22 Aug 2018

பிட்னெஸ் சவால்கள்


அம்மா வேலை செஞ்சு பார்த்திருக்கேன். அப்பா வேலை செஞ்சு பார்த்ததில்ல. பாவம் அப்பா. சோம்பேறியாய் இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்!
*****
தொப்பையை பெல்டுக்குள் கொண்டு வருவது இருக்கிறதே... அதெல்லாம் பிட்னெஸ் சவால்கள்.
*****
கடைசியில கெட்டவர்கள் நல்லவராகி விடுகிறார்கள், நல்லவர்கள் கெட்டவராகி விடுகிறார்கள்... எங்கே என்கிறீர்களா...?  உறவுக்குள்!
*****
வறுமையை எழுதும் போதும் கவிதையாத்தான் எழுதணுமா?
*****
சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். அனுபவப்பட்டால் அவர்களே புரிந்து கொள்வார்கள்.
*****

ஆகச் சிறந்த வரிகள்!


ஆகச் சிறந்த வரிகள்!
ஒண்ணாம் நம்பர் அல்பம்
ஆணுறை வாங்க வக்கில்லாத இரவில்
அப்படி ஆகும் எதிர்பார்க்காத தருணத்தில்
மனதில் பட்ட வரிகளைக் கொண்டு பார்த்தால்
ஆகச் சிறந்த வரிகள்
கவிதையிலேயே இருக்கின்றன
லத்திகள் முதுகில் எழுதிய வரிகள்
அச்சு அசலாக வலியை
அழகாக மொழிபெயர்க்கின்றன
ஜாமீன் எடுக்க வருபவர்களுக்காக
ஆகச் சிறந்த அவ்வரிகளை
மீண்டும் மீண்டும் மறுபடியும் மறுபடியும் சொல்லி
மனதில் தேக்கி வைத்திருக்கிறேன்
பதினைந்து நாட்களுக்குள்
வந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு!
*****

21 Aug 2018

கடவுளின் தேசம்


கேரளாவைக் கடவுளின் தேசம் என்கிறார்கள். அந்தக் கடவுள் ஏன் தன்னுடைய தேசத்தையே தண்ணீர் தேசமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்? கடவுள்கள் மோசம்.
*****
புதிய செய்திகள் என்ன இருக்கிறது? பெயரை மாற்றி மாற்றி பதிப்பிக்கிறார்கள்.
*****
மரணத்தை நேசிக்க வேண்டும். அது எல்லாருக்கும் வருகிறது.
*****
இறக்கவே பிறக்கிறோம். ஆகவே, எதாவது சாதிக்க வேண்டும் என்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லியே சாகடிக்கிறார்கள். ஆகையால் இறக்கவே சாதிக்கிறோம் என்று சொன்னால் டென்ஷன் ஆகிறார்கள்.
*****
ஆற்றில் கொசுக்கள் விளைகின்றன.
*****

உன்னைக் கொன்று பார்த்தால் தெரியும்!


எல்லாரும் சிரித்துக் கொள்வோம்!
வாழ்க்கை ஒரு நகைச்சுவை
என்று சொன்னதற்கு
அதிகம் சிரித்தாய்
வாழ்க்கை என்ற வார்த்தைக்குள்
அப்படியென்ன நகைச்சுவை
இருக்கிறதென்று
நானும் சிரித்துக் கொண்டேன்.
*****



உன்னைக் கொன்று பார்த்தால் தெரியும்!
"யாரையாவது கொல்ல வேண்டும் போல இருக்கிறது!"
என்றான்
"உன்னைக் கொன்று பார்த்தால் தெரியும்
உயிரின் வலி!
போ! முதலில் உன்னைக் கொல்!"
என்ற பின்
கொல்வது குறித்து அவன் எப்போதும் பேசவில்லை.
*****

20 Aug 2018

அர்ஜூனுக்கு ஆக்சன் கிங்

கடன் வாங்கினால் பத்தாவது மாடியில் குடி இருக்காதீர்கள். குதித்து விடுவீர்கள்.
*****
நிறைய டெக்னாலஜி அறிந்தவராகச் சொல்லப்பட்ட ஓசாமா பின் லேடன் கடைசி வரை கூரியரைத்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
*****
தமிழ்ப்படம் என்றார்கள். இங்கிலீஷ் சப் டைட்டில் பார்த்த பின் இல்லையென்றா சொல்லா முடியும்?
*****
ஸ்மார்ட்டாக வாழ என்ன வழி? ஸ்மார்ட் போனைத் தூக்கி எறிந்து விடு.
*****
இரும்புத் திரையின் ஆகப் பெரும் சிறப்பு வில்லனாக நடித்த அர்ஜூனுக்கு ஆக்சன் கிங் போட்டார்கள். ஹீரோவாக நடித்த விஷாலுக்கு அப்படியே விட்டு விட்டார்கள்.
*****

வாழ்தலின் ருசி


வாழ்தலின் ருசி
இனி உன் எல்லைக்குள் வரப் போவதில்லை
சுதந்திரமாக வாழப் போகிறேன்
நீ என் காப்பாளனாக இருக்கலாம்
கையாலாகதவனாக இருக்கலாம்
நான் தைரியமாக இருந்தால்
உனக்கேன் பயம் வருகிறது?
கொன்று குடிப்பதன் ருசி
உனக்கு என்றால்
வாழ்ந்து பார்ப்பதன் ருசி எனக்கு!
*****

19 Aug 2018

டெல்டாவின் டிசைன்


மீம்ஸ், வீடியோ இவைகளெல்லாம் படிப்பவர்களைக் குறைத்து விட்டது. அப்படியும் சொல்ல முடியுமா என்ன?  மீம்ஸிலும் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் படிக்கிறார்களே!
*****
காமெடியாகப் படித்துப் பார். நவீன கவிதைகள் புரியும். அப்படியே ஐன்ஸ்டீனையும் படிக்கத் துவங்கி விடுவாய். நவீன கவிதைகளைப் படிக்கத் துவங்கியதில் நடக்கும் நன்மைகளில் அதுவும் ஒன்று.
*****
சீரியல் பார்க்காத நாட்களில் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள் சின்னத்தாயீ.
*****
சிறிது நேர காத்திருப்புக்கே
சலிப்பு கொள்கிறாயே
ப்ளாட்பாரமே வீடென இருப்பவர்க்கு
எப்படி இருக்கும்?
*****
பெட்ரோ கெமிக்கல் மண்டலமா அறிவிக்க தயாரா இருக்காங்கப்பா! விவசாய மண்டலம்னா உஜாரா ஆயிடுறாங்கப்பா! டெல்டாவின் டிசைன் அப்படி இருக்குப்பா!
*****