14 Aug 2026

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும் – ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும்

– ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவது எப்படி என்று அரசு மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாகப்பட்டினம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்துப் பெரியவர்கள் ஒரு மாபெரும் தத்துவார்த்தப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனரின் சாரம்சம் இதுதான்.

"கல்யாணம் ஆகாத இளைஞர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம். குடிபோதையில் ரகளை செய்யும் திருமணமானவர்களுக்கு ரூ.5,000 அபராதம். குடிப்பவரைக் காட்டிக் கொடுத்தால் ரூ.2,000 பரிசு!"

இந்த அறிவிப்பைப் பார்த்ததும் எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் சில ஆழ்ந்த தத்துவக் கேள்விகள் எழுவது இயற்கை.

விழுந்தமாவடி பஞ்சாயத்தின் தர்க்கப்படி, மது அருந்துவது என்பது ஏதோ திருமணத்திற்குப் பின் மட்டுமே வழங்கப்படும் ஒரு சிறப்பு உரிமை போலத் தெரிகிறது.

ஓர் இளைஞன் கல்யாணம் ஆகாத வரை அவனது கல்லீரல் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது; கல்யாணம் ஆகிவிட்டால் அது அவன் மனைவிக்கும், தேவைப்பட்டால் பஞ்சாயத்தின் அபராத நிதிக்கும் சொந்தமானது.

"கல்யாணம் ஆகாதவன் எதற்காகக் குடிக்க வேண்டும்? அவனுக்குத்தான் வாழ்க்கையில் இன்னும் சோகங்களே ஆரம்பிக்கவில்லையே!" என்ற கிராமத்துப் பெரியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அடுத்து, திருமணமான குடும்பஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை இன்னும் சுவாரசியமானது.

அவர்கள் குடிக்கக் கூடாது என்று முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; "குடித்துவிட்டு வீட்டிலோ பொது இடத்திலோ ரகளை செய்யக் கூடாது" என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு குடும்பஸ்தன் அமைதியாக, சாதுவாக, யாருக்கும் தொந்தரவு தராமல் தன் வீட்டுக் மூளையில் உட்கார்ந்து குடித்துவிட்டு அமைதியாகத் தூங்கிவிட்டால், அவருக்கு ரூ.5,000 அபராதம் கிடையாது! "குடியுங்கள், ஆனால் நாகரிகமாகக் குடியுங்கள்" என்ற இந்த ஐரோப்பியப் பாணி தாராளமயம் நாகப்பட்டினம் கிராமத்தில் பூத்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

எல்லாவற்றையும் விடப் பிரமாதமான அறிவிப்பு என்னவென்றால், குடிப்பவரைக் காட்டிக் கொடுப்பவருக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை!

இது கிராமப்புறப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மாபெரும் ஸ்டார்ட் அப் யோசனை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இனி கவலையே இல்லை. மாலை நேரங்களில் புதர் மறைவிலும், தென்னந்தோப்புகளிலும் லைவ் ஸ்ட்ரீமிங் கேமராவுடன் உளவு பார்த்தால் போதும்.

நீங்களே கணக்கு போட்டுப் பாருங்களேன். ஒரு பேச்சிலர் குடிப்பதைப் படம் பிடித்துக் கொடுத்தால், தகவல் சொல்பவருக்கு ரூ.2,000 என்றால், பஞ்சாயத்துக்கு நிகர லாபம் ரூ.3,000.

இதில் ஒரே ஒரு நடைமுறைச் சிக்கல் தான் இருக்கிறது. இரண்டு பேச்சிலர்கள் சேர்ந்து, "டேய், இன்று நீ குடி. நான் உன்னைக் காட்டிக் கொடுத்து 2,000 ரூபாய் வாங்குகிறேன். நாளைக்கு நான் குடிக்கிறேன், நீ என்னைக் காட்டிக் கொடு. வந்த காசில் இருவரும் அபராதத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்" என்று ஓர் உடன்படிக்கை அமைத்துவிட்டால், பஞ்சாயத்து என்ன செய்யும் என்பதுதான் தெரியவில்லை.

இன்றைய சரியான முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று பேனரில் எழுதியிருக்கிறார்கள். உண்மைதான்.

டாஸ்மாக் மூலமாக அரசாங்கம் ஈட்டும் வருவாயை விட, ஊர் பஞ்சாயத்து அபராதம் மற்றும் காட்டிக் கொடுக்கும் ஊக்கத்தொகை மூலமாக ஈட்டும் வருவாய் அதிகமாகிவிட்டால், விரைவில் விழுந்தமாவடி தனது சொந்தக் செலவில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தையே அமைத்துவிடும்.

தமிழக அரசு இனி மதுவிலக்கு குறித்து ஆராய எந்தக் குழுவையும் போடாவிட்டாலும் பரவாயில்லை; விழுந்தமாவடி பஞ்சாயத்தாரைக் கூப்பிட்டு ஒரு அரை மணி நேரம் ஆலோசகர் கூட்டம் நடத்தினாலே போதும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்!

*****

No comments:

Post a Comment