மக்கள் தொகைக் கட்டுபாட்டுக்கான ரகசிய முறைகள்!
சக்தியின் ரகசியம்!
எந்த
மட்டைப்பந்து பிரபலம் வந்தாலும் அவர் பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் எனர்ஜி என்கிறார்.
நிஜமாகவே
அவருக்கு பூஸ்ட்தான் சக்தியின் ரகசியமா?
அவரை
விளம்பரத்துக்காகப் பிடித்துக் கொள்வதுதான் பூஸ்டின் சக்திக்கான ரகசியமா?
இந்த
ரகசியத்தைப் பிடித்துக் கொண்டு பூஸ்டைக் குடித்து குடித்து சர்க்கரை நோய் வந்ததுதான்
எங்களூர் முருகையன் அண்ணனுக்கு நடந்த ரகசியம்.
அடே
கேப்பைக் களி இருந்தா கொண்டாங்கடா என்கிறார் இப்போது முருகையன் அண்ணன். இப்போது சர்க்கரை
நோய் கட்டுபாட்டில் இருப்பதாகச் சொல்லும் முருகையன் அண்ணனின் சக்திக்கான ரகசியம் கேப்பைக்
களி. இப்படி உங்களுக்குத் தெரிந்த ரகசியங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான்கு
பேருக்கு உபயோகப்படும் அல்லவா!
***
மண்புழுவிடம் தோற்கும் மின்னணு
வேகம்
எல்லாவற்றையும்
கணினி மயமாக்குகிறேன் என்கிறார்கள். மின்னணு மயமாக்கி விட்டால் காரியங்கள் வேகமாக நடந்து
விடும் என்கிறார்கள்.
ஓர்
ஆதார் பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புதுப்பிப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். இருபது,
முப்பது நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுதான் வேகமாக நடப்பதன் ரகசியம் போலிருக்கிறது.
அதிலும்
காரியம் நடக்காமல் 1947க்கு அழைத்துப் புகார் சொல்பவர்கள் அதிகம். 1947இல் நாம் சுதந்திரம்
பெறுவதற்காக நாம் இருநூறு ஆண்டுகள் போரடியது வரலாறு. அதே வரலாறு திரும்புகிறது என்ன
செய்ய?
போகிற
போக்கைப் பார்த்தால் ஆதார் எடுத்தது ஒரு குற்றமா என்று நினைக்க வைத்து விடுவார்கள்
போலிருக்கிறது.
பிறந்த
உடன் எவ்வளவு சீக்கிரமாக ஆதார் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா எடுங்கள் என்கிறார்கள்.
சரிதான் எடுத்தாயிற்று என்றால் ஐந்து வயதுக்கு மேல் கைரேகை மற்றும் கருவிழியைப் பதிவுகளைப்
புதுப்பியுங்கள் என்கிறார்கள். சரிதான் செய்தோம் என்றால், அதற்குப் பிறகு பத்து வயதுக்கு
மேல் மீண்டும் அதே போன்று புதுப்பியுங்கள் என்கிறார்கள். சரிதான் புதுப்பித்தோம் என்றால்,
மீண்டும் பதினெட்டு வயதுக்கு மேல் மறுபடியும் புதுப்பியுங்கள் என்கிறார்கள். ஒவ்வொரு
முறை புதுப்பிப்பதற்கும் நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
நீங்களே
கணக்குப் போட்டு பாருங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் நானூறு ரூபாய் தேவுடா, தேவுடா ஏழுமலை
தேவுடாதான். சரிதான், வசூலித்துப் போகட்டும். விரைவாகப் புதுப்பித்தல் நடக்கிறதா என்றால்
அதுதான் இல்லை. காக்க… காக்க… கனகவேல் காக்கத்தான்.
இதற்கெல்லாம்
அசராமல் அலைகிறார்கள் பாருங்கள், அந்த இடத்தில்தான் நிற்கிறார்கள் இந்தியப் பெற்றோர்கள்.
இந்தியப் பெற்றோர்களை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது.
பிறகு
இந்தப் புதுப்பித்தல் பணிகள் முடிந்த பிறகு, வங்கிக் கணக்கு, தபால் அலுவலகக் கணக்கு
என்று தொடங்க அலைகிறார்கள் பாருங்கள். பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதை விடவும், இந்தியப்
பெற்றோர்கள் குழந்தைகளின் ஆதாருக்காகவும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்காகவும் அதிகம்
கஷ்டப்படுகிறார்கள். இந்தக் கஷ்டங்கள் இருக்கும் வரை இந்தியப் பெற்றோர்கள் இரண்டு குழந்தைகளுக்கு
மேல் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இதிலும் மக்கள் தொகைக் கட்டுபாட்டுக்கான ஏதோ ரகசியம்
திட்டம் இருக்கிறது போலும்.
கணினி
மயம் என்றால்வேகம்தானே. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் அது அவ்வளவு மெதுவாக இருக்கிறது?
அதுவும் மண்புழு, நத்தையிடம் தோற்றுப்போகும் அளவுக்கு.
இதை
விட வேகமாகக் கணினி மயமாவதற்கு முன்பாக மனிதர்கள் வேலை பார்த்தார்கள். சில நேரங்களில்
யோசித்துப் பார்க்கும் போது பழைய காலமே தேவலாம் போலிருக்கிறது. அவ்வளவு காக்க வைத்து
விடுகிறார்கள். அவர்கள் காக்க வைத்து விட்டு, நீங்கள் ஏன் இவ்வளவு மேதுவாக இருக்கிறார்கள்
என்று நம்மை கேள்வி கேட்கிறார்கள். நன்றாகக் கேள்வி கேட்கிறார்கள் போங்கள். அதையாவது
வேகமாகச் சட்டெனக் கேட்கிறார்களே.
இதை
விடவெல்லாம் தாண்டிய இன்னொரு விடயம் இருக்கிறது.
அதாவது
அதை விட மோசம், ஒவ்வொராண்டும் பணியாளர்களுக்கு நடக்கும் இடமாறுதல் பணி. முன்பெல்லாம்
ஓரிரு வாரங்களுக்குள் முடித்து விடுவார்கள். தற்போது இணைய வழியில்தான் நடத்துவேன் என்று
வருடம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கணினி மயமும், மின்னணு மயமும்
அந்த வேகத்தில்தான் நடக்கின்றன. அதனோடு ஒப்பிடும் போது ஜிபேயின் வேகம் பல டிரில்லியன்
மடங்கு அதிகம். அதன் வேகத்திற்குக் கிட்டவே நெருங்கவே முடியாது.
என்னதான்
நாம் மின்னணு மயம், கணினி மயம் என்று மாறினாலும் எல்லாவற்றையும் குழப்பமாக வைத்துக்
கொள்வது நமது பழக்கமாகி விட்டது. இந்தக் குழப்பங்களைப் புரிந்து கொண்டு வேகமாக இயங்க
நினைத்தால் மின்னணு இயக்கமே தலைசுற்றிக் கீழே விழுந்து மரணித்து விடும். அண்மையில்
தென்கொரியாவில் அப்படித்தான் ஒரு ரோபோட் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி
வந்தது. விரைவில் அப்படி ஒரு நிலைதான் இந்த நாட்டு மின்னணுமயமாக்கலுக்கு நிகழும் என்று
நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment