12 Aug 2026

மீண்டும் மீண்டும் எமன்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 3

மீண்டும் மீண்டும் எமன்!

மழையின் சாரலும், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் எஸ்.ஆர்.ஆர் கபேயின் காபி மணமும் கலந்திருந்த அந்தச் சாயங்காலம், அவனுக்கு வழக்கமான ஒன்றல்ல. அவனது இதயத்தின் இயக்கம் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் மாலையாக அது அமையப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவன் தன் நண்பனிடம் தத்துவ மழை பொழிந்துகொண்டிருந்தான்.

"எமதர்மன் எப்படி இருப்பான்? கருப்பான மேனி, தலையில் கிரீடம், கையில் பாசக்கயிறு. இதெல்லாம் சினிமாக்காரன் கிளப்பிவிட்ட பேண்டஸி மச்சி. மரணம்ங்கிறது ரொம்ப சிம்பிள். அது ஒரு கார்டியாக் அரெஸ்ட், இல்லனா பிரேக் பெயிலியர் ஆகி ஓர் ஆக்சிடென்ட். அவ்வளவுதான்!"

அப்போது அவன் மணிக்கட்டில் இருந்த ஆப்பிள் வாட்ச், இதயத் துடிப்பை 72 என்று அமைதியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் சாரல் மழையில் லேசாக நனைந்தபடி, ப்ளோரல் பிரின்ட் காட்டன் புடவையில் உள்ளே நுழைந்தாள் அவள். தோளில் லேப்டாப் பேக், கையில் ஒரு மணி பர்ஸ் என மிக எளிமையாகத்தான் வந்தாள்.

ஆனால், அவளைப் பார்த்ததும் அவனது பேச்சு சட்டென்று நின்றது.

அவள் இவர்கள் இருவரையும் எதிர்கொண்ட போது, தலைதிருப்பி அவனைப் பார்த்தாள்.

அது சாதாரணப் பார்வை அல்ல. மை தீட்டிய அந்தப் பெரிய, கூர்மையான கண்கள். ஒரே ஒரு நொடி அவனை நேருக்கு நேராக ஊடுருவின. அந்த விழிகளுக்குள் ஒரு பேரழகின் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. அதில் வன்முறையில்லை, ஆனால் சுண்டி இழுக்கும் விவரிக்க முடியாத அதிகாரமும் குறும்புச் சிரிப்பும் இருந்தது!

அடுத்த நொடி அவனது மூளை ஹேங் ஆனது. பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே உறைந்தன.

அவன் கை கடிகாரம் திடீரென அதிர்ந்தது. வார்னிங் ஹை ஹார்ட் பீட் டிடெக்டெட் 142 என்று காட்டியது.

அவள் உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகையோடு, அவர்களுக்கு எதிரே இரண்டு மேசை தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் கேட்க, சட்டென்று சர்வர் கொண்டு வந்த மண மணக்கும் அந்தக் கபே காபியைப் பருகத் தொடங்கினாள்.

இப்போது, அவனது நண்பன் தன் காபியை ஒரு சிப் அடித்து விட்டு உரக்கச் சிரித்தான். காதோடு காதாகக் கிசுகிசுப்பாக, "என்னப்பா. எமன்னா என்னன்னு சயின்ஸ் லெக்சர் குடுத்துட்டு இருந்த? இப்போ என்னடான்னா மூச்சு வாங்கறதையே நிறுத்திட்டு செத்துப் போனவன் போல உட்கார்ந்திருக்கிறே?"

எதிரே அவள் அமர்ந்திருந்தாலும், அவன் தன் போனை எடுத்து அவளுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொபைலைத் திறந்தபடி தன் நெஞ்சைத் தடவிக்கொண்டான்.

"டேய், எமன்னு ஒருத்தன் இருக்கான்னு நான் இதுவரைக்கும் புத்தகத்துலதான் படிச்சிருக்கேன். ஆனா அவனுக்கு நிஜமாவே உருவம் இருக்குடா. அதுவும் இவ்ளோ அழகா, ப்ளோரல் பிரின்ட் புடவை கட்டிக்கிட்டு வரும்னு நான் கனவுல கூட யோசிச்சதில்ல! அந்த பெரிய, கருப்பான கண்ணுல என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு. என் நெஞ்சுல யாரோ கடப்பாரையை வச்சுத் தோண்டுன மாதிரி ஆயிடுச்சுடா!"

நண்பன் மீண்டும் சிரித்தான். "அடப்பாவி, வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே,

"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு"            (குறள், 1083)

என்று குறள் எழுதிட்டாருடா. அதுக்கு உன்னை மாதிரி ஒரு காதலில் விழுந்த பையன் இவ்ளோ மாடர்ன் பிராக்கெட் போடுவான்னு அவரு நினைச்சிருக்க மாட்டாரு!"

"அட, வள்ளுவர் என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது மச்சி," என்றான் அவன். "எனக்கு எமன் எப்படி இருப்பான், எப்படி உயிரை எடுப்பான்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா இப்போ தெரியுது. ஒரு பொண்ணோட வசீகரமும், அவளோட அந்த மிடுக்கான, போர்க்களம் போன்ற பெரிய கண்ணும்தான் என் உயிரை அசால்ட்டா தூக்குற எமன்னு! "

காபியைக் குடித்து முடித்த அவள், இவர்களை நோக்கி நடந்தாள். அவனைக் கடக்கும் போது, அதே பேரமர்க் கண்களால் அவனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.

அவன் நண்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

"மச்சி எமன் மறுபடியும் ரீ என்ட்ரிடா. எமன் ஒன்னும் கொடூரமான உருவத்துல வரமாட்டான். பெண்களுக்கே உரித்தான பேரழகோட, ரெண்டு பேரழகான கண்ணால நம்மை மொத்தமா காலி பண்ணத்தான் வருவான். ஆனா, இந்த எமன் கிட்ட உயிரைக் கொடுக்கிறதுல ஒரு தனி சுகம் இருக்குடா!"

ஐந்து ரூபாய் டிப்ஸோடு சர்வருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி விட்டு அவள் கபேயை விட்டுக் கிளம்பி விட்டாள். ஆனால், அவனுக்கோ அவளருகில் அமர்ந்து அவள் காபி குடித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்த நினைவிலேயே அவன் பிரக்ஞையற்றுப் போன சவம் போல அமர்ந்திருந்தான்.

நண்பன் தன் தலையில் அடித்துக் கொண்டு பாதி குடித்த காபி கோப்பையைப் பார்த்தான். இவர்களின் பேச்சைப் பொறுக்க முடியாமல் அதில் ஓர் ஈ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தது. நிஜமாகவே அங்கே எமன் வந்திருக்கத்தான் வேண்டும், அந்த ஈயின் உயிரை எடுக்க.

*****

No comments:

Post a Comment