26 Oct 2022

பாரதியின் சில வரிகள்

அப்படி என்றால்…

கூட்டுக் குடும்பம் என்றால்

தினம் தினம்

கறி காயில் கூட்டு செய்து வைத்துச் சாப்பிடும் குடும்பமா?

******

பெரிய என்றால்… அப்படித்தானா?

நீங்கள்தான் பெரிய எழுத்தாளராயிற்றே?

இந்த வீட்டுக் கணக்கைக் கொஞ்சம் எழுதித் தாருங்கள் என்கிறார்கள்.

நீங்கள்தான் பெரிய படிப்பாளியாயிற்றே?

இந்தக் கல்யாணப் பத்திரிகையை வாசித்துச் சொல்லுங்கள் என்கிறார்கள்.

பெரிய என்றால்… அப்படித்தானா என்கிற பயத்தில்

என் வீட்டிற்கு முன்பு தொங்கிக் கொண்டிருந்த பெயர் பலகையில் இருந்த

விகடபாரதி, எழுத்தாளர் என்பதை

விகடபாரதி, சிறிய எழுத்தாளர் & சிறிய படிப்பாளி என்று மாற்றியிருக்கிறேன்.

ஏன் அப்படி செய்திருக்கிறேன் என்று யாரும் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்தப் பதிவைப் போட்டுள்ளேன்.

*****

பாரதியின் சில வரிகள்

ஜாதிச் சங்கம் பற்றியும் கிரானைட் மற்றும் மணல் மாபியாக்கள் பற்றியும் பாரதி எழுதியுள்ள இரண்டு வரிகளை அண்மையில் படிக்க நேர்ந்தது. அவர் தீர்க்கதரிசிதான். அந்த இரண்டு வரிகள் தங்களின் மேலான பார்வைக்கு…

வரி 1 : காக்கைக் குருவி எங்கள் ஜாதி

வரி 2 : நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

*****

25 Oct 2022

அப்பாவும் அம்மாவும் இயந்திரங்கள்

அப்பாவும் அம்மாவும் இயந்திரங்கள்

கடைக்காரர்தான் நெல்லைப் பொரிக்க வைத்து அரிசியாக்குகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் முட்டைகளைப் பொரிக்க வைப்பதைப் போல.

கடைக்காரருக்கு நெல் நாமக்கலில் இருந்து பிராய்லர் கோழிகளோடு கோழிகளாகக் கொடுப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

முதன் முதலாக நெல்லை வயலில் பார்த்த போது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இயந்திரம் நடுகிறது. இயந்திரம் அறுக்கிறது. இயந்திம் அரைக்க அரிசியாகிறது. அடேங்கப்பா இவ்வளவு இயந்திரங்களா தேவைப்படுகின்றன அரிசியாகுவதற்கு?

மறுபடியும் இயந்திரத்தை உபயோகித்தால் தோசை மாவாகி விடுகிறது.

ஆனால் பாருங்கள்! இந்த இயந்திரங்கள் ஏதுமில்லாமல் அரிசியை வாங்க முடிகிறது. தோசையைத் திங்கவும் முடிகிறது.

அதற்கு அப்பாவும் அம்மாவும் இயந்திரம் போல உழைக்க வேண்டியிருக்கிறது.

*****

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இன்று காலையில் பார்த்த போது நன்றாகத்தான் இருந்தார். அவர் அடுத்த அரை மணி நேரத்தில் இறந்திருக்கிறார். சாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் எல்லாரும் அப்படித்தான் நன்றாக இருக்கிறார்கள் போலும்.

நன்றாக இருப்போர் அடுத்த அரை மணி நேரத்தைக் கவனமாகக் கடக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் நல்லதுதான்.

*****

தகத்காய மறதி

தகத்காய மறதி

இவ்விடம் சிறுநீர் கழிக்காதீர்கள் என்று ஞாபகமாய் எழுதி வைப்பவர்கள் இவ்விடம் சிறுநீர் கழியுங்கள் என்று கழிவறைகளில் எழுதி வைக்க மறந்து விடுகிறார்கள்.

*****

இவ்விடம் நோட்டீஸ் ஒட்டாதீர்கள் என்ற எழுதி வைப்பவர்கள் இவ்விடம் நோட்டீஸ் ஒட்டுங்கள் என்று எழுதி வைப்பதில்லை. மனிதர்கள் எதற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் இடம் கொடுப்பதில்லை.

*****

கேட்டின் முன் வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று எழுதி வைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கேட்டைத் திறந்து வாகனத்தை நிறுத்த இடம் கொடுக்க வேண்டும் அல்லவா? கேட்டையும் மூடி வைத்து விட்டு இப்படிஒரு வாசகத்தை எழுதி வைத்தால் எப்படி? என்றுதான் கேட்டேன். கலவரக்காரர்கள் பட்டியலில் சேர்க்கும் விதமாக வீட்டுக்காரர் காவலரை அழைக்க இந்தநாட்டுக்குப் புரட்சி சரிபட்டு வராது என ஒதுங்கிக் கொண்டேன்.

*****

வீட்டிற்கு வர வேண்டும் என்று நெடுநாளாக அழைத்த நண்பரிடம் உங்கள் வீட்டில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ பலகை இருக்கிறதா என்று கேட்டேன்.

எதற்காக இப்படிக் கேட்கிறீர் என்றார்.

வரும் போது பிஸ்கட் பாக்கெட் வாங்கி வர வேண்டும் என்றேன்.

சுகர் பிரி பிஸ்கட் பாக்கெட்டாக வாங்கி வாருங்கள் என்றார்.

நான் எந்த நாயைச் சொல்கிறேன்?

அவர் எந்த நாயைச்சொல்கிறார்?

அல்லது இருவர் சொல்லும் நாயும் ஒன்றோ என்று நான் தத்துவக் களத்தில் போரிடத் துவங்கி விட்டேன்.

*****

24 Oct 2022

எதார்த்த விதிகள்

எதார்த்த விதிகள்

எந்தப் படமாக இருந்தால் என்ன?

தமிழ் ராக்கர்ஸில் நிறைய பேர் பார்க்க வேண்டும்.

பிறகுதான் படம் ஹிட்டடிக்க முடியும்.

*****

கென்னடி இப்படியும் பேசியிருப்பார்!

சுயநலமாக இருக்கும் யாரையும் எனக்குப் பிடிக்காது

என்னைத் தவிர

நான் ஒருவன் சுயநலமாக இருப்பதால்

நாடென்ன கெட்டா விடப் போகிறது என்று

ஒவ்வொருவரும் சுயநலமாக இருப்பதால்

நாடென்ன கெட்டா விடப் போகிறது?

*****

குழந்தைகளின் உலகில் நானும் ஒரு குழந்தையே

இதைப் பார்

அதைப் பார்க்காதே

இதைச் செய்

அதைச் செய்யாதே

இதைத் தின்

அதைத் தின்னாதே என்றால்

குழந்தைகளுக்குப் பிடிக்கிறதா?

எதையாவது பார்

எதையாவது செய்

எதையாவது தின் என்றால்

குழந்தைகளுக்கு எவ்வளவு பிடிக்கிறது!

குழந்தை குண்டுகளைத் தூக்கிக் கொண்டு

மருத்துவமனைக்கு அலைந்து கொண்டும்

அவர்கள் கண்களில் சோடா புட்டி உட்பட

பல புட்டி கண்ணாடிகளை மாட்டிக் கொண்டும்

குழந்தைகளுக்குப் பிடித்தவமானவராக இருக்கவே பிடிக்கிறது.

வருங்காலம் நம்மையும் ஒரு நேரு மாமாவாகப் பார்க்கும் வாய்ப்புகளை நாமே தடுத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன்.

இந்த எண்ணம் தோன்றியதும் குழந்தைகளோடு குழந்தைகளாக சோட்டா பீம் பார்க்கிறேன்; அலைபேசியில் விளையடுகிறேன்; பர்க்கரைக் கொரிக்கிறேன்; நூடுல்ஸை உரிக்கிறேன்;

மருத்துவர்கள் ஒபேசிட்டியைக் குறையுங்கள் என்று சொல்லும் போதெல்லாம் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறேன்.

*****

அலுப்புப் பலகாரங்கள் செய்வது எப்படி?

அலுப்புப் பலகாரங்கள் செய்வது எப்படி?

யாரைக் கேட்டாலும் மற்றும் யாரிடம் கேட்டாலும் தீபாவளி பலகாரம் செய்வதென்றால் அலுப்பாக இருப்பதாக அலுப்புபட்டுக் கொண்டு பதில் சொல்கிறார்கள். 

இந்த இனிப்புக் கடைக்காரர்கள் (ஸ்வீட் ஸ்டால்காரர்கள்) மட்டும் எப்படி அலுப்புப்படாமல் செய்கிறார்களோ?

*****

தீபாவளி சிறப்புப் பலகாரச் செய்முறை ஒன்று

இந்தத் தீபாவளிக்கு ஒரு நல்ல இனிப்பு செய்முறை (ஸ்வீட் ரெசிபி) சொல்லுங்கள் ஐயா (சார்!) என்றார் என்னைக் கலாய்க்கும் நண்பர் ஒருவர்.

அதனாலென்ன சொன்னால் போயிற்று நான் சொன்ன ரெசிபி இது.

நீங்களும் கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள்.

அவசர தீபாவளிகளில் உதவக் கூடிய அற்புதமான செய்முறைக் குறிப்பு இது.

1. நல்ல அண்ணாச்சிக் கடையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒரு துண்டுத்தாளை எடுத்து இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு என மடித்து அதன் உள்ளே எழுதிக் கொள்ள வேண்டும். என்ன எழுதிக் கொள்ள வேண்டும் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

3. அண்ணாச்சியிடம் அந்தத் துண்டுத் தாளைக் கொடுத்து ரகசியமாக யாருக்கும் தெரியாமல் துண்டுத்தாளில் உள்ள பொருளை ரகசியமாகவே வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த அவசர இனிப்புக் குறிப்பை ஆளாளுக்கு வெளியில் பரிமாறி விட்டால் இதன் மகத்துவம் போய் விடும் என்பதால் இப்படிச் செய்வதே சரியானது.

4. வீட்டிற்கு வந்ததும் அண்ணாச்சிக் கடையில் வாங்கியதை எறும்பு சாக்கட்டியால் வட்டம் போட்டு அதன் நடுவில் ஒரு பாத்திரத்திற்குள் வைத்து நன்கு இறுக மூடி வைத்து விட வேண்டும். தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில் மேல் பாதுகாப்பாகவும் வைக்கலாம். ஆனால் பாதுகாப்பு முக்கியம். வேண்டுமானால் இரண்டு மூன்று பாத்திரங்களை ஒன்றுக்குள் ஒன்று போட்டு இன்னும் பத்திரமாகவும் மூடி வைக்கலாம்.

5. விருந்தினர்கள் வரும் நேரங்களில் அடுப்பு பற்ற வைக்க அலுப்பில்லை என்றால் பற்ற வைத்து பாத்திரத்தில் H2O வை ஊற்றி (இந்தப் பொருள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் புட்டி நீர் (கேன் வாட்டர்) விற்பவர்களிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார்கள். விலை கூடுதலாக இருப்பதாகக் கருதினால் தவிர்த்துக் கொள்ளவும்) அண்ணாச்சிக் கடையில் வாங்கிய பொருளில் கொஞ்சம் ஒரு சில தேக்கரண்டிகள் இட்டு சுடச் சுடக் கொடுத்தால் சுவையான இனிப்பு தயார். அடுப்பு பற்ற வைக்க அலுப்பு என்றால் அண்ணாச்சிக் கடை வகையறாவைக் கிண்ணத்தில் வைத்து நேரடியாகவும் கொடுக்கலாம். சிறப்பான இனிப்பு தயார்.

இந்த இனிப்புக்கான மவுசு எப்போதும் குறைந்ததில்லை. கல்யாணம், காது குத்தல், மஞ்சள் பூப்புனித நீராட்டு, வளையலணி விழா, பிறந்த நாள் விழா என்று அத்தனை விழாக்களிலும் இந்த இனிப்பைத்தான் முதலில் நீட்டுகிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பான இனிப்பைச் செய்யும் முறையைத்தான் இப்போது உங்களுக்குக் கூறியிருக்கிறேன். கூடுதலாக அந்த இனிப்பைச் சுடச்சுட உடனடியாகச் சமைத்துத் தருவதற்கான குறிப்பையும் பகிர்ந்திருக்கிறேன்.

இப்போது அண்ணாச்சிக் கடையில் துண்டுத் தாளில் எழுதிக் கொடுக்க வேண்டிய அந்தப் பொருளின் பெயர் இதுதான் ‘சீனி ¼ கி.கி.’.

அண்ணாச்சி சரியாகக் கொடுத்து விடுவார். நாம்தான் அதை யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து பத்திரமாகப் பத்திரப்படுத்தி சிறப்பான இனிப்பை நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குப் படைக்க வேண்டும்.

*****

23 Oct 2022

மறுபடியும் ஓர் ஆர்க்கிமிடிஸ் ஆனேன்!

கடக்கும் என்றால் நடந்து போய்…

அக்கா ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக அப்பா காலம் முழுவதும் வருத்துப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பாவின் வருத்தம் போக்க நான் நடந்து போய்க் கல்யாணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அப்போதாவது கடக்கிறதா பார்ப்போம் அப்பாவின் வருத்தம்?

*****

எழுத சொல்பவர்கள் குறித்துக் கொள்ள ஒன்று

எதாவது எழுத நினைக்கும் போது எழுத வராது.

அப்படி ஒரு வியாதி எனக்கு.

மருத்துவர்களிடம் கேட்டுப் பார்த்து விட்டேன். இந்தக் கொடிய வியாதிக்கு மருந்து இருப்பதாகத் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

உள்ளூர் மருந்து கடையிலும் (லோக்கல் மெடிக்கலிலும்) கேட்டுப் பார்த்து விட்டேன். மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துக்குத் தீராத வியாதிகள் உள்ளூர் மருந்து கடைக்காரர்கள் கொடுக்கும் மருந்துகளில் தீர்வதால் அந்த வாய்ப்பையும் விட்டு விட வில்லை.

இதனால்தான் நான் எழுத நினைப்பதில்லை.

தலைப்பு கொடுத்து எழுத சொல்பவர்கள் இதைக் குறித்துக் கொள்ளவும்.

*****

மறுபடியும் ஓர் ஆர்க்கிமிடிஸ் ஆனேன்!

அடுத்தவர்களை அதிகம் குறை சொல்லிக் கொண்டிருந்த அன்பர் ஒருவரைப் பார்த்துக் கேட்டேன், “நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க மாட்டீர்கள்தானே?”

“அதெப்படி ஐயா (சார்!) அவ்வளவு சரியாகக் கண்டுபிடித்தீர்?” என்றார்.

“நீங்கள் எல்லாரையும் குறை சொல்வதை வைத்துதான்!” என்றேன்.

பார்த்தீர்களா எப்படி என் கண்டுபிடிப்பு?!

மறுபடியும் இப்படியாக ஓர் ஆர்க்கிமிடிஸ் ஆனேன்.

*****

கவிஞர்களுக்கான நல்ல காலம்

உச் கொட்டலாம்! பஞ்ச் சொல்லக் கூடாது!

விவசாயத்துல ஒண்ணுமே லாபம் இல்ல சார் என்றவரைப் பார்த்து என்ன சொல்வது?

போய்யா போ! லாபம் வேணும்ன்னா விவசாயம் பண்ணாதே, வியாபாரம் பண்ணுன்னுதானே சொல்ல வேண்டும்.

அப்படித்தான் சொன்னேன்.

உடனே கோபப்பட்டு விட்டார்.

விவசாயத்துல லாபம் இல்லையென்றால் அதைக் கேட்டு உச் கொட்ட வேண்டுமாம். வியாபாரம் பண்ணு என்றெல்லாம் சொல்லக் கூடாதாம்.

இதை முன்கூட்டியே சொல்லக் கூடாதா அய்யா?

******

கவிஞர்களுக்கான நல்ல காலம்

ஓர் ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.

அது பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற இதழில் வெளிவராமல் போய் விடுமோ என்ற பயத்தில் ரொம்ப நாளாக எழுதாமல் இருக்கிறேன்.

பாவம்தான் ஆய்வாளர்கள்.

அவர்கள் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்களை ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்குள் ஆய்விதழ்கள் அங்கீகாரம் இழந்து போய் விடுகின்றன.

இது ஆய்வுகளோடு நின்று போனது ரொம்ப நல்ல விசயம்

கவிதைகள் வரை நீண்டிருந்தால் ரொம்ப கஷ்டம்.

கவியரசு, கவிவேந்தர், கவிக்குரிசில்களை விடுங்கள். கவிஞர் என்ற பட்டம் வாங்குவதே கஷ்டம்.

*****