திருவள்ளுவரின் காதல்
சூத்திரங்கள்
சூத்திரம் – 59
ஊரறியும் மௌனம்
"ஏய்! உன்னோட டீம்ல
என்னதான் நடக்குது?"
ஒரு மாதிரி புன்னகைத்துக்
கொண்டே அவளுடைய தோழி மடிக்கணினியின் விசைப்பலகையைத் தட்டினாள்.
"என்னடி
திடீர்னு?"
"இல்லடி. நேத்து
நடந்த ஆன்லைன் மீட்டிங்ல நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது ஆபீஸ் குரூப்ல இருக்கற
எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. மியூட்ல போட மறந்துட்டு நீங்க பேசின அந்த
ரொமான்டிக் சண்டை இருக்கே. அது ஆபீஸ் புல்லா வைரல்!"
அவள் முகம் சட்டென்று
வியர்த்தது. உள்ளுக்குள் ஒரு சின்ன நிலநடுக்கம்.
அவர்கள் காதலிப்பது பரஸ்பரம்
ஒருவருக்கொருவர் தெரியுமா என்ற கடந்த மூன்று மாதங்களாக விடை தெரியாமல் திரிந்து
கொண்டிருந்த கேள்விக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அந்த இணையவழி கூடுகையில்
அவர்களுக்கு விடை கிடைத்துவிட்டது. ஆனால், அது ஒட்டுமொத்த ஆபீசுக்கும்
தெரிந்துவிடும் என்று அவர்கள் இருவரும் கனவிலும் நினைக்கவே இல்லை.
அவனும் சரி, அவளும் சரி
தங்கள் காதலை எங்குமே வெளிக்காட்டியதில்லை. யாரிடமும் சொன்னதும் இல்லை. ஆனால்,
அவர்களது ஒவ்வொரு பார்வையும், சின்ன சின்ன புன்னகைகளும், உடல்மொழிகளும் கூட இப்போது
அலுவலக சிற்றுண்டியகம், வாகன நிறுத்துமிடம் என எல்லா இடங்களிலும் பேசுபொருளாகி
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் வரை கண் காது வைத்து பூதாகரமாக ஊர் உலகத்துக்குத் தெரிய
ஆரம்பித்து விட்டது!
"என் காதலை நான்தான்
யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்தேன். ஆனால், அதுவே இப்போது ஊர் முழுக்கத்
தெருத் தெருவாக, ஒவ்வொருவர் வாயிலும் பரவி மயங்கித் திரிகிறதே!" என்று
இப்போது அவள் மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்.
அவள் பதைபதைப்புடன் தனது
இருக்கையில் இருந்து எழுந்து சிற்றுண்டியகம் வந்தாள். அங்கே அவன் நின்று
கொண்டிருந்தான். அவளது முகம் செர்ரிப் பழம் போலச் சிவந்திருந்தது. சுற்றியிருந்த
சக தோழர்கள் அவர்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவள் அவனைப் பார்த்ததும் லேசாக
நடுங்கினாள். இருவருக்கிடையே இப்போது அந்த மௌனம் மட்டும் இல்லை; ஒட்டுமொத்த
அலுவலகத்தின் பார்வையும் இருந்தது.
அவன் மெலிந்த குரலில்,
"அது வந்து..." என்று மேற்கொண்டு பேச முடியாமல் சொற்களை மென்று
முழுங்கினான்.
அவள் அவனை நேராகப்
பார்த்தாள். அவள் கண்களில் கோபமோ, பயமோ இல்லை; ஆனால், ஒரு குற்றவாளியைப் போலத்
தவிப்பு இருந்தது.
"எல்லாருக்கும்
தெரிஞ்சுடுச்சுடா!" அவள் குரல் நடுங்க தொடர்ந்தாள், "நேத்து நைட்டு நான்
ஏன் உன்கிட்ட அப்படிப் பேசினேன்னு யாருமே புரிஞ்சுக்காம, அவங்கவங்க இஷ்டத்துக்குக்
கதை கட்டிப் பேசிட்டு இருக்காங்க. நம்ம காதலை யாருமே சரியாப் புரிஞ்சுக்கல. ஆனா,
அது ஊர் முழுக்க எப்படியோ கசிஞ்சிடுச்சு!"
அவன் சுற்றும் முற்றும்
பார்த்தான். ஆபீசின் ஒவ்வொரு மூலையிலும் இவர்களைப் பற்றியே பேசிக்கொள்வது
போலிருந்தது.
அவள் தன் கைகளில் முகத்தைப்
பொத்திக் கொண்டாள். அவளது கண்களில் இருந்து வழியும் கண்ணீரை மறைக்க முயன்றாள்.
அவன் தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு அவளுக்கு அருகில் வந்தான். சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும்
கவலைப்படாமல், அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.
"கவலைப்படாதே! இப்படி
நடக்குறது இப்போன்னு இல்ல. இரண்டாயிரம் வருஷமா இப்படித்தான் நடந்துகிட்டு
இருக்கு!" அவனது குரல் உறுதியாக இருந்தது.
"என்னடா சொல்றே
நீ?" அவள் இதயம் தவித்தபடி கேட்டாள்.
"இப்பதான் இங்கே
வர்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இப்படி ஒரு குறளைப் படிச்சேன்.
"அறிகிலார் எல்லாரும் என்றே என்
காமம்
மறுகின் மறுகும்
மருண்டு."
(குறள், 1139)
இந்தச் சூழ்நிலைக்கு அது
அப்படியே பொருந்துது. ஊரு என்ன வேணா பேசட்டும். நாம என்ன நினைச்சோம்னு நமக்குத்
தெரியும்ல? அதை விட வேற என்ன வேணும்?"
அவள் அவனைக் நிமிர்ந்து
பார்த்தாள். அவளது கண்களில் இருந்த திகைப்பு மறைந்து, ஒரு நிம்மதியான புன்னகை
மெலிதாகத் துளிர்த்தது.
அவர்கள் இரண்டு
பேருக்குள்ளும் இருந்த அந்தத் தவிப்பு இப்போது ஊரறிய வெளிப்பட்டு, நிம்மதியான
காதலாக மாறியிருந்தது.
- சூத்திரங்கள்
தொடரும்!
*****

No comments:
Post a Comment