13 Aug 2026

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

பள்ளி என்பது மனிதர்களை உருவாக்கும் புனிதமான கலைக்கூடம் என்பார்கள். ஆனால், தமிழகத்தின் ஓர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அது சற்றே வேறுவிதமான வேதியியல் பரிசோதனைக்கூடமாக மாறியிருக்கிறது.

அங்கு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும் பீடி புகைத்திருக்கிறார்கள்.

காரணம் மிக எளிது.

மனிதர்களுக்குத் தங்களை உடனே பெரியவர்களாகக் காட்டிக்கொள்வதில் எப்போதும் ஒரு தீராத அவசரமும், ஆபத்தான கவர்ச்சியும் இருக்கிறது.

சிகரெட் என்பது முதலாளித்துவத்தின் அடையாளம் என்றால், பீடி என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சுருக்கமான, மலிவான புகை வடிவம்.

சுவருக்குப் பின்னால் ஒளிந்து நின்று, சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று கண்ணை உருட்டிப் பார்த்துப் புகையை விடுவதில், அந்த 15 வயதில் ஒரு சர்வதேசப் புரட்சி செய்த திருப்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு அந்தப் புரட்சி மனப்பான்மை புரியவில்லை. அவர் வழக்கமான இந்தியப் பண்பாட்டின் பிரதிநிதி. உடனே பெற்றோரைக் வரவழைத்தார். "உங்கள் பிள்ளைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று கூறி விட்டார்.

பெற்றோர்கள், வழக்கம் போலப் பிள்ளைகள் செய்த தவறுக்காக, தாங்களே தவறு செய்தது போல வருத்தம் தெரிவித்துப் பிள்ளைகளை மீட்டுச் சென்றார்கள்.

பிரச்சினையே அங்கிருந்துதான் தொடங்குகியது.

தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை விட, "சே! நம்ம ரகசியம் இப்படி அசிங்கமாக அம்பலமாகி விட்டதே!" என்ற தன்முனைப்பு அந்த மாணவிகளை அதிகம் வாட்டியிருக்கிறது. சுயமதிப்பு போன கவலையில் மாணவிகள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அடுத்த நாள், ஒரு மாணவி தன் தந்தையின் ரத்த அழுத்தத்திற்குப் போடும் பிபி மாத்திரைகளைக் கொண்டுவந்தார். அப்பாவுக்கு பிபி ஏறும்போதெல்லாம் போடும் மாத்திரை அது.

"வாழ்க்கையே போயிற்று, இனி வாழவே கூடாது" என்று முடிவெடுத்த அந்த மூன்று மாணவிகளும், அதை ஏதோ சாக்லேட் சாப்பிடுவது போல அளவுக்கு அதிகமாக அள்ளிச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரையானது வாழ்க்கையின் அழுத்தத்தைக் குறைத்து, தங்களை நேராக மேலோகத்திற்கு அனுப்பிவிடும் என்று அவர்கள் நம்பியிருக்கக் கூடும்.

அடுத்த சில நிமிடங்களில் தலைச்சுற்றல், மயக்கம். "நாங்கள் பிபி மாத்திரை சாப்பிட்டோம்" என்று பெருமையாக மற்ற மாணவிகளிடம் சொன்ன பிறகுதான், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பிபி ஏறியது.

பதறிப்போன ஆசிரியர்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்குத் தூக்கி ஓடியிருக்கிறார்கள். அங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரி வரை ஆம்புலன்ஸ் சத்தங்கள் அலறத் தொடங்கியிருக்கின்றன.

மருத்துவமனையில் இப்போது தீவிர சிகிச்சை நடக்கிறது. மாணவிகள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். ஆனால், "குழந்தைகளை எப்படி வளர்ப்பது?" என்ற கேள்வியிலிருந்து இந்தச் சமூகமும், குடும்பங்களும், பள்ளிகளும் எப்படிப் பிழைத்துக் கொள்ளப் போகின்றன என்பதுதான் தெரியவில்லை!

*****

No comments:

Post a Comment