அலுப்புப் பலகாரங்கள் செய்வது எப்படி?
யாரைக் கேட்டாலும் மற்றும்
யாரிடம் கேட்டாலும் தீபாவளி பலகாரம் செய்வதென்றால் அலுப்பாக இருப்பதாக அலுப்புபட்டுக்
கொண்டு பதில் சொல்கிறார்கள்.
இந்த இனிப்புக் கடைக்காரர்கள்
(ஸ்வீட் ஸ்டால்காரர்கள்) மட்டும் எப்படி அலுப்புப்படாமல் செய்கிறார்களோ?
*****
தீபாவளி சிறப்புப் பலகாரச் செய்முறை ஒன்று
இந்தத் தீபாவளிக்கு ஒரு நல்ல
இனிப்பு செய்முறை (ஸ்வீட் ரெசிபி) சொல்லுங்கள் ஐயா (சார்!) என்றார் என்னைக் கலாய்க்கும்
நண்பர் ஒருவர்.
அதனாலென்ன சொன்னால் போயிற்று
நான் சொன்ன ரெசிபி இது.
நீங்களும் கவனமாகக் குறித்துக்
கொள்ளுங்கள்.
அவசர தீபாவளிகளில் உதவக்
கூடிய அற்புதமான செய்முறைக் குறிப்பு இது.
1. நல்ல அண்ணாச்சிக் கடையாகத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒரு துண்டுத்தாளை எடுத்து
இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு என மடித்து அதன் உள்ளே எழுதிக் கொள்ள
வேண்டும். என்ன எழுதிக் கொள்ள வேண்டும் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.
3. அண்ணாச்சியிடம் அந்தத்
துண்டுத் தாளைக் கொடுத்து ரகசியமாக யாருக்கும் தெரியாமல் துண்டுத்தாளில் உள்ள பொருளை
ரகசியமாகவே வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த அவசர இனிப்புக் குறிப்பை ஆளாளுக்கு வெளியில்
பரிமாறி விட்டால் இதன் மகத்துவம் போய் விடும் என்பதால் இப்படிச் செய்வதே சரியானது.
4. வீட்டிற்கு வந்ததும் அண்ணாச்சிக்
கடையில் வாங்கியதை எறும்பு சாக்கட்டியால் வட்டம் போட்டு அதன் நடுவில் ஒரு பாத்திரத்திற்குள்
வைத்து நன்கு இறுக மூடி வைத்து விட வேண்டும். தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில் மேல் பாதுகாப்பாகவும்
வைக்கலாம். ஆனால் பாதுகாப்பு முக்கியம். வேண்டுமானால் இரண்டு மூன்று பாத்திரங்களை ஒன்றுக்குள்
ஒன்று போட்டு இன்னும் பத்திரமாகவும் மூடி வைக்கலாம்.
5. விருந்தினர்கள் வரும்
நேரங்களில் அடுப்பு பற்ற வைக்க அலுப்பில்லை என்றால் பற்ற வைத்து பாத்திரத்தில் H2O
வை ஊற்றி (இந்தப் பொருள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் புட்டி நீர் (கேன் வாட்டர்)
விற்பவர்களிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார்கள். விலை கூடுதலாக இருப்பதாகக் கருதினால்
தவிர்த்துக் கொள்ளவும்) அண்ணாச்சிக் கடையில் வாங்கிய பொருளில் கொஞ்சம் ஒரு சில தேக்கரண்டிகள்
இட்டு சுடச் சுடக் கொடுத்தால் சுவையான இனிப்பு தயார். அடுப்பு பற்ற வைக்க அலுப்பு என்றால்
அண்ணாச்சிக் கடை வகையறாவைக் கிண்ணத்தில் வைத்து நேரடியாகவும் கொடுக்கலாம். சிறப்பான
இனிப்பு தயார்.
இந்த இனிப்புக்கான மவுசு
எப்போதும் குறைந்ததில்லை. கல்யாணம், காது குத்தல், மஞ்சள் பூப்புனித நீராட்டு, வளையலணி
விழா, பிறந்த நாள் விழா என்று அத்தனை விழாக்களிலும் இந்த இனிப்பைத்தான் முதலில் நீட்டுகிறார்கள்.
அப்படிப்பட்ட சிறப்பான இனிப்பைச் செய்யும் முறையைத்தான் இப்போது உங்களுக்குக் கூறியிருக்கிறேன்.
கூடுதலாக அந்த இனிப்பைச் சுடச்சுட உடனடியாகச் சமைத்துத் தருவதற்கான குறிப்பையும் பகிர்ந்திருக்கிறேன்.
இப்போது அண்ணாச்சிக் கடையில்
துண்டுத் தாளில் எழுதிக் கொடுக்க வேண்டிய அந்தப் பொருளின் பெயர் இதுதான் ‘சீனி ¼ கி.கி.’.
அண்ணாச்சி சரியாகக் கொடுத்து
விடுவார். நாம்தான் அதை யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து பத்திரமாகப் பத்திரப்படுத்தி
சிறப்பான இனிப்பை நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குப் படைக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment