24 Jul 2024

உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான உன்னத வழி!

உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான உன்னத வழி!

இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புபவரா நீங்கள்?

அப்படி புலம்புவதற்கு முன்பு உங்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

உங்களையே உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது உலகத்தை எப்படி சட்டென்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்?

முதலில் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆயிற்றா? அடுத்து உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் பொறுமையாகப் புரிந்து கொள்ள முயலுங்கள். அவசரப்பட்டுப் புரிந்து கொள்ள முயன்றால் தவறாகத்தான் புரிந்து கொள்வீர்கள் என்பதற்காகத்தான் இந்தப் பொறுமை.

அதுவும் ஆயிற்றா?

இப்போது உங்களைப் பற்றிப் புரிந்து கொண்டதையும், மற்றவர்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொண்டதையும் கொஞ்சம் மேம்படுத்துங்கள்.

அடுத்தது என்ன என்கிறீர்களா?

மறுபடியும் அதேதான். இன்னும் புரிந்து கொண்டதை மேம்படுத்துங்கள்.

அதற்கு அடுத்து?

மேலும் மேலும் மேம்படுத்திக் கொண்டே செல்லுங்கள்.

இப்போது உங்களுக்கு உலகம் புரியத் தொடங்கும்.

அது இரண்டு விதமாக இருக்கலாம். ஒன்று இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதாகவும் இருக்கலாம். இந்த உலகம் புரிந்து கொள்ளக் கூடியது என்பதாகவும் இருக்கலாம்.

இந்த அனுபவத்திற்குப் பின்பு உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

மேற்கொண்டு சொல்வதற்கு அதில் ஒரே ஒரு விசயம் இருக்கிறது. அதை நீங்கள் சொன்ன பிறகு சொல்கிறேன்.

*****

23 Jul 2024

வாழ்க்கை என்றால் நான்கு விதமாகத்தான் இருக்கும்!

வாழ்க்கை என்றால் நான்கு விதமாகத்தான் இருக்கும்!

வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, நான்கு பேர் நான்கு விதமாகத்தான் சொல்வார்கள் என்பார்கள்.

கடைசியில் நான்கு பேராவது வேண்டும் என்பார்கள். தூக்கிக் கொண்டுப் போய்ப் போட வேண்டுமே அதற்காக. அதற்காகவே நான்கு பேருக்காவது நல்லவராக இருக்க வேண்டும் என்பார்கள்.

வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர்களை நான்கும் தெரிந்தவர்கள் என்பார்கள்.

திசைகள் கூட நான்குதான்.

இந்த நான்கு திசைகளில் எந்தத் திசையில் வேண்டுமானாலும் போகலாம்.

வாழ்க்கை கூட இப்படி நான்கு விதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆமாம் தோழமைகளே!

வாழ்க்கை நான்கு விதமாகப் போய்க் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

முதலாவதாகத் தெரிந்ததிலிருந்து தெரிந்ததற்கே போய்க் கொண்டிருப்பது.

இரண்டாவதாகத் தெரிந்ததலிருந்து தெரியாததற்குப் போய்க் கொண்டிருப்பது.

மூன்றாவதாகத் தெரியாததிலிருந்து தெரிந்ததற்குப் போய்க் கொண்டிருப்பது.

நான்காவதாக தெரியாததிலிருந்து தெரியாததற்கேப் போய்க் கொண்டிருப்பது.

இதில் உங்கள் வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது குறித்துச் சொல்வதற்கு என்னிடம் சில விடயங்கள் இருக்கின்றன.

யாரும் சொன்னால் அது குறித்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

****

22 Jul 2024

கமலஹாசன் எனும் இந்தியன் செய்த கொலைகள்!

கமலஹாசன் எனும் இந்தியன் செய்த கொலைகள்!

ஒரு திரைப்படத்தைத் திரைப்படமாக மட்டும் பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தை மாற்றத்துக்கான கருவியாகப் பார்க்க வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி?

கமலஹாசனைக் கேட்டால் மையமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்வார். காரணம் அவர் ஆரம்பித்த கட்சி அப்படி.

கமலஹாசனின் விருமாண்டி படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் அவர் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பார்.

கமலஹாசனின் தேவர் மகன், சத்யா, மகாநதி போன்ற படங்களை எடுத்துக் கொண்டால், அந்தப் படங்கள் கொலையில் சென்று முடியும். அவருடைய நம்மவர் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கருத்து சொல்வதில் சென்று முடியும்.

கமலஹாசனின் என்று சொல்வதா, ஷங்கரின் என்று சொல்வதா? இந்தியன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் கொலைதான் அந்தப் படத்தின் மையமே.

ஷங்கருக்கு முன்பே கமலஹாசன் இப்படி ஒரு கலாச்சாரத்தை அபூர்வ சகோதரர்கள் படத்தில் பிடித்து விட்டார் என்பது மறைக்க முடியாத உண்மைதானே?

இப்போது நீங்கள் கமலஹாசனை எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?

கமலஹாசனைக் கொலைக்கு ஆதரவானவராகப் புரிந்து கொள்வதா? மரண தண்டனைக்கு எதிரானவராகப் புரிந்து கொள்வதா?

ஊழலை, லஞ்சத்தை ஒழிப்பது என்றால் அதற்கு துணை போகும் அதிகார முறை மற்றும் நிர்வாக முறையைச் சீரமைப்பதா? அதற்காக மனிதர்களை ஒழித்துக் கட்டுவதா? அப்படி ஒழித்துக் கட்டினால் கொள்கைக்காகவே மக்கள் என்றாகிறது அல்லவா? ஆனால் மக்களுக்காகத்தானே கொள்கைகள்.

ஒரு கொள்கையை அமல்படுத்த அல்லது ஒரு சரியான கருத்தை விதைக்க பயமுறுத்தல் ஒன்றே வழி என்பதுதான் ஷங்கரின் நிலைப்பாடு. இந்தியன் திரைப்படத்தில் அந்த நிலைபாட்டுக்குள் கமலஹாசனைப் பொருந்திப் போகச் செய்கிறார். எத்தனை காலம் பயமுறுத்திக் கொண்டே இருப்பீர்கள் கமல்? அதுவும் ஒரு கொலைகார ஹீரோவை உருவாக்கிக் கொண்டே ஷங்கர்?

தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்காக இந்தியன் கொலைகாரனாக மாறினால், அந்தக் கொலையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, தற்காத்துக் கொள்பவர்களும் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ரத்தக் களரியாகி விடாதா? ரத்த ஆறு ஓடாதா?

ஒரு பக்கமாக யோசித்தால் அல்லது ஒரு தலைபட்சமாக யோசித்தால் அல்லது அவசர அவசரமாக ஒரு தீர்வு வேண்டும் என்று யோசித்தால் நாம் ஷங்கரின் வழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அது ஒரு பக்குவமான அமைதியான வழியாக இருக்காது. கொந்தளிப்புகளை உருவாக்கும் ஒரு வழியாகவே இருக்கும்.

நிலைமை இப்போது கைமீறிச் சென்று விட்டது போலத் தோன்றுவதால், அது ஒரு திரைப்பட சுவாரசியம்தான் என்று புறம் தள்ளி விடுவதா?ஷங்கரின் பிரமாண்டத்திற்காகவோ அல்லது கமலஹாசனின் நடிப்பிற்காக அதை ஏற்றுக் கொள்வதா? நிச்சயமாக ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்று மட்டும் இந்த நச்சுத்தனத்தை ஏற்றுக் கொண்டு விட முடியாதுதானே?

எதார்த்தமாகவும் சரி, லட்சியவாதமாகவும் சரி இந்தப் படம் எதற்கும் பொருந்திப் போகாது. எவ்வளவுதான் வர்மக்கலையையோ அல்லது வேறெந்த தற்காப்புக் கலையைக் கற்றாலும் சரிதான் அவ்வளவு சாதுரியமாக உங்களால் கொலைகளைச் செய்து கொண்டு தப்பித்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும் அறுபது, எண்பது, நூறு வயதைக் கடந்த ஒரு மனிதரால்.

லட்சியவாதமாக இப்படிக் கொலைகள் செய்வதை ஏற்றுக் கொண்டால், மக்கள் அரசாங்கத்தையோ, அது உருவாக்கி வைத்திருக்கும் குடிமை அமைப்பு முறையையோ நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாகி விடும். தடியெடுத்தால் தண்டல்காரன் என்கிற முறையை ஆதரிப்பதாக ஆகி விடும். அது இன்னும் கொடூரமான அரசாங்க முறையையும் குடிமை முறையையும் உருவாக்கி விடும்.

எதிலிருந்து மீண்டு நாம் நல்ல குடிமை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதற்கு மாறான கொடூரமான ஆதி காலத்து விலங்குக் கலாச்சாரத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஓர் அபத்தமான கருத்து ஆதிக்கத்தை ஷங்கர் திணிக்க முயல்வதோ, அதற்கு கமலஹாசன் போன்ற அறிவூஜீவியான நடிகர்கள் துணை போவதோ ஆபத்தான போக்காக ஆகாதா?

இந்தியன் – 2 திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதை எடுக்கும் காலத்தே சிலர் இறந்திருக்கிறார்கள். அதற்கான வழக்குகளும் நிவாரணங்களும் நடந்திருக்கின்றன. ஒரு கொலைப்படம் கொலையின் ஊடே எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்வதில் தவறேதும் இருக்கிறதா என்ன? இதைப் பார்க்க சகிக்காமலோ என்னவோ படத்தில் நடித்த சிலரும் படத்தை முடிப்பதற்கு முன்பாக இறந்திருக்கிறார்கள்.

ஏனிந்த கொலைகள்? எதற்கிந்த கொலைகள்? உங்கள் கொலைகள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி விடும் என்றால் நீங்கள் மனிதர்களா? கொடிய விலங்குகளா?

கமலஹாசன்தான் சிந்திக்க வேண்டும். அதைத் தாண்டியும் கமலஹாசன் கொலைதான் வேண்டும் என்றால் நிச்சயம் அவர் கொலை செய்ய வேண்டிய இரண்டு நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் யார் என்றால் இது போன்ற படங்களை எடுக்க நினைக்கும் இயக்குநரும், இப்படி படத்தை எடுக்க துணை போகும் தயாரிப்பாளரும்தான். முதலில் அவர்களின் கதையை முடியுங்கள் கமல். கதையைத்தான் முடிக்கச் சொல்லியிருக்கிறேன், அதற்காக அவர்களை முடித்து விடாதீர்கள். அதை வைத்து இந்தியன் – 4 வந்தாலும் வந்து விடும்.

*****

21 Jul 2024

மக்கள் தொகைக் கட்டுபாட்டுக்கான ரகசிய முறைகள்!

மக்கள் தொகைக் கட்டுபாட்டுக்கான ரகசிய முறைகள்!

சக்தியின் ரகசியம்!

எந்த மட்டைப்பந்து பிரபலம் வந்தாலும் அவர் பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் எனர்ஜி என்கிறார்.

நிஜமாகவே அவருக்கு பூஸ்ட்தான் சக்தியின் ரகசியமா?

அவரை விளம்பரத்துக்காகப் பிடித்துக் கொள்வதுதான் பூஸ்டின் சக்திக்கான ரகசியமா?

இந்த ரகசியத்தைப் பிடித்துக் கொண்டு பூஸ்டைக் குடித்து குடித்து சர்க்கரை நோய் வந்ததுதான் எங்களூர் முருகையன் அண்ணனுக்கு நடந்த ரகசியம்.

அடே கேப்பைக் களி இருந்தா கொண்டாங்கடா என்கிறார் இப்போது முருகையன் அண்ணன். இப்போது சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருப்பதாகச் சொல்லும் முருகையன் அண்ணனின் சக்திக்கான ரகசியம் கேப்பைக் களி. இப்படி உங்களுக்குத் தெரிந்த ரகசியங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான்கு பேருக்கு உபயோகப்படும் அல்லவா!

***

மண்புழுவிடம் தோற்கும் மின்னணு வேகம்

எல்லாவற்றையும் கணினி மயமாக்குகிறேன் என்கிறார்கள். மின்னணு மயமாக்கி விட்டால் காரியங்கள் வேகமாக நடந்து விடும் என்கிறார்கள்.

ஓர் ஆதார் பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புதுப்பிப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். இருபது, முப்பது நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுதான் வேகமாக நடப்பதன் ரகசியம் போலிருக்கிறது.

அதிலும் காரியம் நடக்காமல் 1947க்கு அழைத்துப் புகார் சொல்பவர்கள் அதிகம். 1947இல் நாம் சுதந்திரம் பெறுவதற்காக நாம் இருநூறு ஆண்டுகள் போரடியது வரலாறு. அதே வரலாறு திரும்புகிறது என்ன செய்ய?

போகிற போக்கைப் பார்த்தால் ஆதார் எடுத்தது ஒரு குற்றமா என்று நினைக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

பிறந்த உடன் எவ்வளவு சீக்கிரமாக ஆதார் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா எடுங்கள் என்கிறார்கள். சரிதான் எடுத்தாயிற்று என்றால் ஐந்து வயதுக்கு மேல் கைரேகை மற்றும் கருவிழியைப் பதிவுகளைப் புதுப்பியுங்கள் என்கிறார்கள். சரிதான் செய்தோம் என்றால், அதற்குப் பிறகு பத்து வயதுக்கு மேல் மீண்டும் அதே போன்று புதுப்பியுங்கள் என்கிறார்கள். சரிதான் புதுப்பித்தோம் என்றால், மீண்டும் பதினெட்டு வயதுக்கு மேல் மறுபடியும் புதுப்பியுங்கள் என்கிறார்கள். ஒவ்வொரு முறை புதுப்பிப்பதற்கும் நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் நானூறு ரூபாய் தேவுடா, தேவுடா ஏழுமலை தேவுடாதான். சரிதான், வசூலித்துப் போகட்டும். விரைவாகப் புதுப்பித்தல் நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. காக்க… காக்க… கனகவேல் காக்கத்தான்.

இதற்கெல்லாம் அசராமல் அலைகிறார்கள் பாருங்கள், அந்த இடத்தில்தான் நிற்கிறார்கள் இந்தியப் பெற்றோர்கள். இந்தியப் பெற்றோர்களை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது.

பிறகு இந்தப் புதுப்பித்தல் பணிகள் முடிந்த பிறகு, வங்கிக் கணக்கு, தபால் அலுவலகக் கணக்கு என்று தொடங்க அலைகிறார்கள் பாருங்கள். பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதை விடவும், இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகளின் ஆதாருக்காகவும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்காகவும் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இந்தக் கஷ்டங்கள் இருக்கும் வரை இந்தியப் பெற்றோர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இதிலும் மக்கள் தொகைக் கட்டுபாட்டுக்கான ஏதோ ரகசியம் திட்டம் இருக்கிறது போலும்.

கணினி மயம் என்றால்வேகம்தானே. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் அது அவ்வளவு மெதுவாக இருக்கிறது? அதுவும் மண்புழு, நத்தையிடம் தோற்றுப்போகும் அளவுக்கு.

இதை விட வேகமாகக் கணினி மயமாவதற்கு முன்பாக மனிதர்கள் வேலை பார்த்தார்கள். சில நேரங்களில் யோசித்துப் பார்க்கும் போது பழைய காலமே தேவலாம் போலிருக்கிறது. அவ்வளவு காக்க வைத்து விடுகிறார்கள். அவர்கள் காக்க வைத்து விட்டு, நீங்கள் ஏன் இவ்வளவு மேதுவாக இருக்கிறார்கள் என்று நம்மை கேள்வி கேட்கிறார்கள். நன்றாகக் கேள்வி கேட்கிறார்கள் போங்கள். அதையாவது வேகமாகச் சட்டெனக் கேட்கிறார்களே.

இதை விடவெல்லாம் தாண்டிய இன்னொரு விடயம் இருக்கிறது.

அதாவது அதை விட மோசம், ஒவ்வொராண்டும் பணியாளர்களுக்கு நடக்கும் இடமாறுதல் பணி. முன்பெல்லாம் ஓரிரு வாரங்களுக்குள் முடித்து விடுவார்கள். தற்போது இணைய வழியில்தான் நடத்துவேன் என்று வருடம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கணினி மயமும், மின்னணு மயமும் அந்த வேகத்தில்தான் நடக்கின்றன. அதனோடு ஒப்பிடும் போது ஜிபேயின் வேகம் பல டிரில்லியன் மடங்கு அதிகம். அதன் வேகத்திற்குக் கிட்டவே நெருங்கவே முடியாது.

என்னதான் நாம் மின்னணு மயம், கணினி மயம் என்று மாறினாலும் எல்லாவற்றையும் குழப்பமாக வைத்துக் கொள்வது நமது பழக்கமாகி விட்டது. இந்தக் குழப்பங்களைப் புரிந்து கொண்டு வேகமாக இயங்க நினைத்தால் மின்னணு இயக்கமே தலைசுற்றிக் கீழே விழுந்து மரணித்து விடும். அண்மையில் தென்கொரியாவில் அப்படித்தான் ஒரு ரோபோட் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வந்தது. விரைவில் அப்படி ஒரு நிலைதான் இந்த நாட்டு மின்னணுமயமாக்கலுக்கு நிகழும் என்று நினைக்கிறேன்.

*****

20 Jul 2024

நெடுநாள் நோயாளி ஒரு நாள் வைத்தியன்!

நெடுநாள் நோயாளி ஒரு நாள் வைத்தியன்!

அசரீரியின் குரல் எங்கும் கேட்கும் போல.

அப்படி சமீபத்தில் கேட்ட குரல் ஒன்று.

“ஒரு காலத்தில் ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியனாக இருந்திருக்கிறான்.

பின்னொரு காலத்தில் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியனாக இருந்திருக்கிறான்.

இப்போதிருக்கும் காலத்தில் நெடுநாள் நோயாளியாக இருப்பவனெல்லாம் அரை வைத்தியனாக மாறிக் கொண்டிருக்கிறான்.”

***

எல்லாருக்கும் எல்லாவற்றிருக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

உதாரணத்துக்கு ஒன்று.

எதற்காக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கிறாய்?

இதற்குப் பதிலில்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்வதற்காக.

போங்கடா நீங்களும் உங்கள் பதிலும் என்று சொல்லத் தோன்றுகிறதா? தோன்றினாலும் இந்தப் பதிலை உள்ளூர ரசிக்கிறீர்கள்தானே?

***

இந்தக் காரியக்கார உலகில் எப்படியெல்லாம் தப்பித்துக கொள்ள வேண்டியதாகி இருக்கிறது. கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனைப் போல என்பார்கள் கிராமத்தில். அயே இப்படியே சொல்லலாம்தானே.

முதலை உன்னை பிடித்து விடும் போது

நீயும் ஒரு முதலையாகி விட்டால்

தப்பித்து விடலாம்

ஏதோ முதலை எந்நேரமும் நம்மைப் பிடித்துக் கொண்டுதானே இருக்கிறது. முதலைகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முதலையாகி விடுவதுதான் வழியோ? சரியான முதலைக்கார உலகம். முதலைகளோடு முதலைகளாகி முதலைகளாகச் சண்டையிட்டுக் கொள்ள வேண்டியதுதானோ?!

*****

19 Jul 2024

எதற்கும் ஓர் அளவு!

அவர்கள் விரோதிகள்

அவர்களின் தர்மம் தர்மமே அல்ல

அவர்களின் நியாயமும் நியாயமே அல்ல

அவர்களின் மனப்போக்கே அவர்களின் தர்மமும் நியாயமும்

அவர்கள் எல்லாவற்றையும் வளைக்கப் பார்க்கிறார்கள்

அனைத்தையும் குடை சாய்க்கப் பார்க்கிறார்கள்

அதற்கேற்ப மாறச் சொல்கிறார்கள்

மாறாதவர்களை விரோதிகள் என்கிறார்கள்

*****

எதற்கும் ஓர் அளவு!

எதையும் அவ்வளவு சுலபமாக நிர்ணயித்து விட முடியாது

அகந்தையோ ஆணவமோ ஓரளவு கற்ற திமிரோ

அப்படி நினைக்கத் தூண்டலாம்

அப்படியானால் முயற்சிக்கும் சிந்தனைக்கும்

அப்படிப்பட்ட ஆற்றல் இல்லையா

இருக்கிறது

இந்த உலகில் எல்லாருடைய முயற்சிக்கும் சிந்தனைக்கும்

அப்படிப்பட்ட ஆற்றல் இருக்கிறது

உங்களுடையதற்கும் இருக்கிறது

என்னுடையதற்கும் இருக்கிறது

அது ஓர் அளவோடு இருக்கிறது

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் இடம் இருப்பது போல

உங்களுக்கும் இடம் இருக்கிறது

எனக்கும் இடம் இருக்கிறது

உங்களுக்கு மட்டுமே எனக்கு மட்டுமே

ஒட்டுமொத்த இடமும் இல்லை

*****

18 Jul 2024

ஆட்டோ பசித்தாலும் பிரியாணி தின்னாது!

ஆட்டோ பசித்தாலும் பிரியாணி தின்னாது!

முச்சக்கர வாகனம் (ஆட்டோ – குழந்தைகள் ஓட்டும் டிரைசைக்கிள் அல்ல) ஓட்ட கற்றுக் கொண்டால் சகல திருப்பங்களும் தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

முச்சக்கர வாகனத்தை (ஆட்டோவை) ஏன் தனிநபர் வாகனமாக யாரும் பயன்படுத்துவதில்லை. அது மட்டும் வாடகை வாகனமாகவே இருக்கிறது. ஏதேனும் குடும்பம் கார் வாங்காமல் ஆட்டோ வாங்கி வைத்துப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்? அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரிந்த குடும்பங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

*****

வேலை கேட்டேன். பிரியாணிக் கடைகளைக் கணக்கெடுக்கும் வேலை என்றார்கள். வேலையே வேண்டாம் என்று ஓடி வந்து விட்டேன். இந்தியாவின் மக்கள் தொகைக்கும் பிரியாணிக் கடைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

*****

கூடிய விரைவில் பிரியாணிக் கடைகளை ஓரம் கட்டி விடுமா ஷவர்மா கடைகள்?

*****

நாங்கள் எல்லாம் தக்காளி விலை கிலோ 200க்கு விற்ற போதே பிரியாணி சாப்பிடாமல் தக்காளிச் சோறு சாப்பிட்ட வம்சமப்பா!

*****

புத்தகக் கண்காட்சியில் சமையல் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. யூடியூப்பிலும் சமையல் காணொளிகள் அதிகம் உள்ளன. வீட்டிற்கு வீடு சமையலறை.

*****

பிரியாணிக்கும் வகைகள் இருக்கின்றன. எத்தனை வகை பிரியாணி இருந்தாலும் ஐஸ் பிரியாணி போல வருமா?

ஐஸ் பிரியாணி சரக்கு போன்றது. வயிறு புடைக்க உண்டால் மதுவைத் தாண்டிப் போதை மயக்கத்தையும் தூக்கத்தையும் தர வல்லது. வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் சைடீஸ் போன்றது.

*****

நூடூல்ஸ் சாப்பிடுவதற்காக நகரத்திற்குச் செல்கிறேன். மண்புழு பார்ப்பதற்காகக் கிராமத்திற்குச் செல்கிறேன்.

*****

வெளியே சாப்பிடுவதை விரும்புவதில்லை. காசு ரொம்ப அதிகம்.

*****

துரித உணவகத்தை (பாஸ்ட் புட்) உணவகத்தைப் பார்த்து பார்த்து… இப்போது தேடி தேடிப் பார்க்கிறேன் ஸ்லோ புட் உணவகம் (இதையென்ன மெதுவான உணவகம் என்று சொல்வதா?) எங்குமே இல்லை.

*****

நான் சாப்பாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுவதில்லை. ஏனென்று தெரியுமா? நான் துலக்குகின்ற பற்பசையிலேயே (டூத் பேஸ்ட்) உப்பு இருக்கிறதே. உப்புக்குச் சிக்கனம். நான் ஒரு உப்புச் சிக்கனவாதி.

*****

கரியை (நிலக்கரிதான்) ஏற்றிச் சென்ற சரக்கு தொடர்வண்டிகள். நெல் மூட்டைகளைச் சுமந்து சென்ற சரக்கு தொடர்வண்டிகள். இவற்றைத் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கூட்ஸ் வண்டிகள் என்பார்கள் தமிழ்ப் பெருங்குடி மக்கள். இந்தக் கூட்ஸ் வண்டியைப் பிரபலப்படுத்தும் நோக்கோடு ‘கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு’ என்று தமிழ்த் திரையுலகம் ஒரு திரைப்பாடலை வெளியிட்டு உதவியிருக்கிறது.

மனிதர்களோடு செல்லும் தொடர்வண்டிகள் மற்றும் மனிதர்களே இல்லாமல் (இயக்குநர், பணியாளர்கள் தவிர) சரக்குகளோடு செல்லும் சரக்கு தொடர்வண்டிகள் என்று இந்த இரண்டும் பார்க்க பார்க்க வேறுபட்ட அனுபவத்தைத் தருகின்றன.

அண்மையில் சரக்கு வண்டியின் பின்னால் ஓடும் ஓர் இந்தியக் குடிமகளைக் காண நேர்ந்தது. “ஏன்யா சரக்கு ரயில் பின்னே ஓடுறே?” என்று கேட்ட போது சைடீஸ் கிடைக்காமலா போய் விடும் என்றார் அவர். நல்ல நாடு. நல்ல மக்கள்.

*****

எதிலும் மூழ்கிப் போக விரும்பவில்லை

சில நேரங்களில் மூழ்கிப் போகத்தான் நேரிடுகிறது

சந்தோஷமோ துக்கமோ ஏதோ ஒன்று மூழ்கடித்து விடுகிறது

சுழலில் சிக்கி வெளியே வந்து பார்க்கும் போது

அவ்வளவு மூழ்கியிருக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது

மூழ்கும் போது அப்படி தோன்றுவதில்லை

மூழ்குதல் மூழ்கடித்துக் கொண்டே போகிறது

உங்களுக்கு எப்படியோ?

எனக்கு மட்டும் இப்படி இருக்கிறது?

*****

பேசாத கதை என்றிருக்க முடியுமா? நாம் பேசவில்லை அவ்வளவுதான்.

*****

கலைஞனுக்குச் சமூக பொறுப்பு வேண்டும். சமூகத்திற்கும் கலைஞனைக் காப்பாற்றுகிற பொறுப்பு வேண்டும். பாரதியும் பாவம். புதுமைப்பித்தனும் பாவம். கலைஞனைக் கைவிட்ட சமூகம் அய்யோ என்று போகும் என்று சாபமிட வேண்டுமா என்ன?

*****