நண்டுகளின் கூடாரமும், கார்ப்பரேட் தர்மமும்
மனிதன்
கல்வி கற்பதன் நோக்கம் தன்னை மேம்படுத்திக் கொள்வது என்று பழைய புத்தகங்கள் சொல்கின்றன.
ஆனால், நடைமுறையில் அவன் கல்வி கற்பதன் நோக்கம் எப்படியாவது ஓர் ஏசி அறையில் அமர்ந்து
கொண்டு, சக மனிதனை விட நான்கு ரூபாய் அதிகமாகச் சம்பாதிப்பது மட்டுமே.
ஒரு
நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் பலரும் நினைப்பது, "நாம் நம் வேலையைச் செய்ய
வந்திருக்கிறோம்" என்று.
என்னவொரு
அறியாமை! நீங்கள் அங்கே வேலை செய்ய வரவில்லை; சக ஊழியர்களைக் கண்காணித்து, அவர்களை
விட நீங்கள் எப்படி மேலானவர் என்று முதலாளிக்குக் காட்ட வந்திருக்கிறீர்கள்.
நவீன
மேலாண்மை இதற்கு அலுவலக அரசியல் என்று நாகரிகமாகப் பெயரிட்டிருக்கிறது. அடிப்படையில்,
இது ஒரே குடுவைக்குள் இருக்கும் நண்டுகள் ஒன்றை ஒன்று கீழே இழுத்துக்கொள்ளும் ஓர் ஆதிவாசித்
திருவிழா.
தன்
தகுதியை வளர்த்துக் கொண்டு நேர்மையாக முன்னேறுவது என்பது மிகவும் போரடிக்கக்கூடிய விஷயம்.
அதற்குப் பதிலாக, பக்கத்து சீட்டில் இருப்பவனின் வேலையைக் கெடுத்து, அவன் மீது இல்லாத
பழி சுமத்தி, வேலையைக் காலி செய்வது எளிதான குறுக்குவழி! இப்போது போட்டிக்கு ஆளில்லை.
ஸோ, ஸ்ட்ரெய்ட் புரோமோஷன்.
பல உளவியல்
ஆய்வுகள் பணியிட மன அழுத்தத்தை ஒரு பெரிய நோய் என்று சொல்கின்றன. டெலாய்ட், லிங்க்ட்இன்
போன்ற நிறுவனங்கள் "அலுவலகச் சூழல் பிடிக்காமல் தான் ஊழியர்கள் ஓடிப் போகிறார்கள்"
என்று தரவுகளுடன் அழுகின்றன.
தகவல்
தொழில்நுட்பத் துறையிலும் ஸ்டார்ட் அப்களிலும் ஏற்கனவே டார்கெட் என்ற பெயரில் சாட்டையடி
வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதல் லே ஆப் பயம் வேறு. போதாதற்கு இந்த அலுவலக அரசியல்
கூத்தும் சேரும்போது, அலுவலகம் என்பது ஒரு சொகுசான நரகம் ஆகிவிடுகிறது.
இந்த
அறம் சார்ந்த சவால்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே காரணமல்ல; நம்முடைய கல்வி
முறையும் ஒரு முக்கியக் குற்றவாளி.
பள்ளியிலும்
கல்லூரியிலும் ஒருவனுக்கு முதலிடம் வர வேண்டும் என்று சொல்லித் தருகிறார்களே தவிர,
பக்கத்து மனிதனுடன் எப்படி இணைந்து வாழ்வது என்று சொல்லித் தருவதே இல்லை.
ரேஸ்
குதிரைகளாக வளர்க்கப்படும் பிள்ளைகள், ஆபீஸிற்குள் வந்தவுடன் சக ஊழியர்களையும் எதிரிக்
குதிரைகளாகவே பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி அங்கே அன்புநெறி, அறநெறி வளரும்?
நேர்மையாக
வேலை செய்யும் அப்பாவிகள் தங்களின் திறமை அங்கீகரிக்கப்படாமல், கடும் விரக்தியில் ஒரு
நாள் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒரு நல்ல ஊழியனை இழப்பது நிறுவனத்திற்கு
நஷ்டம் என்று கணக்குத் தெரிந்த முதலாளிகளுக்குப் புரிகிறது. ஆனால், அதைத் தடுக்கும்
சிஸ்டம் இன்னும் காகிதப் புலியாகவே இருக்கிறது.
சங்கப்
புலவர் புறானூற்றுக் கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார்.
அதை இன்றைய கார்ப்பரேட் மொழியில் மொழிபெயர்த்தால், "பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவனும்
உன் சகோதரனே; அவனைக் கவிழ்க்கக் குழி தோண்டாதே" என்று அர்த்தம்.
அலுவலகம்
என்பது நீங்கள் சம்பாதிப்பதற்கான இடம் மட்டுமல்ல, நீங்கள் ஒரு மனிதனாக வாழ்ந்து பழகுவதற்கான
இடமும் கூட. அதை விடுத்து, சில்லறைத் தனமான சூழ்ச்சிகளால் சக மனிதனின் மன அமைதியைக்
கெடுத்தால், இறுதியில் நீங்கள் வாங்கும் சம்பளம் உங்களின் மனநல மருத்துவருக்கே சரியாகப்
போய்விடும்!
*****

No comments:
Post a Comment