திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்கு
(சிறுகதை)
-
விகடபாரதி
கும்பகோணத்துக்
கல்யாணத்துக்குக் கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பு ஒரு வாரத்துக்கு முன்பே தொற்றிக் கொண்டு
விட்டது.
ஒந்
தங்கச்சி வீட்டு மாமங்காரங் வீட்டுக் கல்யாணம் டேய். சரியா கல்யாணத்துக்குப் போகலேன்ன
ஒந் தங்கச்சி, மச்சாங்காரங் எல்லாம் கோச்சுக்குவாங்க டேய். அவுங்க வேற குடும்பத்தோட
காருல வந்து பத்திரிகெ வெச்சுட்டுப் போயிருக்காங்க டேய். இதுல கொஞ்சம் சூதானமா இருந்துக்கோணும்
டேய் என்று அம்மா மூச்சுக்கு முந்நூறு முறை எதை எடுத்தாலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.
வுட்டா
ஒங்க அம்மா அனுமாரு சஞ்சீவி மலையைப் பேர்த்து எடுத்துத் தூக்கிட்டுப் போனது போல நம்ம
வூட்டோ பேர்த்து எடுத்து நம்மள தூக்கிட்டுப் போய் கும்பகோணத்துல விட்டுடுவாங்கப் போலிருக்கு
என்று மனைவி முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தாள்.
தீபாவளி
முடிந்து நான்காவது நாள் கல்யாணத்தை வைத்திருந்தார்கள். தீபாவளி பரபரப்புடன் கல்யாண
பரபரப்பும் இதனால் சேர்ந்து கொண்டது. என்னதான் இருந்தாலும் ஒந் தங்கச்சி வகையறா கல்யாணங்றதுல
ஒங்கம்மா சும்மா இருக்குமா என்று மனைவி ஓரஞ்சாரமாய்ப் பேசினாலும் கல்யாணத்துக்கு எந்தப்
புடவை கட்டுவது, எந்த நகையைப்போடுவது என்று அவளும் பரபரப்பாக இருந்தாள்.
அரசாங்கமும்
தீபாவளியைப் பொதுமக்கள் நன்றாகக் கொண்டாட வேண்டும் என்று தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக
அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வந்தது வசதியாகப் போயிருந்தது. திங்கட்
கிழமை கல்யாணம் ஒரு வகையில் இதனால் ஆசுவாசமாகத்தான் இருந்தது.
கும்பகோணம்
கல்யாணத்துக்குக் கிளம்புவது குறித்த திட்டங்களும் தயாராகத் தொடங்கின. கிராமத்திலிருந்து
கிளம்புவதில் இருக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு திருவாரூரில் இருக்கும் சாந்தா
சித்தி வீட்டிலிருந்து கிளம்புவது என்று தீர்மானமானது. ஞாயிற்றுக் கிழமை மதியமே சாப்பாட்டை
முடித்துக் கொண்டு சாந்தா சித்தி வீட்டுக்குக் கிளம்பி விடுவது. ராத்திரி அங்கே தங்கி
விட்டுக் காலையில் சாந்தா சித்தியையும் சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவது.
இதுதான் திட்டம்.
சாந்தா
சித்திக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் நன்றாகப் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்துப்
போய் விட்டன. இரண்டு பிள்ளைகளும் போன பிறகு சாந்தா சித்தியும் சித்தப்பாவும் திருவாரூர்
வீட்டில் தனிமையில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இருக்கும் மனக்குறையே
அவர்களை யாரும் வந்து பார்ப்பதில்லை என்பதுதான். பெற்ற பிள்ளைகள் கூட அமெரிக்காவிலிருந்து
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோதான் வந்து பார்த்துக்
கொண்டிருந்தன. சாந்தா சித்தியைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒவ்வொரு பிள்ளையும் வந்து
போன தேதியை மணி நிமிட சுத்தத்தோடு சின்ன சின்ன சம்பவத்தையும் அவ்வளவு கச்சிதமாக நினைவில்
வைத்துச் சொல்லும். அந்த அளவுக்கு அது பிள்ளைகளோ, உறவினர்களோ யாராவது வருவார்களா என்ற
ஏங்கிப் போய் கிடந்தது. நல்லா படிக்க வெச்சா பிள்ளைங்களோட நல்லா இருக்கலாம்ன்னு நெனைச்சு
பண்ணது. இப்போது பிள்ளைங்க மூலைக்கு ஒண்ணா கெடக்குது. நாங்க இங்க ஒரு மூலையிலகெடக்குறோம்
என்று சாந்தா சித்தி ஏகத்துக்கும் பெருமூச்சு விடும்.
கும்பகோணம்
கல்யாணத்துக்காக நாங்கள் எல்லாம் போய் சேர்ந்தது சாந்தா சித்திக்குத் தாங்க முடியாத
சந்தோசத்தைக் கொடுத்தது. நாங்கள் எல்லாம் என்றால் நான், மனைவி, அம்மா, மகள் என நாங்கள்
நான்கு பேரும். எங்களுக்குக் கல்யாண சாப்பாடு சாந்தா சித்தி வீட்டிலேயே ராத்திரியே
ஆரம்பமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு ரொம்ப தடபுடலாகச் சாப்பாட்டைச்
செய்து வைத்திருந்தது சித்தி.
கல்யாணம்
ஆறிலிருந்து ஏழரைக்குள். எப்படியும் கல்யாணத்துக்கு ஆறரைக்கு எல்லாம் போய் விட வேண்டும்
என்று ராத்திரியே பேசிக் கொண்டோம். மழையும் அவ்வபோது விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது.
சில நேரங்களில் ஒரு பாட்டம் கனமாகவும் அடித்துக் கொண்டிருந்தது. காலையில் எழுந்து கிளம்ப
வேண்டுமே என்று மூன்று மணிக்கெல்லாம் அலாரம் வைத்துக் கொண்டோம். என்னதான் தூக்கமாக
இருந்தாலும் எப்படியாவது எழுந்து கிளம்பி பஸ்ஸில் போகும் போது தூங்கிக் கொள்ளலாம் என்று
சந்தோசமாக எல்லாம் பேசிக் கொண்டன. ஏம்டா பஸ்ல போயி சிரமப்பட்டுகிட்டு. ஒரு கார்ர வெச்சிக்கிட்டுப்
போய்ட்டு வந்துடலாம்டா என்றார் சித்தப்பா.
எதுக்கு
தேவையில்லாத செலவு? திருவாரூர்லேர்ந்து கும்பகோணத்துக்கு பஸ்ஸா இல்ல. கிராமத்துலேந்துன்னா
கூட கார்ல போய்ட்டு வரலாம். டவுன்லேந்து டவுனுக்குப் போறதுக்கு என்ன காரு என்று அம்மா
அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காலையில்
எப்படியும் கிளம்பி ஐந்து மணிக்கெல்லாம் பஸ்ஸைப்பிடித்து ஏறி உட்கார்ந்து விட வேண்டும்
என்ற யோசனையானது டமாலாகி விட்டது. இந்தப் பெண்களானது பேசிக் கொண்டும் அலங்காரம் பண்ணிக்
கொண்டும் கிளம்புவதில் ஆறு மணியாகி விட்டது.
ராத்திரி
நல்ல மழை பெய்திருந்தது. பழைய பஸ் ஸ்டாண்டு பக்கம்தான். அங்கிருந்து பஸ் பிடித்து புதிய
பஸ் ஸ்டாண்டுக்குப் போக வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் நடந்து போவதற்குள் பெரும்பாடாகி
விட்டது. சாலையே சகதியாக இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகனங்கள் தண்ணீரை வேறு
வாரி இறைத்துக் கொண்டபடி போய்க் கொண்டிருந்தன.
என்னடா
இது? திருவாரூர்லேந்து கும்பகோணத்துக்குப் போறது கூட பெரிய காரியமில்லெ போலருக்கு.
பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நடந்து போறது பெரிய பாடா இருக்கே? என்ற சாந்தா சித்தி அலுத்துக்
கொண்டது.
மழை
பேஞ்சா இப்படித்தான்டா. இந்த டவுன்ல அந்தாண்ட இந்தாண்ட நகர முடியாது. கிராமத்துல சேறுன்னா
இந்த டவுன்ல இந்த சகதியும் சாக்கடையும். ஒரே அருவருப்புதான்டா போ. நான் இப்போல்லாம்
மழை பேஞ்சா வேளியில கௌம்புறதே இல்லடா என்றார் சித்தப்பா.
அதெல்லாம்
பார்த்தா ஆவுமா? நல்லது கெட்டது நாலும்தான் இருக்கும். நல்லது மட்டும்தான் இருக்கணும்னா
எப்பூடி? கொஞ்சம் சிரமப்பட்டத்தான் நல்லது என்றது அம்மா.
பழைய
பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் ஆங்காங்கே பணிகள் நடப்பதற்கேற்ப
தகர சீட்டுகளை வைத்து அடைத்து வைத்திருந்தனர். மழை பெய்திருந்ததால் சாலை படுமோசமாகத்
தண்ணீரும் சேருமாக இருந்தது. தாங்கள் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் அலங்காரத்துக்குச்
சேதாரம் வந்து விடுமோ என்ற பயம் பெண்களுக்கு இருந்தது.
ஒரு
ஆட்டோ பிடிச்சு வந்திருக்கலாம்ல அண்ணி என்றார் சித்தப்பா அம்மாவைப் பார்த்து.
ஆமாம்.
ஆட்டோ பிடிப்பாங்களாம் ஆட்டோ. இங்க இருக்குற பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோ பிடிச்சுத்தான்
வருவாங்களா? அவன் வேற காத்தாலயே நூறு ரூபாய்க்கு அச்சாரம் போட்டுடுவான் என்றது அம்மா.
அதுக்குச்
சொல்லல அண்ணி. இந்தத் தண்ணிக்கும் சேத்துக்கும்தான் சொல்றேன் என்றார் சித்தப்பா.
கொஞ்சம்
வேட்டிய தூக்கிப் பிடிச்சிட்டு நடந்து வர்றீயளா? அதை விட்டுப்புட்டு ஆட்டோ பிடிக்குறேன்னுகிட்டு.
திருவாரூர்லேந்து நாகப்பட்டினத்துல நடந்த கல்யாணத்துக்கு சைக்கிள்லேயே போனதெல்லாம்
ஞாபவம் இல்லியா என்றது அம்மா.
அதெல்லாம்
ஒரு காலம் அண்ணி. இப்போல்லாம் பஸ்ல, கார்ல போய்ட்டு வர்றதே முடிய மாட்டேங்குது. போய்ட்டு
வந்தா ரெண்டு நாளைக்குப் படுத்துகிட வேண்டியதா இருக்கு.
பழைய
பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு நிறைய பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.
அம்மா மகளிர் பயணிக்க கட்டணமில்லாத பேருந்தாகப் பார்த்து ஏறச் சொன்னது. அண்ணி இன்னமும்
மாறவே இல்ல என்றார் சித்தப்பா.
காசு
இருக்குன்னா மடியில முடிஞ்சுக்கோங்க. வெட்டியா சிலவு பண்ணணும்னு அவசியம் இல்ல. இந்த
பஸ்ல ஏறுனா ஒங்க ரெண்டு பேத்துக்கும் மட்டும் டிக்கெட் எடுத்தா போதும். எங்களுக்கு
சிலவு கிடையாது என்றது அம்மா.
ஏன்
நாங்க ரேண்டு பேரும் நடந்தே வந்துப்புடுறோமே என்றார் சித்தப்பா.
நடக்குறதுல
என்ன கௌரவ குறைச்சல்ங்றேன். நேரம் மட்டும் இருந்துச்சுன்னா ஒங்களயெல்லாம் நடத்திக்கிட்டுத்தான்
அழைச்சுக்கிட்டுப் போவேன் பாத்துங்க என்றது அம்மா.
அண்ணி
பண்ணாலும் பண்ணுவாங்க என்றார் சித்தப்பா.
புது
பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது மணி ஆறரை ஆகியிருந்தது. இந்த நேரத்துக்கு கல்யாணத்துக்கேப்
போகணும்ன்னு பேசிட்டு இருந்தோம். இப்பத்தான் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட்லயே நிக்குறோம்.
ஒந் தங்கச்சி என்ன ஆட்டம் ஆடப் போறாளோ தெரியலையே என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள்
தங்கச்சியிடமிருந்து போன் வந்தது.
என்னடா
அவதானே அடிக்குறா? குடவாசல்ல தாண்டிட்டோம்ன்னு சொல்லு. இல்லன்னா அவ வேற தாண்டிக் குதிப்பா
என்றது அம்மா உஷாராக.
நான்
போனை எடுத்ததும், அம்மா சொன்னதும் தங்கச்சிக்குக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னண்ணே இன்னும் சாந்தா சித்தி வீட்டை விட்டே கௌம்பியிருக்க மாட்டீங்களே என்றது தங்கச்சி.
வீட்டை
விட்டுக் கௌம்பிட்டோம். திருவாரூரு பஸ் ஸ்டாண்ட்ல நிக்குறோம். எப்படியும் ஒரு மணி நேரத்துல
வந்துட மாட்டோமா என்றேன்.
கல்யாணம்
முடிஞ்சிடும்ண்ணே. அவரு வேற ஒங்களால டென்ஷனா நிக்குறாரு. எங்க போறதுன்னாலும் முங்கூட்டியே
கௌப்பிக் கொண்டார மாட்டீயா? எந்த ஒறவுக்கார விசேஷசத்துக்காவது நீ சீக்கிரம் வந்திருக்கீயா?
எல்லாத்துலயும் மச மசன்னுகிட்டு. சீக்கிரமா வந்து சேர்ற வழியப் பாரு என்றபடி கோபமாகப்
போனை வைத்துவிட்டாள்.
ஒம்
பாடுதாம்டா பாவம். நாந்தான் காரு வெச்சிக்கலாம்ன்னு சொன்னேன்ல. என்றது சாந்தா சித்தி.
ஏம்
காசு நெறைய இருக்குங்கற திமிருல பேசுறீயா என்றது அம்மா.
இதுக்குதாம்டா
நான் பேசாமலே வந்தேன் என்றது சாந்தா சித்தி. சாந்தா சித்தி இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த
ரகசியம் இப்போதுதான் உடைந்தது.
கும்பகோணத்துக்கு
பஸ் வந்து சேர்ந்த பாடில்லை. ஐந்தரை மணியிலிருந்து பஸ் வரவில்லை என்ற பேசிக் கொண்டிருந்தார்கள்.
பெருங்கூட்டம் ஒன்று கும்பகோணம் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு
இரண்டு பஸ் கூட பத்தாது.
எல்லா
பஸ்ஸையும் தீபாவளின்னு மெட்ராசுக்கு வுட்டுப்புட்டுனாவோ பாவிப் பயலுவோ! இவனுங்களுக்கு
மெட்ராஸ்ல இருக்குறவனுங்களத்தான் மனுஷங்களா தெரியும். மத்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம்
மனுஷனாவே தெரியாது என்று ஒருவர் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.
இந்தப்
பகுதிக்கான அரசுப் பேருந்துகளின் மையமே கும்பகோணம் கோட்டம்தான். அந்தக் கும்பகோணத்துக்கு
ஒண்ணே கால் மணி நேரமாக பஸ் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
ஆறே
முக்காலுக்கு கும்பகோணத்துக்கு ஒரு பஸ் வந்தது. கூட்டம் திமுதிமுவென்று ஏறியது. அம்மா
அந்தக் கூட்டதோடு கூட்டமாக ஏறச் சொன்னது. யக்கா நீ பேசாம இரு. இவ்ளோ கூட்டத்துலயெல்லாம்
போவ முடியாது. அடுத்த பஸ்ல போகலாம் என்றது சாந்தா சித்தி. அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை
என்றாலும் எரிச்சலை வெளிக்காட்டாமல் பேசாமல் இருந்தது.
எலே
அந்த மூலையில போயி நில்லுடா. பஸ் வர்றப்பவே ஸ்லோ பண்ணுவான். அப்படியே ஏறி ரெண்டு சீட்ல
எடம் போட்டீன்னாத்தான் வர்ற பஸ்லயாவது போவலாம். இல்லன்னா உஞ் சித்தி அடுத்த பஸ்லயும்
ஏற விட மாட்டா என்றது அம்மா.
நான்
இடம் போடுவதற்கு வசதியாக பையிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை எடுத்துக் கொண்டு அம்மா
சொன்னா மூலையில் போய் நின்று கொண்டேன். ஏழு
ஐந்துக்கு ஒரு தனியார் பேருந்து வந்த போது என்னைப் போல நின்று கொண்டிருந்த ஏழெட்டுப்
பேர் ஓடும் பேருந்தில் ஏறி இடம் போட்டோம். இந்தப் பேருந்திலும் கூட்டம் திமுதிமு என்றுதான்
ஏறியது.
57
+ 2 பேர் பயணிப்பதற்கான பேருந்து அது என்பதை ஓட்டுநர் இருக்கைக்கு மேலே இருந்த தகவல்
சொன்னது. கூட்டம் எப்படியும் 150 பேருக்கு மேல் இருக்கும். அதற்கு மேல் யாரையும் ஏற்ற
முடியாது எனும் நிலையிலும் நடத்துநர் ஏறி நல்லா உள்ளே போங்கம்மா என்று கத்திக் கொண்டிருந்தார்.
எங்க
ஏறி எங்க உள்ள போறது? இதுக்கும்தாம்டா ஒங்க அம்மா கூட வர்றதுக்கு எனக்குப் பிடிக்கவே
மாட்டேங்குது. சரியான கருமிடா ஒங்க அம்மா என்று சாந்தா சித்தி என் காதுக்கு மட்டும்கேட்கும்படி
சொன்னது. நான் சிரித்துக் கொண்டேன்.
அதற்குள்
தங்கையிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. நான் எடுக்காமல் விட்டுவிட்டேன். மீண்டும்
ஒரு முறை அடித்தாள். மறுபடியும் நான் எடுக்கவில்லை. கல்யாணத்துக்குப் போயி நீங்க திட்டுதான்
வாங்கப் போறீங்க. எடுத்தப் பேசிடுங்க என்றாள் மனைவி.
எப்போ
இந்த பஸ்ஸ எடுப்பான்னு தெரியலீயே. அதாங் நாலு பஸ் கொள்ளுற அளவுக்கு கூட்டத்தெ ஏத்திட்டான்னே.
இன்னும் எடுக்காம போட்டு வெச்சிருக்கான் பாவி என்றது அம்மா.
கூட்டம்
ஆண்களை விட பெண்களால் நிரம்பி வழிந்தது. அதுவும் திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்குக்
கல்லூரி செல்லும் பெண்கள். நின்று கொண்டிருந்த பெண்கள் தங்கள் பைகளை அருகில் அமர்ந்திருப்போரிடம்
கொடுத்துக் கொண்டிருந்தனர்.
சாந்தா
சித்தியிடம் ஒரு பெண் தன்னுடைய பையைக் கொடுத்தாள். எந் தாயி நீயி எந்த ஏரியாடே என்றது
சித்தி.
கல்லுபாலம்
என்றது அந்தப் பெண்.
என்னா
படிக்குறாப்புல?
பிகாம்.
இங்க
இருக்குற காலேஜ்ல பிகாம் இல்லியா? இதெ கும்பகோணம் போயித்தான் படிக்கணுமா என்றது சித்தி.
சித்தப்பா சித்தியைப் பார்த்து முறைத்தார்.
வீட்ல
அங்கதான் சேர்த்து விட்டாங்க. நான் என்னத்தெ பண்ணுறது என்றது அந்தப் பெண்.
இந்தப்
பிள்ளைங்க அந்தந்த ஊர்ல இருக்குற பள்ளியோடத்துல படிச்சாலே பாதிக் கூட்டம் பஸ்ல கொறைஞ்சிடும்
என்றது அம்மா.
அது
பள்ளியோடம் இல்லத்தா. காலேஜ் என்றாள் மகள் சிரித்துக் கொண்டே. சாந்தா சித்திக்கும்
சிரிப்பு வந்து.
எல்லாம்
எனக்குத் தெரியும்டி. காலேஜ்ன்னா என்னா பெரிய பள்ளிக்கூடம்தானே என்றது அம்மா. இப்போது
அந்தக் காலேஜ் பெண்ணும் சிரித்தது.
பஸ்
நகர ஆரம்பித்த போது மணி ஏழரை மணியாகிருந்தது. இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும் என்றாள்
மனைவி. அதுக்குத்தான் நான் என்று வாயெடுத்த சாந்தா சித்தி நிறுத்திக் கொண்டது.
புது
பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறிய பேருந்து ஓரமாக நின்று கொண்டது.
எலே
பஸ்ஸ கௌப்பிக் கொண்டு போற வழியப் பாருங்கடே. மணி இப்பவே ஏழே முக்கால நெருங்குது. இங்கேய
எட்டு மணியாயிடும் போலருக்கு. பெறவு எப்போடா கும்போணம் போறது என்று பஸ்ஸிலிருந்து சத்தங்கள்
எழ ஆரம்பித்தன.
நடத்துநர்
அலைபேசியில்பேசிக் கொண்டிருந்தார். மடப்புரத்துலேந்து ஒருத்தரு வர்றாங்க. வந்துடுவாங்க.
கொஞ்சம் பொறுங்க என்றார்.
ஏதோ
பொண்ணத்தான் இருக்கும் பாரேன். அதுக்குத்தான் இந்தப் பயலுங்க இவ்ளோ ஜவாப்தாரிய பண்ணிகிட்டு
நிக்குறானுங்க என்று ஒரு பயணி சொன்னார். அவர் சொன்னது உண்மை என்பது போல கல்லூரி படிக்கும்
ஒரு பெண் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து ஏற பேருந்து கிளம்பத் துவங்கியது.
இந்தப்
பொண்ணுக்காக எம்மாம் நேரம் நிக்குறதாம் என்று ஒரு கிழவி சத்தம் போட்டது. நாங்கன்னா
மட்டும் வண்டிய கௌப்பிட்டுப் போறானுங்க. கொமரிகள கண்டா மட்டும் வண்டிய நிப்பாட்டிக்கிட்டு
ஏத்திட்டுப் போறானுங்க என்றது.
ஏ
கெழவி ஒழுங்கா பேசாம வர்றதுன்னா வா. இல்லன்னா எறக்கி விட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்
என்றார் நடத்துநர்.
போடா
போ. போயி டிக்கெட்டப் போடு. நீயி யாருடா என்னய எறக்குறது? இருடா ஒம் ஓனருக்குப் போன
போடுறேன். ஒஞ் சீட்டெ கிழிக்கிறேன் என்றது கிழவி.
பஸ்
பவித்திரமாணிக்கம், காட்டூர், வடகண்டம், புதுக்குடி, மஞ்சள்குடி, குடவாசல் என்று நிறுத்தி
நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டும் இறக்கிக் கொண்டும் போய்க் கொண்டிருந்தது.
உள்ளே
போங்க, உள்ளே போங்க. ஏறுறவங்களுக்கு வழிய விடுங்க என்று நடத்துநர் கத்திக் கொண்டே இருந்தார்.
அவர் தொண்டை கிழிந்து தொங்காத குறையாக அவர் கத்துவது அவர் மன உளைச்சலின் உச்சத்தைக்
காட்டிக் கொண்டிருந்தது. ஏம்மா யாராச்சும் சொன்னத்தெ கேக்குறீங்களா? உள்ள போங்கம்மா.
வழிய விடுங்க. என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்.
வழி
இருந்தா விட மாட்டோமா? விடுற பஸ்ஸ நீதான் கொஞ்சம் பெரிய பஸ்ஸா வுட வேண்டித்தானே? வழிய
விடுன்னா எதெ விடுறது? என்றது அந்தக் கிழவி.
ஒம்
வாயெ கிழிக்கிறேன்னா இல்லையா பாரு என்றார் நடத்துநர்.
ஒஞ்
சீட்டெ கிழிக்கிறேன்னா இல்லையா பாரு என்றது கிழவி.
எல்லாத்தையும்
கேமராவுல ஓனர் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரு. நீ ஒண்ணும் எஞ் சீட்டெ கிழிக்க முடியாது
என்றார் நடந்துநர் பஸ்ஸில் இருக்கும் கேமிராவைக் காட்டி.
இவ்ளோ
கூட்டத்தை ஏத்துனதெப் பாத்தும், மனசாட்சி இல்லாம இன்னும் பாத்துக்கிட்டே இருக்குறானே
அவனெல்லாம் மனுஷனா? என்று கிழவிஇப்போது ஓனரையும் திட்டியது.
அதானே
பாத்தேன். மொதல்ல ஒன்னய ஏத்தாம வந்திருக்கணும். நீயி ஏறிப்புட்டு இப்போ ஏறுறவங்கள ஏன்
ஏத்துறன்னு கேக்குறே பாத்தியா? என்றார் நடத்துநர்.
பஸ்
குடவாசலைத் தாண்டித் திருச்சேறையை நோக்கிப்போய்க் கொண்டிருந்தது. டே பாருடா. இந்தப்
பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திடுச்சு என்றது சாந்தா சித்தி.
அந்தக்
கூட்டத்தில் யார் யாரைப் பார்ப்பது, அந்தப் பெண்ணுக்காக இப்போது என்ன பண்ணுவது என்றே
புரியவில்லை. சாந்தா சித்தி சட்டென்று எழுந்து அந்த இடத்தில் அந்தப் பெண்ணை அப்படியே
அணைத்து உட்கார வைத்தது. பக்கத்தில் இருந்த நான் எழுந்து கொண்டு அந்த இடத்தில் சாந்தா
சித்தியை உட்கார வைத்தேன். சீட்டை விட்டு எழுந்து விட்டேனே தவிர நானும் சீட்டைத் தாண்டி
வெளியே போக முடியாத நிலை. சீட்டுக்கு இடையில் என்னுடைய இடத்தில் சித்தியை உட்கார வைத்து
விட்டு நான் நிற்பது சிரமாக இருந்தது. அம்மா உடடினயாகத் தண்ணீர் பாட்டிலைத் தந்து முகத்தில்
தெளிக்க சொன்னது. கொஞ்சம் காத்தோட்டாமா இருந்தா நல்லா இருக்கும் என்றது என்னைப் பார்த்து
சாந்தா சித்தி.
நான்
எங்கே சித்தி நகர்றது என்றேன். நான் ஒன்னய சொல்லலடா. பஸ்ஸோட நெலமையைச் சொன்னேன் என்றது.
கொஞ்சம்
அப்படியே கைத்தாங்கலா பிடிச்சுக்கோங்க. இந்தோ கும்போணம் வந்துடும் என்றார் ஒருவர்.
யோவ்
அதுக்கு இன்னும் அரை மணி நேரம் ஆவும்யா. பஸ் போற வேகத்தெ பாத்தியா? யாரு மயக்கம் அடிச்சா
என்னா? யாரு செத்தா என்ன? அவனுக்குக் கூட்டத்தெ ஏத்தணும். காசப் பாக்கணும். இனுமேலாவது
எந்த ஸ்டாப்பிங்கலாவது நிறுத்தாம போறான்னான்னு பாரேன். இவனுங்க எல்லாம் அடங்க மாட்டானுங்கய்யா.
இன்னிக்கு சம்பாதிச்சாத்தான் சம்பாத்தியம்ன்னு யாரப் பத்தியும் கவலைப்படாம போவானுங்க
கட்டையில போறவனுங்க என்றார் இன்னொருவர்.
எல்லாரும்
ஆளாளுக்கு அந்தப் பெண்ணுக்காகப் பரிதாபப் பட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்களே தவிர,
யாருக்கும் பஸ்ஸை நிறுத்த வேண்டும், எங்கேயாவது ஆஸ்பிட்டலில் நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு
முதலுதவி பண்ண வேண்டும் என்ற தோன்றவில்லை. நான் அதைச் சொன்ன போது, அதெல்லாம் அப்படித்தான்.
ஒங்களுக்கு இது புதுசு சார். ஒரு டிரிப்புக்கு நாலு பொண்ணுங்க மயக்கம் அடிக்கும்ங்க.
அதெல்லாம் பார்த்து ஆஸ்பிட்டல்ல நிறுத்துனா கும்போணம் போயி சேர்ந்த மாதிரிதான். பேசாம
இருங்க சார். கும்போணம் வந்ததும் அதுவா எறங்கிப் போயிடும் என்றார் நடத்துநர்.
நெரிசலில்
மக்கள் மயங்கி விழுவது இவ்வளவு வாடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதே என்பதை நினைத்த
போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுவே கிராமத்துப் பேருந்து என்றால் பேருந்தை நிறுத்தி
விடுவார்கள். வழியில் ஆஸ்பிட்டேலே இல்லையென்றாலும் பெட்டிக் கடையில் சோடாவோ பன்னீரோ
அல்லது டீக்கடையில் டீயையோ வாங்கி வந்து அந்தப் பெண்ணை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துதான்
பேருந்தை எடுப்பார்கள். டவுன்தான் மனிதர்களை எவ்வளவு மாற்றிவிட்டது என்று தோன்றியது.
சித்தி அடிக்கடி அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே இருந்தது. தலையில் கையை வைத்து
தடவிக் கொண்டிருந்தது.
எல்லா
சனமும் படிப்பு படிப்புன்னு கண்மூடித்தனமாவே இருக்குதுடா என்றது சித்தி.
ஆமா.
நீயி இல்ல. நீயும் ஒம் புள்ளைகள அப்படித்தானே படிக்க வெச்சே என்றது அம்மா.
ஒங்கம்மாவுக்கு
எதுக்கெடுத்தாலும் எம் மேல கோவம்டா என்றது சித்தி.
கோவமெல்லாம்
ஒண்ணுமில்லே. ஒலகமே அப்படித்தானே இருக்குது. படிப்புக்காக கயித்துல தொங்குனாலும் சரின்னுத்தானே
சொல்லுது என்றது அம்மா.
ஒரு
வழியாக கும்பகோணம் வந்து பேருந்து நின்றது. கூட்டம் திமுதிமுவென்று இறங்குவதும், திருவாரூர்
செல்லும் கூட்டம் ஏறுவதுமாக மீண்டும் ஒரு பிரயளத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மயக்கடைந்து
இருக்கும் பெண்ணைப் பற்றிப் பேசியவர்களெல்லாம் எதுவுமே நடக்காது போல அவரவர் திசையில்
நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். சித்தி கைத்தாங்கலாக அந்தப் பெண்ணை இறக்கிக் கொண்டு
கீழே இறங்கியது. அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரக்ஞை திரும்பிக் கொண்டிருந்தது.
கும்பகோணம்
வந்துட்டோமா என்றது.
ஆமாம்
என்றது சித்தி.
நான்
சாக்கோட்டையில எறங்கணும். அங்கதான் காலேஜ் என்றது.
எனக்கு
எப்படிம்மா தெரியும் நீ எங்க எறங்கணும்ன்னு என்றது சித்தி.
காலேஜ்க்கு
நேரமாயிடுச்சு. லேட்டா போனா திட்டுவாங்க என்று அழ ஆரம்பித்தது அந்தப் பெண்.
நீ
மயக்கமாயிட்டே. அது புரியலியா ஒனக்கு என்றது சித்தி.
லேட்டா
போனா வீட்டுக்கு மெசேஜ் போயிடும். வீட்டுல வேற திட்டுவாங்க என்றது அந்தப் பெண்.
தங்கை
விடாமல் போன் அடித்துக் கொண்டிருந்தாள்.
எடுத்துப்
பேசுடா என்றது சித்தி.
எடுத்ததும்
எங்கண்ணே இருக்கே? காரை அனுப்புறேன் வந்து சேரு என்றது தங்கச்சி.
சித்தி
போனைப் பிடுங்கி, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. திருவாரூர் பஸ் நிக்குற எடத்துக்குக்
காரை அனுப்பு என்றது.
சித்தி
பக்கத்துல டவுன் பஸ் ஸ்டாண்டுக்குப் போயி மினி பஸ்ல ஏறி மகாமக குளத்து ஸ்டாப்பிங்ல
எறங்குனா நடந்து போற தூரம்தான் சித்தி கல்யாண மண்டம். அதுக்கு எதுக்கு சித்தி காரு
என்றேன்.
பேசாம
இருடா. ஒங்கம்மா மாரியே பேசிக்கிட்டு. இப்போ கூட ஒரு ஆட்டோ பிடிச்சி போவணும்ங்ற புத்தி
வரல பாத்தியா ஒனக்கு என்றது சித்தி.
அவனெ
ஒண்ணும் சொல்லாத. அவனே பாவம். விவசாயம் பண்ணிக்கிட்டு குடும்பத்தெ நடத்தணும்ன்னா அவன்
என்ன பண்ணுவான் என்றார் சித்தப்பா.
கார்
வந்தது. சித்தி அந்தப் பெண்ணையும் காரில் ஏற்றியது. எல்லோரும் ஏறிக் கொண்டோம்.
இந்தப்
பொண்ணுமா கல்யாணத்துக்கு என்றாள் மனைவி.
வண்டிய
சாக்கோட்டையில காலேஜ் இருக்காம்ல அங்க விடு என்றது சித்தி.
இன்னும்
லேட்டான்னா தங்கச்சி திட்டாதா என்றேன் நான்.
நீ
சும்மா இருடா என்றது அம்மா.
சாந்தா
சித்தி இப்போது அந்த பெண்ணிடமிருந்து திரும்பி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதது.
*****
No comments:
Post a Comment