31 Mar 2026

ஆட்டோமொபைல் அசுரனாகும் சீனா!

டெட்ராய்ட்டை விஞ்சும் பெய்ஜிங்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, சீனக் கார்களா? அதெல்லாம் பிளாஸ்டிக் பொம்மை மாதிரி, கிளம்பும்போது ஒரு சத்தம் வரும், ஓடும்போது ஒரு சத்தம் வரும் என்று அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அந்தச் சிரிப்பு கீச்சென்ற பிரேக் சத்தமாக மாறியிருக்கிறது.

சீனா இப்போது வெறும் கார் மார்க்கெட் அல்ல, அதுதான் உலக ஆட்டோமொபைல் உலகின் பவர் ஹவுஸ்.

2000களின் ஆரம்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய ஆசைப்பட்டபோது, சீனா ஒரு கண்டிஷன் போட்டது.  நீங்கள் இங்கே கார் விற்கலாம். ஆனால், எங்கள் ஆட்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் ஆரம்பிக்க வேண்டும், அத்துடன் உங்கள் டெக்னாலஜியை எங்களிடம் காட்ட வேண்டும் என்பதுதான் அந்தக் கண்டிஷன்.

டெட்ராய்ட் நிறுவனங்களும் சரி, ஆள் கிடைத்தால் போதும் என்று எல்லா ரகசியங்களையும் கொட்டினார்கள். விளைவு? சீனா வித்தையை மொத்தமாகப் படித்துக் கப்பென்று பிடித்துக்கொண்டது.

அமெரிக்கர்களின் செலவில், அமெரிக்கர்களின் அறிவை வைத்து, அமெரிக்கர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கார்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள் சீனர்கள்.

போர்டு நிறுவனத்தின் சி.இ.ஓ ஜிம் ஃபார்லி கடந்த ஆறு மாதமாக ஒரு காரை ஓட்டி வருகிறார். அது போர்டு அல்ல, சீனாவின் Xiaomi SU7. எப்படியிருக்கிறது? என்று கேட்டால், அற்புதம்! இதை விட்டு இறங்கவே மனமில்லை என்கிறார்.

வெறும் 30,000 டாலர் அதன் விலை. அதாவது அமெரிக்க கார்களின் பாதி விலை. ஆனால் பெர்ஃபார்மென்ஸ்? எகிறுகிறது. உள்ளே போனால் ஒரு பெரிய டச் ஸ்கிரீன். காரில் அமர்ந்து கொண்டே வீட்டின் லைட்டை ஆஃப் செய்யலாம். கூடவே ஒரு ஏஐ  அசிஸ்டெண்ட். மொத்தத்தில் அது கார் அல்ல, சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்!

சீன அரசாங்கம் ஒரு காருக்கு 10,000 டாலர் வரை சலுகை கொடுக்கிறது. இதனால் அங்கே உற்பத்தி எக்கச்சக்கமாகி, இப்போது உலகச் சந்தையை நோக்கி அந்தக் கார்கள் பாயத் தொடங்கி விட்டன. வியட்நாம் முதல் லத்தீன் அமெரிக்கா வரை சீனக் கார்கள் தான் ராஜபாட்டை நடத்துகின்றன.

இப்போது விசயத்திற்கு வருவோம். இன்றைய கார்கள் வெறும் இரும்புப் பெட்டிகள் அல்ல. அவை ரோலிங் டேட்டா சென்டர்கள். அவற்றில் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள், ஜி.பி.எஸ் எல்லாம் உண்டு.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆகவே, கார்கள் என்றால் இனி என்ன நடக்கும்?

இது ஒரு கற்பனை போலத் தெரிந்தாலும் யோசிக்க வேண்டிய விசயம்தான். அதாகப்பட்டது, சீன மென்பொருளில் ஓடும் லட்சக்கணக்கான கார்கள் அமெரிக்கச் சாலையில் இருக்கும்போது, பெய்ஜிங்கில் யாரோ ஒரு ஆள் ஒரு பட்டனை அழுத்தினால் அத்தனை கார்களும் ஒரே நேரத்தில் செயலிழந்து நின்றால் என்னவாகும்?நிச்சயமாக இது ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ்தான்.

இந்த மாதம் டிரம்ப் சீனாவுக்குப் போகிறார். அவர் கையில் இருக்கும் அஸ்திரம் என்னவென்றால், நீங்கள் அமெரிக்காவில் கார் விற்க வேண்டுமா? தாராளமாக வாருங்கள். ஆனால், எங்கள் ஊரில் தொழிற்சாலை கட்டுங்கள். எங்கள் ஆட்களுக்கு வேலை கொடுங்கள். 25 வருஷத்துக்கு முன்னாடி நீங்கள் செய்த அதே ஜாயிண்ட் வென்ச்சர் வித்தையை இப்போது நாங்கள் செய்யப் போகிறோம், என்பதுதான். என்ன ஒரு காலம் செய்த கோலம்?!

டெக்னாலஜி என்பது ஒரு இருபுறமும் கூர்மையான கத்தி. அன்று அமெரிக்கா சீனாவுக்குக் கொடுத்தது, இன்று சுழன்று வந்து அமெரிக்காவையே மிரட்டுகிறது.

இந்த கார் யுத்தத்தில் கடைசியில் ஜெயிக்கப்போவது டாலரா அல்லது யுவானா? எனக்கென்னவோ சீனாவைப் பீட் செய்வது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. காரணம் என்ன என்கிறீர்களா? அந்த டெட் சீப் ரேட்தான்.

*****

No comments:

Post a Comment