25 Oct 2024

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

வாழ்ந்து முடித்தப் பிறகு

அர்த்தம் கொடுக்கத் தோன்றுகிறது

நோக்கம் கற்பிக்க ஆசை பிறக்கிறது

உலகிற்கு ஏதோ சொல்ல வேண்டுமென்ற

பரிதவிப்பு தோன்றி விடுகிறது

சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்ட

விருந்தாளியைப் போலாகி விட்ட வாழ்க்கையில்

வாழ்தலே அர்த்தம்

வாழ்தலே நோக்கம்

வாழ்தலே செய்தி

அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று

உரக்க கத்தத் தோன்றுகிறது

அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம் என்று

காற்றில் அசைகின்றன மரங்கள்

வானில் பறக்கின்ற பறவைகள்

நிலத்தில் ஊர்கின்றன புழுக்கள்

நீரில் நீந்துகின்றன மீன்கள்

முகத்தில் வந்து அப்புகின்றது தூசி

சொல்வதற்கு ஏதுமில்லை என்று கைவிரிக்கையில்

கேட்கத் தொடங்குகிறது ஓலம்

*****

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...