அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!
மாக்கியவல்லி என்றாலே பலருக்கும் ஒரு அலர்ஜி.
குரூரமானவர், தந்திரக்காரர் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.
ஆனால் பாவம், அவர் ஓர் அனுபவஸ்தர். அவர் வாழ்ந்த
காலத்து இத்தாலியில் நகரங்களுக்கு இடையே ஓயாத அடிதடி, வெட்டுக்குத்து.
பிளாரன்ஸ் குடியரசுக்காக உழைத்த அவரை, கடைசியில்
சித்திரவதை செய்து நாடு கடத்தினார்கள்.
அவர் தி பிரின்ஸ் என்ற புத்தகத்தில் சொன்னது
இதுதான். பரம்பரை ஆட்சியைத் தக்கவைப்பது ரொம்ப ஈஸி. ராஜா கொஞ்சம் விவரமானவராக இருந்தால்
போதும், நாற்காலி பத்திரமாக இருக்கும்.
ஜனநாயகக் குழப்பங்களை விட, ஒரு வலுவான ராஜா
தரும் ஸ்டெபிலிட்டி மேல் அவருக்கு ஒரு தனி காதல் இருந்தது.
அடுத்தது நம் மேத்ஸ் மாஸ்டர் ரெனே டெஸ்கார்ட்ஸ்
பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவர் சொன்ன தத்துவம் என்னவென்றால், உன் நாட்டுச் சட்டத்துக்கு
அடங்கி நட, உன்னை வளர்த்த மதத்தை விட்டுக்கொடுக்காதே.
ஏன் இப்படிச் சொன்னார்?
டெஸ்கார்ட்ஸ் பிறக்கும்போது ஐரோப்பாவே ஒரு
போர்க்களம். கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையே தீராத தர்மயுத்தம்.
எலிசபெத் ராணி தன் சொந்தத் தங்கை மேரியின் தலையை வெட்டுகிறார். ஸ்பெயின் நூறு கப்பல்களோடு
இங்கிலாந்தை அடிக்க வருகிறது.
இப்படியொரு சூழலில் இருந்த ஒருவருக்கு என்ன
பிடிக்கும்?
அமைதிதானே!
அதுதான் அவரது முதல் மாரல் மேக்சிம். ராஜாவுக்கு
அடங்கி நடப்பது என்பது அவருக்கு ஒரு தார்மீகத் தேர்வு. குழப்பத்தை விட ஒரு லெஜிடிமேட்
அதிகாரம் மேல் என்பது அவர் லாஜிக்.
மாண்டெய்ன் என்பவரும் இதையேதான் சொன்னார், ராஜாவின் குணங்களில் முக்கியமானது நீதிதான்.
டெஸ்கார்ட்ஸ் ஒன்றும் சாதாரணப்பட்டவரும் அல்ல.
பிளாட்டோ சொன்ன தத்துவ ஞானி ராஜா வருவார் என்று அவர் நம்பவில்லை. ஏனென்றால், சர்வாதிகாரமும்
முடியாட்சியும் எப்போது வேண்டுமானாலும் வன்முறையைத் தூண்டலாம் என்று அவருக்குத் தெரியும்.
இவற்றையெல்லாம் தொகுத்து லார்ட் ஆக்டன் என்பவர்
ஒரு பஞ்ச் டயலாக் வைத்தார். அது என்னவென்றால், அதிகாரம் கெடுக்கும், முழுமையான அதிகாரம்
முழுமையாகக் கெடுக்கும்.
வரலாற்றைப் புரட்டிப் பாருங்களேன்.
மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் கோடிக்கணக்கானோர்
பலியானார்கள்.
ஸ்டாலினின் ரஷ்யாவில் லட்சக்கணக்கானோர் காணாமல்
போனார்கள்.
ஹிட்லர் யூதர்கள் மேல் நடத்திய அந்தப் பயங்கரத்தில்
அழிந்தவர்கள் பல்லாயிரம்.
ஜனநாயகம் கூட சில சமயம் சொதப்பும்.
1953 இல் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மொசாதிக்கைத் தூக்கிவிட்டு, ஷாவை உட்கார வைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான்.
அதன் விளைவு?
1979 புரட்சி, இன்று வரை தொடரும் மதவாதம்.
தற்போது அமெரிக்கத் தாக்குதல்.
நிற்க, மீண்டும் டெஸ்கார்ட்ஸ்க்கு வருவோம்.
டெஸ்கார்ட்ஸ் தன் நாடான பிரான்ஸை விட்டுவிட்டு
டச்சு குடியரசுக்கு ஓடினார்.
ஏன்?
அங்கேதான் சகிப்புத்தன்மை அதிகம்.
அமைதிக் கனிகளைச் சுவைக்க அவருக்கு ஓர் இடம்
தேவைப்பட்டது. அவர் ஒரு பிராக்டிகல் ஆள். இயற்கை ரகசியங்களை உடைக்க வேண்டும் என்பது
அவர் லட்சியம். அதற்கு அரசியல் அமைதி தேவைப்பட்டது.
அதேசமயம், சில ஒற்றை மனித ஆட்சிகள் உருப்படியாகவும்
இருந்திருக்கின்றன. ரஷ்யாவின் பீட்டர் த கிரேட், சீனாவின் டெங் சியாவோபிங் போன்றவர்கள்
நாட்டை மாற்றினார்கள்.
சில நாடுகளில் பெயரளவுக்கு ராஜா இருந்துகொண்டு
அமைதியைத் தருகிறார்கள் கனடா, ஆஸ்திரேலியா போல.
இன்றைய சூழலைப் பாருங்கள். உக்ரைன் மீது ரஷ்யா
பாய்கிறது, தைவானைச் சீனா முறைக்கிறது, அமெரிக்கத் தேர்தலிலேயே வன்முறை வெடிக்கிறது,
ஈரானை அமெரிக்கா போட்டுப் பொளக்கிறது.
மாக்கிகியவல்லி, மாண்டெய்ன், டெஸ்கார்ட்ஸ்
ஆகிய இவர்கள் மூவரும் சொன்ன ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால்
தத்துவமும் கிடையாது, தலைவனும் கிடையாது.
ஜனநாயகம் முக்கியம்தான், ஆனால் அதற்கு அஸ்திவாரம்
அமைதி. அந்த அமைதியைத் தரும் அதிகாரம் எதுவாக இருந்தாலும், அதற்கு அடங்கி நடப்பது ஒரு
புத்திசாலித்தனமான டிரேட் மார்க்.
என்னதான் தத்துவம் பேசினாலும், டெஸ்கார்ட்ஸ்
போல நாமும் கொஞ்சம் அரசியல் பழகிக்கொள்வது நல்லது.
ஏனென்றால், அமைதி போனால் அப்புறம் எல்லாம்
போச்சு!
*****

No comments:
Post a Comment