22 நிமிடங்களும் 2 உயிர்களும்!
மனிதன்
தன் வாழ்வில் சில காரியங்களைச் செய்கிறான். அதில் பெரும்பாலானவை அவனுக்கே புரிவதில்லை.
தஞ்சாவூருக்குப்
பக்கத்தில் சுந்தரபெருமாள்கோவில் என்றோர் ஊர். ஊரின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது,
பெருமாள் அங்கு சௌக்கியமாகத்தான் இருக்கிறார். ஆனால், மனிதர்களுக்குத்தான் அவசரம்.
அவசரம்
என்றால் சாதாரணமான அவசரம் அல்ல, மூடியிருக்கும் கேட்டைத் தாண்டித் தண்டவாளத்தைக் கடக்கும்
அளவுக்கான அவசரம்.
அன்று
இரவு, நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அந்தியோதயா விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது.
ரயில் வரும்போது கேட் மூடப்படும். இது உலகம் அறிந்த விதி.
ஆனால்,
ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த முதியவருக்கு உலக விதிகளை விட, தன் சொந்த அவசரம் பெரிதாகப்
பட்டிருக்கிறது. மூடியிருந்த கேட்டைக் கடந்து அவர் தண்டவாளத்திற்குள் இறங்கினார்.
அங்கே
ராகுல் என்றோர் இளைஞர் இருந்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். வயது முப்பது. ஆறு
மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. வடக்கிலிருந்து தெற்கிற்குப் பிழைக்க
வந்தவர். அவருக்கு மனிதர்களைக் காப்பாற்றுவது தன் கடமை என்ற எண்ணம் இருந்திருக்கலாம்;
அல்லது ஒர் உயிர் போகிறதே என்ற பதற்றம் இருந்திருக்கலாம்.
ரயில்
மிக அருகில் வந்துவிட்டது.
முதியவர்
தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். ராகுல் எச்சரித்தார். கேட்கவில்லை. உடனே ராகுல் ஓடிச்
சென்று அவரைத் தள்ளிவிட முயன்றார்.
இயற்பியலுக்குக்
கருணை கிடையாது. மணிக்கு எண்பதோ, நூறோ கிலோமீட்டர் வேகத்தில் வரும் பல நூறு டன் இரும்பு,
தர்மத்தையோ, தியாகத்தையோ பார்த்து வேகம் குறைப்பதில்லை.
ரயில்
மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்கள்.
இப்போது
சில கேள்விகள் எஞ்சுகின்றன.
அந்த
முதியவர் யார்? அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாரா, அல்லது வாழ்க்கையைக் கடந்துவிடலாம்
என்று தற்கொலைக்கு வந்தாரா? போலீஸ் விசாரிக்கிறதாம்.
யாரோ
ஒரு முகமறியாத முதியவரைக் காப்பாற்ற, ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமான ஓர் இளைஞன்
தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். உலகம் இதை வீர மரண வரிசையில் சேர்க்கும்; குடும்பத்தினருக்கு
அது ஆறாத துயரம். இந்த விபத்தால் அந்தியோதயா ரெயில் இரவு 11.45 முதல் 12.07 வரை. சரியாக
22 நிமிடங்கள் நின்றிருந்தது. இரண்டு உயிர்கள் முடிவுக்கு வரத் தேவையான நேரம் சில நொடிகள்.
அதனால் ரயில் தாமதமான நேரம் 22 நிமிடங்கள்.
மனித
உயிர்களின் மதிப்பு என்பது என்ன என்ற கேள்வி, அந்த நள்ளிரவு அமைதியில் தண்டவாளத்தின்
ஓரங்களில் சப்தமில்லாமல் மிதந்து கொண்டிருக்கிறது.
*****

No comments:
Post a Comment