31 Mar 2026

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

அமெரிக்கா இனிமேல் ஊர் ஊராகப் போய் ஜனநாயகம் என்கிற பெயரில் சாம்பார் ஊற்றப்போவதில்லை. நாங்கள் வருவோம், அடிப்போம், கிளம்புவோம் - இதுதான் டொனால்ட் டிரம்பின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்.

வரலாறு ஒரு விசித்திரமான சுழற்சி. 1979 இல் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் பிடித்துக்கொண்டு 444 நாட்கள் ஆட்டம் காட்டியபோதே, இந்த யுத்தம் தொடங்கிவிட்டது என்கிறார்கள். இடையில் பெய்ரூட் குண்டுவெடிப்பு, கோபார் டவர்ஸ் என ஏகப்பட்ட ரத்த சரித்திரம். கடைசியாக 2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் செய்த அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்ததும் இதே ஈரான் தான் என்பது ஓப்பன் சீக்ரெட் என்று இந்தப் போருக்கான காரணங்களை விளக்குவோர்கள் இருக்கிறார்கள்.

டிரம்ப் இப்போது செய்வது புது யுத்தத்தை ஆரம்பிப்பதல்ல.  47 வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த ஒரு தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற ஒரு போர் பார்வையும் இருக்கிறது.

நாங்களும் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று போய் செருப்படி பட்டு வந்த தலைமுறைதான். எங்களுக்குத் தெரியும், அங்கே போய் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்குக் குடித்தனம் நடத்தச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்போதைய ஈரான் – அமெரிக்க போர் குறித்து புலம்பும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் டிரம்பின் கோட்பாடுகள் வேறு விதமானவை. அவையாவன,

1.  அமெரிக்காவின் லாபம் என்ன என்று பார்.

2.  பேசிப் பார்.

3.  பேச்சு கேட்கவில்லை என்றால், தலைசுற்றுகிற மாதிரி ஒரு அடி கொடுத்துவிட்டு, அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குத் திரும்பு.

டிரம்பின் பாலிசி தெளிவானது: ஈரானின் அயாத்துல்லாவையும் அவரது ஆட்களையும் காலி செய்துவிட்டு, இனி உங்கள் இஷ்டம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குடும்பம் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவது. அங்கே போய் அவர்களுக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தை டியூஷன் எடுக்க டிரம்ப் தயாராக இல்லை.

இந்தப் போரில் அன்று போல் இப்போது ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பத் தேவையில்லை. குறி தப்பாத ஆயுதங்கள், கம்ப்யூட்டரிலேயே நாட்டை முடக்குவது, காபி குடித்துக்கொண்டே ரிமோட்டில் யுத்தம் செய்வது என்று ஏகப்பட்ட புது ஐட்டங்களோடு போர் முறை அப்டேட்டாகி இருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், இனிமேல் அமெரிக்க வீரர்கள் அந்நிய மண்ணில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் வெனிசுலா முதல் ஈரான் வரை டிரம்ப் போட்டிருக்கும் ஸ்கெட்ச் ஒன்றுதான். பொருளாதாரத் தடை. வர்த்தக அழுத்தம், அப்புறம் மீறினால் அதிரடித் தாக்குதல். அமெரிக்கா பர்ஸ்ட், மற்றதெல்லாம் நெக்ஸ்ட் என்பது இதன் பாலிஸ் பேக்ரவுண்ட்.

இருந்தாலும், அமெரிக்காவின் பழைய போர் கணக்குகளை நோண்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் சுமார் 8 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. இந்த எட்டு டிரில்லியன் என்பதற்கு 8 போட்டுவிட்டு பின்னால் 12 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் 7,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கடைசியில் நடந்தது என்னவோ, பிக்பாஸ் வீட்டில் நடப்பது போல ஒரு குழப்பமான கிளைமாக்ஸ்.

மாறி விட்ட போர் சூழ்நிலையில் இப்போதைய ட்ரோன் தாக்குதல் வித்தியாசமானது. ஈரானின் கடற்படையை நிலைகுலையச் செய்ய இப்போது சுவர்ம் எனும் தொழில்நுட்பம் தயார். நூற்றுக்கணக்கான குட்டி ட்ரோன்கள் ஒரே நேரத்தில் தேனீக்கள் போலத் தாக்கும். ஒரு பைலட் கூடச் சாகத் தேவையில்லை.

அத்துடன் ஈரானின் அணுமின் நிலையங்களை ஸ்டக்ஸ்நெட் பாணியில் கம்ப்யூட்டர் வைரஸ் மூலமே முடக்க முடியும். ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் ஒரு நாட்டின் பவரை ஆஃப் செய்வது இதுதான்.

மேலும், பழைய காலத்தில் ஒரு பீரங்கி குண்டு போட்டால் பக்கத்து வீட்டுத் தோசைக் கல்லும் உடையும். இப்போதைய ஏவுகணைகள் வெடிக்காது, கத்திகள் போல விரிந்து, காரில் செல்லும் குறிப்பிட்ட நபரை மட்டும் ஸ்லைஸ் செய்யும்.

இன்னொன்றையும் இவ்விடம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், டிரம்பின் மிகப்பெரிய ஆயுதம் துப்பாக்கி அல்ல, டாரிப் எனப்படும் இறக்குமதி வரி.

எங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் நாட்டு எண்ணெய்க்கு 100 சதவீத வரி. உங்கள் வங்கிக் கணக்குகள் எல்லாம் ப்ரீஸ். டிரம்பின் பாலிசி இப்போது இதுதான்.

டிரம்ப் அப்படிச் செய்வதால், அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைவதற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் வெண்டிலேட்டருக்குப் போய்விடும். இதுதான் இன்றைய நவீன யுத்தம்.

ஆக, இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், டெக்னாலஜி மூலம் அச்சுறுத்தலை அழிப்பது, மின்னல் வேகத் தாக்குதல் நடத்துவது, வேலை முடிந்ததும் டாடா காட்டிவிட்டுத் திரும்புவது என்பதாக இருக்கிறது இன்றைய அமெரிக்க போர் நுட்பம்.

எனவே, உலகம் இப்போது ஒரு பெரிய வீடியோ கேம் போல மாறிவிட்டது. வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால், தெஹ்ரானில் ஒரு மிஸைல் தளம் காலியாகும். டிரம்ப் விரும்புவது இந்த கிளீன் யுத்தத்தைத்தான்.

இதில் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அது அவுட் ஆஃப் சிலபஸ்!

ஆக, விஷயம் சீரியஸாகிவிட்டது. டிரம்ப் இப்போது ஒரு செஸ் பிளேயர் போல காய்களை நகர்த்துகிறார். ஒரு பக்கம் ஈரான், இன்னொரு பக்கம் வெனிசுலா. இரண்டுமே வெவ்வேறு விதமான கேம்கள்.

அதே நேரத்தில் அமெரிக்கா அடித்துவிட்டு டாடா காட்டிவிட்டுப் போய்விடலாம். ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? அயாத்துல்லாக்களின் பாணி வேறு.

ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் ஈரானின் போர் தந்திரர்கள். இவர்கள் ஈரானின் ரிமோட் கண்ட்ரோல் படைகள். அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீதோ அல்லது செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதோ மிஸைல் மழை பொழிய வைப்பார்கள். இது ஒரு ஸ்லோ பாய்சன் போல. மெல்ல மெல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளை நச்சரிப்பதுதான் ஈரானின் மாஸ்டர் பிளான்.

வெனிசுலாவில் டிரம்ப் விளையாடியது ஒரு எகனாமிக் வீடியோ கேம். அங்கே ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லாமல், அந்த நாட்டு எண்ணெய்க்கு சீல் வைத்து, ஒரு சொட்டு பெட்ரோல் கூட வெளியே வராமல் தடுத்தால், அந்த நாட்டு கரன்சி டிஷ்யூ பேப்பர் விலைக்குப் போய்விடும். மக்கள் பசியில் வீதிக்கு வரும்போது, அரசாங்கம் தானாகவே சரண்டர் ஆகும். இதுதான் ரத்தம் சிந்தாத ரணகளம்.

எல்லாவற்றிற்கும் மத்தியில் இனிமேல் வார் ரூமில் மேப் கிடையாது. எல்லாம் மல்டி டச் ஸ்கிரீன்கள் தான். “சிஸ்டம்! ஈரானின் 47 ஏவுகணை தளங்களை லாக் செய்”, இதுதான் இன்றைய கமாண்டர் கொடுக்கும் ஆர்டர்.

செயற்கை நுண்ணறிவுதான் அடுத்த டார்கெட்டை முடிவு செய்யும். மனிதர்கள் வெறும் கன்ஃபார்ம் பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். தப்பு நடந்தால் அது கம்ப்யூட்டர் எரர் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!

டிரம்பின் இந்த ஹிட் அண்ட் ரன் பாலிசி ஜெயிக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு உள்ளே யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஆனால், இப்போது மக்கள் ‘நோகிங்ஸ்’ என்று டிரம்புக்கு எதிராகப் பேரணி நடத்தவும், போராடவும் தொடங்கி விட்டார்கள்.

பென்டகன் அதிகாரிகள் டிரம்பின் ஹிட் அன்ட் ரன் திட்டத்தைப் பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கிளம்பி வந்துவிட்டால், அங்கே மீண்டும் தீவிரவாதம் வளராதா, என்பதுதான் அவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

உலகம் அமைதியாகுமா அல்லது இன்னும் அதிருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் இந்த புதிய ஆட்டம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல. அதன் பின்னால் ஒரு பெரிய கால்குலேட்டர் இருக்கிறது. ரத்தக் கறை படியாத ஒரு டிஜிட்டல் யுத்தத்தின் ப்ளூபிரிண்ட் இது.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். அது கிணறுகளுக்கும் பொருந்துகிறது, அதாவது பெட்ரோல் கிணறுகளுக்கு. அமெரிக்க நாட்டாமையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது உலகம்.

*****

No comments:

Post a Comment