனச்ச மனசால என்னால இன்னொருத்தர நெனைக்க முடியாது. ஸோ மை டியர் பாஸ்! ஒங்க புள்ளய பெத்து எங்கிட்ட கொடுத்தடணும். அந்த புள்ள முகத்த பாத்துட்டே காலம் முழுதும் நான் இருந்திடுவேன்!" அப்படிங்றா!
            அப்புறம் பாத்தீங்கன்னா... சீக்குவலா
            கல்யாணக் கெட்டி மேளச் சத்தம்.
            அது முடிஞ்சா
            குழந்தை அழுவுற சத்தம்.
            அந்தக் குழந்தைய நம்ம செகண்ட் ஹீரோயின் தூக்கி வெச்சிட்டுக் கொஞ்சுறா.
            நம்ம ஹீரோயின் கிட்சன்ல சாப்பாடு ரெடி பண்றா.
            நம்ம ஹீரோ டியூட்டிக்கு அரக்க பரக்க கிளம்புறான்.
            மூணு ஷாட்டையும் ஸ்கிரீன்ல ஒண்ணா கொண்டு வந்து...
            'காதலே! என்னுயிர்க் காதலே!' - படத்தோட டைட்டில கடைசியிலதாம் போடறோம் வெகடு. ரிட்டன் அன்ட் டெரக்டேட் பை பூரணலிங்கம்னு ஸ்கிரீன்ல மின்னி மறையுது.
எப்படி வெகடு?" என்கிறார் பூரணலிங்கம்.
            விகடுவுக்குக் கண்கள் கலங்கிதான் இருக்கிறது.
            எழுந்து போய் ஒரு டம்ப்ளர் தண்ணீரைக் குடிக்கிறான்.
            "நன்றாகத்தான் இருக்குது! திரையிலும் அப்படியே எடுத்து விட்டீர்கள் என்றால் படம் அதிரிபுதிரி ஹிட்தான்!" என்கிறான் விகடு.
            "அதாம் வெகடு! நானும் புரடியூசருக்காக அஞ்சு வருஷமா அலஞ்சிட்டு இருக்கேன். சிக்க மாட்டேங்றானுங்க. நம்பிக்க இருக்கு வெகடு! எப்படியும் இந்த வருஷம் டேக் ஆப் ஆகுதா இல்லியான்னு பாருங்க!" என்கிறார் பூரணலிங்கம்.
            விகடு அப்படியே இந்தக் கதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போகிறான். மனசு விதவிதமாகச் சிந்திக்கிறது. அவன் இந்தக் கதையின் பொதுத்தன்மை குறித்து சுற்றிச் சுழல்கிறது எண்ணங்கள்.
            சினிமா கனவைப் போல இந்த நாட்டைப் பிடித்து ஆட்டும் மற்றொரு கனவு ஐ.ஏ.எஸ். கனவு. அந்தக் கனவைச் சுற்றி எத்தனையோ கதைகள் சினிமாவில் வந்து விட்டன. பார்க்கப் போனால் அதுபோன்ற ஒரு கதையைத்தான் பூரணலிங்கமும் வைத்திருக்கிறார். இந்தக் கதைகளின் பொதுவான தன்மை கதையின் நாயகனோ அல்லது நாயகியோ ஐ.ஏ.எஸ். கனவோடு இருக்கிறார்கள்.  அவர் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு நாயகனோ அல்லது நாயகியோ உதவுகிறார்கள். நாயகனோ, நாயகியோ ஐ.ஏ.எஸ். ஆனவுடன் அப்படி ஆக்கி விட்டவரை மறந்து கடமையில் மூழ்கி விடுகிறார்கள். ஐ.ஏ.ஏஸ். ஆகி விட்ட நாயகனுக்கோ, நாயகிக்கோ சூழ்நிலையின் நெருக்கடியால் இன்னொருவருடன் கல்யாணம் நடக்கவிருக்கும் நிலையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு கதைநாயகனோடோ, நாயகியோடோ திருமணம் நடக்கிறது அல்லது நடக்காமல் போகிறது. திருமணம் நடந்தால் சுபமான கிளைமாக்ஸ். நடக்காமல் போனால் ஆன்டி கிளைமாக்ஸ். இதுதான் இந்தக் கதைகளின் பொதுவான தன்மை.
            ஒவ்வொரு கதைக்கும் அக்கதையின் இடையில் அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்களை நெஞ்சை நக்கும் வகையில் சொல்வதில் டேரக்டர்கள் வேறுபடுகிறார்கள். பார்ப்பவர்களும் கண்ணில் நீர் வழிய, வாயிலிருந்து எச்சில் வழிய பார்க்கிறார்கள். இடையில் ஒரு தன்னம்பிக்கை பாட்டு கட்டாயம் இருக்கிறது. அந்தப் பாட்டைக் கேட்டு எவரெஸ்ட் சிகரத்தை ஒரு தாவலில் தாண்டிக் குதிக்கும் ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்கள். முடிவில் சுபமான கிளைமாக்ஸ் என்றால் 'மெய்யான  காதல் மெய்யாலுமே ஜெயிக்கும்' என்ற நம்பிக்கையோடோ, ஆன்டி கிளைமாக்ஸ் என்றால் பாவம் அந்த நாயகன் அல்லது நாயகி என்ற பரிதாப உணர்வோடோ எழுந்து செல்கிறார்கள்.
            பூரணலிங்கம் சொல்லியிருக்கிற இந்தக் கதை இன்னொரு விக்ரமன் கதையைப் போன்றோ அல்லது விக்ரமன் வழிவந்த இயக்குநர்கள் சொல்லும் கதையைப் போலத்தான் இருக்கிறது.
            இவ்வளவையும் சொல்லி விட்டு ஆர்.பி.செளத்ரியைப் பார்த்து இந்தக் கதையைச் சொல்லி விட்டால் நிச்சயம் டேக் ஆப் ஆகி விடும் என்கிறார் நம்பிக்கையோடு பூரணலிங்கம்.
            அத்துடன் தன்னுடைய சித்திக்காக இந்தப் படத்தை எடுத்தே தீர வேண்டும் என்கிறார்.
            சிந்தனையிலிருந்து அறுபட்டு, "ஏன் அப்படி ஓர் உறுதி? அதில் என்ன ப்ளாஷ்பேக்?" என்கிறான் விகடு.
            "அதாவது வெகடு! இந்தக் கதையை மொத மொதலா சொன்னது எஞ் சித்திக்குதாம். அந்தக் கதையைக் கேட்டு அப்படி அழுதது எஞ் சித்திதாம். இது மட்டும் சினிமாவா வந்தா நம்மள அடிச்சிக்க டேரக்டரே இல்லன்னு சொன்னதும் எஞ் சித்திதாம். எஞ் சித்திக்காகவாவது இந்தப் படத்தை எடுத்ததாகணும் வெகடு! எஞ் சித்திதாம் அந்த செகண்ட் ஹீரோயின் கேரக்டர். அது இன்னி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கல. என்னியத்தான் அது புள்ளயா நெனைக்குது!" என்கிறார் பூரணலிங்கம்.
            கதைக்காக கண் கலங்கிய விகடுவுக்கு இப்போது நிஜமாகவே கண்கள் கலங்குகின்றன.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...