ஆயிரம் ரூபாயும், மனிதனின் பேராசையும்!
பிரபஞ்சத்தின்
ஆகப்பெரிய இயற்பியல் விதி என்னவென்றால், ஈர்ப்பு விசைக்கு அடுத்தபடியாக மனிதனை வேகமாக
இழுப்பது டிஸ்கவுண்ட் என்ற மாய வார்த்தைதான். கடவுள் உலகத்தைப் படைத்தபோது மனித மூளையின்
ஓர் ஓரத்தில் மலிவு விலை என்றொரு பலவீனமான நரம்பை வைத்து தைத்துவிட்டார் போலும்.
சமீபத்தில்
ஒரு நாள், படுக்கையில் படுத்துக் கொண்டு பேஸ்புக்கில் விரலால் உலகை அளந்து கொண்டிருந்தான்
ரங்கநாதன். அப்போதுதான் அந்தப் பிரம்மாண்டமான ஆன்மீகத் தரிசனம் அவன் கண்முன்னே தோன்றியது.
ஒரு
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் லோகோவுடன் ஒரு விளம்பரம்.
இருபதாயிரம்
மதிப்புள்ள ஒரு 5ஜி செல்போன் இரண்டாயிரம் ரூபாய். அதிலும் ஐம்பது சதவீதம் டிஸ்கவுண்ட்.
ஆக விலை ஆயிரம் ரூபாய்.
தத்துவார்த்தமாக
யோசித்துப் பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு தரமான ஒரு பட்டன் செல்
கூட வாங்க முடியாது. ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைல் என்றால், ரங்கநாதனின் பகுத்தறிவு
அவன் தொண்டையைக் கவ்வி, இது பொய் என்று கத்தியது. ஆனால், கண்களில் தெரிந்த பேராசையின்
எச்சில், பகுத்தறிவின் முகத்தில் காறி உமிழ்ந்தது.
கேஷ்
ஆன் டெலிவரி இருக்கிறதா என்று தேடினான் ரங்காநதன். இல்லை. பணத்தை இப்போதே கொடு, சொர்க்கத்தை
அப்புறம் பார், என்றது அந்த இணையப்பக்கம். அவசர அவசரமாக தன் கிரெடிட் கார்டு எண்களைத்
தட்டினான். ஆயிரம் ரூபாய் அவன் கணக்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டது.
மூன்று
நாட்கள் கடந்தன. பிரபஞ்சம் அசையாமல் இருந்தது. அவன் வீட்டு வாசலில் எந்தப் பார்சலும்
வந்து விழவில்லை.
பொறுமையிழந்து,
அந்தப் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் அசல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டான்.
வணக்கம்
சார், என் ஆயிரம் ரூபாய் 5ஜி மொபைல் எங்கே? என்றான் ரங்கநாதன்.
ஆயிரம்
ரூபாய்க்கு 5ஜி மொபைலா என்று வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, கணினியைத் தட்டிய
அந்தப் பெண்மணி, மன்னிக்கவும் சார், உங்கள் முகவரியிலோ, உங்கள் பெயரிலோ கடந்த நூறு
ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தில் எந்த ஆர்டரும் பதிவு செய்யப்படவில்லை, என்றார் மிகக்
குளிர்ந்த குரலில்.
ரங்காதன்
அதிர்ந்தான். அவன் ஆர்டர் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும், பணம் அனுப்பிய ரசீதையும்
அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினான்.
மறுமுனையில்
ஒரு பெருமூச்சு கேட்டது.
சார்,
இது எங்களுடைய இணையதளமே இல்லை. இது ஒரு நிழல் உலகப் பக்கம். சமூக வலைத்தளங்களில் எங்கள்
முகமூடியைப் போட்டுக்கொண்டு சிலர் உங்களைப் போன்ற அப்பாவிகளின் மன்னிக்கவும், பேராசைக்காரர்களின்
பணத்தைப் பறிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக எங்கள் அசல் தளத்திற்கு வந்து
வாங்குங்கள். பேஸ்புக் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று ரங்கநாதனுக்கு இலவசமாக
ஒரு தத்துவ வகுப்பெடுத்தார்.
அப்போதுதான்
ரங்கநாதனுக்குப் புரிந்தது. அவேன் வாங்கியது ஒரு டிஜிட்டல் கானல் நீர்.
மார்க்
ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் உலகம் என்பது ஒரு நவீன மாயா பஜார். அங்கே ஆயிரம் ரூபாய்க்கு
5ஜி மொபைலும் கிடைக்கும், ஐந்து பைசாவிற்குத் தாஜ்மஹாலும் கிடைக்கும். ஆனால், எல்லாம்
உங்கள் பணம் கணக்கிலிருந்து கழியும் வரை மட்டும்தான்.
ஆசையைத்
தூண்டும் விளம்பரங்களைப் பார்த்ததும் உமிழ்நீர் சுரக்கக் கூடிய ரங்கநாதன் போன்ற மக்களே,
எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அந்த உமிழ்நீரின் விலை சில சமயம் ஆயிரம் ரூபாயாக
இருக்கலாம், சில சமயம் உங்கள் வங்கித் கணக்கின் மொத்த இருப்பாகவும் இருக்கலாம்.
இப்போது
ரங்கநாதன் இருபதாயிரம் ரூபாய்க்குக் கடையிலிருந்து 5ஜி மொபைல் வாங்கி கடலை பேட்டுக் கொண்டிருக்கிறான். இதன் சுவை
கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. பேராசையின் சுவை எப்போதும் அப்படித்தான் போலும்!
*****

No comments:
Post a Comment