3 Jul 2019

குதிரையா? டிரெய்னா? ரெண்டும் சமமா?



            ஒரு திரைப்படம் பார்த்த போது அந்தக் கேள்வி எழுந்தது. திரையில் டிரெயினைத் துரத்திக் கொண்டு குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. சற்றேறக்குறைய டிரெயினை ஒட்டி டிரெயினின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ஓடிக் கொண்டிருந்தன.
            "ஏம்ப்பா! டிரெய்னுக்கு சமமா குதிரைங்க ஓடுமாப்பா!" என்று கேள்வியை எழுப்புகிறாள் பாப்பா.
            சின்ன வயதாக இருந்த போது எதிர்வீட்டு தாடி தாத்தா குதிரை வண்டி வைத்திருந்தார். அப்போது குதிரையை பார்த்ததுதான். அதுக்கு ஒரு வண்டி. வண்டியின் ரெண்டு பக்கமும் சைக்கிள் வீல்கள். சேணத்தை மாட்டி விட்டு குதிரையைப் பூட்டி விட்டால் தாடி தாத்தாவை வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டோடும் குதிரைகள். எல்லாம் சின்ன வயதில் பார்த்தது என்பதால் அந்தக் குதிரை வண்டி என்ன வேகத்தில் ஓடியது என்பது சரியாக நினைவில் இல்லை.
            தாடி தாத்தாவும் மூன்று குதிரைகளை மாற்றியிருப்பார். ஒன்று வெள்ளை, அடுத்தது சிவப்பு, கடைசி கருப்பு என்று ஞாபகம். ஒரு நாள் அந்தக் கருப்புக் குதிரை தாடி தாத்தாவை வண்டியிலிருந்து உருட்டி தள்ளி விட்டு ஓடிய பிறகு தாடி தாத்தாவும் குதிரை வண்டியை விட்டு விட்டார். அதனால் குதிரையை நெடுநாள் பார்க்கும் வாய்ப்பும் அய்யகோ எனக்குக் கிடைக்காமல் போய் விட்டது.
            நன்றாக விவரம் தெரிந்து நான் பார்த்த போது கண்ணில் தென்பட்டதெல்லாம் நொண்டிக் குதிரைகளாக இருந்தன. அதையும் ஊரில் இருந்த சிறுவர்கள் வம்பு, தும்பு, சேட்டைகள் அத்தனையும் பண்ணி ஊர்ப் பக்கமே வர விடாமல் செய்து விட்டார்கள்.
            இப்போது திரைப்படங்களில்தான் குதிரைகளைப் பார்க்க முடிகிறது. அதுவும் கொள்ளைக்காரர்கள்தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெட்ரோல், டீசல் போடும் செலவு மிச்சம் என்பதற்காக அதைப் பயன்படுத்துகிறார்களா என்னவென்று தெரியவில்லை.
            பாப்பா இப்படி டிரெயினுக்கும், குதிரைக்கும் வம்பிழுப்பது போல கேள்வி கேட்ட பின் நிஜமாகவே குதிரைகளைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
            "என்னப்பா! உனக்குப் பதில் தெரியுமாப்பா? இல்லே கூகுள்ள பார்த்துக்கவா?" என்று அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டாள் பாப்பா.
            இதற்கு மேல் சுயகெளரவம் சுடாமல் இருக்குமா? "இந்தாரு பாப்பா! இன்ஜினோட பவரை ஹார்ஸ் பவர்னுதான் சொல்றாங்கன்னா... நிச்சயமா அதோட பவர்தான் பவர்புல்லா இருக்கணும் பாப்பா!" என்று சொன்னால்...
            "கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுப்பா!" என்கிறாள் பாப்பா.
            "இந்தா செல்லு! நீயே பாத்துக்கோ!" செல்பேசியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டேன்.
            ஆனாலும் அந்த சந்தேகம் ரொம்ப அழகானதுதான், "டிரெயினுக்குச் சமமா குதிரைகள் ஓடுமா?" என்பது.
            தான் உருவாக்கியதை மிஞ்சி ஒன்று ஓடுவதைப் பார்த்தால் இந்த மனிதகுலத்துக்குப் பொறுக்குமா என்ன? பார்க்கும் குதிரைகளை எல்லாம் காலை உடைத்து நொண்டியாகவோ, தாங்கித் தாங்கி நடக்கும் வகையிலோதான் வைத்திருக்கிறது இந்த மனித குலம்.
            "ஆகையால், அடே பாப்பா! டிரெயினுக்கு சமமா எந்தக் குதிரையும் ஓடாது!" என்று சொல்ல ஆசைதான். அவள் கனவில் டிரெயினை விட குதிரை வேகமாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதை மாற்றிக் கேட்பது போல கேட்டுப் பார்க்கிறாள். கால் உடையாத குதிரைகள் திரையில் டிரெயினை விஞ்சி ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படியே ஓடிக் கொண்டிருக்கட்டும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...