30 Mar 2026

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலியைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். ஆனால், மனிதன் பரிணாம வளர்ச்சியில் தப்பிப் பிழைத்ததே இந்தப் பெய்ன் கொடுத்த அலாரத்தால்தான்.

வலிக்கும் போது, மூளைக்கு ஓர் எலக்ட்ரிக்கல் சிக்னல் போகிறது. இதற்கு மேல் தாங்க முடியாது என்று சினாப்ஸ் வழியே ஒரு மெசேஜ். இது பிஸியாலஜி. ஆனால், இதே வலியைத் தமிழன் எப்படித் ஹேண்டில் செய்திருக்கிறான் தெரியுமா?

சங்க இலக்கியத்தில் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வலியைப் பசலை என்கிறார்கள். இது ஒரு விசித்திரமான ஸ்கின் டிசீஸ் கிடையாது, அது ஒரு சைக்கோசோமாடிக் வலி.

இங்கே வலி என்பது ஒரு தனிமை. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நேரும் கோடுமை. ஒரு நியூட்ரினோ துகள் போல எவராலும் உணர முடியாத நுணுக்கமான வலி. சங்கப் புலவர்கள் வலியைப் பிசையத் தெரிந்தவர்கள்.

குறுந்தொகையில் பார்த்தீர்களானால், காமம் கடும் பகல் செய்தே என்ற வரியை வலிக்காமல் உங்களால் கடக்க முடியாது.  அதாவது காதல் என்பது மதிய வெயிலைப் போலச் சுடுகிறதாம். ஏர்கண்டிஷன் இல்லாத காலத்தில் இதைவிட ஒரு மெட்டபார் சொல்ல முடியாது.

சினிமாவில் சும்மா இருப்பார்களா? சினிமாவுக்கு வரும் போது அது கொஞ்சம் கமர்ஷியல் ஆகிறது.

கண்ணதாசன் ஒரு ரசவாதி. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா என்பார். இங்கே துரோகத்தால் வரும் வலியை ஒரு தத்துவமாக மாற்றிவிடுவார். கர்ணன் படத்தில் அந்தப் பாடலைக் கேட்கும் போது, நம் முதுகில் அம்பு தைப்பது போல ஒரு சென்சேஷன் வரும் பாருங்கள், அதுதான் கவிதையின் மூலமாகவே கடத்தப்படும் வலி.

இன்றைய ஒய் திஸ் கொலவெறி காலத்தில் கூட, கண்ணான கண்ணே, என்று இமான் இசையில் வரும்போது, அந்தத் தந்தை, மகள் பாசத்தின் வலி ஒரு ஸ்லோ பாய்சன் போல ரத்தத்தில் கலக்கிறது.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும்படி வலியை மறந்து சிரிக்க வைத்ததுதான் வடிவேலுவின், வலிக்குது அழுதுடுவேன் என்ற வசனம். இது பெய்ன் என்டர்டெய்ன் ஆன இடம்.

இப்போது கொஞ்சம் அறிவியலுக்கு வருவோம். இது ஒரு பெரிய நியூரோ சயின்ஸ் டாபிக். அது வலியை எப்படி ஹேண்டில் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

வலி என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது ஒரு டைம் மெஷின். அடிபட்டால் வலிக்கும், சரி. ஆனால் அந்த வலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அதை குரோனிக் பெய்ன் என்கிறது அறிவியல். கூடவே போனஸாக டிப்ரஷன், தூக்கமின்மை, கவலை எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

இது ஏன் நடக்கிறது?

நம்மில் பலருக்கு ராத்திரியில் வலி அதிகமாகும். பகலில் பிஸியாக இருப்பதால் தெரிவதில்லை என்று நாம் நினைப்போம். ஆனால் பிசிக்ஸ் ரீதியாக விஷயம் வேறு.

நம் மூளையின் நடுவே ஹைப்போதாலமஸ் பகுதியில் ஒரு மாஸ்டர் கடிகாரம் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான ஒயரிங் மூலம் முதுகெலும்புக்கு சிக்னல் அனுப்புகிறது.

பகலில் இந்த சிக்னல் வலியைத் தணிக்கும் அனல்ஜிசிக் சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்கிறது. இரவில் இந்த சிஸ்டம் தூங்கிவிடுகிறது. அதனால் நரம்புகள் வலியை அப்படியே மூளைக்கு கடத்துகின்றன.

அதாவது, வலி என்பது வெளியே இருந்து வரும் சிக்னல் மட்டுமல்ல, நம் மூளை இப்போது வலிக்கலாம் என்று கேட் திறந்துவிடும் ஒரு ஏற்பாடு! இதைப் புரிந்துகொண்டால், பெயின் கில்லர் மாத்திரைகளை எந்த நேரத்தில் போடவேண்டும் என்கிற கணக்கு மாறும்.

அடுத்தது வலி நீடிக்கும்போது மூளையின் ஹிப்போகாம்பஸ் என்ன ஆகிறது என்று பார்த்தார்கள். ஆச்சரியமாக, ஹிப்போகாம்பஸ் கொஞ்சம் வீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இது ஒரு அடாப்டிவ் நிலை. மூளை வலியை சமாளிக்க தன்னைத் தயார் செய்கிறது.

வலி தொடர்ந்தால், மூளையிலுள்ள மைக்ரோகிளியாசெல்கள் ஓவர் ஆக்டிவ் ஆகி, ஹிப்போகாம்பஸைத் தின்ன ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல அந்தப் பகுதி சுருங்குகிறது.

வலி ஒரு பக்கம் இருக்க, கூடவே டிப்ரஷனும், அறிவுத்திறன் குறைபாடும் கைகோர்த்துக்கொண்டு வருகின்றன. இது வெறும் மனக்கவலை அல்ல, மூளையின் சர்க்யூட் மாற்றியமைக்கப்படுவதால் வரும் கோளாறு.

வலியை இனிமேல் வெறும் சென்சாராகப் பார்க்காமல், ஒரு டைம் ஸ்ட்ரக்சர்ட் மூளை நிலையாகப் பார்க்க வேண்டும். வலியைத் தணிக்க மாத்திரை மட்டும் போதாது, மூளையின் கடிகாரத்தையும் கொஞ்சம் சரி செய்ய வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

ஆக அறிவியல் வளர்கிறது. ஆனால் வலி மட்டும் இன்னும் பழைய பாணியிலேயே நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது!

*****

No comments:

Post a Comment