13 Aug 2026

விழி வழி வைரஸ்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 4

விழி வழி வைரஸ்!

குளிர் சாதன அறையின் சீதளக் காற்று. சுற்றிலும் கருப்புத் திரைகளில் சி++ குறியீடுகளின் பச்சை வெளிச்சம்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையின் முன்னணி மென்பொருள் கம்பெனியின் மென்பொருள் பொறியாளன் அவன். வாட்ஸப் சர்வர் டவுன் ஆனாலும் சரி, ஹேக்கர்கள் நெட்வொர்க்கை ஸ்தம்பிக்க வைத்தாலும் சரி மூளையின் நியூரான்களைத் தட்டி ஒரே நிமிடத்தில் தீர்வு கண்டுவிடும் டெக் ஜீனியஸ். பன்னாட்டு கருத்தரங்குகளில் அவனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமெரிக்க வல்லுநர்கள் வியர்த்துக் கொட்டியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவன், இன்று தன் மானிட்டருக்கு முன்னால் டோட்டல் ப்ரீஸ் ஆகி நின்றிருந்தான்.

காரணம், அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவள்!

அவள் ஆர்கானிக் அமைதி. ஜீன்ஸ், காட்டன் டாப்ஸ். முகத்தில் மேக் அப் என்ற செயற்கை பூச்சுகளின் எந்த சுவடும் இல்லை. மிகவும் எளிமையான, நேர்த்தியான சுடிதாரின் அழகு தேவதை.

அவன் தன் லேப்டாப் ஸ்கிரீனின் ஓரத்தால் அவளைக் கண்களால் ஸ்கேன் செய்தான். அவள் தன் கமாண்ட் லைன்களில் மூழ்கியிருந்தாள். திடீரென நிமிர்ந்து, அவனது கண்களை நேராய்ச் சந்தித்து, "ஹலோ, இந்த கோடுல ஒரு லாஜிக்கல் எரர் வருது கொஞ்சம் செக் பண்றீங்களா?" என்றாள்.

அந்த நொடி.

அவளது அமைதியான விழிகளிலிருந்து பாய்ந்த அந்த ஒரு பார்வை அவனது மூளையின் சிபியூவை ஓவர்ஹீட் ஆக்கி, நெஞ்சுக்குள் 440 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சியது!

பக்கத்தில் வந்த அவனது நண்பன், இவனது விரல்கள் கீபோர்டின் மேல் ஹேங் ஆகி நிற்பதைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

"என்ன மச்சான்? ரஷ்யன் ஹேக்கர்களோட டிடாஸ் அட்டாக்கையே அசால்ட்டா தூக்கிச் சாப்பிடுற நம்ம கூகுள் லெவல் ஜீனியஸ், ஒரு சின்னப் பொண்ணோட க்யூட் பார்வையில மொத்தமா சிஸ்டம் க்ராஷ் ஆகி நிக்கிறான்?"

அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மடிக்கணினியை மூடி வைத்தான்.

"டேய் மச்சான்! நான் எத்தனையோ பக்குகளை கிளீன் பண்ணவன்டா. ஆனா அவளோட பார்வையைப் பாரேன். எந்தக் கெமிக்கலும் இல்லாத நேச்சுரல் ப்ளோ! ஆனா அந்த அமைதியான கண்கள்ல இருந்து வந்த லேசர் பார்வை. என் ஹார்ட்-டிஸ்க்கோட கண்ட்ரோலையே அன்ஆதரைஸ்டா ஹேக் பண்ணிடுச்சுடா!"

நண்பன் தன் தோளைக் குலுக்கிச் சிரித்தான்.

"டேய், இதுக்குத்தான் நம்ம திருவள்ளுவர் அன்னைக்கே ஓர் அல்காரிதம் எழுதி வச்சார். 

"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்."         (குறள், 1084)

பெண்களோட கண்கள் இருக்கே. அதுவும் காதலியோட கண்கள் இருக்கே. அது சாதாரணபட்டது இல்ல. உயிரைப் பறிக்கும் ஆயுதம்!

ஆனா என்ன ஆச்சரியம்னா? இவ்வளவு ஆபத்தான அழகை வச்சுக்கிட்டு, அந்தப் பெண் ரொம்ப வெகுளியா, அப்பாவித்தனமா அமைதியா இருக்குறா இல்ல.

இன்னும் உனக்குப் புரியும்படி உன்னோட பாஷையிலேயே சொல்லணும்னா, அது மிகவும் எளிமையான, ஆபத்தில்லாத ஒரு க்ளீன் யூஸர் இன்டர்பேஸ். ஆனால், அதோட பின்னணியில இயங்குற கோட் இருக்கே அது கம்ப்யூட்டரையே கம்ப்ளீட்டா ஹேக் பண்ணி முடக்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது!

இதுக்கு மேலயும் இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அமைதிங்கிற சர்வர்ல, அழகுங்கிற மால்வேர் லோட் பண்ணி, உன் உயிரையே ஹேக் பண்ற மாய ஆயுதம்டா அது!"

அவள் மீண்டும் ஒருமுறை திரையிலிருந்து நிமிர்ந்து, அவனைப் பார்த்து மிகவும் லேசாகப் புன்னகைத்தாள்.

மென்பொருள் உலகத்தின் சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற அவன், அந்த எளிய பெண்ணின் அமைதியான விழிப் பார்வையில் தன் சோர்ஸ் கோடை மொத்தமாக இழந்து, எந்தப் புகாருமின்றிச் அமைதியானான்!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment