3 May 2026

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

சூரியன் இப்போது ஒரு வேலையற்ற தாதாவைப் போலச் செயல்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அபிஷியல் சித்திரவதைக்கு முன்பே, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் இந்தியாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.

உத்தர பிரதேசத்தின் பாந்தா நகரில் 117.32 டிகிரி பாரன்ஹீட்டாம். அங்கு யாராவது ஆம்லெட் போட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டாம், முட்டையைச் சாலையில் உடைத்தாலே போதும்.

தில்லியில் 112 டிகிரி பாரன்ஹீட். இயல்பை விட 11 டிகிரி அதிகம். அதாவது, இயற்கை இப்போது ஒரு ஓவர் அச்சீவர்.

வடமாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற கடற்கரை ஓரங்களில் வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து நம்மை ஓர் உயிருள்ள இட்லி போல வேக வைக்கிறது.

4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடினால் அதை வெப்ப அலை என்கிறார்கள். எனக்குத் தெரிந்து இதை வெப்பச் சுனாமி என்றே அழைக்கலாம். அதுவே 6.4 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் அது தீவிர வெப்ப அலையாம்.

ஏற்கனவே ஒடிஸாவில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய தொழிலாளி, கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியர் எனச் சிலர் இந்த வெப்பச் சுனாமிக்கு தட் மீன்ஸ் வெப்ப அலைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஊட்டியிலேயே 80 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அடிக்கிறது என்றால், சமவெளி மனிதர்களின் கதி?

உடல்நிலைக்கு இதனால், தக்காளி போல தோல் சிவந்து போவது, ஆபீஸ் வேலையினால் வருவதைத் தவிர்த்து தலைவலி மற்றும் மயக்கம், காதல் மேட்டர் இல்லாமல்   இதயத்துடிப்பு அதிகரித்தல், மிக முக்கியமாக, நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகம் ஸ்ட்ரைக் செய்வது போன்றவை ஏற்படுகின்றன.

இதிலிருந்து உயிர் பிழைக்கும் வித்தைகள்தான் இப்போது நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்த டாபிக்கைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்தால்,

மதியம் 11 முதல் 3 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என்கிறார்கள். அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய, சூரியனுடன் மல்யுத்தம் செய்ய வேண்டாம். முக்கியமாக டெலிவரி பாய்ஸ், துப்புரவுப் பணியாளர்கள் ஜாக்கிரதை.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டுமாம். அது சூரியனைச் செல்லமாக வா என்று அழைக்குமாம். மெல்லிய பருத்தி ஆடைகளே தேவலாம்.

தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீரைக் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கம்பங்கூழ், எலுமிச்சை சாறு போன்றவைதான் இப்போது நம் மீட்பர்கள்.

இந்த வெப்ப அலை அதாகப்பட்டது வெப்பச் சுனாமியைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரத் தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே ஆக்சிஜனும் குளுக்கோஸும் தயார் நிலையில் இருக்கிறது.

இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக, அங்கே போவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வெயிலில் அலையக் கூடாது. அங்கே போகாமல் இருப்பதே உத்தமம்.

அப்புறம் பேச வேண்டியதைப் பேச வேண்டுமே. அதென்ன என்கிறீர்களா?

மரங்களை வெட்டிவிட்டு கான்கிரீட் காடுகளை வளர்த்தோம். ஏ.சியைப் போட்டு வெளியே இருக்கும் காற்றைச் சூடாக்கினோம். இப்போது இயற்கை ரிட்டர்ன் கிப்ட் தருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் வெறென்ன செய்ய முடியும். குடை பிடியுங்கள், நீர் அருந்துங்கள், முடிந்தால் நிழலில் தவமிருங்கள். ஒரு புங்கையோ, வேப்ப மரமோ தெருவோரம் நட முடியுமா என்று பாருங்கள். நிழலில் தவமிருக்க மரம் வேண்டுமே!

*****

2 May 2026

சிலிண்டர் – இனிமேல் இது வெடிகுண்டு அல்ல, தங்கக் குண்டு!

சிலிண்டர் – இனிமேல் இது வெடிகுண்டு அல்ல, தங்கக் குண்டு!

மக்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்முடைய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒருவழியாக உயர்த்திவிட்டன. விலை ஏறுமா, ஏறாதா? என்று ஆவலுடன் காத்திருந்த நடுத்தர வர்க்கத்தின் வயிற்றெரிச்சலில் நெய் ஊற்றும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம் என்று இதைப் படிக்க இதயத் துடிப்பு அதிகமாகலாம். இதய பாதிப்பு மற்றும் அதிர்ச்சியைத் தாங்கும் மனமில்லாதவர்கள் படிக்காமல் இருப்பது பாதுகாப்பானதாகும். எதையும் தாங்கும் இதயம் படைத்தோர் தொடரலாம்.

19 கிலோ வணிக சிலிண்டரின் பழைய விலைக்கும் புதிய விலைக்கும் இடையில் ஒரு பெரிய 993 ரூபாய் இடைவெளி. இப்போது இதன் விலை 3,071 ரூபாய். ஹோட்டலில் இனி தோசை கேட்டால், அவர்கள் உங்கள் சொத்துப் பத்திரத்தைக் கேட்க வாய்ப்புள்ளது.

5 கிலோ குட்டி சிலிண்டர் வெறும் 261 ரூபாய்தான் உயர்ந்திருக்கிறது. அதாவது, இப்போது அதன் விலை 810 ரூபாய். ஏழைகளும் நடுத்தர மக்களும் பட்டினி கிடப்பதைப் பழகிக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதா?

கடந்த மூன்று மாதங்களில் 81 சதவீத விலை உயர்வு என்பது ஒரு சாதனைதான்! டீ கடைகள், ஹோட்டல்கள் எல்லாம் இனி மியூசியம் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்பது போல, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் விரைவில் உயரும் என்று டெல்லி வட்டாரங்கள் கண் சிமிட்டுகின்றன.

இப்போது பொதுத்துறை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால், விஷேஷம் பாருங்கள், இந்த நஷ்டம் தேர்தலுக்கு முன்பு வரை ஏற்படவில்லையாம். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, மக்களின் சட்டைப் பையைத் துடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். பாவம் அவர்கள்!

இனிமேல் விறகு அடுப்புக்கு மாறுவது கௌரவக் குறைச்சல் என்று நினைக்காதீர்கள். அதுதான் ரெட்ரோ பேஷன். எரிவாயு விலையைப் பார்த்தால், சிலிண்டரை சமையல் செய்யப் பயன்படுத்துவதை விட, ஹாலில் ஷோகேஸில் வைத்து மாலை போட்டு கும்பிடுவது லாபகரமாக இருக்கும்!

வாழ்க சிலிண்டர்! வளர்க அதன் விலை!!

நீங்களும் வாழ்த்துங்கள். எல்லாரும் வாழ்த்துவோம்.

வாழ்க சிலிண்டரின்றி வளமுடன்!

*****

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

மாக்கியவல்லி என்றாலே பலருக்கும் ஒரு அலர்ஜி. குரூரமானவர், தந்திரக்காரர் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

ஆனால் பாவம், அவர் ஓர் அனுபவஸ்தர். அவர் வாழ்ந்த காலத்து இத்தாலியில் நகரங்களுக்கு இடையே ஓயாத அடிதடி, வெட்டுக்குத்து.

பிளாரன்ஸ் குடியரசுக்காக உழைத்த அவரை, கடைசியில் சித்திரவதை செய்து நாடு கடத்தினார்கள்.

அவர் தி பிரின்ஸ் என்ற புத்தகத்தில் சொன்னது இதுதான். பரம்பரை ஆட்சியைத் தக்கவைப்பது ரொம்ப ஈஸி. ராஜா கொஞ்சம் விவரமானவராக இருந்தால் போதும், நாற்காலி பத்திரமாக இருக்கும்.

ஜனநாயகக் குழப்பங்களை விட, ஒரு வலுவான ராஜா தரும் ஸ்டெபிலிட்டி மேல் அவருக்கு ஒரு தனி காதல் இருந்தது.

அடுத்தது நம் மேத்ஸ் மாஸ்டர் ரெனே டெஸ்கார்ட்ஸ் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவர் சொன்ன தத்துவம் என்னவென்றால், உன் நாட்டுச் சட்டத்துக்கு அடங்கி நட, உன்னை வளர்த்த மதத்தை விட்டுக்கொடுக்காதே.

ஏன் இப்படிச் சொன்னார்?

டெஸ்கார்ட்ஸ் பிறக்கும்போது ஐரோப்பாவே ஒரு போர்க்களம். கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையே தீராத தர்மயுத்தம். எலிசபெத் ராணி தன் சொந்தத் தங்கை மேரியின் தலையை வெட்டுகிறார். ஸ்பெயின் நூறு கப்பல்களோடு இங்கிலாந்தை அடிக்க வருகிறது.

இப்படியொரு சூழலில் இருந்த ஒருவருக்கு என்ன பிடிக்கும்?

அமைதிதானே!

அதுதான் அவரது முதல் மாரல் மேக்சிம். ராஜாவுக்கு அடங்கி நடப்பது என்பது அவருக்கு ஒரு தார்மீகத் தேர்வு. குழப்பத்தை விட ஒரு லெஜிடிமேட் அதிகாரம் மேல் என்பது அவர் லாஜிக்.

மாண்டெய்ன் என்பவரும் இதையேதான் சொன்னார்,  ராஜாவின் குணங்களில் முக்கியமானது நீதிதான்.

டெஸ்கார்ட்ஸ் ஒன்றும் சாதாரணப்பட்டவரும் அல்ல. பிளாட்டோ சொன்ன தத்துவ ஞானி ராஜா வருவார் என்று அவர் நம்பவில்லை. ஏனென்றால், சர்வாதிகாரமும் முடியாட்சியும் எப்போது வேண்டுமானாலும் வன்முறையைத் தூண்டலாம் என்று அவருக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் தொகுத்து லார்ட் ஆக்டன் என்பவர் ஒரு பஞ்ச் டயலாக் வைத்தார். அது என்னவென்றால், அதிகாரம் கெடுக்கும், முழுமையான அதிகாரம் முழுமையாகக் கெடுக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்களேன்.

மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் கோடிக்கணக்கானோர் பலியானார்கள்.

ஸ்டாலினின் ரஷ்யாவில் லட்சக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

ஹிட்லர் யூதர்கள் மேல் நடத்திய அந்தப் பயங்கரத்தில் அழிந்தவர்கள் பல்லாயிரம்.

ஜனநாயகம் கூட சில சமயம் சொதப்பும்.

1953 இல் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொசாதிக்கைத் தூக்கிவிட்டு, ஷாவை உட்கார வைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான்.

அதன் விளைவு?

1979 புரட்சி, இன்று வரை தொடரும் மதவாதம். தற்போது அமெரிக்கத் தாக்குதல்.

நிற்க, மீண்டும் டெஸ்கார்ட்ஸ்க்கு வருவோம்.

டெஸ்கார்ட்ஸ் தன் நாடான பிரான்ஸை விட்டுவிட்டு டச்சு குடியரசுக்கு ஓடினார்.

ஏன்?

அங்கேதான் சகிப்புத்தன்மை அதிகம்.

அமைதிக் கனிகளைச் சுவைக்க அவருக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. அவர் ஒரு பிராக்டிகல் ஆள். இயற்கை ரகசியங்களை உடைக்க வேண்டும் என்பது அவர் லட்சியம். அதற்கு அரசியல் அமைதி தேவைப்பட்டது.

அதேசமயம், சில ஒற்றை மனித ஆட்சிகள் உருப்படியாகவும் இருந்திருக்கின்றன. ரஷ்யாவின் பீட்டர் த கிரேட், சீனாவின் டெங் சியாவோபிங் போன்றவர்கள் நாட்டை மாற்றினார்கள்.

சில நாடுகளில் பெயரளவுக்கு ராஜா இருந்துகொண்டு அமைதியைத் தருகிறார்கள் கனடா, ஆஸ்திரேலியா போல.

இன்றைய சூழலைப் பாருங்கள். உக்ரைன் மீது ரஷ்யா பாய்கிறது, தைவானைச் சீனா முறைக்கிறது, அமெரிக்கத் தேர்தலிலேயே வன்முறை வெடிக்கிறது, ஈரானை அமெரிக்கா போட்டுப் பொளக்கிறது.

மாக்கிகியவல்லி, மாண்டெய்ன், டெஸ்கார்ட்ஸ் ஆகிய இவர்கள் மூவரும் சொன்ன ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் தத்துவமும் கிடையாது, தலைவனும் கிடையாது.

ஜனநாயகம் முக்கியம்தான், ஆனால் அதற்கு அஸ்திவாரம் அமைதி. அந்த அமைதியைத் தரும் அதிகாரம் எதுவாக இருந்தாலும், அதற்கு அடங்கி நடப்பது ஒரு புத்திசாலித்தனமான டிரேட் மார்க்.

என்னதான் தத்துவம் பேசினாலும், டெஸ்கார்ட்ஸ் போல நாமும் கொஞ்சம் அரசியல் பழகிக்கொள்வது நல்லது.

ஏனென்றால், அமைதி போனால் அப்புறம் எல்லாம் போச்சு!

*****

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

குமாரசாமிக்குத் தனிமை என்பது ஒரு தீராத வியாதி போலிருந்தது. அந்த நேரத்தில் தான் அவளுடைய மெசேஜ் வந்தது. ஹாய் டியர்.

அந்தப் புரொபைல் பிக்சரில் இருந்த முகம், நிலவை விட அழகாக மற்றும் பில்டர்கள் அதிகமாக இருந்தது. குமாரசாமிக்குத் தூக்கம் பறந்தது. யார் நீங்க? என்று கேட்டார், மேசேஜில்தான்.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க கண்ணைப் பார்த்தாலே நீங்க ரொம்ப நல்லவர்னு தெரியுது. ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சேன், ஆனா பயம், என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது.

குமாரசாமி கண்ணாடி முன்னால் நின்று தன் கண்களைப் பார்த்துக் கொண்டார். அதில் நல்லவர் என்ற வார்த்தை எழுதியிருப்பது போல அவருக்கே ஒரு பிரமை தட்டியது. வலை துல்லியமாக வீசப்பட்டது.

அடுத்த சில வாரங்கள், குமாரசாமியின் காதுகள் போனுக்குக் கீழேயே குத்தகைக்கு விடப்பட்டன. அவள் கொட்டியது அன்பல்ல, அன்பு மழை.

குமாரசாமி தன் சிறுவயது ரகசியங்கள், ஆபீஸ் மேனேஜரைத் திட்டியது, ஏன், தன் வங்கி லாக்கர் பாஸ்வேர்டு தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் அவளிடம் கொட்டித் தீர்த்தார்.

ஒரு நாள் இரவு, போனில் அவளது விக்கல் சத்தம் கேட்டது.

என்ன டியர்? என்றார் குமாரசாமி பதற்றமாக.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். உடனே ஒரு இருபதாயிரம் கட்டணும். அண்ணன் ஊர்ல இல்லை. என்ன பண்றதுன்னே தெரியல, என்றது அந்தப் பெண்ணின் குரல்.

குமாரசாமி யோசிக்கவில்லை. இருபதாயிரம் என்பது ஒரு தேவதையின் அம்மாவுக்குச் செய்யும் கைங்கர்யம் என நினைத்து உடனே ஜிபே செய்தார்.

அடுத்த வாரம் அவள் தம்பிக்குக் காலேஜ் பீஸ். அதற்கு அடுத்த வாரம் அவள் வளர்க்கும் பூனைக்கு ஆப்பரேஷன். இப்படியாக அவள் கேட்கும் போதெல்லாம் குமாரசாமியின் சேமிப்பு மெல்லக் கரைந்து, ஐம்பதாயிரத்தைத் தொட்டது.

நாம ஏன் நேர்ல சந்திக்கக் கூடாது? என்று ஒருநாள் அவர் ஆசையாகக் கேட்டார்.

அவ்வளவுதான். அந்தக் குரல் தேவதை மிரட்ட ஆரம்பித்தாள். நீங்க என்கிட்ட பேசுன ஆடியோவெல்லாம் என்கிட்ட இருக்கு. ஒழுங்கா கேட்ட பணத்தை அனுப்புங்க, இல்லைன்னா உங்க வைஃப்கிட்ட அனுப்பிடுவேன்.

குமாரசாமிக்கு அப்போதுதான் புரிந்தது, தான் இதுவரை பேசியது ஒரு தேவதையிடம் அல்ல, ஒரு கிரிமினல் எடிட்டிங் மென்பொருளிடம் என்று.

நீங்கள் இப்போது குமாரசாமியைப் பார்த்தால், பணம் போச்சு தம்பி, மானமும் போயிடும் போலிருக்கு என்பார் அழுது கொண்டே. மனுஷன் நொந்து நிஜமாகவே நூடுல்ஸ் ஆகி விட்டார்.

குமரசாமிக்கு நேர்ந்தது மற்ற அசாமிகளுக்கும் நேரக் கூடாது என்றால், அதற்கென சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

முன்பின் தெரியாதவர் உங்கள் மீது அன்பு மழை பொழிகிறார் என்றால், அவர் கையில் குடை இல்லை என்று அர்த்தமல்ல, உங்கள் பாக்கெட்டில் ஓட்டை போடப் போகிறார் என்று அர்த்தம்.

ரகசியம் என்பது உங்கள் வாய்க்குள் இருக்கும் வரைதான் வைரம். அது இன்னொருவர் காதுக்குப் போனால் அது உங்கள் கழுத்தை நெரிக்கும் கயிறு.

போனில் கேட்கும் கனிவான பெண் குரலுக்குப் பின்னால், ஒரு தாடி வைத்த ஆசாமி பீடி குடித்துக்கொண்டே உங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்க வாய்ப்பு 99 சதவீதம் இருக்கிறது.

ஹாய் டியர் என்று வரும் மெசேஜ்களுக்குப் பதில் சொல்வதை விட, ராங் நம்பர் என்று சொல்லிவிட்டுத் தூங்குவது உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆரோக்கியமானது.

*****

1 May 2026

ஜாக்கிரதை! ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

ஜாக்கிரதை! ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

இந்தப் பஞ்ச் டயலாக் இப்போது பேஷன். அதுவும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரப் போகும் இந்த நேரத்தில்.

மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இதே கதைதான்.

அமெரிக்காவில் டிரம்ப் சொன்னார், ரஷ்யாவின் புதின் சொன்னார் என்று உலகெங்கும் ஜனநாயகம் குறித்து இதே பஞ்சாயத்துதான்.

பொதுவாக, எதிர்க்கட்சி ஜெயித்தால் நாடு தாங்காது, ஜனநாயகம் செத்து விடும் என ஒரு பீதி கிளப்பப்படுகிறது.

ஆனால் மேட்டரே வேறு. பிளாட்டோவின் ரிபப்ளிக் புத்தகத்தை எடுத்துத் தூசு தட்டிப் பார்த்தால், கிமு 380களில் சாக்ரடீஸ் இதே கவலையைச் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகத்தில் இளவட்டங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து விடுவதாகவும், அதனால் குற்றவாளிகள் தப்பித்து வெளியே சுற்றுவதாகவும், இது தர்ம அடி வாங்கி ஒருநாள் சர்வாதிகாரத்தில்தான் முடியும் என்று அவர் அப்போதே சொல்லி விட்டார்.

ரோம் நகரிலும் இதே கதைதான். வாக்குச்சீட்டில் தில்லுமுல்லு பண்ணி விட்டதாக ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சாகாத ஜனநாயகம், இப்போது மட்டும் ஏன் சாகும்? எப்படிச் சாகும்?

ஜனநாயகம் என்பது ஏதோ வானத்திலிருந்து குதிக்கும் தத்துவம் கிடையாது. அது கல்லாப்பெட்டி சம்பந்தப்பட்டது. உங்களுக்கு இதைக் கேட்டதும் குபீர் என்று இருக்கலாம். வரலாறு அப்படித்தான் சொல்வதாக வரலாற்று ஆசிரியர்கள் க்ளூ கொடுக்கிறார்கள்.

எப்போதெல்லாம் ஒரு நாடு சண்டை போட்டு ஜெயிப்பதை விட, வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் என்று முடிவெடுக்கிறதோ, அப்போது அங்கே ஜனநாயகம் துளிர் விடும். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஜனநாயகத்துக்கும் வியாபாரத்துக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது. இதற்கு நீங்கள் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கத்தான் வேண்டும்.

இதன் லாஜிக் எளிமையானது. ஒரு கடைக்காரருக்கு வருகின்ற கஸ்டமர் கருப்பா, சிவப்பா, எந்தச் சாதி, எந்தக் கடவுளைக் கும்பிடுறார் என்ற கவலை கிடையாது. அவர் கையில் காசு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

இதை ஒரு ஈக்வேஷன் ஆகப் போட்டால், வியாபாரம் = சகிப்புத்தன்மை என்றுதான் போட வேண்டும். அடுத்த ஈக்வேஷன் போட வேண்டுமானால், சகிப்புத்தன்மை = ஜனநாயகம் என்றுதான் போட வேண்டும். அதனால்தான் இந்திய ஜனநாயகம் வாக்குவங்கி வியாபாரமாக இருக்கிறதா என்று கேட்டால், அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் வரலாறே அப்படித்தான் இருக்கிறது.

ஏதென்ஸ், ரோம், அப்புறம் இடைக்கால இத்தாலிய நகரங்கள், இதெல்லாம் செழித்ததற்குக் காரணம் அங்கிருந்த வணிகம்தான். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

ஜனநாயகத்துல ஈக்வாலிட்டி எப்படி வருகிறது? இதற்கும் ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது.

காலையில் ஒரு ஏசி மெக்கானிக் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுறார். அங்கே சர்வ் பண்ணும் பெண் அவருக்கு வேலைக்காரி மாதிரி. அதே பெண் சாயந்திரம் தன் வீட்டு ஏசியைச் சரி பண்ண அந்த மெக்கானிக்கை வேலைக்குக் கூப்பிட்டால், இப்போது மெக்கானிக் வேலைக்காரர். அந்தப் பெண் முதலாளி.

இந்த ரோல் ரிவர்சல்தான் மனிதருக்குள் சமத்துவத்தை உருவாக்குகிறது. காசு இருந்தால் யாரும் யாருக்கும் ராஜா இல்லை, யாரும் யாருக்கும் அடிமை இல்லை.

இப்போது இன்னொருகேள்வி.

படிக்காதவர்கள் கையில் ஓட்டுரிமை இருந்தால் நாடு உருப்படுமா?  ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற அறிஞர்களுக்கு இந்தக் கவலை இருந்தது. புத்திசாலிக்கு இரண்டு ஓட்டு, மற்றவர்களுக்கு ஓர் ஓட்டு என்று இதற்கு ஐடியா கூட கொடுத்தார்கள். அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விசயம்.

ஆனால், நிஜத்தில் ஜனநாயகம் ஏன் உடையாமல் இருக்கிறது என்றால், நமக்கு அரசியல்வாதியை விட அமேசானும், அண்ணாச்சி கடையும்தான் முக்கியம்.

நம் ஊர் ஜனங்களுக்கு ஆசியா கண்டம் மேப்பில் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஓர் எலக்ட்ரீஷியனுக்கு வயரிங் பண்ணத் தெரியும், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கோட் பண்ணத் தெரியும். இதை கம்பரேடிவ் அட்வான்டேஜ் என்கிறார்கள்.

நமக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆளுக்கு ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்தால் போதும், டிரேடிங் மூலமாக வாழ்க்கை ஓடிடும். அதற்கு அரசியல் ரீதியாக ஜனநாயகம் எனும் தத்துவம்தான் வசதி. அதனால் வியாபாரம் செழிக்கும் போது அது ஜனநாயகத்தை விடாமல் பிடித்துக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் என்பது கூட வியாபாரம் பண்ண வந்த பிரிட்டிஷார் வழி கண்டடைந்து மேம்படுத்தப்பட்டதுதானே.

அப்படியானால் ஜனநாயகம் சாகாதா?

அது சாகாது, தற்கொலையும் பண்ணிக் கொள்ளாது, ஆனால், அது கொலை செய்யப்படும்.

எப்போது ஒரு நாடு உற்பத்தியையும், வியாபாரத்தையும் விட்டு விட்டு, யுத்தம்தான் பெரிது என்று கிளம்புதோ அப்போது ஜனநாயகம் அவுட்.

அப்புறம் அதன் அடுத்த வில்லன், சோஷியல் இன்ஜினியரிங்.

கம்பெனிகள் லாபத்தை நோக்கியும், தரத்தை நோக்கியும் ஓடாமல், இத்தனை பேரைச் சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த இனத்தவர்களுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுங்கள், வேற்று இனத்தவரை அனுமதிக்காதீர்கள் என்று அரசியல்வாதிகள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால், அங்கே திறமை அடிபடும். வியாபாரம் நலிவடையும். ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகார மோடுக்கு மாறி விடும்.

ஜனநாயகம் என்பது ஒரு லைவ் அண்ட் லெட் லைவ் கலாச்சாரம். இது அரசாங்கம் நம்மை நல்லவர்களாக மாற்றும் என்று எதிர்பார்க்கும் சிஸ்டம் இல்லை, நம்மை நிம்மதியாகச் சம்பாதிக்க விடும் என்று எதிர்பார்க்கும் சிஸ்டம்.

அரசியல்வாதிகள் மேடையில் என்ன வேண்டுமானாலும் கூச்சலிடட்டும். ஜனநாயகம் போய் விட்டது என்று அலறட்டும். ஆனால், எப்போது வரைக்கும் ஒரு கடைக்காரர் தன் கஸ்டமரை வாடிக்கையாளர் என்பவரே தெய்வம் என்று நினைக்கிறாரோ, எப்போது வரைக்கும் புதுப்புது கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகிறதோ, அப்போது வரைக்கும் ஜனநாயகம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

*****

வாஷிங்டன் தாத்தாவும், டெல்லி மௌனமும் – ஒரு ராஜதந்திர காமெடி!

வாஷிங்டன் தாத்தாவும், டெல்லி மௌனமும் –

ஒரு ராஜதந்திர காமெடி!

உலக அரசியல் இப்போது ஒரு விசித்திரமான கட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து வரும் அறிக்கைகளைப் பார்த்தால், அது ராஜதந்திர உறவா அல்லது ரவுடித் தனமான மிரட்டலா என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் இறையாண்மையை ஒரு சைடு டிஷ் ரேஞ்சுக்கு டிரம்ப் டீல் செய்வதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையை என்னால் அழிக்க முடியும். என்று டிரம்ப் அடிக்கடி சொல்லி வருகிறார். இது ஏதோ ஒரு பள்ளிக்கூடப் பையன் இன்னொரு பையனைப் பார்த்து, உங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை அடி வாங்க வைப்பேன். என்று சொல்வது போலத் தெரிந்தாலும், இதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. 140 கோடி மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு தலைவரை, ஒரு வெளிநாட்டுத் தலைவர் இப்படிப் பேசுவது இந்திய ஜனநாயகத்தையே டம்மி ஆக்கும் முயற்சி.

ஆனால், நம் ஊரில் இதற்கு வரும் ரியாக்‌ஷன்களைப் பார்த்தால், அவர் அப்படித்தான் பேசுவார், அவர் ஒரு செல்லமான கோபக்காரர். என்பது போல ஒரு மென்மையான, வளைந்து கொடுக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. உலக அரங்கில் நாட்டின் கண்ணியம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்டிருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளை டிரம்ப் நரகக் குழிகள் என்று வர்ணித்திருக்கிறார். பல ஆயிரம் காலத்துக் கலாசாரம், ஜனநாயகம், அறிவுத்திறன் எனப் பீற்றிக்கொள்ளும் நம் நாட்டைப் பார்த்து இப்படி ஒரு வர்ணனை வரும்போது, நமக்குக் கோபம் வரவேண்டும். ஆனால், நாம் ஒரு கண்ணியமான ராஜதந்திரக் குறிப்பை அனுப்பிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்.

உண்மையில் தேவைப்படுவது உறுதியான கண்டனம், சாரி கேட்க வைக்கும் அளவுக்கு ஓர் அழுத்தம். ஆனால், நமக்குத்தான் பெரியண்ணன் அமெரிக்காவைக் கண்டால் ஒருவித பயம் கலந்த பக்தி இருக்கிறதே!

இந்தியாவின் எரிபொருள் கொள்கையில் அமெரிக்கா தலையிடுவது உச்சக்கட்டக் கூத்து. ரஷியாவிடம் எண்ணெய் வாங்காதே, என்று உத்தரவு போடுவதும், பிறகு சரி, ஒரு 30 நாளைக்கு மட்டும் வாங்கிக்கோ என்று பர்மிஷன் கொடுப்பதும் என்ன மாதிரியான உறவு?

இந்தியா என்ன வாஷிங்டனிடம் அனுமதி பெற்றுச் செயல்படும் ஒரு கிளை அலுவலகமா? எரிசக்தி பாதுகாப்பு என்பது நம் வீட்டுப் பிரச்சினை. அதில் ஒரு வெளிநாட்டுச் சக்தி கண்டிஷன் போடுவதை அனுமதிப்பது, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை ஒரு நிமிடம் மறந்துவிடுவதற்குச் சமம்.

இன்னொரு பக்கம், பாகிஸ்தானுடனான ராணுவ நடவடிக்கைகளைத் தான்தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் ஒரு கதை விடுகிறார். இது உண்மையோ பொய்யோ, ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு முடிவுகள் வெள்ளை மாளிகையில் எடுக்கப்படுகின்றன என்கிற பிம்பத்தை இது உருவாக்குகிறது.

ஓர் இறையாண்மை கொண்ட நாடு, தன் ராணுவத் தேவைகளைத் தானே தீர்மானிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, அவர் சொன்னார், நாங்க கேட்டோம், என்கிற ரேஞ்சுக்குச் செய்திகள் வருவது நம் சுயாட்சியின் ஆணிவேரையே ஆட்டங்காணச் செய்கிறது.

நட்பு என்பது வேறு, அடிபணிதல் என்பது வேறு. உலக வல்லரசுகளுடன் கைகோர்ப்பது அவசியம்தான், ஆனால் அது சமத்துவமான மேடையில் இருக்க வேண்டும். இல்லை என்று சொல்ல வேண்டிய இடத்தில் உறுதியாகச் சொல்லும் அரசுதான் வலிமையான அரசு.

சுருக்கமாகச் சொன்னால், டிரம்ப் ஒரு பக்கம் தன் இஷ்டத்துக்குப் பந்தை உருட்டி விளையாடுகிறார். நம் பக்கமோ, பந்து நம் கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தாலும் பரவாயில்லை, அவர் நம்ம ஆளுதான், என்று சிரித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு எந்த வல்லரசு நட்பும் நமக்குத் தேவையில்லை. இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் செய்வது, நம் வரலாற்றையே கொச்சைப்படுத்துவதற்குச் சமம்.

டிரம்ப் தாத்தாவுக்கு யாராவது இறையாண்மை என்றால் என்னவென்று ஒரு டிக்‌ஷனரி அனுப்பி வைத்தால் தேவலை!

இந்தியத் தலைவர்களும் அந்த டிக்சனரியில் அதற்கான பொருள் என்னவென்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்வது நல்லது. டிரம்பின் பேச்சுகளைப் பார்க்கும் போது இந்தியத் தலைவர்கள் அதை அடிக்கடி மறந்துவிடுவது போலத் தெரிகிறது.

*****

பார்ட்டியும் பல்ப்பும்!

பார்ட்டியும் பல்ப்பும்!

பரமசிவம் ஒரு காலத்தில் லட்சிய புருஷன். டீக்கடையில் பெஞ்ச் துடைத்தவர், மெல்ல மெல்ல உயர்ந்து பரமு ஹோம் அப்ளையன்சஸ் உரிமையாளர் ஆனார். அவர் கடையில் டிவி வாங்கினால் படம் தெளிவாகத் தெரியும், பீரோ வாங்கினால் திருடன் தொடமாட்டான் என ஊருக்குள் ஒரு நம்பிக்கை.

கனிவாகப் பேசுவார். அவர் பேசுவதைக் கேட்டால், நமக்குக் கட்டில் தேவையில்லை என்றாலும், இவர் பேச்சுக்காக ஒன்றரை டன் ஏசி வாங்கலாம் என்று தோன்றும். வியாபாரம் செழித்தது. பணம் பெட்டியில் நிரம்பியது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அந்தச் சாத்தான் வாட்ஸ்ஆப் வடிவில் வரும் வரை.

பள்ளிக்கூட காலத்து நண்பன் ஒருவன் முளைத்தான். பழைய நண்பர்கள் என்பவர்கள் ஊறுகாய் போன்றவர்கள், அவ்வப்போது தொட்டுக்கொண்டால் ருசிக்கும். ஆனால் பரமு அந்த நண்பனையே மெயின் டிஷ் ஆக்கிக்கொண்டார்.

என்ன பரமு, எப்பப் பார்த்தாலும் கடையிலேயே கிடக்கிற? வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? வாவ் திஸ் இஸ் லைப்! என்று நண்பன் ஒரு பீர் பாட்டிலைத் திறக்க, பரமுவின் புத்தி மெல்ல மழுங்கியது.

பிறகு என்ன, ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது போய், வாரத்தில் ஏழு நாளும் நோ பார்க்கிங் ஆனது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பூட்டிய ஷட்டரைப் பார்த்துவிட்டு, என்னப்பா பரமு கடைக்கு விடுமுறை கொடுத்துட்டாரா, இல்ல கடையையே விடுவித்துட்டாரா? என்று கேட்டுவிட்டு நகர்ந்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் ஷட்டர் நிரந்தரமாக இறங்கியது.

கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வரிசையில் நின்றார்கள். பரமுவின் சொத்துக்கள் ஒவ்வொன்றாக விடைபெற்றன. முதலில் காலி மனை போனது. அடுத்து குடியிருந்த வீடு. கடைசியில் கடையில் மிஞ்சியிருந்த ஒரு உடைந்த மிக்ஸி ஜார் கூடப் போனது.

இப்போது அந்த பழைய நண்பன் இவரிடம் பேசுவதே இல்லை.

எல்லாம் போச்சு தம்பி, என்று யாரைப் பார்த்தாலும் புலம்புகிறார் பரமு, ஒரு பழைய பிளாக் அண்ட் ஒயிட் டிவி போல மங்கலாகப் சிரித்தபடி.

பணத்தைச் சம்பாதிக்கத் தெரிஞ்ச உங்களுக்கு, அதைக் காப்பாத்தத் தெரியலையே சார் என்றால், நண்பன் கூடச் சேர்ந்து ஜாலியா இருக்கும்போது உலகம் அழகா தெரிஞ்சது தம்பி, என்று இளிக்கிறார்.

உண்மைதான். உலகம் அழகாதான் இருந்தது. ஆனால் அவர் பேங்க் பேலன்ஸ்தான் அசிங்கமாகி விட்டிருந்தது.

இதிலிருந்து நாம் உருவிக் கொள்ள வேண்டிய நீதிகளாவன,

பணம் சம்பாதிப்பது என்பது கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிப்பது போல. ஆனால் அந்தப் பணத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல. ஒரு நோ பால் விழுந்தால் மொத்த இன்னிங்ஸும் காலி.

பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. சில பேர் உங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்க வருவார்கள். சில பேர் உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க தட் மீன்ஸ் காலி செய்ய வருவார்கள். பழைய நண்பன் வந்து கதவைத் தட்டும்போது, நினைவுகளை மட்டும் உள்ளே விடுங்கள். கல்லாப் பெட்டிச் சாவியைக் கொடுத்தால், ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சும்.

வாழ்க்கையில் உயரும்போது தடம் மாறாமல் இருப்பது முக்கியம். நீங்கள் மேகத்தில் பறக்கலாம், ஆனால் உங்கள் கடை ஷட்டர் தரையில்தான் இருக்க வேண்டும். சுய ஒழுக்கம் இல்லாதவனின் சொத்து, வெயிலில் வைத்த ஐஸ்கிரீம் போன்றது. அது உருகுவதும் தெரியாது, ஒழுகுவதும் தெரியாது.

சுருக்கமாகச் சொன்னால், மேலே ஏறும் ஏணியில் எண்ணெய் தடவினால், கீழே இறங்கும்போது லிப்டை விட வேகமாக வரலாம். விழிப்போடு இருப்பது முக்கியம்.

*****