25 Oct 2026

துப்பாக்கியின் நிழலும் ஒரு மனிதனின் மனபாரமும்

துப்பாக்கியின் நிழலும் ஒரு மனிதனின் மனபாரமும்

வாழ்க்கை சில நேரங்களில் மிக விசித்திரமானது. சிலர் செய்யாத தவறுக்கும், சிலர் எடுக்காத முடிவுகளுக்கும் சிலரைப் பலிகடாவாக்கி வேடிக்கை பார்க்கும் சக்தி வாய்ந்த ஒன்றாகக் காலம் இருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றின் ஆறா வடு. 13 உயிர்கள் பறிபோன அந்தத் துயர நிகழ்வில், பாதுகாப்பிற்குச் சென்ற காவலர்களுக்கு உணவு வழங்கச் சென்ற ஆயுதப்படை காவலர் ராஜாவின் கைகளில் ஏதோ ஒரு சூழலில் துப்பாக்கி ஏந்தப்பட்டது. ஒரு வாகனத்தின் மீது அவர் நின்று கொண்டிருந்த காட்சி, ஒளிப்படக் கருவியின் லென்ஸுக்குள் சிக்கி, சமூக வலைதளங்களின் மாய உலகில் வேகமாகப் பரவியது.

அங்கே தொடங்கியது அவரது அமைதிக்கு அமைக்கப்பட்ட உலை.

சமூக வலைதளங்கள் இப்போதெல்லாம் மிக எளிதாக நீதிபதிகளாக மாறிவிடுகின்றன. எந்தவொரு பின்னணியும் அறியாமல், உண்மை நிலை என்னவென்று ஆராயாமல், நொடிப் பொழுதில் வீசப்படும் கருத்துச் சரங்கள் ஒரு மனிதனின் மனதை எவ்வளவு தூரம் சிதைக்கும் என்பதற்கு காவலர் ராஜாவின் வாழ்வே சாட்சி. அவர் சுடவில்லை, அவர் கரங்களால் எந்தவொரு உயிரும் பறிபோகவில்லை, எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியது.

ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை விட, சமூகத்தின் தவறான பார்வை உருவாக்கிய "மனச்சாட்சி விசாரணை" மிகக் கொடூரமானது. சுடாத துப்பாக்கியை விட, சுடப்பட்ட சொற்கள் சக்தி வாய்ந்தவை.

நீண்ட நாட்களாக அவர் சுமந்த மன உளைச்சல், அவரது குடும்பத்தினரின் வேதனை, உறவினர்களின் பார்வையில் எழுந்த கேள்விகள் என எல்லாமே அவர் மூர்ச்சை அடைந்து, இறுதியில் அவரது உடல்நலனை முடக்கி, உயிரையும் பறித்துவிட்டது. நீதிமன்​றத்தால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும், மனதளவில் அவர் சுமந்த அந்தப் பெருஞ்சுமை அவரை வாழ விடவில்லை.

சொல்லிலும் சொல்லின் சுடரிலும் உள்ளது மனிதனின் வாழ்வு. சுடாத துப்பாக்கியை விட, சுடப்பட்ட வதந்திகளே ஒரு மனிதனைக் கொல்கின்றன.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் பகிரும் ஒவ்வொரு பதிவும், எழுதும் ஒவ்வொரு விமர்சனமும் மற்றொரு மனிதனின் வாழ்வை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஊகங்களின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாக்குவதும், உண்மை தெரியாமல் அடையாளப்படுத்துவதும் அறமல்ல.

காவலர் ராஜாவுக்குக் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் இழந்த அமைதியையும், அவரது குடும்பம் அனுபவித்த மன வேதனையையும் எந்த மரியாதையாலும் ஈடுசெய்ய முடியாது.

நாம் வீசும் சொற்களில் கவனமும், மனிதர்கள் மீதான பரிவும் இல்லாதவரை, இதுபோன்ற மௌனப் பலிகள் தொடரவே செய்யும். உண்மை வெல்லும் என்பது நியதிதான்; ஆனால், அந்த உண்மை வெல்வதற்குள் ஒரு மனிதனின் உயிர் தோற்றுப்போவதுதான் பேரவலம்.

*****

No comments:

Post a Comment