பார்ட்டியும் பல்ப்பும்!
பரமசிவம் ஒரு
காலத்தில் லட்சிய புருஷன். டீக்கடையில் பெஞ்ச் துடைத்தவர், மெல்ல மெல்ல உயர்ந்து பரமு
ஹோம் அப்ளையன்சஸ் உரிமையாளர் ஆனார். அவர் கடையில் டிவி வாங்கினால் படம் தெளிவாகத்
தெரியும், பீரோ வாங்கினால் திருடன் தொடமாட்டான் என ஊருக்குள் ஒரு நம்பிக்கை.
கனிவாகப் பேசுவார்.
அவர் பேசுவதைக் கேட்டால், நமக்குக் கட்டில் தேவையில்லை என்றாலும், இவர்
பேச்சுக்காக ஒன்றரை டன் ஏசி வாங்கலாம் என்று தோன்றும். வியாபாரம் செழித்தது. பணம்
பெட்டியில் நிரம்பியது.
எல்லாம்
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அந்தச் சாத்தான் வாட்ஸ்ஆப் வடிவில் வரும் வரை.
பள்ளிக்கூட
காலத்து நண்பன் ஒருவன் முளைத்தான். பழைய நண்பர்கள் என்பவர்கள் ஊறுகாய்
போன்றவர்கள், அவ்வப்போது தொட்டுக்கொண்டால் ருசிக்கும். ஆனால் பரமு அந்த நண்பனையே
மெயின் டிஷ் ஆக்கிக்கொண்டார்.
என்ன பரமு,
எப்பப் பார்த்தாலும் கடையிலேயே கிடக்கிற? வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? வாவ்
திஸ் இஸ் லைப்! என்று நண்பன் ஒரு பீர் பாட்டிலைத் திறக்க, பரமுவின் புத்தி மெல்ல
மழுங்கியது.
பிறகு என்ன,
ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது போய், வாரத்தில் ஏழு நாளும் நோ பார்க்கிங் ஆனது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பூட்டிய ஷட்டரைப் பார்த்துவிட்டு, என்னப்பா பரமு
கடைக்கு விடுமுறை கொடுத்துட்டாரா, இல்ல கடையையே விடுவித்துட்டாரா? என்று
கேட்டுவிட்டு நகர்ந்தார்கள்.
கடைசியில் ஒரு
நாள் ஷட்டர் நிரந்தரமாக இறங்கியது.
கடன்
கொடுத்தவர்கள் எல்லாம் வரிசையில் நின்றார்கள். பரமுவின் சொத்துக்கள் ஒவ்வொன்றாக
விடைபெற்றன. முதலில் காலி மனை போனது. அடுத்து குடியிருந்த வீடு. கடைசியில் கடையில்
மிஞ்சியிருந்த ஒரு உடைந்த மிக்ஸி ஜார் கூடப் போனது.
இப்போது அந்த
பழைய நண்பன் இவரிடம் பேசுவதே இல்லை.
எல்லாம்
போச்சு தம்பி, என்று யாரைப் பார்த்தாலும் புலம்புகிறார் பரமு, ஒரு பழைய பிளாக்
அண்ட் ஒயிட் டிவி போல மங்கலாகப் சிரித்தபடி.
பணத்தைச்
சம்பாதிக்கத் தெரிஞ்ச உங்களுக்கு, அதைக் காப்பாத்தத் தெரியலையே சார் என்றால், நண்பன்
கூடச் சேர்ந்து ஜாலியா இருக்கும்போது உலகம் அழகா தெரிஞ்சது தம்பி, என்று
இளிக்கிறார்.
உண்மைதான்.
உலகம் அழகாதான் இருந்தது. ஆனால் அவர் பேங்க் பேலன்ஸ்தான் அசிங்கமாகி விட்டிருந்தது.
இதிலிருந்து
நாம் உருவிக் கொள்ள வேண்டிய நீதிகளாவன,
பணம்
சம்பாதிப்பது என்பது கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிப்பது போல. ஆனால் அந்தப் பணத்தைத்
தக்கவைத்துக் கொள்வது என்பது டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல. ஒரு நோ பால் விழுந்தால்
மொத்த இன்னிங்ஸும் காலி.
பள்ளிக்கூட
நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. சில பேர் உங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்க
வருவார்கள். சில பேர் உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க தட் மீன்ஸ் காலி செய்ய
வருவார்கள். பழைய நண்பன் வந்து கதவைத் தட்டும்போது, நினைவுகளை மட்டும் உள்ளே
விடுங்கள். கல்லாப் பெட்டிச் சாவியைக் கொடுத்தால், ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சும்.
வாழ்க்கையில்
உயரும்போது தடம் மாறாமல் இருப்பது முக்கியம். நீங்கள் மேகத்தில் பறக்கலாம், ஆனால்
உங்கள் கடை ஷட்டர் தரையில்தான் இருக்க வேண்டும். சுய ஒழுக்கம் இல்லாதவனின் சொத்து,
வெயிலில் வைத்த ஐஸ்கிரீம் போன்றது. அது உருகுவதும் தெரியாது, ஒழுகுவதும் தெரியாது.
சுருக்கமாகச்
சொன்னால், மேலே ஏறும் ஏணியில் எண்ணெய் தடவினால், கீழே இறங்கும்போது லிப்டை விட
வேகமாக வரலாம். விழிப்போடு இருப்பது முக்கியம்.
*****

No comments:
Post a Comment