2 May 2022

கருத்தாளர்களின் கவனத்திற்கு…

கருத்தாளர்களின் கவனத்திற்கு…

            ஏன் சார் நானெல்லாம் கருத்து சொல்லக் கூடாதா என்கிறார்கள். யார் அப்படிச் சொன்னது? தாராளமாகக் கருத்து சொல்லுங்கள்.

            நீங்கள் சொல்லும் கருத்துக்குப் பலரும் பலவிதமாகக் கருத்துச் சொல்வார்கள். அப்போது என்ன சார் இப்படி? என்று கேட்க கூடாது. ஏனென்றால் அது அப்படித்தான். கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளும் திராணி இருந்தால் தாராளமாக நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்லுங்கள்.

            உங்கள் கருத்துகளுக்கு நீங்கள் தாங்கிக் கொள்கிற அளவுக்கு மட்டும்தான் மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்றால், சாரி நீங்கள் கருத்துச் சொல்வதற்குத் தகுதியானவர் கிடையாது. உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனைவி, மக்கள், நண்பர்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

            யாரும் யாரையும் கருத்து சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. நீங்களாகச் சொல்கிறீர்கள். நீங்களாக மாட்டிக் கொள்கிறீர்கள். தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை மறைவாகத்தான் சொல்ல சொல்கிறார்கள். எவ்வளவு நாகரிகம் பார்த்தீர்களா அதில். அப்படித்தான் சொல்ல வேண்டும். பல எழுத்தாளர்கள் புனைபெயரில் எழுதுவதற்குக் கூட காரணம் அதுதான்.

            நானே அப்படித்தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். புனைப்பெயரில் எழுதும் போது யாராவது சொல்லி விட்டால் அது என் பெயருக்கு இல்லை என்று நினைத்துக் கொள்வேன். என் பெயரில் எழுதி யாராவது சொல்லி விட்டால் புனைப்பெயரில் இருக்கும் நான்தான் உண்மையான நான் என்று சொல்லி கொள்வேன். இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதில் உள்ள சௌகரியம் இது.

உங்களுக்கும்தான் உங்கள் பெயர் ஒன்று, செல்லப் பெயர் ஒன்று இருக்குமே. இரண்டு பெயரையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பெயரில் தவறு நேர்ந்து விட்டால் அந்தப் பெயர் என்று சொல்லுங்கள். அந்தப் பெயரில் தவறு நேர்ந்து விட்டால் இந்தப் பெயர் என்று சொல்லுங்கள். பெயர்கள் பத்தவில்லை என்றால் நான்கைந்து பெயர்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். தப்பில்லை.

ஒரு கருத்து சொல்லி ஏதேனும் நேர்ந்து விட்டால் பயந்து விடக் கூடாது. திரும்ப திரும்ப கருத்து சொல்லுங்கள். மக்கள் இவருக்கு இதுதான் வேலை என்று நினைக்கும் அளவுக்குக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இவருக்கு வேறு வேலை இல்லை, இவர் இப்படித்தான் என்று நினைத்து விடுவார்கள். இல்லையென்றால் கதற கதற அடித்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

யார் அடித்தால் பயப்படுகிறார் என்று பார்த்து அவர் பயப்பட பயப்பட அடிப்பது மக்களுக்குப் பிடித்தமான பாலிசி. எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்றால் மக்கள் அலுத்துப் போய் விட்டு விடுவார்கள். வேறு யாரை அடித்தால் பயப்படுகிறாரோ அவரைப் பார்க்க போய் விடுவார்கள். மக்கள் இன்னொருவரைப் பார்த்துக் கருத்துகளால் அடிக்கப் போகும் வரையில் மீண்டும் மீண்டும் கருத்துகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படிச் செய்வதற்குப் பெரும்பாலானோருக்கு நேரம் இருக்காது. அரசியல்வாதிகளுக்குதான் அதற்கு முழு நேரமும் கிடைக்கும். அதனால்தான் அரசியலில் இருப்பவர்கள் தொடர்ந்து கருத்து சொல்ல முடிகிறது. நம்மால் முடிவதில்லை.

நீங்கள் தொடர்ந்து கருத்து சொல்ல விரும்பினால் அரசியலில் சேர்ந்து கொள்ளுங்கள். ரசமான கருத்துகளை எப்படிச் சொல்வது என்பது உங்களுக்கே புரிந்து விடும். அரசியலில் சேராமல் கருத்துகள் சொல்ல விரும்பினால் கதவுகளை நன்றாக இறுக்க மூடிக் கொண்டு கண்ணாடி முன் நின்று நீங்கள் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே இருங்கள். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். நமக்கும் கருத்துகளை வெளிப்படுத்தி விட்ட ஒரு திருப்தி உண்டாகி விடும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...