திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 2
பார்த்தான் செத்தான்!
திட்டசேரி கிராமத்தின் வள்ளியமூர்த்தி
கோயிலுக்குப் பின்னால் ஒரு பர்லாங் தூரத்தில் அடர்ந்த தூங்குமூஞ்சி மரம் நிழலாகப் படர்ந்திருந்தது.
ஊருக்குள் அவன்தான் சாமியாடி. கையில் எந்நேரமும் ஒரு பழைய சுவடியும், சுடுகாட்டுச்
சாம்பலும் வைத்துக்கொண்டு, சுடுகாட்டுப் பாதையிலேயே திரிபவன்.
அன்று இரவு வள்ளியமூர்த்தி கோயிலின்
சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம், ஊர்ப் பூசாரி பழனி ஓடோடி வந்தான்.
"சாமியாடி! அந்த ஒண்டி வீட்டுப்
பயலுக்கு என்னவோ ஆயிடுச்சுடா! சாயங்காலம் வெண்ணாற்றங்கரை பக்கம் போயிட்டு வந்தவன்,
திடீர்னு தூக்கித் தூக்கிப் போடுறான். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டுத் தவிக்கிறான்! எந்தப்
பேய் பிடிச்சதுனே தெரியல. கொஞ்சம் வந்து பாருடா!" என்று கதறினான்.
சாமியாடி லேசாகச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் சுடுகாட்டுப் புகையின் வாடை அடித்தது. அமைதியாக எழுந்து, ஒண்டி வீட்டுப்
பயலின் வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டுக்குள்ளே ஒண்டி வீட்டுப்
பயல் சுவரோரம் சாய்ந்து கிடந்தான். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் எதையோ
பார்த்து வெறித்துக் கொண்டிருந்தன.
சாமியாடி அவனருகே சென்று, அவன்
நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இல்லை. கைநாடியைப் பிடித்தான். வேகம் சீராக
இல்லை; எகிறிக் கொண்டிருந்தது.
"டேய் பயலே! உன்னை எந்தப்
பேய் பிடிச்சது? மோகினியா? மாடத்தியா? காட்டேரியா? இசக்கியா? நீலியா? எங்கே, என்ன நடந்துச்சு
சொல்லு?" என்றான் சாமியாடி, குரலில் ஒரு விசித்திரமான ஈர்ப்புடன்.
ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகக்
வாய்திறந்தான். குரல் நடுங்கியது:
"ஆத்தங்கரையில தெக்குட்டுப்
பொண்ணு தண்ணி எடுக்க வந்தா. நான் மரத்தோட மரமா நின்னு அவளைப் பார்த்தேன். அவளும் திடீர்னு
திரும்பி என்னைப் பார்த்தா. நானும் தெகிரியமா நேருக்கு நேரா பார்த்தேன். அவ்ளோதான்."
"அப்புறம்?"
"அவ பார்வை சாதாரணப் பார்வை
இல்லை சாமியாடி! இந்திய ராணுவம் பாகிஸ்தான் மேல பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு! என் உயிரே
போயிடும் போல இருக்கு சாமியாடி!"
சாமியாடி கலகலவெனச் சிரித்தான்.
"அடலூசுப் பய மவனே! உன்னைப் பிடிச்சது எந்தப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. வள்ளுவன்
ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எழுதி வச்ச காதல் பேய் உன்னைப் பிடிச்சிருக்கு!"
பழனி பூசாரி குழப்பத்துடன்,
"என்னடா சொல்ற?" என்றான்.
சாமியாடி தன் சுவடியைத் திறந்தான்.
அங்கே எழுதப்பட்டிருந்ததைக் காட்டினான்.
"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து" (குறள், 1082)
"இதோட அர்த்தம் என்ன தெரியுமாடா
பழனி?" என்றான் சாமியாடி.
பழனி திருதிருவென விழித்தான்.
"இவன் அவளைப் பார்த்தான்.
அவளும் இவனைத் திரும்பிப் பார்த்தா. அப்படி இரண்டு பார்வைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட
அந்த ஒரே ஒரு நொடி ஒரு பெரிய போர்க்களமே உண்டாயிடுச்சுடா."
ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகத்
தலையை உயர்த்தினான். "அப்போ எனக்குப் பேய் பிடிக்கலையா சாமியாடி?"
"பிடிச்சிருக்குடா. ஆனா
இது வேப்பிலை அடிச்சா போற பேய் இல்லை. அந்தப் தெக்குட்டுப் பொண்ணு கையால ஒரு பிடி திருநீறு
வாங்கிப் பூசினா மட்டுமே தீருற காதல் பேய்!" என்றான் சாமியாடி.
ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகச்
சிரித்தான். அவன் நெஞ்சு படபடப்பு அடங்கி, முகத்தில் ஒரு புதிய வெளிச்சம் பரவியது.
சாமியாடி தன் சாம்பல் பையை இடுப்பில்
முடிந்துகொண்டு, மீண்டும் அந்த இருட்டுப் பாதையை நோக்கித் தனியாக நடந்து மறைந்தான்.
-
சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment