2 May 2026

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

குமாரசாமிக்குத் தனிமை என்பது ஒரு தீராத வியாதி போலிருந்தது. அந்த நேரத்தில் தான் அவளுடைய மெசேஜ் வந்தது. ஹாய் டியர்.

அந்தப் புரொபைல் பிக்சரில் இருந்த முகம், நிலவை விட அழகாக மற்றும் பில்டர்கள் அதிகமாக இருந்தது. குமாரசாமிக்குத் தூக்கம் பறந்தது. யார் நீங்க? என்று கேட்டார், மேசேஜில்தான்.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க கண்ணைப் பார்த்தாலே நீங்க ரொம்ப நல்லவர்னு தெரியுது. ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சேன், ஆனா பயம், என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது.

குமாரசாமி கண்ணாடி முன்னால் நின்று தன் கண்களைப் பார்த்துக் கொண்டார். அதில் நல்லவர் என்ற வார்த்தை எழுதியிருப்பது போல அவருக்கே ஒரு பிரமை தட்டியது. வலை துல்லியமாக வீசப்பட்டது.

அடுத்த சில வாரங்கள், குமாரசாமியின் காதுகள் போனுக்குக் கீழேயே குத்தகைக்கு விடப்பட்டன. அவள் கொட்டியது அன்பல்ல, அன்பு மழை.

குமாரசாமி தன் சிறுவயது ரகசியங்கள், ஆபீஸ் மேனேஜரைத் திட்டியது, ஏன், தன் வங்கி லாக்கர் பாஸ்வேர்டு தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் அவளிடம் கொட்டித் தீர்த்தார்.

ஒரு நாள் இரவு, போனில் அவளது விக்கல் சத்தம் கேட்டது.

என்ன டியர்? என்றார் குமாரசாமி பதற்றமாக.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். உடனே ஒரு இருபதாயிரம் கட்டணும். அண்ணன் ஊர்ல இல்லை. என்ன பண்றதுன்னே தெரியல, என்றது அந்தப் பெண்ணின் குரல்.

குமாரசாமி யோசிக்கவில்லை. இருபதாயிரம் என்பது ஒரு தேவதையின் அம்மாவுக்குச் செய்யும் கைங்கர்யம் என நினைத்து உடனே ஜிபே செய்தார்.

அடுத்த வாரம் அவள் தம்பிக்குக் காலேஜ் பீஸ். அதற்கு அடுத்த வாரம் அவள் வளர்க்கும் பூனைக்கு ஆப்பரேஷன். இப்படியாக அவள் கேட்கும் போதெல்லாம் குமாரசாமியின் சேமிப்பு மெல்லக் கரைந்து, ஐம்பதாயிரத்தைத் தொட்டது.

நாம ஏன் நேர்ல சந்திக்கக் கூடாது? என்று ஒருநாள் அவர் ஆசையாகக் கேட்டார்.

அவ்வளவுதான். அந்தக் குரல் தேவதை மிரட்ட ஆரம்பித்தாள். நீங்க என்கிட்ட பேசுன ஆடியோவெல்லாம் என்கிட்ட இருக்கு. ஒழுங்கா கேட்ட பணத்தை அனுப்புங்க, இல்லைன்னா உங்க வைஃப்கிட்ட அனுப்பிடுவேன்.

குமாரசாமிக்கு அப்போதுதான் புரிந்தது, தான் இதுவரை பேசியது ஒரு தேவதையிடம் அல்ல, ஒரு கிரிமினல் எடிட்டிங் மென்பொருளிடம் என்று.

நீங்கள் இப்போது குமாரசாமியைப் பார்த்தால், பணம் போச்சு தம்பி, மானமும் போயிடும் போலிருக்கு என்பார் அழுது கொண்டே. மனுஷன் நொந்து நிஜமாகவே நூடுல்ஸ் ஆகி விட்டார்.

குமரசாமிக்கு நேர்ந்தது மற்ற அசாமிகளுக்கும் நேரக் கூடாது என்றால், அதற்கென சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

முன்பின் தெரியாதவர் உங்கள் மீது அன்பு மழை பொழிகிறார் என்றால், அவர் கையில் குடை இல்லை என்று அர்த்தமல்ல, உங்கள் பாக்கெட்டில் ஓட்டை போடப் போகிறார் என்று அர்த்தம்.

ரகசியம் என்பது உங்கள் வாய்க்குள் இருக்கும் வரைதான் வைரம். அது இன்னொருவர் காதுக்குப் போனால் அது உங்கள் கழுத்தை நெரிக்கும் கயிறு.

போனில் கேட்கும் கனிவான பெண் குரலுக்குப் பின்னால், ஒரு தாடி வைத்த ஆசாமி பீடி குடித்துக்கொண்டே உங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்க வாய்ப்பு 99 சதவீதம் இருக்கிறது.

ஹாய் டியர் என்று வரும் மெசேஜ்களுக்குப் பதில் சொல்வதை விட, ராங் நம்பர் என்று சொல்லிவிட்டுத் தூங்குவது உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆரோக்கியமானது.

*****

No comments:

Post a Comment