1 May 2022

எழுத்தாளர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவை

எழுத்தாளர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் தேவை

            எழுத்தாளர் என்று வெளியே தெரியாமல் இருப்பது எவ்வளவோ நல்லது. என்னை ஓர் எழுத்தாளர் என்று வெளியே நிறைய பேருக்குத் தெரியாது. அதனால் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். தெரிந்த ஒரு சிலர் எந்த ஆபிசில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதால் தப்பித்தேன்.

            ஒருவர் நான் எழுத்தாளர் என்று கேள்விபட்டு, “அடுத்த வாரம் நான் வாங்கிய நிலத்தை ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். பத்திரம் எழுதித் தர முடியுமா?” என்று கேட்டு விட்டார். பத்திரத்தில் கதை, கவிதை, கட்டுரை எழுத முடியுமா என்ன? “மன்னித்துக் கொள்ளுங்கள். பேனா ரிப்பேராகிக் கிடக்கிறது. மெக்கானிக் சரி செய்யும் மூடில் இல்லை” என்று சொல்லித் தப்பிக்க வேண்டியதாகி விட்டது.

            வேறு சிலர் இருக்கிறார்கள். நான் எழுத்தாளர் என்று தெரிந்து பேனாவைப் பரிசாகக் கொடுக்கிறார்கள். நான் பேனாவில் எழுதி எவ்வளவு நாளாகி விட்டது. எல்லாம் நேரடி டைப்பிங்தான். தோன்ற தோன்ற டைப்பிட்டுக் கொண்டே இருப்பேன். ஆகவே அது போன்று வரும் பேனாக்களை முதல் வகுப்பில் இரண்டாம் வகுப்பில் பர்ஸ்ட் ரேங்க், செகண்ட் ரேங்க் எடுக்கும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பரிசாகக் கொடுத்து விடுவேன். நாமும் இந்தச் சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் அல்லவா. நான் கொடுக்கும் பேனாவை வைத்துப் பரீட்சைத் தாளில் ஏதாவது ஒரு கவிதையோ, கதையோ எழுதினால் அது பெருமைதானே.

            நான் எழுத்தாளர் என்பதை நுட்பமாகக் கண்டுபிடித்து விட்ட சிலர் செய்த காரியங்கள் இருக்கிறதே அவை அனைத்தும் வெளியில் செல்ல முடியாத ரகம்.

            “சார்! உங்க கவிதை படித்தேன். ரொம்ப சூப்பர்” என்று ஆரம்பிப்பார்கள். எந்தக் கவிதை என்றால் பேந்த பேந்த முழிப்பார்கள்.

            “அதான் சார்! தென்னை மரத்தைப் பற்றி எழுதியிருந்தீர்களே. தென்னையைப் பெற்றால் இளநீரு. பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு.” என்று ஆரம்பிப்பார்கள்.

            பாவம் இதை கண்ணதாசன் உயிரோடு இருந்து கேட்டிருந்தால் ரொம்பவே மனம் நொந்து போயிருப்பார். நம் கவிதை படித்தேன் என்று சொல்கிற ஆசாமியை நாம் எப்படி மனம் நோகக் செய்வது?

            “ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய கவிதைகள் படியுங்கள். வீடு வரை உறவு வீதி வரை மனைவி என்பது போன்ற நிறைய கவிதைகள் இருக்கின்றன” என்பேன்.

            “எங்க சார் படிக்க நேரமிருக்கு? ஆனா உங்க கவிதை என்றால் தவறாமல் படித்து விடுவேன்” என்பார்கள். எப்பேர்ப்பட்ட பாராட்டு வாசகம் பாருங்கள். இதற்கு மயங்காமல் இருக்க முடியுமா?

            “அப்புறம் சார்! உங்ககிட்ட ஒரு ஹெல்ப்.” என்பார்கள்.

            அடடா நம் கவிதை வாசகர் ஒரு ஹெல்ப் கேட்டு இல்லையென்று சொல்வது யாருக்கு அசிங்கம்? “சொல்லுங்க மிஸ்டர் ரீடர் சார்!” என்பேன்.

            “என் மக இருக்கா சார். எல்.கே.ஜி. எப் செக்சன்ல படிக்கிறா. அவளுக்கு ஒரு கவிதைப் போட்டி வெச்சிருக்காங்க. நீங்க ஒரு கவிதை எழுதிக் கொடுத்தீங்கன்னா அவ பர்ஸ்ட் பிரைஸ் வாங்கிடுவா. சார் நான் உங்களை நம்பி அவளப் போட்டியில கலந்துக்கு சொல்லிட்டேன். நீங்கதான் சார் எப்படியாச்சும் ஒரு கவிதை எழுதித் தரணும். உங்க மேல நான் ரொம்ப கான்பிடன்ட்டா இருக்கேன் சார்.” என்பார்.

            என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். எழுத்தாளர் என்று வெளியில் தெரிந்து விடுவதால் நேரிடும் அவஸ்தைகள். நான் எழுதும் கவிதைகளை காலேஜ் படிக்கிற பிள்ளைகளே புரிந்து கொள்ள முடியவில்லை என்று கமெண்ட் போடுகிறார்கள். நான் எப்படி எல்.கே.ஜி. குழந்தை பரிசு பெறும் அளவுக்குக் கவிதை எழுத முடியும்?

            வேண்டுமானால் அந்தக் குழந்தை கவிதைக்குப் பரிசாகப் பெறும் சோப்பு டப்பாவை என் சொந்த செலவில் வாங்கித் தரலாம். அதற்கு அந்த நண்பர் அதாவது அந்தக் குழந்தையின் தகப்பனார் ஒத்துக் கொள்ள வேண்டுமே.

            இது போன்ற சிக்கல்கள் உண்டாவதைப் பார்த்து யாராவது எனக்கு போன் அடித்து, “சார்! ஒங்க கவிதை படிச்சேன்” என்று ஆரம்பித்தால் போதும், “சாரி சார். ராங் நம்பர். நான் கவிதையெல்லாம் எழுதுறதுல்ல. ரொக்க போடுறதுன்னா கூட என் மனைவிதான் எழுதுவா.” என்று சொல்லி விடுகிறேன்.

            நான் எழுத்தாளர் என்று தெரிந்து ரோக்கா போட கூப்பிட்டால் சிரமம் பாருங்கள். எழுத்தாளராக இருப்பதில் இப்படி நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது தெரிந்துதான் பலர் எழுத்தாளராக விரும்புவதில்லை. அரசாங்கம் கொஞ்சம் முயற்சியெடுத்து சலுகைகள், மானியங்கள், வங்கிக்கடன்கள் வழங்கினால் அதிகம் பேர் எழுத்தாளராக முன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...