15 Aug 2026

கொலைகாரப் பார்வை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 6

கொலைகாரப் பார்வை!

"என் முகத்தைப் பாரேன்டா!" என்றாள் அவள்.

அவன் தன் மொபைல் திரையிலிருந்து கண்களை எடுக்காமல், "பார்த்துட்டேதான் இருக்கேன்டி." என்றான்.

"பொய். நீ ஸ்கிரீனைத்தான் பார்க்குறே. என் முகத்தைப் பார்க்கவே இல்ல."

"பார்க்குறேன்டி"

"அப்படின்னா என்னோட முகத்துல என்ன மாறுதல்னு சொல்லு பாப்போம்?"

அவன் மெல்லத் தலையை நிமிர்த்தினான்.

ஆபத்து என்று அவனது ஆறாம் அறிவு அலறியது.

பெண்கள் "என் முகத்தைப் பார்" என்று சொல்லும்போது, உலகத்தின் எந்தக் கணினியும் தர முடியாத சிக்கலான அல்காரிதம் ஒன்று அங்கே இயங்கிக் கொண்டிருக்கும்.

அவன் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான்.

ஏதோ வித்தியாசம்தான்.

குத்துமதிப்பாக அடித்து விட்டான்.

"ம்ம் ஐப்ரோ ஷேப் பண்ணிருக்க?"

"அப்பாடா! கண்டுபிடிச்சுட்டீயேடா. எப்படி இருக்கு?"

அவள் தையல் மிஷினில் நூல் கோப்பது போலத் தன் புருவங்களை லேசாக உயர்த்திக் காண்பித்தாள்.

வில்லாக வளைந்திருந்தது புருவம்.

அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

"உண்மையைச் சொல்லவா? அந்தப் புருவம் மட்டும் நேரா இருந்திருந்தா, தப்பிச்சிருப்பேன். அது அப்படி வில் மாதிரி வளைஞ்சு, பார்வை எனும் அம்பைச் செலுத்தி என்னைத் தப்பிக்க விடாம கொன்னு போட்டுடுது? "

அவள் புருவத்தை மேலும் உயர்த்தி, "என்னது?" என்றாள்.

"இல்லை. நேத்து நான் கொஞ்சம் லேட்டா வந்தப்ப, நீ என்னை ஒரு பார்வை பார்த்தியே. அப்பாடி! அணுஉலை வெடிச்ச மாதிரி இருந்துச்சு. ஆனா நல்லவேளை, உன் வளைஞ்ச புருவம் ரெண்டும் கொஞ்சம் நேராகி, டேய், பாவம்டா அவன், விட்டுடுனு அந்தப் பார்வை செலுத்தப்  போன  அம்பைத் தடுத்து நிறுத்திடுச்சு. நல்லவேளை தப்பிச்சேன்!"

அவள் சிரிக்க முயன்று, பின் செயற்கையாக முறைத்தாள். "என்னடா நக்கல் பண்றீயா?"

"நக்கல் இல்லைடி. வள்ளுவரே சொல்லியிருக்கார்.

"கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண். "           (குறள், 1086)

அப்படின்னு."

"ஏய் லூசு! நீ எப்படா திருக்குறள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சே."

"உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு லூசானதுக்கு அப்புறம்தான்!"

"ஏய் நிஜமாவா? உண்மையைச் சொல்லுடா!"

"விகடபாரதின்னு ஒருத்தன் திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்ன்னு ஒரு இன்ட்ரெஸ்டிங்கான தொடரைப் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதிகிட்டு இருக்கான். அதுல அப்பைக்கப்போ படிக்குறதுதான்.”

"அது சரி! அதுக்கு என்ன அர்த்தமாம்?"

"உன் புருவம் மட்டும் வளையாம நேரா இருந்தா, உன்னோட கண்கள் காதல் எனும் அம்பைச் செலுத்த முடியாது. அது அப்படி வளைஞ்சு இருக்குறதாலதான் இப்படி அது உன் பார்வை வழியாகக் காதல் அம்புகளைச் செலுத்தி என்னை அப்படியே நடுநடுங்க வைக்குது. சுருக்கமா சொன்னா உன்னோட ஒத்தப் பார்வையிலேயே நான் செத்துப் போய்ட்டேங்றதுதான்.  தயவுபண்ணி உன்னோட புருவத்தை நேரா வெச்சுக்கிறீயா?"

அவள் சில வினாடிகள் அவனை முறைத்துப் பார்த்தாள். அங்கே கோபம் வர முயன்று, தோற்று, ஒரு சிறிய புன்னகையாக உருமாறியது.

அந்த வளைந்த புருவங்கள் லேசாகத் தளர்ந்தன.

"போதும்டா. இனிமே இப்படி அடிக்கடி பிராக்கெட் போடுற வேலையை விட்டுட்டு, ஒழுங்கா நேரத்து வந்து தொலைடா. வீட்டுக்கு லேட்டா போறதால எம் மேல கொஞ்சம் கொஞ்சமா சந்தேகம் விழுதுகிட்டு இருக்குடா!" என்று சொல்லி விட்டு அவள் கிளம்பினாள்.

அவன் மொபைலைச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டு, வள்ளுவருக்கு மனசுக்குள்ளேயே ஒரு கும்பிடு போட்டான். "நல்லவேளை. இன்றைக்கு வள்ளுவரால் தப்பித்தேன், பிழைத்தேன். இனி அவளது அலங்காரத்தைச் சரியாகக் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் கேள்வி கேட்க பதில் படிக்காமல் வந்த மாணவனைப் போல விழித்துக் கொண்டு மாட்டிக் கொள்ள கூடாது." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அந்த நினைப்பின் ஊடே, அவள் கண்களை அப்படியே மனக்கண்ணில் கொண்டு வந்து பார்த்தான்.

அவள் புருவங்கள் எனும் வில் வழியாக, கண்கள் பார்வை எனும் மின்னலைச் செலுத்துவதைப்  போல இருந்தது. அவன் உடல் ஒரு நொடியில் மின்னல் தாக்கியது போல, ஒரு வெட்டு வெட்டி அதிர்ந்து நின்றது.

வள்ளுவன் எனும் உலக மகா காதலன் அவன் நெஞ்சில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment