2 May 2022

குட்பை மிஸ்டர் பவர் கட்! போய் வாருங்கள்!

குட்பை மிஸ்டர் பவர் கட்! போய் வாருங்கள்!

            யார் வந்தாலும் பொறுத்துக் கொள்கிறேன். கடன்காரர்களைக் கூட. வசூலுக்கென வருபவர்களையும்தான். இந்த மின்வெட்டை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிய மாட்டேன்கிறது.

            அது வந்தால் போதும் பிரிட்ஜை நிறுத்தி விடுகிறது. ஏ.சி.யை நிறுத்தி விடுகிறது. இன்வெர்ட்டர் காலி என்றால் வீட்டில் எரியும் அத்தனை விளக்குகளையும் நிறுத்தி விடுகிறது. இறுதியாக மின்விசிறியையும் நிறுத்தி விடுகிறது. ஒளிரும் மற்றும் குளிரும் வீட்டை இருண்ட வீடாக, சூடான வீடாக மாற்ற என்றே இந்த மின்வெட்டு வருகிறது.

            சில நேரங்களில் கோப மிகுதியால் இனிமேல் வீட்டுக்குள் நுழையாதே என்று கூட சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்க வேண்டுமே. நான் எத்தனை கோபப்பட்டாலும் அத்தனை சாந்தமாக நுழைந்து விடுகிறது. நீங்களெல்லாம் உங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்களோ? கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று பொறுத்துக் கொள்கிறீர்களோ என்னவோ? எதுவாக இருந்தாலும் உங்கள் அணுகுமுறையைச் சொன்னால் எனக்கும் கொஞ்சம் வசதியாக இருக்கும் பாருங்கள்.

            நான் மட்டும்தான் இந்த மின்வெட்டின் மீது கோபமாக இருக்கிறேன் என்று பார்த்தால் என் மனைவி கூட அதன் மீது கோபமாகத்தான் இருக்கிறாள். அவள் விரும்பிப் பார்க்கும் மெகா சீரியல் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்து ஹலோ சொல்கிறது. சமீப நாட்களாக மெகா சீரியலுக்கும் மின் வெட்டுக்கும் என்ன எட்டாம் பொருத்தம் என்ற தெரியவில்லை. ஜோசியர்கள் இதை அவசியம் கணித்து சொல்ல வேண்டும். முக்கியமான மெகாசீரியல் பார்க்கும் போதெல்லாம் அதைப் பார்க்க வேண்டும் என்றா என்னவோ மின்வெட்டும் வந்து விடுகிறது.

            சரிதான் மின்வெட்டு இல்லாத இடங்களில் மெகா சீரியலைப் பார்த்துக் கொண்டிருப்போரிடம் போன் போட்டுக் கேட்டுக் கொள்வோம் என்றால் அதுவும் சார்ஜ் போய்க் கிடக்கிறது. தினமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று போனில் பேசிக் கொண்டு கிடக்கும் என் மனைவி என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாள். சம்சாரம் அது மின்சாரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் சம்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

            உடலில் இரத்தம் ஓடுகிறதோ இல்லையோ உலகில் மின்சாரம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இனி வரப் போகும் உலகை மின்சாரம்தான் ஓட வைக்கப் போகிறது. தெருவில் பார்த்தால் தெரியும். மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார கார்கள் என்று ஓட ஆரம்பித்து விட்டன.

            மின்சாரத்தை ஏற்றிக் கொண்டால்தான் இனி வாழ்க்கை எனும் போது மின்வெட்டை எப்படி தழைவாழைப் போட்டு வரவேற்க முடியும்? எல்லாரும் மின்வெட்டின் மீது வேண்டா வெறுப்பாகத்தான் இருக்கிறார்கள். அந்த வெறுப்பில் பல முறை அதைப் பார்த்து குட்பை சொல்லி விட்டேன். அதுவோ எதைப் பற்றியும் லஜ்ஜையில்லாமல் அழையா விருந்தாளியாக நுழைந்து கொண்டிருக்கிறது.

நாம் வந்தாரை வாழ வைக்கலாம். மின்வெட்டை வாழ வைக்கக் கூடாது. அடிக்கடி வந்து வந்து பழகி நம்மை விட்டுப் பிரய மாட்டேன் என்று சொல்லி விட்டால் பிரச்சனை பாருங்கள்.

            இந்த மின்சாரத்தை நம்பித்தானே நான் வெடித்தாலும் பரவாயில்லை என்று மின்சார ஸ்கூட்டர் எல்லாம் வாங்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன். மின்வெட்டு வந்து வந்து என் கனவைக் காலி செய்து விடும் போல.

            மின்சார ஸ்கூட்டர் கனவு கிடக்கட்டும். அது இல்லையென்றால் குடியா முழுகி விடும்? தூக்கம் வேண்டிக் கிடக்கிறதே. தூங்கினால்தானே கனவு வரும். கனவு வர தூக்கம் வருவதற்கு இரவெல்லாம் மின் விசிறி சுழல வேண்டும். அதற்கு மின்சாரம் வேண்டும். மின்வெட்டை அனுப்பி இரவெல்லாம் விழித்திருக்க செய்தால் அப்புறம் எங்கே தூங்குவது? எப்படிக் கனவு காண்பது?

பகலில் தூங்கி பகலில் கனவு கண்டால் பலிக்குமா? கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள் மின்வெட்டே. எப்போதாவது வாருங்கள். எப்போதும் வந்து கொண்டிருக்காதீர்கள். உங்களை இப்படிச் சொல்வதற்கு மனசு என்னவோ மாதிரியாகத்தான் இருக்கிறது. பிள்ளைகள் வேறு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஒத்துழைப்பு இப்போதைக்குத் தேவை. மற்றவை மறுமுறை வரும் போது நேரில். 

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...