9 Aug 2026

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

நிகழ்காலம் என்பது நேர்மையானது. அது உங்களை அறைந்தால் வலிக்கும், அவ்வளவுதான். ஆனால், எதிர்காலம் என்பது ஒரு மறைமுகத் தாக்குதல். அது நிழல் யுத்தம் நடத்துகிறது.

ஒரு துயரம் உண்மையில் நிகழும்போது, அதைச் சமாளிக்க நம்மிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது நிகழ்வதற்கு முன்பு இருக்கும் அந்த இடைவெளியில், நம் மூளை ஒரு மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் போல இயங்கத் தொடங்குகிறது.

நிஜத்தில் நீங்கள் ஒருமுறைதான் சாவீர்கள். ஆனால் அச்சத்தில், சாவதற்கான ஒத்திகையைத் தினமும் ஐந்து முறை பார்த்துப் பழகுகிறீர்கள்.

மனித மூளைக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று கற்பனை செய்தால், அப்படியெல்லாம் நடக்காது என்று தர்க்கம் பேசும். ஆனால், ஒரு கெட்ட விஷயம் நடக்கும் என்று நினைத்தால், அதற்கு மட்டும் பிஹெச்டி தரத்தில் கிராபிக்ஸ் போட்டு விரிவாகக் காட்டும்.

ஒரு காய்ச்சல் வந்தால் அது கொரோனாவாக இருக்குமோ?

ஒரு போன் கால் எடுக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு விபத்து நடந்திருக்குமோ?

இந்தக் கேள்விகள்தான் நம்மைத் தின்கின்றனவே தவிர, வந்தக் காய்ச்சல் அல்ல, நடக்காத விபத்தும் அல்ல.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பயம் என்பது ஒரு நஷ்டமான வியாபாரம். நடக்காத ஒரு விஷயத்திற்காக, இப்போதிருக்கும் அமைதியை வட்டியாகக் கட்டிக் கொண்டிருப்பது போன்றது.

ஒரு நிகழ்வு என்பது பத்தில் ஒரு பங்கு வலி என்றால், அதைப் பற்றிய அச்சம் என்பது பத்தில் ஒன்பது பங்கு அதிகப்படியான வட்டி.

வேலையற்ற மூளை பிசாசின் கூடாரம் அல்ல, அது ஓர் இன்சூரன்ஸ் ஏஜென்டின் அலுவலகம். எப்போதும் இல்லாத ஆபத்துகளுக்கு பிரீமியம் கட்டச் சொல்லும்.

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் நம் பயமோ, சுவர் இடிந்து விழுந்தால் சித்திரம் என்னவாகும்? என்று நினைத்து, சித்திரமே வரையாமல் சுவரைப் பிடித்துக்கொண்டு அழுவதாகும்.

துன்பம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவன் ஞானி. துன்பமே வராது என்று இருப்பவன் முட்டாள். ஆனால், துன்பம் வந்து விடுமோ என்று இப்போதே அழுதுகொண்டிருப்பவன் ஒரு சராசரி மனிதன்.

நிகழ்வுகள் நம்மைத் தற்காலிகமாகக் காயப்படுத்துகின்றன. ஆனால் அச்சமோ, நம்மை உயிருடன் இருக்கும்போதே பதப்படுத்தப்பட்ட பிணமாக மாற்றி விடுகிறது. எனவே, எதற்கும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால், நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்களோ, அதை விட மோசமான ஒன்றுதான் நிஜத்தில் நடக்கப்போகிறது.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத விபத்து. இதில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு படுக்கையறையில் அமர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பயம் என்பது ஒரு குடை போன்றது. மழை பெய்யாதபோதும் அதைப் பிடித்துக்கொண்டு நடப்பவனைப் பார்த்து மேகங்கள் சிரிப்பதில் ஆச்சரியமே இல்லை.

எனவே, கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை, உங்கள் முகத்தின் பொலிவு மாறுவதைத் தவிர!

*****

No comments:

Post a Comment